எப்போதும் போதையில் இருப்பது எப்படி?
மது அருந்தினால் அமைதியும் சந்தோஷமும் வருவதாக நினைத்து குடிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் மக்களுக்கு சத்குரு இங்கே குட்டிக் கதைகள் சொல்லி தீர்வு சொல்கிறார்; எப்போதும் போதையுடன் இருக்கவும், அதே சமயம் விழிப்புணர்வு குறையாமல் இருக்கவும் வழிகாட்டுகிறார்!
 
 

என்னிடம் ஓர் இளைஞர் வந்தார்.

"மது அருந்தும்போது படபடப்பு குறைந்து, கவலைகள் மறந்து அமைதியாகத் தூங்குகிறேன். தினம்தோறும் சிறிது மது அருந்தி வந்தால், இதய நோய் வராது என்று டாக்டர்கள் சொல்லியிருப்பதாகப் படித்தேன். இது உண்மைதானா?" என்றார்.

'தினம் ஒரு ஆப்பிள் என்று சொன்னவர்கள் இப்போது அதை மது என்று மாற்றிவிட்டார்களா? ' என்று சிரித்தபடி கேட்டேன்.

உடல் என்பது உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட மிக அற்புதமான இயந்திரம். அதை எப்போதும் அமைதியாக வைத்திருந்தே அதிகத் திறனுடன் இயக்க முடியும்.

உண்மையில், மது அருந்தும்போது என்ன நடக்கிறது? உங்களுக்குள் ஒருவித ரசாயன மாற்றம் நிகழ்ந்து உங்கள் பரபரப்பைக் குறைக்கிறது. அதை அமைதி என்று நீங்கள் நினைத்துக்கொள்கிறீர்கள். ஒரு கோப்பை மது அருந்தி இவ்வளவு அமைதி வந்தால், ஒரு பீப்பாய் குடித்தால், பன்மடங்கு அமைதி அல்லவா வர வேண்டும்? குடித்துப் பாருங்கள். என்ன ஆகும்?

உண்மையில் மது உங்களை அமைதிப்படுத்தவில்லை, மந்தமாக்குகிறது. நீங்கள் வாழப் பிரியப்படுகிறீர்களா, இல்லையா? நினைவற்றுக் கிடப்பதா வாழ்க்கை?
மற்ற நேரத்தில், அமைதியாக, கண்ணியமாக இருக்கும் பல மனிதர்கள் மது அருந்தியவுடன் செய்யும் ஆர்ப்பாட்டத்தை நீங்கள் கவனித்ததில்லையா? மது உள்ளே போனதால் கட்டுப்பாடு இழந்து செய்யப்பட்ட குற்றங்கள் பற்றி சிறைத் தண்டனை பெற்றவர்களிடம் கேளுங்கள், சொல்வார்கள்.

மது உங்களுக்கு நல்லது செய்கிறதா, கெட்டது செய்கிறதா என்பதை நீங்களே கவனியுங்கள்.

உங்களைப் பற்றிய கவனம் உங்களுக்கு இருப்பதால்தானே வாழ்வதை உணர்கிறீர்கள்? வாழ்வதைத் தீவிரமாக்க வேண்டுமென்றால், அது பற்றிய விழிப்புணர்வைத் தீவிரமாக்க வேண்டும்தானே?

மது போன்ற எந்த போதைப் பொருளும் உங்கள் விழிப்புணர்வைத் தீவிரமாக்குகிறதா, மந்தமாக்குகிறதா என்று யோசியுங்கள். அறிந்தே விழிப்புணர்வைத் தாழ்த்துகிறீர்கள் என்றால், முழுமையாக வாழாமல், அரைகுறையாகத்தானே வாழ்கிறீர்கள்?

சங்கரன்பிள்ளை இருந்த பாரில் ஒரு அமெரிக்கர் நுழைந்தார்.

