ஞானியர் சேகரித்த ஞானப் பெட்டகம்
நாம் சேகரிக்கும் அரிய பொருட்களை கலைக் களஞ்சியம் என்கிறோம், பணத்தை வங்கியில் சேகரிக்கிறோம், தானியங்களுக்கும் கிடங்குகள் உண்டு. இப்படி நம் தினசரி வாழ்க்கைக்கு பயன்படும் விஷயங்களையே பார்த்து பார்த்து நாம் சேகரிக்கும்போது, ஞானத்தை சுவைத்துப் பார்த்த யோகியர் அதைச் சேகரித்து வைக்காமல் செல்வார்களா என்ன? இதோ ஞானியர் சேகரித்த பெட்டகம் பற்றி சத்குரு...
 
 

நாம் சேகரிக்கும் அரிய பொருட்களை கலைக் களஞ்சியம் என்கிறோம், பணத்தை வங்கியில் சேகரிக்கிறோம், தானியங்களுக்கும் கிடங்குகள் உண்டு. இப்படி நம் தினசரி வாழ்க்கைக்கு பயன்படும் விஷயங்களையே பார்த்து பார்த்து நாம் சேகரிக்கும்போது, ஞானத்தை சுவைத்துப் பார்த்த யோகியர் அதைச் சேகரித்து வைக்காமல் செல்வார்களா என்ன? இதோ ஞானியர் சேகரித்த பெட்டகம் பற்றி சத்குரு...

சத்குரு:

கைலாயத்தைப் பற்றியும் மானசரோவர் ஏரியைப் பற்றியும் நிறையக் கதைகள் உண்டு. அங்கே செல்பவர்கள் திரும்பி வருவதில்லை என்று பேசப்படுவதுண்டு. உண்மையில், அப்படி நடந்தும் இருக்கிறது. ஆனாலும் பத்தாயிரம் வருடங்களாக மனிதர்கள் அங்கே போய் வருகிறார்கள் என்பதும் உண்மை. ஒருவர் இருவர் அல்ல கோடிக்கணக்கானவர்கள் போய் வந்திருக்கிறார்கள்.

கைலாயத்தை வணங்கும்போது என் குருவை நான் எப்படி வணங்குவேனோ, அப்படியே வணங்குகிறேன்! என் வாழ்வில் வேறெங்கும் நான் இப்படிச் செய்ததில்லை.

எல்லா இடங்களிலும் ஒரு சிலர் இறக்கத்தான் செய்கிறார்கள். சில இடங்களில் வாழ்க்கை, மரணம் இரண்டுக்கும் இடையிலான எல்லைக்கோட்டின் அளவு சிறிது குறைந்துள்ளது. ஆன்மீக ரீதியாக அது நல்லதுதான். ஏனென்றால், ஒருவர் தன் மரணம் குறித்துத் தீவிர விழிப்புக் கொள்ளும் போதுதான், பொருள்நிலை இல்லாத ஒன்றைக் குறித்து விழிப்படைகிறார். எனவே கைலாயம் என்பது ஞானம் முழுமையும் சேமிக்கப்பட்ட இடம்.

இதனால் கைலாய மலை ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. சீதோஷ்ணம் மற்றும் வேறுபல அம்சங்கள் கொண்ட இடங்களுக்குச் செல்வதால், வாழ்க்கை - மரணம் இடையே உள்ள எல்லைக்கோடு குறைகிறது. எனவே, ‘என்ன ஆகுமோ, என்ன ஆகுமோ?’ என நடுங்குவது முட்டாள்தனம். பிரம்மாண்டமாய் சக்தியூட்டப்பட்ட இடத்துக்கு, ஆன்மீகம் தீவிரமாய் நிரம்பியுள்ள இடத்துக்குச் செல்லும்போது ‘நான் பிழைப்பேனா, மாட்டேனா’ என்று எண்ணத்தை ஓட்டாமல் இருங்கள்!
4

உங்களைப் பற்றி முக்கியத்துவம் இல்லாமல் செல்ல வேண்டும். உங்களை முக்கியப்படுத்தும் போதெல்லாம் வாழ்வின் மற்ற அம்சங்கள் சிக்கலாகின்றன. கைலாயம், ஈசனின் இருப்பிடம், அங்கே நீங்களா முக்கியம்?

ஆழ்ந்த பக்தி உணர்வோடும், மரியாதையுடனும், இந்தப் புனித மண்ணின்மீது அழுக்கேறிய பூட்ஸ் காலுடன் நடக்கிறோமே என்ற ஆழமான மனவலியுடனும் செல்லுங்கள். அப்படி இருந்தால் உங்களுக்குள் இருப்பது உயிர்ப்பாய் இருக்கும். உச்சபட்ச உண்மை உங்களை நெருங்கி வரும். உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், உச்சபட்ச உண்மைக்கு வெகுதொலைவில் இருப்பீர்கள்.

காஷ்மீர சைவ வழியில் சொல்லப்பட்ட ஒரு கதை மிகப் பிரபலம்.

