குரு என்பவர், எப்போதும் புரியாத புதிராகவே இருக்கிறார். ஒரு முறை கண்களில் நீர் பெருகக் கருணையுடன், இன்னொருமுறை நெருங்க முடியாத அதிதீவிர மனிதராய், மற்றொருமுறை சலனமற்ற பேர் இருப்பாய்... 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற குருவான 'குர்ட்ஜிஃப்', தனது சீடரே தனக்கு எதிரியாகும் அளவிற்கு, செய்தவை என்ன? இங்கே படிக்கலாம்...


சத்குரு:

ஒருவர் விருப்பத்துடன் இல்லாத போது, நீங்கள் அவரது எண்ணத்தை அழிக்க முயற்சித்தால், மிக விரைவில் அவர் உங்கள் எதிரியாக மாறுவார். பெற்றோர்-பிள்ளை, முதலாளி- தொழிலாளி போன்ற எந்த உறவிலும் இது பொருந்தும். ஆனால், ஒரு குருவின் செயலோ, நம் விருப்பத்தை எப்படியாவது அழிக்க முயற்சி செய்வதாகவே இருக்கிறது. இதுபோன்ற முயற்சிகளில், தனது நெருங்கிய சீடர்களை, சில நேரங்களில் தங்கள் எதிரிகளாக மாற்றிக்கொண்ட குருமார்களும் உள்ளனர். அந்த வகையில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் குர்ட்ஜிஃப்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குர்ட்ஜிஃப், சாதாரண மக்கள் அறிந்திருந்த ஆன்மீகவாதிகளிடமிருந்து மிகவும் மாறுபட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். தனது தேடலில் ஆன்மீக பரிமாணத்தில் உயர்ந்த மக்களை சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பல ஆய்வு பயணங்களை தொடங்கினார். அவர், அவரைச் சுற்றியுள்ள மக்களின் விருப்பத்தை அழிக்க மிக வினோதமான வழிமுறைகளை பயன்படுத்தியதுண்டு. குர்ட்ஜிஃப், அவரது நெருங்கிய சீடர்களில் ஒருவரான ஔஸ்பென்ஸ்கியை மட்டும் விட்டுவைத்தாரா என்ன?!

ஔஸ்பென்ஸ்கி, ஏற்கனவே உலகில் நன்கு அறியப்பட்ட ஒரு பெரிய தத்துவஞானியாகவும், கணித மேதையாகவும் இருந்தார். பின்னர் இவர் எல்லா இடங்களிலும் குர்ட்ஜிஃபின் வழக்கமான பயணத்துணையாக ஆகிவிட்டார். வெளி உலகில், குர்ட்ஜிஃப் அறியப்பட்டதற்கு பல விதங்களில் ஔஸ்பென்ஸ்கி காரணமாக இருந்திருக்கிறார்.

குர்ட்ஜிஃப்பை முதன்முதலாக பார்க்க விரும்பியபோது இங்கிலாந்திலிருந்து வெகுதொலைவு பயணித்து வந்திருந்தார் ஔஸ்பென்ஸ்கி. குர்ட்ஜிஃப் அந்த நேரத்தில், சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த மத்திய ஆசியாவில் தங்கியிருந்தார்.

அவர் குர்ட்ஜிஃப்பின் இடத்திற்கு சென்ற போது, அவரை குர்ட்ஜீஃப் காத்திருக்க செய்தார். ஔஸ்பென்ஸ்கி, உலகப் புகழ்பெற்ற தத்துவமேதை என்றறிந்திருந்தும், குர்ட்ஜிஃப் மூன்று நாட்களுக்கு மேலாக அவரை தன் அறையின் வாயிலிலேயே காத்திருக்க செய்தார். இது ஔஸ்பென்ஸ்கிக்கு எரிச்சலாக இருந்தது. இருப்பினும், ஒரு ஞானமடைந்த குருவினை சந்திப்பதைத் தன் வாழ்நாளின் மிகப் பெரிய தருணமாக எண்ணி அவர் காத்திருந்தார். இறுதியில், குர்ட்ஜிஃப் அவரை பார்த்ததும் "ஏற்கனவே நீ உலகறிந்த மேதை என்பதால், உனக்கு தெரிந்ததைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு அவசியமில்லை. உனக்கு தெரியாத சில விஷயங்களை பற்றி மட்டுமே பேசப்போகிறேன். அதனால், உனக்கு தெரிந்த அனைத்தையும் இதில் எழுது" என்று கூறி சிறு காகித துண்டினை ஔஸ்பென்ஸ்கியிடம் கொடுத்தார்.

இது முதலில் அவருக்கு அவமானமாக இருந்தாலும், குர்ட்ஜிஃப் கூறியதை அப்போது தட்ட முடியாமல் எழுத முடிவெடுத்தார். ஆனால், பல மணி நேரத்திற்கு பின்பும் அவரால் எதுவும் எழுத முடியாமல் போனது! தான் அந்த விஷயங்கள் எதுவுமே தனது சொந்த அறிவல்ல என்று உணர்ந்த அவர், “எனக்கு எதுவும் தெரியாது" என்று குர்ட்ஜிஃப்பிடம் ஒப்புக்கொண்டார்! அன்று அவரை ஏற்றுக்கொண்டார் குர்ட்ஜிஃப். அதிலிருந்து குர்ட்ஜிஃப்புடன் பயணித்து, அவரது வாழ்க்கை முறை மற்றும் வழிமுறைகள் குறித்து எழுத ஆரம்பித்தார் ஔஸ்பென்ஸ்கி.

(இப்படி, குரு செய்த கலாட்டாவால், ஔஸ்பென்ஸ்கி எப்படி அவருக்கே எதிரியானார் என்பதை அடுத்த பதிவில் காணலாம்)

Photo Courtesy: www.tumblr.com