கே: ஒரு மாணவர் எந்த விதமான உணவைச் சாப்பிடுவதால், நமது வாழ்க்கை அதன் முழுமையான ஆற்றலை அடைகிறது?

சத்குரு: உடல் என்பது அடிப்படையில் ஒரு உணவுக் குவியல் – காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு... எந்த விதமான உணவை நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்பது எந்த விதமான உடலை நீங்கள் கட்டமைக்கிறீர்கள் என்பதன் மீது நிச்சயமாக தாக்கம் ஏற்படுத்துகிறது. இந்தியக் கலாச்சாரத்தில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதைப் பற்றி அபாரமான ஒரு அறிதல் உண்டு. நீங்கள் ஒரு மல்யுத்த வீரர் ஆகவேண்டும் என்றால், ஒருவிதமான உணவைச் சாப்பிடுகிறீர்கள். உங்கள் மூளைத் திறன்களை நீங்கள் பயன்படுத்த வேண்டுமென்றால், வேறொரு விதமான உணவு இருக்கிறது. நீங்கள் ஆன்மீகத் தன்மையில் வளர்ச்சியடைவதற்கு, வேறொரு விதமான உணவைச் சாப்பிடுகிறீர்கள். அது நீங்கள் உடலை எதற்குத் தயார்ப்படுத்துகிறீர்கள் என்பதைச் சார்ந்திருக்கிறது.

வெவ்வேறு மக்களுக்கு, உடல் தகுதிக்கான வெவ்வேறு தேவைகள் உள்ளன. ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரங்கள் வேலை செய்யும் திறன் ஒரு உழைப்பாளிக்கான உடல் தகுதியாக இருக்கிறது. நீங்கள் ஒரு தடகள வீரர் என்றால், எட்டு வினாடிகளில் நூறு மீட்டர் தூரம் ஓட நினைக்கிறீர்கள். நீங்கள் ஒரு ஆன்மீக சாதகர் என்றால், உயர்ந்த சாத்தியங்களுக்கான ஒரு தகுந்த கருவி என்ற முறையில் உங்கள் உடலை நீங்கள் பார்க்கிறீர்கள். உங்கள் வாழ்வின் தகவமைப்பைப் பொறுத்து, அதற்கேற்ப ஒரு குறிப்பிட்ட விதமான உணவை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். இந்த மதிநுட்பமும், அறிதலும், இந்தக் கலாச்சாரத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது.

எந்த விதமான உணவு அதற்கு சௌகரியமாக இருக்கிறது என்று உங்கள் நாவை அல்ல, உங்கள் உடலைக் கேட்டுப் பாருங்கள்.

நீங்கள் கல்வி கற்பவர் என்றால், ஏதோ ஒரு விஷயத்தின் மீது கவனம் குவித்தே இருப்பது என்பது பெரும் சவால்களுள் ஒன்றாக இருக்கிறது. பாடப் புத்தகங்கள் ஒரு சராசரி புத்திசாலித்தனத்துக்காக எழுதப்படுபவை. அது ஒரு பொதுவான பரிந்துரை, அது புத்திகூர்மையான மாணவனுக்கு எழுதப்படுவதில்லை. அனைவரும் அதைப் புரிந்துகொள்ளும் விதத்தில் அது எழுதப்படுகிறது. ஆனால், பாடப் புத்தகத்தை வாசிப்பதற்கு பெருவாரியான மக்களுக்கு எவ்வளவு முயற்சி தேவைப்படுகிறது என்று பாருங்கள்! அதைப் புரிந்துகொள்வதற்கு, நீங்கள் பத்து முறைகள் அதை வாசிக்கவேண்டும். ஆனால் உங்கள் படுக்கையின் மீது சாய்ந்துகொண்டு, ஒரு காதல் கதையை வாசித்தால், ஒவ்வொரு வார்த்தையும் உங்களுக்கு நினைவிருக்கிறது, எப்படி? உங்களுக்கு ஞாபகக் குறைவு இல்லை, அது என்னவென்றால் பாடப் புத்தகத்துக்கும், உங்களுக்கும் இடையே இரசாயனம் செயல்படவில்லை. உங்களுக்கு இங்கே அதிகமான அளவுக்கு ஈடுபாடுதான் தேவைப்படுகிறது.

