அனைவரையும் விலக்கி வைத்து பற்றற்று இருப்பதுதான் ஆன்மீகம் மற்றும் யோகா என்று பலர் எண்ணிக்கொண்டு, மனதை குழப்பிக்கொள்வதை பார்க்கலாம்! அன்போடு இருப்பவர்களை எப்படி விலக்கிவைத்து பற்றற்று இருப்பது என்ற கேள்வி அங்கே குறிப்பாக எழுகிறது. இதிலுள்ள தவறான புரிதல்களை விளக்கும் சத்குரு, பற்றற்று இருப்பதென்றால் உண்மையில் என்ன என்பதையும் புரியவைக்கிறார்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: சத்குரு, யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒன்று எனக்கு எல்லாமாக இருக்கும்போது, எப்படி நான் அவருடன் அல்லது அதனுடன் பற்றுக் கொள்வதிலிருந்து விலகி வருவது?

சத்குரு:

நீங்கள் ஏற்கனவே அவ்வளவு பற்றுக் கொண்டிருந்தால், இன்னும் ஏன் அங்கு மிச்சம் வைத்திருக்கிறீர்கள்? உங்களுடையது என்று எதுவும் மிஞ்சாதபடிக்கு முழுமையாக, வலிமையாக பற்று கொள்ளுங்கள். பற்றிலிருந்து உங்களை விலக்கிக்கொள்ள நீங்கள் முயற்சித்தால், உங்களுக்கு நீங்களே பாதிப்பு ஏற்படுத்திக்கொள்வீர்கள். ஏனெனில் உங்களுக்கான வழியே பற்றுக்கொள்வதுதான் என்பதை, இப்போது நீங்கள் பற்றுக்கொண்ட உண்மையே விளக்குகிறது. அதற்கு எதிர்ப்பாக செல்ல முற்பட்டால், நீங்களே உங்களைக் காயப்படுத்திக் கொள்வீர்கள். பற்றுதல்தான் உங்களது வழியென்றால், முழுமையாக பற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இரு வெவ்வேறு பொருட்களை எடுத்து, அவைகளை ஒன்றாக இணைத்தால், அந்த இணைப்பானது முழுமையாக இருந்தால், ஒன்றிலிருந்து மற்றொன்றை உங்களால் வித்தியாசப்படுத்த முடியாது. அந்தப் பிணைப்பு முழுமையாக இல்லையென்றால்தான், இரண்டு பகுதிகளை தனித்துப் பார்க்க முடியும். உங்களால் வித்தியாசம் கூறமுடியவில்லை என்ற நிலையில், அங்கே பிரச்சனை இல்லை.

உங்களுக்கு யாரையாவது பிடிக்கவில்லையென்றால், அந்த நபர் ஏதேனும் அற்புதமானதைச் செய்தாலும்கூட, உங்கள் கண்ணுக்கு அது தெரியாது. அதே நேரம், நீங்கள் யாரையாவது விரும்பினால், அவர்கள் மோசமான விஷயங்களைச் செய்தாலும்கூட, அது உங்கள் பார்வைக்குள் வராது.

யாரோ, எங்கேயோ “பற்றுக்கொள்வது தீமை, எதனுடனும் பற்று கொள்ளாதீர்கள்” என்று கூறிவிட்டார்கள். எனவே இந்தக் கேள்வி எழுகிறது. ஒரு தவறான புரிதலின் காரணமாக இந்தக் கேள்வி எழுகிறது. அந்தப் பற்றுதல் உருவாக்கும் வலியின் காரணமாகவும் கூட உங்களுக்கு இந்தக் கேள்வி வந்திருக்கக் கூடும். ஆனால் பற்றுதல் முழுமையாக இருந்தால், வலி விலகிச் சென்றுவிடும். மேலும் இந்தப் பழமையான போதனைகள் உங்களுக்குள் இல்லாமல் போனால், உண்மையிலேயே எந்தப் பிரச்சனையும் கிடையாது. ஆகவே, வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு, முற்றிலுமாக, முழுமையுடன் பற்றுக் கொள்ளுங்கள். உங்களால் வித்தியாசம் கூற முடியாதபோது, பிறகு அதைப் பற்றி ஒரு பிரச்சனையும் இருக்காது.

