எது சரியான பாதை என்ற குழப்பத்தில் சத்குரு உதவுவாரா?
வாழ்வில் தலைசிறந்த பாதையைத் தேர்ந்தெடுப்பது எப்படியென்று சத்குருவிடம் ஒருவர் கேட்டார். அதற்கு சத்குரு தந்த பதில் இது.
 
 

வாழ்வில் தலைசிறந்த பாதையைத் தேர்ந்தெடுப்பது எப்படியென்று சத்குருவிடம் ஒருவர் கேட்டார். அதற்கு சத்குரு தந்த பதில் இது.

சத்குரு:

தலைசிறந்தது என்று ஒன்றுமே கிடையாது. மனிதர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு, தலைசிறந்ததைத் தேடுவதுதான். திருமணமாகட்டும், தொழிலாகட்டும், ஆன்மீகமாகட்டும், அதிமுக்கியத் தேர்வுகள் ஆகட்டும், அனைத்திலும் தலைசிறந்ததைத் தேடுகிறார்கள்.

நீங்கள் எதைச் செய்தாலும் அதில் முழுமையாக ஈடுபட்டுச் செய்தால், அது மகத்தானதாக ஆகிறது.

நீங்கள் செய்வதற்கு, தலைசிறந்ததென்று தனியாக எதுவுமில்லை. நீங்கள் எதைச் செய்தாலும் அதில் முழுமையாக ஈடுபட்டுச் செய்தால், அது மகத்தானதாக ஆகிறது. நீங்கள் மகத்தான ஒன்றைச் செய்ய வேண்டுமே தவிர, தலைசிறந்ததைத்தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஏனெனில். தலைசிறந்தது என்பது, வேறொன்றுடன் ஒப்பிட்டு அதன் மூலம் நீங்கள் முடிவெடுப்பது.

இப்போது நான் மகத்தான தன்மையில் என்னை உணர்கிறேன் என்றால், இதுதான் தலைசிறந்த நாள் என்றோ, இதுதான் பிரபஞ்சத்திலேயே தலைசிறந்த இடமென்றோ பொருளல்ல. எந்த இடமாக இருந்தாலும் நீங்கள் முழுமையாக அங்கே இருக்கும்போது அந்த இடம் மகத்தான இடமாகிறது.

எனவே, எதை நீங்கள் செய்தாலும் அது மகத்தானதாக ஆக வேண்டுமே தவிர, பிறருடன் ஒப்பிடுவதன் மூலம் ஒரு முடிவுக்கு வருகிற விதமாக தலைசிறந்தது என ஒன்றைத் தீர்மானிக்க வேண்டியதில்லை.

எனவே, தலைசிறந்த ஒன்றைச் செய்ய வேண்டும் என்றும், தலைசிறந்த மனிதர் ஒருவரை உங்கள் வாழ்வில் கண்டறிய வேண்டுமென்றும் எண்ணுவதை விட்டுவிடுங்கள். அப்படி ஒரு மனிதர் இந்தப் பிரபஞ்சத்திலேயே கிடையாது. ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டு இது தலைசிறந்ததுதானா என்று கேட்கும்போது அதனினும் மேம்பட்ட ஒன்றைக் காண நேர்ந்தால் குழம்பிவிடுவீர்கள்.

உங்கள் மரணத்தின்போதுகூட, நீங்கள் படுத்திருப்பது தலைசிறந்த சவப்பெட்டியா என உங்களுக்குக் கவலை வரும். நான் கேட்டது வேறு தரத்திலாயிற்றே என்று சவப்பெட்டிக்குள்ளும் புரண்டு புரண்டு படுப்பீர்கள். ஏனென்றால், உங்கள் முழு வாழ்வையும் நீங்கள் ஒப்பீட்டிலேயே கழித்திருக்கிறீர்கள்.

நான் உங்களை நரகத்திற்கு அனுப்பினாலும் நீங்கள் அங்கே செல்வீர்கள் என்று உங்களுக்கு நூறு சதவிகித உறுதியும், அதேநேரம் உங்களை நான் நரகத்திற்கு அனுப்ப மாட்டேன் என்கிற நம்பிக்கையும் இருந்தால்தான் உங்களுக்கான முடிவை நான் எடுப்பேன்.

ஆன்மீகப் படிநிலைகள் என்று வரும்போது உங்கள் மதிப்பீட்டின்படி போகப்போகிறீர்களா அல்லது என்னிடம் விட்டுவிடப் போகிறீர்களா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். என்னிடம் நீங்கள் விட்டுவிட்டால் தற்போதைய சூழலில் உங்களுக்கு தலைசிறந்தது எதுவென்னும் அடிப்படையில் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்வேன்.

நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு எது வசதியோ அதைத் தேர்ந்தெடுப்பீர்கள். அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தாமல் இருக்கலாம். அல்லது, மிக நீண்ட சுற்றுப் பாதையாக இருக்கலாம். எனக்கு உங்கள் வசதி பற்றி அக்கறையில்லை. உங்கள் நேரமும் சக்தியும் எல்லைக்குட்பட்டது என்பதால், நீங்கள் அங்கு சென்று சேர்வதுதான் முக்கியம். உங்களை துரிதப் பயணத்தில் இணைக்காவிட்டால் அங்குமிங்கும் சுற்றித் திரிந்து நீங்கள் தொலைந்து போக வாய்ப்பிருக்கிறது.

எது உங்களுக்கு உகந்த வழி என்பதை நீங்கள் முடிவெடுக்கும் உரிமையை என்னிடம் விடுகிற பட்சத்தில்தான் சொல்வேன். இல்லையெனில், மற்றவர்கள் பற்றிய என் அபிப்பிராயங்களை அவர்கள் மேல் திணித்து, தங்கள் வாழ்வில் அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை நான் சொல்வதில்லை. நான் உங்களை நரகத்திற்கு அனுப்பினாலும் நீங்கள் அங்கே செல்வீர்கள் என்று உங்களுக்கு நூறு சதவிகித உறுதியும், அதேநேரம் உங்களை நான் நரகத்திற்கு அனுப்ப மாட்டேன் என்கிற நம்பிக்கையும் இருந்தால்தான் உங்களுக்கான முடிவை நான் எடுப்பேன். ஆனால், அது அரைகுறையான நம்பிக்கையாய் இருந்தாலோ உங்களுக்கு இன்னும் சந்தேகங்கள் இருந்தாலோ உங்களுக்கான முடிவை நான் எடுக்கமாட்டேன்.

நீங்கள் அங்குமிங்கும் சுற்றித் திரிய முடிவெடுத்துவிட்டால் அது உங்கள் விருப்பம். என்னைப் பொறுத்தவரை நான் பல பிறவிகளுக்குத் திட்டமிடவில்லை. இந்தப் பிறவியிலேயே, மனிதர்களுக்கு நிகழ வேண்டியது நிகழ வேண்டுமென எண்ணுகிறேன். நீங்கள் பல பிறவிகள் தாண்டி விடுதலையடைய விரும்பினால் அப்படி மெல்ல வளர்வதற்கான வழிகளும் உள்ளன. அதில் தவறொன்றும் இல்லை. ஆனால், எனக்கு அவ்வளவு பொறுமையில்லை. ஏனெனில், இதுதான் என் இறுதிச் சுற்று. இது மட்டும் உறுதி.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1