ஒரு மாணவனுக்கு இருக்கக்கூடிய மற்றொரு எதிரி தூக்கம், ஏனென்றால் பாடப்புத்தகம் அவ்வளவு கிறக்கம் ஊட்டுவதாக இருக்கிறது! தூக்கம் என்றாலே, உங்கள் உடல்தன்மையின் மந்தத்திற்கு நீங்கள் இடம் கொடுக்கிறீர்கள் என்பதுதான் பொருள். உடலில் குறைவான மந்தத்தன்மை உருவாகுமளவுக்கு ஒரு குறிப்பிட்ட விதமான உணவை நீங்கள் சாப்பிடலாம்.

யோகக் கலாச்சாரத்தில், உணவுகளை நாம் தாமஸம், ராஜஸம் மற்றும் சத்வம் என்று வகைப்படுத்துகிறோம். தாமஸம் என்றால் மந்தம், ராஜஸம் என்றால் தீவிரமான செயல்பாடு ஆனால் சமநிலையின்மை, மற்றும் சத்வம் என்றால் முற்றிலும் சமநிலையான ஒரு சக்தி என்பது பொருள்.

நீங்கள் கல்வி பயிலும்போது, உங்களுக்கு மிகவும் சமநிலையான ஒரு சக்தி தேவைப்படுகிறது, ஏனென்றால் உங்களுக்கு இயல்பாகவே ஆர்வம் ஏற்படுத்தாத, உங்கள் இரசாயனத்துடன் இணக்கமில்லாத ஒன்றில் நீங்கள் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. உங்கள் இரசாயனத்துடன் வெற்றிகரமாகச் செயல்பட்டால், நீங்கள் அதன் மீது எப்போதுமே கவனம் செலுத்துகிறீர்கள். ஆனால் இங்கே இரசாயனம் இல்லை, ஆனால் நீங்கள் அதன் மீது கவனம் செலுத்தவேண்டியுள்ளது. இதற்கு ஒரு சமநிலையான, உறுதியான ஒரு மனம் உங்களுக்குத் தேவை. இதற்காக, நீங்கள் புத்திசாலித்தனமாக சாப்பிடவேண்டியது அவசியம்.

புத்திசாலித்தனமாகச் சாப்பிடுவது என்றால், இந்த உடல் எந்த விதமான எரிபொருளுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று புரிந்துகொண்டு, அதற்கேற்ற விதமான எரிபொருளைக் கொடுப்பதனால், உடல் சிறப்பாகச் செயல்படுகிறது.

நீங்கள் ஒரு பெட்ரோல் கார் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், ஆனால் அதற்கு கெரசின் எண்ணெய் ஊற்றி ஓட்டுகிறீர்கள். அப்போதும் அது ஓடக்கூடும், ஆனால் அதனுடைய நியாயமான திறனுக்கு அது இயங்காது என்பதுடன், அதன் ஆயுட்காலமும் மோசமாகப் பாதிப்படையும். அதைப்போலவே, இந்த உடல் எந்த விதமான எரிபொருளுக்கு வடிவமைக்கப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ளவில்லை என்றால், நமது உணவுத்தட்டில் வைக்கப்படுவதை எல்லாம் உடலுக்குள் வலுக்கட்டாயமாகத் திணித்தால், நிச்சயமாக அதற்குரிய திறனுடன் அது இயங்காது என்பதுடன், அதனுடைய ஆயுட்காலமும் குறையக்கூடும். இயந்திரத்தின் செயல்பாட்டில் ஒரு குறிப்பிட்ட அளவீட்டை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், எரிபொருள் மற்றும் இயந்திரம் இவைகள் ஒன்றுக்கொன்று இசைவுடன் இருப்பது மிகவும் முக்கியமானது.

மனித உடலமைப்பு உண்மையில் எந்த விதமான உணவுக்கு வடிவமைக்கப்பட்டது? ஒருவர் இதை எளிதில் பரிசோதித்துப் பார்க்கமுடியும். உங்கள் மருத்துவரிடம், உங்கள் சத்துணவியலாளரிடம், யோகா ஆசிரியர்களிடம் அல்லது வேறு எவரிடமும் கேட்கவேண்டாம். உணவு என்று வரும்போது, அது உடலைக் குறித்து இருக்கிறது. எந்த விதமான உணவு அதற்கு சௌகரியமாக இருக்கிறது என்று உங்கள் நாவை அல்ல, உங்கள் உடலைக் கேட்டுப் பாருங்கள். உங்கள் உடல் எந்த விதமான உணவுடன் சௌகரியமாக உணர்கிறதோ, அதுதான் எப்போதும் சாப்பிடுவதற்குத் தகுந்த உணவு. உங்களது உடலின் விழிப்புணர்வு வளர்ச்சியடைகையில், ஒரு குறிப்பிட்ட உணவு உங்களுக்கு என்ன செய்யும் என்பதைத் துல்லியமாக நீங்கள் அறிந்துகொள்வீர்கள். உணவை நீங்கள் வாயில் வைக்கக்கூட வேண்டியதில்லை. இந்த விதமான உணர்தலை ஒருவர் வளர்த்துக்கொள்ள முடியும். அதாவது, நீங்கள் உணவை வெறுமனே பார்த்தால் அல்லது தொட்டாலே போதுமானது, நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.