"நிறுத்தாமல் பத்து பீர் குடிப்பவர்களுக்கு இருநூறு டாலர் பரிசு" என்று அறிவித்தார்.

யாரும் அசையவில்லை. சங்கரன்பிள்ளை எழுந்து வெளியே போய்விட்டார்.
முப்பது நிமிடம் கழித்து அவர் திரும்பி வந்தார்.

"பந்தயத்துக்கு நான் தயார்" என்றார்.

அடுத்தடுத்து பத்து பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து அமெரிக்கர் வியந்து போனார்.

கவலைகளை மறப்பதற்காக போதைப் பொருட்களை நாடுவது, சிங்கத்திடமிருந்து தப்பிக்க அதன் நிழலில் ஒளிந்துகொள்வது போல்தான். பிரச்சனைகளிடமிருந்து தப்பிக்க நினைக்காமல், அவற்றை எதிர்கொண்டு தீர்த்துவிடுவதுதான் புத்திசாலித்தனம்.

பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, "ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?" என்று கேட்டார்.

"பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று வேறொரு பாருக்குச் சென்று முதலில் பத்து பீர் குடித்துப் பார்த்தேன்" என்றார், சங்கரன்பிள்ளை.
இதைப்போன்ற குடிகாரர்கள் ஓய்வுக்காகவா குடிக்கிறார்கள்?

மது அருந்துபவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று நான் எந்தத் தீர்ப்பும் சொல்லவில்லை. ஆனால், மது உங்களுக்கு நல்லது செய்கிறதா, கெட்டது செய்கிறதா என்றுதான் கவனிக்கச் சொல்கிறேன்.

இன்னொன்றையும் புரிந்துகொள்ளுங்கள். உடலுக்கு ஓய்வு அவசியம். ஆனால், உறக்கம் அவசியமல்ல. நான் ஒரு நாளைக்கு அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்கு மேல் உறங்குவதில்லை. ஆனால், என் உடல் முழுமையான ஓய்வு கிடைத்த திருப்தியுடன், முழு விழிப்பு உணர்வுடன்தான் எப்போதும் இயங்குகிறது.

உடல் என்பது உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட மிக அற்புதமான இயந்திரம். அதை எப்போதும் அமைதியாக வைத்திருந்தே அதிகத் திறனுடன் இயக்க முடியும். அதற்கு முழுமையான விழிப்புணர்வு தேவை, அவ்வளவுதான்.

வருத்தம், விரக்தி, கோபம், குழப்பம் போன்ற உணர்ச்சிகளைப் போலவே, மதுவும் அந்த விழிப்புணர்வை மங்கச் செய்துவிடும்.

ஆனந்தமாயிருப்பது என்பதுதான் எந்த உயிருக்கும் இயல்பானது. அப்படித்தான் நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். தேவையில்லாத எண்ணங்களால் மனதை நிரப்பிக் குப்பை மேடாக்கிக்கொண்டு, குடித்தால் அமைதி கிடைக்கும் என்று நினைப்பது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம்!

ஆனந்தமாயிருப்பதற்கு நீங்கள் எதையும் நாட வேண்டாம். ஆனால், இன்பமாய் இருப்பதற்குத்தான், எதையாவது துணையாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்பத்திற்காக எதையாவது நாடும்போதெல்லாம், அது உடலுக்குக் கெடுதலா என்பதைப் பற்றி நீங்கள் யோசிப்பதில்லை.

ஆனந்தத்தை நானோ, நீங்களோ புறக்கருவிகளால் உற்பத்தி செய்ய முடியாது. சிகரெட், மது போன்ற முட்டாள்தனமான பழக்கங்களால் ஆனந்தத்தைப் பிறப்பிக்க முடியாது. அவற்றின் மூலம் உங்களுக்குக் கிடைக்கப்போவது ஆனந்தம் அல்ல: நிரந்தரமற்ற இன்பம். ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகிவிடுகிறீர்கள்.

