சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 11

நான் யார்? தன்னை உணர்வது ஏன் கஷ்டமான விஷயமாக இருக்கிறது? இந்த கேள்விகள் பலருக்கும் புதிராகவே இருந்து மறைந்து போய்விடுகிறது. இங்கே பாலிவுட் இயக்குநர் சேகர் கபூர் தனக்குள் எழுந்த இக்கேள்விகளை சத்குருவிடம் கேட்க, சத்குருவின் பதில் இந்த வாரப் பதிவாக...

சேகர்: நான் யார்? (சத்குரு சிரிக்கிறார்)

சத்குரு: நல்லவேளை என்னிடம் கேட்கிறீர்கள், எனவே பிரச்சினையில்லை. நீங்கள் வெளியில் யாராவது ஒருவரிடம் போய், நான் யார்? என்று கேட்டால், அவர்கள் உங்களை மனநோய் மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்கள் (சிரிக்கிறார்)

சேகர்: சரி, என்னையே நான் கேட்கிறேன், நான் யார்?

சத்குரு: மனிதன் தன்னுடைய இயல்பு என்ன என்று தெரியாமலேயே வாழ முயற்சிக்கிறான். தன்னுடைய உயிர்த்தன்மை பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து போக முயற்சிக்கிறான். இப்படி வாழும்போது அந்த வாழ்க்கை தற்செயலான வாழ்வாக மட்டுமே இருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒருவர் இப்படி தன் முழு வாழ்க்கையையும் தற்செயலாக வாழும்போது, அவரிடத்தில் பயம், கவலை, போராட்டம் ஆகியவை நிச்சயமாக இருக்கும், இல்லையா? ஆனால் வாழ்க்கையை போராட்டங்கள் இல்லாமலே வாழமுடியும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் கண் தெரியாதவராக இருந்தால, சில அடி தூரம் நடப்பது கூட போராட்டம்தான். வாழ்க்கை ஏன் உங்களுக்கு ஒரு போராட்டமாக ஆகிவிட்டது என்றால் எது நான், எது உலகம், எது என்னுடைய தன்மை என்று ஒரு தெளிவான புரிதல் உங்களிடம் இல்லை. உங்கள் புரிதலை உயர்த்திக் கொண்டால் உங்கள் தன்மையை, இயல்பை உங்களால் உணரமுடியும்.

சேகர்: எனவே, ஞானம் பெற வேண்டுமானால் நான் மிகவும் கஷ்டப்பட்டாக வேண்டுமா? ஏன் இது இவ்வளவு கடினமாக உள்ளது?

சத்குரு: நீங்கள் உங்களை உணர்வதற்கு, நீங்கள் நீங்களாக மாறுவதற்கு ஏன் கஷ்டப்பட வேண்டும்? (சிரிக்கிறார்) நீங்கள் வேறு ஏதாவதாக ஆக வேண்டுமென்றால் கஷ்டப்பட்டு வேலை செய்யவேண்டும். நீங்களாகவே இருப்பதற்கு எதற்காக கஷ்டப்பட வேண்டும்? ஞானமடைவது என்பது ஒரு சாதனையில்லை. அது ஒருவர் தன்னை உள்ளது உள்ளபடி உணர்வது மட்டுமே. நீங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. உருவாக்கவில்லை. ஏற்கனவே உள்ள ஒன்றை அப்படியே உணர்கிறீர்கள்.

ஏன் கடினமாக இருக்கிறது என்றால் நீங்கள் வேறு திசையில் தேடுகிறீர்கள். அவ்வளவுதான். வாழ்க்கை பற்றி உங்கள் ஐம்புலன்கள் மூலம் மட்டுமே புரிந்து கொள்கிறீர்கள். பார்ப்பது, கேட்பது, நுகர்வது, ருசிப்பது, தொடுவது என்று, புலன்களின் இயற்கையான தன்மையே வெளிநோக்கி செயல்படுவதுதான். ஏனெனில் அவைகள் பிழைப்பிற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை. உங்களை சுற்றி என்ன இருக்கிறது என்று உங்களால் பார்க்கமுடியும். ஆனால் உங்களால் உங்கள் கருவிழிகளை திருப்பி உங்கள் உள்ளே பார்க்க முடியாது.