 

தூக்கத்தைத் தவிர்க்க என்ன சாப்பிடவேண்டும்

நீங்கள் குறிப்பிட்ட உணவுகளைச் சாப்பிட்டால், உடல் சந்தோஷமாக இருக்கும். குறிப்பிட்ட மற்ற உணவுகளை சாப்பிட்டால், உடல் மந்தமாகவும், சோம்பலாகவும் இருக்கும் – இத்தகைய உணவுகள் உங்களது தூக்கத்தின் அளவை அதிகரிக்கும். ஒரு நாளின் எட்டு மணி நேரத்தை நீங்கள் தூக்கத்தில் கழிக்கிறீர்கள் என்றால், அதன் பொருள் என்னவென்றால், நீங்கள் ஒரு நூறு வருடங்கள் வாழ்கிறீர்கள் என்றால், முப்பத்திமூன்று வருடங்கள் நீங்கள் தூங்கியிருக்கிறீர்கள். உங்கள் வாழ்வின் மூன்றில் ஒரு பங்கை தூக்கத்தில் கழித்திருக்கிறீர்கள்! மற்றொரு நாற்பது சதவிகிதம் சாப்பிடுவது, நீராடுதல், கழிவறைப் பயன்பாட்டில் சென்றுவிடுகிறது. வாழ்வதற்கென்று மிகக் குறைந்த காலமே எஞ்சி இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஒரு நாளின் எட்டு மணி நேரத்தை நீங்கள் தூக்கத்தில் கழிக்கிறீர்கள் என்றால், அதன் பொருள் என்னவென்றால், நீங்கள் ஒரு நூறு வருடங்கள் வாழ்கிறீர்கள் என்றால், முப்பத்திமூன்று வருடங்கள் நீங்கள் தூங்கியிருக்கிறீர்கள்.

உங்களுக்குள் செல்லும் உணவின் தரத்தின் அடிப்படையில், மாமிச உணவைக் காட்டிலும், தாவர உணவு நிச்சயமாக உடலுக்கு நன்மையானது. இதனை நாம் எந்த ஒரு ஒழுக்க நெறியின் அடிப்படையிலும் பார்க்கவில்லை. உடலமைப்புக்கு எது பொருத்தமான உணவாக இருக்கிறதோ அதை மட்டும்தான் நாம் பார்க்கிறோம் - உடலில் உங்களை சௌகரியமாக வைத்திருக்கும் உணவுகளை உண்பதற்கு நாம் முயற்சிக்கிறோம். எந்த ஒரு செயல்பாட்டையும் நீங்கள் சரிவரச் செய்யவேண்டும் என்றால், உங்களது உடல் தளர்வு நிலையில் இருப்பது மிகவும் முக்கியமானது. உங்கள் உடல் எந்த உணவுடன் அதிகமான தளர்வுநிலையில் இருந்துகொண்டு, அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கு போராடாமல் இருக்குமோ, அந்த விதமான உணவை நீங்கள் சாப்பிடவேண்டும்.

தாவர உணவை அதன் உயிர்த்தன்மையுடன், சமைக்கப்படாத நிலையில் நீங்கள் சாப்பிடும்போது அது எப்படிப்பட்ட ஒரு வித்தியாசத்தை உண்டாக்கும் என்பதை பரிசோதனை செய்துதான் பாருங்களேன். அதன் உயிரோட்டத்துடன் எவ்வளவு சாப்பிடமுடியுமோ அவ்வளவு உட்கொள்வதே இதன் கருத்து. உயிரை நிலைநிறுத்துவதற்கான அனைத்தும் ஒரு உயிரோட்டமான அணுவில் இருக்கிறது. ஒரு உயிரோட்டமான அணுவை நீங்கள் உட்கொண்டால், உங்கள் உடலமைப்பின் ஆரோக்கியம் நீங்கள் அறிந்துள்ள எதையும்விட மிகவும் வித்தியாசமாக இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். உணவை சமைப்பது அதிலிருக்கும் உயிர்ச்சத்தை அழித்துவிடுகிறது. இந்த அழிவுச் செயல்முறைக்குப் பிறகு உணவைச் சாப்பிடுவது, ஒரே அளவு உயிர் சக்தியை உடலுக்கு வழங்குவதில்லை. ஆனால், இயற்கை உணவை நீங்கள் சாப்பிடும்போது, அது வேறொரு நிலையிலான உயிர்த்தன்மையை உங்களுக்குள் கொண்டு வருகிறது. முளைகட்டிய தானியங்கள், பழம் மற்றும் உயிரோட்டமான நிலையில் சாப்பிடக்கூடிய எந்த விதமான காய்களையும் அதிகளவில் ஒருவர் சாப்பிட்டால், குறைந்தபட்சம் முப்பதிலிருந்து, நாற்பது சதவிகிதம் வரை உயிரோட்டமுள்ள உணவை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால், உங்களுக்குள் இருக்கும் உயிர்த்தன்மையை அது மிகச் சிறப்பாக உறுதிப்படுத்தும்.