ஒரு நாள் சிவன் தன் நண்பர்களுடன் வெளியே சென்றார். அவர் நண்பர்கள் யாரென்று தெரியும் அல்லவா? கணங்கள், யக்ஷர்கள் இவர்கள் யாவரும் சிவனுடைய நண்பர்கள். சுஜீவன் தன் நண்பர்களுடன் வெளியே சென்றுவிட்டதால், குளிப்பதற்காக மானசரோவர் செல்லலாம் என்று பார்வதி நினைத்தாள். கீழே வந்து மானசரோவரில் மூழ்கிக் குளித்து எழுந்தாள். அன்று சூரியனும் தலைகாட்டியதால் உடலை உலர்த்த, ஆடைகள் அணியாமல் அங்கேயே படுத்துக்கொண்டாள். மது அருந்தியிருந்த சிவன், அந்நேரம் பார்த்து அங்கே வர, படுத்திருந்தது பார்வதி என்பதை அறியவில்லை. அவளது மார்பகத்தைப் பார்த்தவர், அதை ஒரு லிங்கமெனக் கருதி வழிபடத் தொடங்கினார். சிவனின் பார்வையில் லிங்கமாய்த் தெரிந்த பார்வதியின் ஒரு புற மார்பகம், அவரது வழிபாட்டால் கைலாய மலையாய் உயர்ந்ததாகச் சொல்கிறார்கள்.
2

3

அது உண்மைதான். கைலாய மலையைப் பார்த்தால் அது அந்தப் பகுதியில் உள்ள பிற மலைகளின் தொடர்ச்சியாய்த் தெரியவில்லை. இப்படி ஒரு கதை சொல்லப்பட்டது ஏன் தெரியுமா? காஷ்மீர சைவ வழியினர் இங்கே நீண்ட காலம் தங்கியிருந்து பெண்மை சார்ந்த விஷயங்களைச் செய்திருக்கிறார்கள்.

தாந்த்ரீக வழியில் இருந்த இவர்கள் பெண் தெய்வங்களைச் சார்ந்த ஆன்மீக வழியைச் சேர்ந்தவர்கள். கைலாய மலையில் பெரும் ஆன்மீகப் பணியினை இவர்கள் செய்திருக்கிறார்கள். பெண்மை சக்தி நிரம்பிய இடம் இது. புத்த மதத்தினர்கூட இதனைத் “தாயின் கருணை” என்றே அழைக்கின்றனர்.

புனிதமான, சக்தி வாய்ந்த பல இடங்களில் நான் இருந்திருக்கிறேன். சக்தி மிகுந்த மனிதர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். அவர்களை வணங்கும்போது உண்மையாகவே வணங்கியிருக்கிறேன். ஆனாலும் என் குருவை நான் வணங்குவதைக் காட்டிலும் சற்றுக் குறைவாகவே அது இருக்கும். ஆனால், கைலாயத்தை வணங்கும்போது என் குருவை நான் எப்படி வணங்குவேனோ, அப்படியே வணங்குகிறேன்! என் வாழ்வில் வேறெங்கும் நான் இப்படிச் செய்ததில்லை.

இந்தப் பிரபஞ்சத்தில் சிவனின் தன்மையை வெளிப்படுத்தும் நெருக்கமான ஓர் உருவம் இருக்குமென்றால், அது கைலாய மலைதான். நான் இதை உணர்ச்சிவசத்தால் சொல்லவில்லை. மிகவும் கவனமாகப் பல விஷயங்களைப் பார்த்த பின்னரே சொல்கிறேன். பல அற்புதமான உயிர்கள் தங்களுக்குத் தெரிந்த உன்னத விஷயங்களை இங்கே பொதித்து வைத்திருக்கிறார்கள்.

கைலாயம் என்பது ஞானம் முழுமையும் சேமிக்கப்பட்ட இடம். புவியியல் ரீதியாக இதனை நீங்கள் கருங்கல் பாறை என்றே சொல்வீர்கள். உங்களுக்கு கடந்த 4000 ஆண்டு கால வரலாறு மட்டுமே வெளியே தெரியும். ஆனால், தற்போது இந்த இடத்தின் சக்தியும் தன்மையும் அறிவும் உலகுக்குத் தெரியத் தொடங்கியிருக்கிறது. இந்த இடத்தில் பொதித்து வைக்கப்பட்டுள்ள அறிவு உயிர்ப்போடு உலகின் ஒவ்வொரு மதத்தையும் ஈர்த்துள்ளது.

ஜைன மதத்தினர் இது தங்களின் புனித இடம் என்கின்றனர். புத்த மதத்தினர் தங்களுடையது என்கின்றனர். பான் மதத்தினர் தங்களுக்கு உரியது என்கின்றனர். இது யாருக்கும் சொந்தமானதல்ல. இது உலகின் பொக்கிஷம் வாழ்க்கையைப் பற்றி ஒருவர் அறிய விரும்பும் அனைத்தும் இங்கே பொதித்து வைக்கப்பட்டுள்ளன. இங்கே ஆன்மீக ரீதியாக, அறிவியல் ரீதியாக என்ன உள்ளதோ, அதன் சங்கேதக் குறிப்புகளிலிருந்து விஷயத்தை விளங்கிக்கொள்ளும் தெளிவும் புரிதலும் இருந்தால், அங்கே இருப்பவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். கைலாயம் ஓர் உயிருள்ள ஆன்மீகப் பெட்டகம்.

கைலாஷ்-மானசரோவர் யாத்திரைக்கான தேதிகள்:

முன் பதிவு செய்யக் கடைசி தேதி: 2016 மே 31ம் தேதி

இமெயில்:

தமிழ்நாடு - tn@sacredwalks.org
பிற மாநிலங்கள் - india@sacredwalks.org

மேலும் தொடர்புக்கு:
sacredwalks.org

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1