உங்கள் உயிர்த்தன்மையுடன் நீங்கள் பற்றுக் கொண்டால், பிறகு ‘நான்’ என்பது அங்கு இருக்காது. உங்கள் உடல், உங்கள் கருத்துக்கள், உணர்ச்சிகள், தத்துவங்கள், உங்களுக்கே உரிய சரி, தவறுகள் மற்றும் விருப்பு, வெறுப்புகள் இவற்றோடு நீங்கள் பற்று கொள்ளும்போது மட்டுமே, பற்றுதல் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. இன்னொரு உயிரோடு உண்மையாகவே உங்களால் பற்றுகொள்ள முடிந்தால், அது அற்புதமானது. ஆனால் உங்களுக்கு சொந்தமான உடல், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளுடன் நீங்கள் பற்றுகொண்டால், நீங்கள் மிகுந்த எல்லைகள் கொண்டவராக ஆகிறீர்கள். உங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுடன் பற்றுகொள்ளும்போது, நீங்கள் இன்னும் அதிகமான எல்லைகளை வகுத்துக்கொள்கிறீர்கள்.

ஆகவே பற்றுக் கொள்ளுங்கள். ஏன் நீங்கள் தயங்குகிறீர்கள்? நீங்கள் பற்றுக் கொள்வது யாருடன் என்று பார்க்க வேண்டும். நீங்கள் பற்றுக் கொள்வது இன்னொரு நபர் குறித்த உங்கள் கருத்துடன்தான் என்றால், அப்போது அது பிரச்சனைதான். உண்மையில் நீங்கள் மற்றொரு உயிருடன் பற்றுக் கொள்ளாமல், அந்த நபர் என்னவாக இருக்கிறார் என்ற உங்களுடைய கருத்துடன் பற்றுக் கொண்டிருப்பதன் காரணமாகத்தான், பற்றுதலின் வலி உண்டாகிறது. உங்களுடைய சக்தி நிலைகளை, மற்றொரு நபரின் சக்தி நிலைகளுடன் உங்களால் பிணைக்க முடிந்தால், அது கற்பனைக்கெட்டாத அற்புதமாக இருக்கும். அப்போது அங்கே உண்மையில் ஒரு பிரச்சனையும் இருப்பதில்லை. அதுதான் பிணைப்பு என்பது. உங்களால் இயன்றவரை பிணைப்பை முழுமையாக ஆழப்படுத்துங்கள். காலமும், இடமும் உங்களைப் பிரிக்க முடியாத அளவுக்கு மிகுந்த பற்றுக் கொள்ளுங்கள். இப்போது, பிணைப்பு கொள்வதற்கு நீங்கள் தயங்குவது ஏனென்றால், பற்றுதல் மோசமானது என்கிற இந்த போதனைகளின் காரணத்தால்தான். ஆகவேதான் காலமும், இடமும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது.

உங்கள் உயிர்த்தன்மையுடன் நீங்கள் பற்றுக் கொண்டால், பிறகு ‘நான்’ என்பது அங்கு இருக்காது. உங்கள் உடல், உங்கள் கருத்துக்கள், உணர்ச்சிகள், தத்துவங்கள், உங்களுக்கே உரிய சரி, தவறுகள் மற்றும் விருப்பு, வெறுப்புகள் இவற்றோடு நீங்கள் பற்று கொள்ளும்போது மட்டுமே, பற்றுதல் ஒரு பிரச்சனையாக இருக்கிறது.