கேள்வியாளர்: காபி அருந்துவது சரியானதுதானா? ஒரு கப் காபி என்னை எப்போதும் அதிக கவனத்துடனும், விழிப்புடனும் வைத்திருக்கிறது.

coffee

சத்குரு: காபி ஒரு நரம்புத் தூண்டியாக இருக்கிறது. நீங்கள் எந்தவித நரம்புத்தூண்டியை உட்கொண்டாலும், ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு அது உங்களை உற்சாகப்படுத்தும், அதற்குப் பிறகு சோர்வு ஏற்படுத்தும். அடுத்த இரண்டு வருடங்களுக்கு, தினமும் காலையில் நீங்கள் காபி அருந்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நாள், காபி இல்லையென்றால், நீங்கள் அசாதாரணமாகி, உங்களுக்குத் தலைவலி உண்டாகும், ஏனென்றால் இப்போது நீங்கள் நரம்புத்தூண்டிக்கு பழக்கப்பட்டுவிட்டீர்கள்.

சிறிது காலத்திற்கு, நீங்கள் உலகத்தின் உச்சியில் இருப்பது போல் உணர்கிறீர்கள், பிறகு மெல்ல, அது உங்களை சோர்வில் ஆழ்த்துகிறது. முக்கியமாக, அது உயிர்த்தன்மையை உணரமுடியாமல் செய்கிறது. உங்களது நரம்பு மண்டலத்தின் மீது எந்த விதமான தூண்டல் அல்லது போதைப்பொருளை பிரயோகித்தாலும், உங்களது புரிந்துணரும் திறன் குறைந்துவிடும். நான் என் கண்கள் மூடிய நிலையில் இங்கே நின்றால், இந்த அறைக்குள் யாராவது வந்தால், என் கண்கள் மூடிய நிலையிலேயே, இந்த அறைக்குள் எந்த விதமான நபர் வந்திருக்கிறார் என்று நான் கூறுவேன். “ஓ, இது ஒருவித யோகாவா?” என்றால், இல்லை, உங்கள் வீட்டுச் செல்ல நாய்கூட இதை செய்ய முடியும். உங்கள் நாய் சோபாவுக்குக் கீழே உட்கார்ந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அப்போது வாசலில் யாரோ வந்து நின்றால், வந்திருப்பது யார் என்பதை அது அறிந்துகொள்கிறது. ஒரு நாய் இதை அறியும்போது, உங்களால் ஏன் அறிந்துகொள்ள முடியவில்லை? பல வழிகளிலும் நமது நரம்பு மண்டலத்தை நாம் மந்தப்படுத்திவிட்டோம் என்பதுதான் இதற்கான காரணம்.

உங்கள் நரம்பு மண்டலத்தை நீங்கள் மந்தப்படுத்தினால், “நான் வாழ்வைத் தவிர்க்க விரும்புகிறேன், எனக்கு வாழ்வை உணரவேண்டியதில்லை”, என்ற வாக்குமூலத்தைத்தான் நீங்கள் வாழ்க்கைக்கு வழங்குகிறீர்கள். உங்கள் நரம்பு மண்டலம் அதன் அதிகபட்ச தளர்வு நிலையிலும், கூர்மையான கவனமுடனும் இருந்தால்தான், வாழ்வை அதற்கே உரிய முழுமையுடன் நீங்கள் அறிவீர்கள். இல்லையென்றால், யாரோ உங்களிடம் கூறியுள்ளதையும், கற்றுக்கொடுத்துள்ளதையும்தான் நீங்கள் அறிவீர்கள்; வாழ்வை அது எப்படி உள்ளதோ அப்படி உணரமாட்டீர்கள்.

