சத்குரு, தனது ஞான நிலையை அடைய என்ன சாதனைகளைக் செய்தார்? திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவா? சத்குரு மக்களுக்கு வழங்கும் தத்துவம் என்ன? இவை சுலபமாய் பலருக்கும் எழும்பும் கேள்விகள்தான். இதற்கு சத்குருவின் பதில் இந்தப் பதிவில்...


Question: சத்குரு, எத்தனை பிறவிகளுக்கு முன் உங்களுக்கு இந்த தேடுதல் தொடங்கியது? இந்த உன்னத நிலையை அடைய நீங்கள் எந்தெந்தச் சாதனை முறைகளைக் கடைப்பிடித்தீர்கள் என்பது பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

சத்குரு:

இந்த நிலையை அடைய நான் கடந்து வந்த அனுபவங்கள் வேறு யாருக்கும் நேர வேண்டாம் என்பதே என் விருப்பம். சாதனைகளில் தலையாய நிலையில் இருப்பது பசி. தலை குனியாத கண்ணியத்துடன், பிச்சையெடுத்துப் புசிப்பது என்ற நிலையை கவனத்துடன் தேர்ந்தெடுத்த பின், வாழ்க்கையே பசியாகிப்போகும்.

ஒருவேளை உணவைத் தவறவிடுவதன் பேர் பசியல்ல. தொடர்ந்து பத்து நாட்களுக்கு எதுவும் உண்ணாமல் இருந்தால், பசி என்பதன் உண்மைப் பொருள் விளங்கும். அது வெறும் உணர்வல்ல. பசி ஒரு மிருகம் போல் உங்களுக்குள் அமர்ந்து உங்களையே உணவாக்கிக் கொள்ளும். உங்களை செயலிழக்க வைக்கும். நீங்கள் மனிதர் என்பதையே பல சமயங்களில் மறந்துபோக வைக்கும்.

ஆனால் எந்தவிதப் பசியிலும் கண்ணியத்தைக் கைவிடாமல், முன்னே போகிறோமா, பின்னால் செல்கிறோமா என்று தெரிந்துகொள்ள வழியில்லாமல், மேலும் மேலும் ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபட்டதைப் பற்றியெல்லாம் பகிர்ந்து கொண்டால், உங்களால் தாங்க முடியாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆனால், என்ன? எனக்கு அதுபற்றி எந்த வருத்தமும் இல்லை. அந்தப் பசி எனக்குக் கற்றுத் தந்தது ஏராளம். இப்போது என்னை யாரும் பசிக்கவிடுவதில்லை. நான் எங்கு சென்றாலும், தேவையான உணவு எங்கேயும் எப்போதும் கிடைத்துவிடுகிறது.

Question: திருமணங்கள் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றனவா?

சத்குரு:

நீங்கள் எப்போது சொர்க்கத்துக்குப் போவீர்கள்? இறந்த பிறகுதானே? அதுவும் அங்கு போகும் தகுதி இருந்தால்தானே? அப்போது உங்கள் திருமணத்தை நிச்சயித்துக் கொள்ளலாமா?

இந்த பூமியில் நிச்சயிப்பதைவிட சொர்க்கத்தில் நிச்சயிப்பது எந்த விதத்தில் உயர்ந்தது என்று நினைக்கிறீர்கள்? இந்த பூமியில் காணக் கிடைக்காத அளவு, சொர்க்கத்திலிருந்து சொரியப்பட்ட ஓர் அற்புதத்தைக் காட்டுகள்.

முதலில், இந்த அபத்தமான கருத்துக்களை விட்டொழியுங்கள். உங்கள் உறவுகளை இங்கே கவனத்துடன், பொறுப்புடன், முழுமையான அன்புடன் உருவாக்கிக் கொள்ளுங்கள். சொர்க்கத்தை இங்கேயே அனுபவிக்கலாம்.

Question: உங்களுடைய தத்துவம் என்று எதையும் நீங்கள் முன்மொழியவில்லையே, ஏன்?

சத்குரு:

வாழ்க்கை, படைப்பு இவற்றின் பிரமாண்டங்களுக்கு முன்னால், நான் ஒரு சிறு துரும்பு!

வாழ்க்கை என்பது மிக அசாதாரணமான ஓர் அனுபவம். அந்த அற்புதங்களின் ஆழத்தை உணரும் வாய்ப்பு எனக்கு நேர்ந்தது. அந்த வரமும் சலுகையும் எனக்குப் புதிய அனுபவங்களுக்கு வழி திறந்தது. அதனால் மட்டுமே நான் பெரியவனாகி விடவில்லை.

ஞானம் என்பது ஒரு வழி திறத்தல் மட்டுமே. அது நீங்கள் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளும் பரிசுக்கோப்பை அல்ல.

என்னைப் பற்றி நான் பெரிதாக நினைக்காதபோது, எதை என் தத்துவம் என்று சொல்வேன்? வாழ்க்கையின் லயத்தோடு நீங்கள் பொருந்தி இயங்க, உங்களுக்குப் பல கருவிகள் தந்து வழிகாட்டுவேன். மற்றபடி, என் தத்துவம் என்று எதையும் ஒருபோதும் போதிக்க மாட்டேன்.