விருப்பு வெறுப்புகளுடன் கூடிய ஒரு எல்லைக்குட்பட்ட நபராகத்தான் யாருடனோ இருக்கப் போகிறீர்கள் என்றால், அப்போது அவருடன் பற்று கொள்வதற்கு நீங்கள் தயங்குவீர்கள். உங்களது ஆளுமை என்பது விருப்பு, வெறுப்புகளின் குவியலாக மட்டுமே இருக்கிறது என்பதுடன் அடங்காத ஆசைகளும் மற்றும் வெறுப்புணர்வும் உங்களுக்குள் இருக்கிறது. அடிப்படையில் இவைகள்தான் உங்களது ஆளுமைக்கான அடித்தளங்களாக உள்ளன. இருப்பினும், விருப்பு வெறுப்புகளுடன் உலகத்தில் வாழ்வது என்பது மிகவும் முட்டாள்தனமான வாழ்க்கை முறை. தயவுசெய்து இதைச் சற்று கவனமாகப் பாருங்கள். அடிப்படையில் உங்களது பிணைப்பின் அடித்தளமாக இருப்பது விருப்பு, வெறுப்புகள்தான். நீங்கள் விரும்புவதைச் செய்வதுதான் சுதந்திரம் என்று காரண அறிவானது துரதிருஷ்டவசமாக உங்களை நம்பச் செய்கிறது. உங்கள் பணியிடம் மற்றும் வீடு போன்ற சாதாரண வெளிச் சூழல்களில் செயல்படும்போது கூட உங்கள் விருப்பு வெறுப்புகள் உங்களை முட்டாள்தனமான விஷயங்களை செய்ய வைக்கிறது. உங்களுக்கு யாரையாவது பிடிக்கவில்லையென்றால், அந்த நபர் ஏதேனும் அற்புதமானதைச் செய்தாலும்கூட, உங்கள் கண்ணுக்கு அது தெரியாது. அதே நேரம், நீங்கள் யாரையாவது விரும்பினால், அவர்கள் மோசமான விஷயங்களைச் செய்தாலும்கூட, அது உங்கள் பார்வைக்குள் வராது. விருப்பு, வெறுப்புகளில் நீங்கள் சிக்கிக்கொண்ட கணத்திலேயே உங்களது பகுத்தறியும் திறனை நீங்கள் இழக்கிறீர்கள். மேலும் உங்களது புத்திசாலித்தனமும் பறிபோகிறது. அந்தக் கணத்தில் என்ன தேவைப்படுகிறதோ அதன்படி உங்களால் செயல்பட முடியாது. விருப்பு, வெறுப்புகளில் சிக்கிக்கொண்டால் பிறகு விழிப்புணர்வு என்பதே சாத்தியமில்லாதது.

யோகா என்றால் பிணைப்பு. நீங்கள் இந்த படைப்புடன் பற்றுக்கொள்ளும்போது, நீங்களே யோகா. “பற்றுக் கொள்ளாமை” என்பதை மக்கள் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதால், நீங்கள் விடுபட்டு இருப்பதில்லை. எல்லாவற்றையும் உங்களின் ஒரு அங்கமாக இணைத்துக் கொள்வதனால் மட்டுமே நீங்கள் விடுபட்டுப் போகிறீர்கள். நீங்கள் உங்களையே விலக்கிக் கொள்வதனால், விடுதலை வந்துவிடாது. எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் உங்களையே விலக்கிக்கொண்டால், பிரபஞ்சத்தில் தனிமைப்பட்டவராகிறீர்கள். நீங்கள் மேலும் அதிக அடையாளம் கொண்டவர் ஆகிறீர்கள். அனைத்தையும் உங்களுடைய ஒரு அங்கமாகவே நீங்கள் இணைத்துக்கொண்டால், உங்களுக்கான அடையாளம் என்று எதுவும் மிஞ்சாது. ஆகவே, முழுமையாக பற்றுக் கொள்ளுங்கள். உங்களது பற்றில் கஞ்சத்தனமாக இருக்க வேண்டாம்.