மனதின் மீது உணவு ஏற்படுத்தும் தாக்கம்

நான் முன்னரே கூறியதுபோல், நாம் எந்த விதமான உணவைச் சாப்பிடுகிறோம் என்பதுகூட, மனதின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சராசரி அமெரிக்கர் ஓர் ஆண்டுக்கு, 90 கிலோ இறைச்சியை உணவாகக் கொள்கிறார். அதே நேரத்தில், பெருந்திரளான மேற்கத்திய மக்கள், தங்கள் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் மன அழுத்தத்திற்கான மருந்து எடுத்துக்கொள்வதை நீங்கள் பார்ப்பீர்கள். இந்த இறைச்சி உணவு குறைக்கப்பட்டால், ஒரு குறிப்பிடத்தக்க அளவு சதவிகித மக்களுக்கு அதற்குப் பிறகு மன அழுத்தத்திற்கான மருந்து தேவைப்படாது. நீங்கள் பாலைவன வெளியில் அல்லது காட்டில் இருந்தால், பிழைத்திருப்பதற்கு இறைச்சி சிறந்த உணவாக இருக்கிறது. நீங்கள் எங்காவது காணாமல் போய்விட்டால், ஒரு இறைச்சித் துண்டு உங்கள் உயிரைத் தக்கவைத்துவிடும், ஏனெனில் அது திடமான ஊட்டமளிக்கிறது. ஆனால் மற்ற உணவுகள் இருக்கும்போது, நீங்கள் சாப்பிடும் தினசரி உணவாக அது இருக்கக்கூடாது.

விலங்குகளுக்கு, அவைகளின் கடைசிக் கணங்களில், தாங்கள் கொல்லப்படப் போகிறோம் என்பதை உணர்ந்துகொள்ளும் புத்திசாலித்தனம் உண்டு. எவ்வளவுதான் தந்திரமாக அல்லது எவ்வளவு அறிவியல்பூர்வமாக அதை நீங்கள் செய்தாலும், அது பொருட்டல்ல.

விலங்குகளுக்கு, அவைகளின் கடைசிக் கணங்களில், தாங்கள் கொல்லப்படப் போகிறோம் என்பதை உணர்ந்துகொள்ளும் புத்திசாலித்தனம் உண்டு. எவ்வளவுதான் தந்திரமாக அல்லது எவ்வளவு அறிவியல்பூர்வமாக அதை நீங்கள் செய்தாலும், அது பொருட்டல்ல. ஏதோ ஒருவித உணர்ச்சியை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எந்த விலங்கும், அது கொல்லப்படும்போது எப்போதும் அதை கிரகித்துக்கொள்ளும். இந்த நாளின் இறுதியில் நீங்கள் வெட்டப்படப் போகிறீர்கள் என்பது இப்போது உங்களுக்குத் தெரியவருகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் அனுபவிக்கும் போராட்டத்தையும், உங்களுக்குள் வெடித்துக்கிளம்பும் இரசாயன எதிர்ச்செயலையும் கற்பனை செய்துபாருங்கள். இந்த உணர்வில் குறைந்தபட்சம் சிறிதளவேனும், ஒரு விலங்கு அனுபவிக்கிறது. அதாவது ஒரு விலங்கை நீங்கள் கொல்லும்போது, எதிர்மறையான அமிலங்களும், மற்ற இரசாயனங்களின் தொகுப்பும் இறைச்சியில் இருக்கின்றன. அந்த இறைச்சியை நீங்கள் சாப்பிடும்போது, அது தேவையற்ற உளவியல் மாறுபாடுகளை உருவாக்குகிறது.

நம்மையே நாம் அப்படிப்பட்ட ஒரு மனநிலைக்கு உட்படுத்தி, நமது உடல்களை வன்முறையுடன் நடத்தும்போது, உலகம் அமைதி நிரம்பியதாக இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. மனிதர்கள் இல்லாத உலகம் மிகவும் அமைதியானது. இந்த பூமியின் மீது நாம் வாழும் விதம்தான் வன்முறையை உருவாக்குவதாக உள்ளது. யுத்தம் மற்றும் போர்களைப் போன்று, மிகுந்த வன்முறையும், கொடுமையான சூழ்நிலைகளும் பூமியில் உண்டு. அவைகள் கையாளப்பட வேண்டியுள்ளன – அதுபற்றி கேள்வி இல்லை – ஆனால் நம் வாழ்க்கையின் பகுதியாக உள்ள தினசரி வன்முறைகூட தீர்வு காணப்படவேண்டும். ஒவ்வொரு வருடமும், நாம் இலட்சக்கணக்கான நிலத்தையும், கடல்வாழ் உயிரினங்களையும் கொன்றுகொண்டிருக்கிறோம். அவ்வளவு அதிகமான வன்முறைக்குக் காரணமாக நாம் இருக்கும்போது, நாம் ஆரோக்கியமாகவும், அமைதியுடனும் இருப்பது என்பது நிகழப்போவது இல்லை.