எதற்கும் அடிமையாவது ஆனந்தம் அல்ல.

'சந்தோஷமாயிருக்கக் கவலைகளை மறக்க வேண்டும், கவலைகளை மறப்பதற்காகக் குடிக்கிறேன்' என்று சொல்பவர்கள் வசதியாக ஒன்றை மறந்துவிடுகிறார்கள்.

போதை அடங்கியதும், அந்தக் கவலை, அடக்கி வைத்த ஆவேசத்துடன் மீண்டும் தலையை சிலிர்த்துக் காட்டாதா?

இப்படித்தான் இரண்டு இளைஞர்கள் பாரில் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருவன் சொன்னான்; "நமக்காக இரண்டு பெண்களைப் பார்த்து வைத்திருக்கிறேன்"

அடுத்தவன் கேட்டான்: "அழகாய் இருப்பார்களா? "

"சில கோப்பைகள் விஸ்கி உள்ளே போனால், யாராய் இருந்தாலும், அழகாய்த் தெரிய ஆரம்பித்துவிடப் போகிறார்கள்" என்றான், நண்பன்.

இருவரும் தள்ளாடியபடி குறிப்பிட்ட வீட்டின் கதவைத் தட்டினார்கள்.

கதவைத் திறந்த பெண்ணைக் காட்டி நண்பன் கேட்டான்: "எப்படி? அழகாய்த் தெரிகிறாளா? "

அடுத்தவன் பெருமூச்சுடன் சொன்னான்:

"அதற்குக் கோப்பைகளில் குடித்தது போதாது.. பீப்பாய்களில் குடிக்க வேண்டும்"

உங்கள் கவலைகளும் அப்படித்தான். கோப்பைகளில் குடித்தால் பீப்பாய்களைக் கேட்கும்.

நீங்கள் முட்டாள்தனமாக இன்பத்தைத் தேடிப் போவதற்கும், ஆனந்தமாயிருப்பதற்கும் இடையில் பல கோடி சூரியத் தொலைவு இருக்கிறது.

ஆனந்தத்தை உணர, போதைப் பொருட்களை நாடுவது என்பது சமுத்திரத்தின் ஆழத்தை அரையடி ஸ்கேலால் அளந்து பார்க்க முயற்சி செய்வது போல.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். சிகரெட் பிடிப்பதாலோ, குடிப்பதாலோ, உங்களுக்கு சந்தோஷம் வந்துவிடுவதில்லை. அதில் நீங்கள் காட்டும் தீவிரமான ஈடுபாடுதான் அந்த சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது. முழுமையான ஈடுபாடுதான் ஆனந்தத்தின் ஆணிவேர்.

விரும்பிச் செயலாற்றும்போது, முழுமையான ஈடுபாட்டுடன் செயலாற்றிப் பாருங்கள். அதில் கிடைப்பதுதான் உண்மையான ஆனந்தம்.

யோசியுங்கள். உங்களுக்கு போதை ஏறியபோதெல்லாம் கவலை இடத்தைக் காலி செய்துகொண்டு போய்விட்டதா? இல்லை. அங்கேயேதான் அழுத்தமாக உட்கார்ந்திருந்தது. நீங்கள்தான் கொஞ்சம் நேரம் அதன் பக்கம் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தீர்கள்.

கவலைகளை மறப்பதற்காக போதைப் பொருட்களை நாடுவது, சிங்கத்திடமிருந்து தப்பிக்க அதன் நிழலில் ஒளிந்துகொள்வது போல்தான். பிரச்சனைகளிடமிருந்து தப்பிக்க நினைக்காமல், அவற்றை எதிர்கொண்டு தீர்த்துவிடுவதுதான் புத்திசாலித்தனம்.

உங்கள் சந்தோஷம் எதன் மீதாவது சார்ந்திருந்தால், அது எப்போது வேண்டுமானாலும், உங்கள் வாழ்க்கையிலிருந்து விலகிப் போகலாம் என்ற கத்தி கழுத்துக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கிறது.

