எது ருசி.... சைவமா அசைவமா?
அசைவத்தின் ருசி நிச்சயமாக சைவத்தில் இல்லையென்று அடித்துச் சொல்கிறான் என் நண்பன். அவன் சொல்வது சரியா?
 
 

Question:அசைவத்தின் ருசி நிச்சயமாக சைவத்தில் இல்லையென்று அடித்துச் சொல்கிறான் என் நண்பன். அவன் சொல்வது சரியா?

சத்குரு:

அவரைக் கொஞ்சம் பச்சை மாமிசத்தைப் பிய்த்துச் சாப்பிட்டுப் பார்க்கச் சொல்லுங்கள். அவரால் அதைச் சாப்பிடவே முடியாது. ஆனால் பச்சைக் காய்கறியையாவது ஓரளவு சாப்பிடலாம். அதிலும் பெரிய ருசி இருக்காது. அப்படியென்றால் ருசி எதில் இருக்கிறது? சமையலில்தானே இருக்கிறது. பலவிதமாக சமையல் செய்து கொள்ள முடியும்.

பொதுவாக அசைவம் சமைக்கிற வீடுகளில் அதிகம் மசாலா பொருட்கள் போடுகிறார்கள். எனவே அதுதான் ருசியானது என்றும், சைவ சமையல் என்றால் வெறும் சாம்பார் சாதம் சாப்பிடுவார்கள். அதில் ருசி இல்லையென்றும் நினைத்துவிட்டீர்கள்.

அப்படியில்லை. சைவத்தைக் கூட மிகவும் ருசியாக சமைக்க முடியும். எனவே அசைவத்தாலோ, சைவத்தாலோ ருசி வரவில்லை. சமைக்கிற திறமையால்தான் ருசி வருகிறது. உங்கள் நண்பரை ஒருமுறை என்னுடைய சமையலை ருசித்துப் பார்க்கச் சொல்லுங்கள். சைவ உணவின் மீது அவருக்கு ரொம்பவே பிரியம் வந்துவிடும்.

Question:தசரதன் போன்ற அக்கால மன்னர்கள் ஏராளமாக பெண்களை மணந்து அந்தப்புரத்தில் அடைத்துக் கொண்டார்கள். இன்றைக்கு ஒரு மனிதன் பல பெண்களை மணக்க முயன்றால் பிடித்து சிறையில் தள்ளுகிறது அரசு. ஏன் இந்த கால முரண்பாடு?

சத்குரு:

இதில் நீங்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். அரசர்கள் போருக்குப் போகிற போதெல்லாம் ஆயிரக்கணக்கான வீரர்கள் இடிந்து போனார்கள். அவர்கள் போருக்குப் போவதற்கு முன்பு அரசர்கள், அந்த வீரர்கள் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அவர்களுடைய குடும்பங்களைப் பார்த்துக் கொள்வதாக வாக்களித்தார்கள். அதற்காக இறந்துபோன வீரர்களின் மனைவிகளை அரசர் மணந்து கொண்டதாகவோ, உறவு கொண்டதாகவோ அர்த்தமில்லை. மாறாக, ராணிக்குரிய வாழ்க்கையை அவர்களுக்கு அரசர்கள் கொடுத்தார்கள். இதைத்தான் அரசர்கள் அந்தப் பெண்ணை மணந்து கொண்டதாகத் தவறாகக் கருதிவிட்டார்கள். தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகள் என்றால் அத்தனை பேரும் உணவு கொடுத்து, உடை கொடுத்து, தங்குமிடமும் தந்ததாகத்தான் அர்த்தம். எனவே இந்தக் காலத்தில் ஒரு மனைவிக்கு மேல் மணந்து கொண்டால் கைது செய்கிறார்களே என்று கவலைப்படாதீர்கள். உங்கள் பெயர் வேறு ஜெயராமன் என்று இருக்கிறது. தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகள் என்று வைத்துக் கொண்டால் கூட ராமனுக்கு ஒரேயொரு மனைவிதான் என்பதை ஜெயராமன் மறந்துவிடக் கூடாது. எனவே ஜெயராமனுக்கு ஒரு மனைவி போதும்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1