இப்போது இந்த சத்தத்தை (கை தட்டுகிறார்) உங்களால் கேட்க முடிகிறது. சிறிய ஒரு எறும்பு இந்த கையின் மேல் ஊர்ந்து சென்றாலும் உங்களால் உணர முடியும். ஆனால் இத்தனை இரத்தம் உடலுக்குள் ஓடுகிறதே அதை உங்களால் உணர முடிகிறதா?

சேகர்: இல்லை

சத்குரு: இயற்கையிலேயே உங்களுடைய உணரும் தன்மை வெளிநோக்கியே உள்ளது. இப்போது நீங்கள் என்னை பார்க்கிறீர்கள். ஆனால் இந்த அனுபவத்திற்கான அடிப்படை வெளியில் நடக்கவில்லை. உங்கள் உள்ளேதான் நடக்கிறது. வெளிச்சம் என் மீது விழுந்து, எதிரொளித்து உங்கள் விழி லென்சின் வழியாக சென்று, கண் ரெட்டினாவில் தலைகீழான பிம்பம் தோன்றி பிறகுதான் என்னைப் பார்க்க முடிகிறது.

இந்த முழு அனுபவமும் உங்கள் உள்ளேயேதான் நடக்கிறது, இல்லையா? இப்படி உங்கள் அனைத்து வெளி அனுபவங்களுக்கான அடிப்படையும் உங்கள் உள்ளேதான் நடக்கிறது, அப்படித்தானே?

சேகர்: ஆம்

சத்குரு: இப்படி உள்நிலையில் நடக்கும் உலகம் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு மாதிரியாக வெளிப்படுகிறது. உங்களுக்கு வெளிப்படுவதுபோல பறவைகளுக்கோ அல்லது பறவைகளுக்கு வெளிப்படுவது போல மிருகங்களுக்கோ வெளிப்படுவதில்லை.

உங்களுக்கு தெரியுமா, நாய்கள் எல்லா நிறங்களையும் கறுப்பு வெள்ளையாக மட்டுமே பார்க்க முடியும். இப்போது நரம்பியல் மருத்துவர்கள் கூட சொல்கிறார்கள், நீங்கள் என்னைப் பார்க்க முடிகிறது என்றால் அதற்கு நம் மூளையின் சுமார் 10க்கும் மேற்பட்ட பகுதிகளைப் பயன்படுத்துகிறோம் என்று. ஒரு பகுதி சரியாக வேலை செய்யவில்லை என்றால் உங்களுக்கு நிறம் தெரியாது, இன்னொரு பகுதி சரியாக வேலை செய்யவில்லை என்றால் நீங்கள் பார்க்கும் பிம்பம் தெளிவாக இருக்காது. எனவே, உங்கள் அனுபவங்கள் என்பது, புலன் உறுப்புக்கள் மூலமாக உங்கள் உள்நிலையில் நிகழ்பவைதான்.

அதனால்தான் இந்தக் கலாச்சாரத்தில் எப்போதும் யாருக்காவது எந்த அனுபவமாவது நடந்தால், 'இது உங்கள் கர்மா' என்று சொல்கிறோம். கர்மா என்றால் செயல். அதாவது உங்கள் செயல்களின் விளைவு என்கிறோம்.

அனுபவங்கள் வெளியில் நிகழ்ந்தாலும் அதற்கான செயல் உள்ளேதான் நடந்திருக்கிறது. எனவே உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் முழுவதுமே 100 சதவிகிதம் உங்கள் செயல்களின் விளைவுதான்.

உங்கள் செயல்கள் மட்டுமே, வேறு ஒருவருடைய செயல்கள் அல்ல. எனவே நீங்கள் யார் என்பது உங்களுக்கு உள்ளே இருக்கிறது. ஆனால் நீங்கள் புரிந்துகொள்வது எப்போதும் வெளிநோக்கியே இருக்கிறது.

அடுத்த வாரம்...
சத்குருவை தூரத்தில் பார்த்தாலும் மக்களிடம் அன்பு பெருகக் காரணம் என்ன எனக் கேட்கும் சேகர் கபூருக்கு சத்குருவின் பதில் அடுத்த வாரம்.