ஞானமடைய வேண்டும் என்ற தீவிரத்துடன் இருப்பவர்களுக்கு சத்குரு சொல்லும் அறிவுரை என்ன? அறிந்துகொள்வோம் இதில்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: சிலர் ஆன்மீகப் பாதையில் வெறும் ஆர்வத்தில் ஈடுபடுகிறார்கள். சிலர் ஞானோதயத்தைத் தேடி மிகவும் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். அவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஆன்மீகமென்றால் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் என்ற ஆர்வத்தினால் மட்டும் இல்லாமல் ஞானமடைய வேண்டும் என்று தீவிரத்தோடு ஈடுபடுபவர்களுக்கு தங்களின் அறிவுரை என்ன?

சத்குரு:

ஞானோதயம் என்பதும், மற்றவைகளும் வெறும் வார்த்தைகள்தான்.

ஞானோதயம் என்பது வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்லும் ஏதோ ஒன்று அல்ல. உங்களுடைய வாழ்க்கையை அதன் உச்சநிலைக்கு எடுத்துச் செல்வதுதான் ஞானோதயம். நீங்கள் அதை விழிப்புணர்வோடு தேடினாலும், விழிப்புணர்வில்லாமல் தேடினாலும் எப்படியும் நீங்கள் தேடுகிறீர்கள். அதை விழிப்புணர்வோடு தேடும்போது நீங்கள் சென்றடைவதற்கான சாத்தியங்களும், சந்தர்ப்பங்களும் நன்றாக இருக்கிறது. விழிப்புணர்வு இல்லாமல் தேடும்போது மீண்டும், மீண்டும் அங்கேயே வந்து சேர்கிறீர்கள். அருகில் உள்ள பூங்காவிற்கு செல்ல விரும்புகிறீர்கள். எங்கே செல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தால் நீங்கள் ஐந்து நிமிடங்களுக்குள் அங்கே சென்று சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இல்லாவிட்டால், உலகம் முழுவதும் சுற்றிச் சென்றாக வேண்டும். எனவே, ஆன்மீகப் பாதையில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் விழிப்புணர்வோடு தேடுகிறார்கள் என்று பொருள்.

ஞானோதயம் என்பதும், மற்றவைகளும் வெறும் வார்த்தைகள்தான். தேடுதலில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதிலிருந்து உச்சபட்ச சாத்தியங்களை நோக்கி நகர விரும்புகிறீர்கள் என்று பொருள். ஞானோதயம் என்பது ஒரு வார்த்தைதான். அந்த வார்த்தை தற்போது முற்றிலும் நேர்மையற்றதாக மாறிவிட்டது. எனவே பொதுவாக நாம் அந்த வார்த்தையைக் குறிப்பிடுவதில்லை. இந்தத் தன்மைக்கு வேறு புதிய வார்த்தையை உபயோகப்படுத்த முடியுமா என்பதை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.