ஆரோக்கியமாக இருப்பதற்கு சரியான உணவைச் சாப்பிடுங்கள்

மனிதர்கள் சில எளிமையான விஷயங்களைப் பராமரித்தால், இந்த பூமியில் இருக்கும் 90% நோய்கள் மறைந்தே போய்விடும். ஆரோக்கியம் குறித்த ஒரு எளிய அம்சம் என்னவென்றால், உடலைப் பயன்படுத்துவது. உடலைப் போதுமான அளவு நீங்கள் உபயோகித்தால், அதற்குரிய ஆரோக்கியத்தை உருவாக்குவதற்கான அனைத்தையும் அது பெற்றிருக்கிறது. உடல்ரீதியாக எந்த அளவுக்கு நமது உடல்களைப் பயன்படுத்த வேண்டுமோ அவ்வளவு பயன்படுத்தினால், 80 சதவிகித நோய்கள் மறைந்துவிடும். எஞ்சியிருக்கும் 20 சதவிகிதத்தில், 10 சதவிகித நோய்களுக்கு மக்கள் சாப்பிடும் உணவுகள் காரணமாக இருக்கின்றன. அதை நீங்கள் மாற்றினால், மற்றொரு 10 சதவிகித நோய்கள் மறைந்துவிடும். அப்படியென்றால் 10 சதவிகித நோய்கள் மட்டும்தான் தீராமல் இருக்கும். அவைகள் பல்வேறுபட்ட காரணிகளால் நிகழ்ந்துள்ளன. கர்மா ஒரு காரணியாக இருக்கிறது, சுற்றுச்சூழல் மற்றொரு காரணமாக இருக்கலாம் மற்றும் உடலமைப்புக்குள் நிகழ்ந்திருக்கக்கூடிய மற்ற அம்சங்களை என்னவென்று ஆராய்ந்து பார்க்கலாம். எல்லா நோயுற்ற மக்களிலும், உடலைப் பயன்படுத்துவதாலும், சரியான உணவைச் சாப்பிடுவதாலும் மட்டும் 90 சதவிகித மக்கள் ஆரோக்கியமாகிவிட்டால், 10 சதவிகிதத்தினரை எளிதாகக் கையாளமுடியும்.

எல்லா நோயுற்ற மக்களிலும், உடலைப் பயன்படுத்துவதாலும், சரியான உணவைச் சாப்பிடுவதாலும் மட்டும் 90 சதவிகித மக்கள் ஆரோக்கியமாகிவிட்டால், 10 சதவிகிதத்தினரை எளிதாகக் கையாளமுடியும்.

ஏராளமான மக்கள் நாள்பட்ட நோய்களினால் இறப்பதுடன், அதைக்காட்டிலும் அதிகமாக, அவர்கள் உயிருடன் இருந்தாலும்கூட, அவர்களால் நன்றாக வாழமுடியாது. நோயுறுதல் என்பது முதல் நிலையிலான வன்முறை. உங்களது உடல் இடையறாமல் ஒரு யுத்தத்தில் இருக்கும் காரணத்தால், நீங்கள் நோயுற்று இருக்கும்போது உங்களால் அமைதியாக இருக்கமுடியாது. வெளியிலிருந்து வருகின்ற வைரஸ், பாக்டீரியா அல்லது வேறு ஏதோ ஒன்றுடன் போரிடுவது ஒரு விஷயம். ஆனால் நாட்பட்ட ஒரு நோய் என்பது ஒரு உள்நாட்டுப் போர் போன்றது. வெளியிலிருந்து எந்த ஒரு எதிரியும் இல்லாமல், உங்களுடைய உடலுக்குள்ளேயே நீங்கள் ஒரு யுத்தம் உருவாக்கிவிட்டீர்கள். மேலும் துரதிருஷ்டவசமாக, பூமியின் சில வளம் கொழிக்கும் நாடுகளில்தான் அதிகபட்சமான நோய்கள் இருக்கின்றன. அப்படியென்றால் வளம் பெருகும்போது, நம்முடைய எல்லா அறிவையும் நாம் இழந்துவிடுகிறோம். இது பெரிய அளவில் மேற்கத்திய நாடுகளில் நிகழ்ந்துள்ளது, மற்றும் இந்திய நகரங்களில் அதேபோன்ற விஷயங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இறப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் பல்வேறு விஷயங்களும் மருத்துவரீதியான அம்சங்கள் பற்றி மட்டும் அல்ல.

