குரு 'குர்ட்ஜிஃப்'பின் உடனிருந்து பலகாலம் பயணம் செய்த சீடரான ஔஸ்பென்ஸ்கி, அடிக்கடி முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொண்ட குரு 'குர்ட்ஜிஃப்'பால் ஒரு கட்டத்தில் குருவுக்கே எதிரியானார். அப்படி குர்ட்ஜிஃப் என்னதான் செய்தார்? குர்ட்ஜிப் செய்த வம்புகள் இந்தப் பகுதியிலும் தொடர்கிறது.


சத்குரு:

ஒருமுறை, ரயில் பயணத்தின்போது மிகவும் போதையில் இருப்பவர் போல் நடந்துகொண்டு ஔஸ்பென்ஸ்கியை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கினார் குர்ட்ஜிஃப். அவரை, அவரது இருக்கைக்கு அழைத்து வந்து அமர்த்தவே பெரும்பாடுபட்டார் ஔஸ்பென்ஸ்கி.

திடீரென கைப்பெட்டி ஒன்றை தான் அமர்ந்திருந்த இருக்கையின் ஜன்னல் வழியே வீசிவிட்டு, "இவ்வளவு தான்" என்றார் குர்ட்ஜிஃப். அதிர்ந்துபோன ஔஸ்பென்ஸ்கி, "யாரோ ஒருவருடைய சூட்கேஸை நீங்கள் இப்படித் தூக்கி எறிந்திருக்கக் கூடாது. பெட்டியின் சொந்தக்காரனுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?" என்று பதறினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சிறிதும் சலனமின்றி வந்தது குர்ட்ஜிஃப்பின் பதில், "ஔஸ்பென்ஸ்கி, அது உன்னுடைய பெட்டிதான்..."

செய்வதறியாது திகைத்த ஔஸ்பென்ஸ்கி, "நான் செய்த ஆய்வுப் பணி எல்லாவற்றையும் இழந்துவிட்டேனே," என்று பதறினார்.

குர்ட்ஜிஃப் தீர்க்கமாக பதிளித்தார், "நீ செய்த பணி என்னிடம் பத்திரமாக இருக்கிறது. பெட்டிதான் சென்றுவிட்டது..."

மற்றொரு முறை உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம், "உடனடியாக சந்திக்க வரவும்" என்று லண்டனிலிருந்த ஔஸ்பென்ஸ்கிக்கு தந்தி அனுப்பினார் குர்ட்ஜிஃப். சோவியத் பகுதியை யாரும் எளிதில் கடந்து உயிருடன் செல்ல முடியாத நிலை அப்போது. தனது குருவின் அழைப்பிற்கு இசைந்து, அரும்பாடுபட்டு மூன்று வாரம் பயணித்து பல நாட்டு எல்லைகளை யாருமறியாது கடந்து, குர்ட்ஜிஃப்பின் இருப்பிடத்தை அடைந்தார் ஔஸ்பென்ஸ்கி.

குர்ட்ஜிஃப் காலைக் காபி பருகிக் கொண்டே அவரை பார்த்து, "ஓ... வந்துவிட்டாயா நீ? அப்போ உடனே கிளம்பிவிடு..." என்றார். இதை சற்றும் எதிர்பாராத ஔஸ்பென்ஸ்கி, "இதற்குமேல் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது," என்று கூறி, குர்ட்ஜிஃப்பிடமிருந்து விலகிச் சென்றுவிட்டார்.

குர்ட்ஜிஃப் எதற்காகவும் கலங்கும் மனிதர் இல்லை, புகைப்படங்களில் அவருடைய முகத்தைப் பார்த்தாலே அது புரியும். ஆனால் உயர்ந்த ஆன்மீக சாத்தியத்தின் மிக அருகில் வந்த ஔஸ்பென்ஸ்கி, கடைசி நேரத்தில் அதை நழுவ விடும் வகையில், அவரை விட்டு விலகிச் சென்றதை நினைத்து, "அவன் மிக அருகில் வந்திருந்தான்... ஆனால் சென்று விட்டானே...!" என்று ஔஸ்பென்ஸ்கியின் பிரிவைத் தாங்க முடியாமல் அழுதார்.

முன்னர் குர்ட்ஜிஃப்பின் பணிகளைப் பற்றியும் அவருடன் தான் பெற்ற உன்னத அனுபவங்கள் பற்றியும் உயர்வாக எழுதிவந்த ஔஸ்பென்ஸ்கி, இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவருக்கு எதிராக எழுத ஆரம்பித்தார். குர்ட்ஜிஃப்பிற்கு அது ஒரு பொருட்டாக இல்லை, ஆனால் ஔஸ்பென்ஸ்கி அவரைவிட்டு விலகிச் சென்றது மட்டுமே, அவரை மீளா துயரில் விட்டுவிட்டது.

முற்றும்

Photo Courtesy: www.skepdic.com