அதுவாக விலகலாம். அல்லது மருத்துவர்களாலோ, அரசாங்கத்தாலோ, நீங்கள் சார்ந்திருக்கும் இனத்தினாலோ அது கட்டாயமாக விலக்கப்படலாம். எதற்காவது அடிமையாகிவிட்டால், அது மறுக்கப்படும்போது, உங்கள் இன்பத்துக்கும் தடை போடப்படுகிறது. அது விட்டுப்போகுமோ என்ற கவலையே உங்களுடைய பெரும் துன்பமாகிவிடும்.

கிளப் ஒன்றில், உடல் சுருங்கிப்போன அந்த மனிதர் லேசாக இருமிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

அவரிடம் ஓர் இளைஞன் வந்தான்.

"நீங்கள் அன்றாடம் நாற்பது சிகரெட்டாவது பிடிக்கிறீர்கள். ஆறு கோப்பையாவது மது அருந்துகிறீர்கள். அத்தனையும் தாண்டி, தள்ளாத வயதுவரை வாழ்ந்திருக்கிறீர்கள். எனக்கு நிறைய அறிவுரைகள் சொல்லும் என் அப்பாவிடம் உங்களை அறிமுகப்படுத்த வேண்டும். வருகிறீர்களா, தாத்தா?"
"தாத்தாவா? எனக்கு இருபத்தியிரண்டு வயதுதான் ஆகிறது, பிரதர்" என்று பதில் வந்தது.

இப்படி இருபது வயதிலேயே உங்கள் உடலுக்கு அறுபது வயதின் மூப்பு வர வேண்டுமா, யோசியுங்கள். இன்பமென்று நாடிப்போவதுதான் பிற்பாடு உங்கள் துன்பங்களுக்குத் தலையாய காரணமாகிவிடுகிறது.

நீங்கள் கொஞ்சம் இன்பத்தை நாடித்தான் குடித்தீர்கள் என்றால், அந்த இன்பம் உங்களை மந்தமாக்காமல், அதேசமயம் அளவில்லாமல் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதே, அதைக் கவனியுங்கள் என்றுதான் சொல்கிறேன். சதா நேரமும் விழிப்புணர்வுடன் அதே சமயம் முழுமையான போதையுடன் இருக்கலாம்.
அந்த அமுதத்தை அருந்தலாம், ஈஷாவுக்கு வாருங்கள்.

எவ்வளவு முயன்றும் சிகரெட் பழக்கத்தை என்னால் கைவிட முடியவில்லையே?
சத்குரு : எதையாவது வற்புறுத்தி வேண்டாம் என்று சொன்னால், அதுதான் மூளை பூராவும் வியாபித்து நிற்கும். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு குரங்கு என்ற வார்த்தையே எண்ணத்தில் வரக்கூடாது என்று உத்தரவிட்டுப் பாருங்களேன். ஐந்து நிமிடங்களும் லட்சக்கணக்கான குரங்குகள்தான் உங்கள் எண்ணங்களை ஆக்கிரமிக்கும்.

தீயப் பழக்கம் என்று நினைப்பதை விட்டொழிக்க வேண்டும் என்று தீவிரமாக முனைபவர்கள் வேறு பழக்கத்தில் போய் மாட்டிக்கொள்வார்கள். புகைப்பதையோ, குடிப்பதையோ விட்டொழிக்க முயற்சிகள் செய்வதை விடுங்கள். சிகரெட் பிடித்தாலும், மது அருந்தினாலும் அது உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்களை உண்டு பண்ணுகிறது என்று அந்தக் கணங்களில் முழுமையான விழிப்புணர்வோடு இருந்து பாருங்கள். தேவையற்ற பழக்கங்கள் தாமாகவே உதிர்ந்து போகும்.

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1