நீங்கள் என்ன சாப்பிடலாம், எப்படிச் சாப்பிடலாம்

sadhguru-invocation-food-consciousness

உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களுக்கு நிச்சயமாக ஒரு பெரிய தாக்கம் உண்டு, ஆனால் அதை எப்படிச் சாப்பிடுகிறீர்கள் என்பதும் சமமான முக்கியத்துவம் உடையது. நீங்கள் ஒரு விலங்கைச் சாப்பிட்டாலும், காய்கனியை அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அடிப்படையில், உணவு என்பது ஒரு உயிர்த்துளி. அதற்கே உரிய தன்மையில் ஒரு உயிராக இருந்த ஏதோ ஒன்று, உங்களின் ஒரு பகுதியாகிறது. ஒரு உயிர் தன்னையே மற்றொன்றாக மாற்றிக்கொள்கிறது – அதுதான், சாப்பிடுவது என்பதற்கான பொருள். அது வெறும் செரிமானம் அல்ல, அது ஒரு உயிர், மற்றொன்றுடன் கலந்துபோவது. நீங்கள் வேறொரு துளி உயிரை உங்களுக்குள் செலுத்தும்போது, அது எப்படி உங்கள் உடலுடன் கலக்கிறது மற்றும் இது என்ன உற்பத்தி செய்கிறது என்பது, நீங்கள் அதைச் சாப்பிடும்போது உங்கள் இரசாயனத்தை எவ்விதம் வைத்திருக்கிறீர்கள் என்பதைச் சார்ந்திருக்கிறது. நீங்கள் எப்படி இருக்கவேண்டும், நீங்கள் எப்போது சாப்பிடவேண்டும், எப்படி உட்கார்ந்து சாப்பிடவேண்டும், உணவை உங்களுக்குள் நீங்கள் எப்படி வரவேற்கவேண்டும் – இந்த விஷயங்களெல்லாம் இன்றைக்கு முற்றிலும் அலட்சியம் செய்யப்படுகின்றன.

நீங்கள் ஒரு விலங்கைச் சாப்பிட்டாலும், காய்கனியை அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அடிப்படையில், உணவு என்பது ஒரு உயிர்த்துளி. அதற்கே உரிய தன்மையில் ஒரு உயிராக இருந்த ஏதோ ஒன்று, உங்களின் ஒரு பகுதியாகிறது.

உணவு உங்களுக்குள் செல்லும்போது நீங்கள் எப்படி இருக்கவேண்டும், நீங்கள் எந்த நிலையில் இருக்கவேண்டும், நீங்கள் எப்படி அமரவேண்டும், உணவை எப்படி நீங்கள் அணுகவேண்டும் என்பதெல்லாம், பாரம்பரியமாக யோகக் கலாச்சாரத்தில் எப்போதும் நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டு உள்ளது. கிழக்கு நாடுகளில் இவைகள் மிகப் பெரிய விஷயங்கள். நாம் சாப்பிடும் உணவின் தரம் மட்டுமின்றி, நாம் எப்படிச் சாப்பிடுகிறோம், எந்த அளவுக்கு விருப்பத்துடன் அல்லது எந்த உணர்வுடன் சாப்பிடுகிறோம் என்பதும் மிக முக்கியமாக இருக்கிறது.

பல அமெரிக்க நகரங்களிலும் உள்ள வெற்றிகரமான உத்தியோகஸ்தர்கள், வீதியோரங்களில் நின்றுகொண்டு, அங்கிருக்கும் உணவு விற்பனையாளர்களிடம் இருந்து எந்த உணவு கிடைக்கிறதோ அதை வாய் கொள்ளாமல் திணிப்பதை நான் பார்த்துள்ளேன். இது சாப்பிடும் முறை அல்ல. அப்படிப்பட்ட மக்களுக்காக உண்மையாகவே நான் வருந்துகிறேன் – அவர்களது முகங்களில் துளியளவு ஆனந்தத்தையும் நீங்கள் பார்ப்பதில்லை. அவர்கள் அரை மணி நேரத்திற்கும் குறைவான அவகாசத்தில் வேலையிலிருந்து இடைவேளை எடுத்து, சென்று, சாப்பிட்டுவிட்டு, மீண்டும் வேலையைத் தொடர்ந்து, மேலும் பணம் சம்பாதிக்கலாம். இந்த மாதிரி நீங்கள் வாழ்ந்தால், எப்படி நீங்கள் துன்பப்படாமல் இருக்கமுடியும்? நீங்கள் விழிப்புடனும், உணவு மற்றும் உங்களைச் சுற்றிலுமிருக்கும் மக்களுடன் ஒரு விதமான ஈடுபாட்டு உணர்வுடனும், உணவைச் சாப்பிடுவது மிகவும் முக்கியமானது.

நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட முதல் விஷயம் என்னவென்றால், உங்களுக்கு முன்பு உணவு வந்தால், உணவு எப்படி இருக்கிறது என்று உணர்வதற்காக, சில கணங்களுக்கு உணவின் மீது உங்களது கைகளை வைத்துப் பாருங்கள். என் தட்டில் ஏதேனும் உணவுப்பொருள் வைக்கப்பட்டு, அதை நான் உணர்ந்துகொண்டால், அந்த உணவை சுவைக்காத நிலையிலேயே, எதைச் சாப்பிடுவது, எதைச் சாப்பிடக்கூடாது என்பதை நான் அறிந்துகொள்கிறேன். முதலில் எனது கைகள் உணவை அறிந்துகொள்கின்றன.

நாம் சாப்பிடும் உணவைக் குறித்து மதரீதியாக, தத்துவார்த்தமாக, ஆன்மீகரீதியாக அல்லது நல்லொழுக்கரீதியாக எதுவுமில்லை என்பதை ஒருவர் நினைவில் கொள்ளவேண்டும். அது வாழ்க்கை உணர்வு குறித்த ஒரு கேள்வி.

உங்களின் ஒரு பாகமாக மாறவிருக்கும் உணவை அறிந்துகொள்வது முக்கியமானது. நீங்கள் உங்கள் கைகளால் அதைத் தொட்டுப்பார்க்கவில்லை என்றாலும்கூட, உணவு குறித்த உணர்வுடன் இருப்பதனாலேயே, உங்களுக்குள் உணவு எப்படிச் செயல்படும் என்பதை நீங்கள் தெளிவாக அறிந்துகொள்வீர்கள். ஒரு குறிப்பிட்ட உணவு உங்களுக்குள் செல்ல வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற முடிவானது நாளுக்கு நாள் மாறுபடுகிறது, ஏனென்றால் உங்களது உடல் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் வித்தியாசமாக இருக்கிறது. உணவை நீங்கள் உணர்ந்தால், அது இன்றைக்கு உங்களுக்குள் செல்ல வேண்டுமா, இல்லையா என்று நீங்கள் அறிந்துகொள்ள முடிகிறது. உங்களுக்குள் தேவையான விழிப்புணர்வு கொண்டுவரப்பட்டால், மக்கள் என்ன சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்கு நாம் கூறவேண்டியதில்லை.

நாம் சாப்பிடும் உணவைக் குறித்து மதரீதியாக, தத்துவார்த்தமாக, ஆன்மீகரீதியாக அல்லது நல்லொழுக்கரீதியாக எதுவுமில்லை என்பதை ஒருவர் நினைவில் கொள்ளவேண்டும். அது வாழ்க்கை உணர்வு குறித்த ஒரு கேள்வி. ஒருவர் உறுதிமொழிகள் எடுக்காமல், கூர்மையான கவனம் மற்றும் விழிப்புணர்வினால் ஒவ்வொரு தனிமனிதரும் அவருக்கே உரிய உணவின் சமநிலையை அடையவேண்டும். எல்லாவற்றுக்கும் மேல், தினமும், நீங்கள் சாப்பிடும் உணவும், நீங்கள் அருந்தும் நீரும் மற்றும் நீங்கள் சுவாசிக்கும் காற்றும் உங்கள் உயிரை நீடித்திருக்கச் செய்கிறது. நீங்கள் சாப்பிடும்போது, நீங்கள்தான் இந்த உணவு என்பதை அங்கீகரியுங்கள். நாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பது, மற்ற உயிரின் வடிவங்களைத்தான் – நமது உயிரை நீடிக்கச் செய்வதற்கு, மற்ற உயிர் வடிவங்கள், அவைகளின் உயிரை விட்டுக்கொடுக்கின்றன. நமது உயிரை நீடிக்கச் செய்வதற்கு, அவைகளின் உயிரை விட்டுக்கொடுக்கின்ற எல்லா உயிரினங்களுக்காகவும் அபரிமிதமான நன்றியுணர்வுடன் நம்மால் சாப்பிடமுடிந்தால், அப்போது அந்த உணவானது, மிகவும் வித்தியாசமான விதத்தில் உங்களுக்குள் செயல்படும்.

Photo by Eliott Reyna on Unsplash