என்னை மீண்டும் மீண்டும் ஈர்த்த இமயம் - சத்குரு

உங்கள் பயணங்களில் நீங்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த பயணம் எது? எந்த இடம் உங்களை மீண்டும் மீண்டும் வசீகரித்து இழுக்கிறது?
 

Question:உங்கள் பயணங்களில் நீங்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த பயணம் எது? எந்த இடம் உங்களை மீண்டும் மீண்டும் வசீகரித்து இழுக்கிறது?

சத்குரு:

14 ஆண்டுகளுக்கு முந்தைய பயணம்!

பொதுவாகவே மலைகள் என்னை வசீகரிக்கும். இமயமலையைப் பற்றிய புத்தகங்களும், புகைப்படங்களும் அந்தப் பிரமாண்ட மலையில் பாதம் பதிக்கிற பேராவலை சிறு வயதிலிருந்தே என்னுள் வளர்த்திருந்தது.

என்னைச் சுற்றியிருந்த வடிவங்கள் எல்லாமே கரைந்து ஒலி அலைகளாக மாறின. எனக்குப் பழக்கமே இல்லாத சமஸ்கிருத மொழியில், நாதப் பிரம்மா என்றொரு பாடல் தானாக எனக்குள் ஊற்றெடுத்தது.

சுமார் பதினான்கு ஆண்டுகளுக்கு முன் இமயமும், நானும் சந்தித்தோம். முதலில் ஹரித்வார் சென்று இறங்கினேன். எங்கே செல்வது என்று எந்தக் குறிப்பிட்ட திட்டமும் இல்லாமல், பத்ரிநாத்தை நோக்கிப் பயணமானேன்.

பதினாறு மணிநேரப் பயணம். களைத்துச் சுருண்டு படுத்திருக்கும் பாம்பு போன்ற வளைவுகள் நிறைந்த மலைப்பாதை. தாயின் கருப்பைக்குள் மீண்டும் பிரவேசிப்பது போன்றதொரு உணர்வு எனக்குள் நிரம்பியது.

பத்ரிநாத்தில் ஒர் அற்புதம்!

பத்ரிநாத்தை அடைந்தபோது இருளும், குளிரும், பனியும் அழுத்தமாகச் சூழ்ந்தன. விடிந்தபின் கோயிலுக்குப் போகலாம் என்று எண்ணினேன்.

மறுநாள் விடியும்முன், வெளியே வந்தேன். குளிரைச் சமாளிக்க தேநீர் குடிக்கலாம் என்று கடை தேடினேன். பனியில் விறைத்திருந்த விரல்களிலிருந்து என் அறைச் சாவி நழுவியது. அதை எடுக்கக் குனிந்தவன் தற்செயலாக நிமிர்ந்தேன்.

திறமைமிக்க கவிஞர்களால் கூட வர்ணிக்க முடியாத காட்சி என்னைத் தாக்கியது. நான் நின்றிருந்த பள்ளத்தாக்கு இன்னும் இருளாய் இருக்க, எதிரே இருந்த மலை முகடு பனிக் கீரிடம் அணிந்திருந்தது. அந்த வெள்ளிப் பனிச்சிகரத்தின் பின்னணியில் பொன் வட்டமாக தகதகத்து எழும்பிக் கொண்டு இருந்தது சூரியன். பரவசத்தில் என் கண்களில் நீர் திரண்டது.

கோயிலுக்குப் போகும் எண்ணம் நழுவி, மலையை நோக்கி என் பயணம் துவங்கியது. பன்னிரெண்டு கி.மீ மலையேறியதும், வசுதரா என்னும் நீர் வீழ்ச்சி வரவேற்றது. காற்றில் பறக்கும் வெள்ளிக் கேசத்தைப் போல், நானூறு அடி உயரத்திலிருந்து மெல்லிய நீர் இழைகள் வீழ்ந்து கொண்டு இருந்தன. சாரல் என்னைத் தீண்டிச் சிலிர்க்க வைத்தது.

சத்குரு அளித்த தீட்சை

ஒரு சிறு பாறையில் அமர்ந்தேன். சூழ்நிலையைப் பருகி உள்வாங்கும் எண்ணத்துடன் இமைகளை மூடினேன். யாரோ என் பாதங்களைப் பற்றி இறைஞ்சுவதை உணர்ந்தேன். கண்களைத் திறந்தால் ஒரு சாது. ஆன்மீகத்தில் அடுத்த அடி எடுத்து வைக்க என் உதவியை அவர் நாடுவதை உணர்ந்தேன். 'இந்த மலைகளைப் போல் சலனமற்று இரு' என்று சொல்லி, தியானமுறையை அவருக்கு வழங்கினேன். ஒரு நன்றியறிதலாக அவர் தன்னிடமிருந்த ஏகமுகி என்னும் ஒற்றை முக ருத்ராட்சத்தை வழங்கினார். எலுமிச்சை அளவு பெரிதாயிருந்த அந்த ருத்ராட்சம் மிக அபூர்வமானது. என்னுடைய இன்னொரு இதயம்போல் அது உயிரோட்டத்துடன் துடிப்பதை உணர்ந்தேன்.

அடுத்த வருடமும் இமயம் என்னைக் கவர்ந்து இழுத்தது. கேதார்நாத்திலிருந்து சற்றே செங்குத்தான உயரத்தில் அமைந்திருந்த காந்திசரோவர் என்ற ஏரி எனது அடுத்த இலக்கானது. சிவனும், பார்வதியும் அங்கே வசிப்பதாகக் கதைகள் உண்டு.

ஏழெட்டு கிலோ மீட்டர் ஏற்றம். அதன் தூய்மையும், அமைதியும் என் உணர்வுகளை ஊடுருவின. இம்முறை கண்களை மூடாமல் திறந்து வைத்தேன். சூழ்நிலையில் இருந்த ஒவ்வொரு புள்ளியையும் எனக்குள் வாங்கிக் கொள்ள முயன்றேன்.

நாதப் பிரம்மா...

ஓர் அதிசயம் நிகழ்ந்தது. நான், என்னைச் சுற்றியிருந்த வடிவங்கள் எல்லாமே கரைந்து ஒலி அலைகளாக மாறின. எனக்குப் பழக்கமே இல்லாத சமஸ்கிருத மொழியில், நாதப் பிரம்மா என்றொரு பாடல் தானாக எனக்குள் ஊற்றெடுத்தது. பரவச நிலையிலிருந்து மீண்டும் என் பழைய நிலைக்குத் திரும்பியபோது, என் கண்களிலிருந்து நீர் நிற்காமல் வழிந்து கொண்டு இருந்தது.

இமயமலைச் சாரலில் இன்னொரு அற்புத இடம். மலர்களின் பள்ளத்தாக்கு. கார்காரியா என்ற இடத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது இமயம் பொத்தி வைத்திருக்கும் அற்புதங்களில் ஒன்று. முழுவதும் மலர்களால் நிரம்பியிருக்கும் இதைப்போன்ற பள்ளத்தாக்கு உலகில் வேறு இல்லை. அதேபோல் கங்கை ஜனிக்கும் கோமுக் மிக அற்புதமானதோரு பனிக் குகை. சக்தி நிலையில் மட்டுமில்லாது இயற்கை அமைப்பிலும் வசீகரமானதொரு இடம் கோமுக்.

என் தாய்வீடு...

இமயத்தைச் சந்திக்க இப்படிப் பலமுறை பயணமாகிவிட்டேன். அங்கு நான் மெய் மறந்திருந்த இடங்கள் இன்னும் பலப்பல. இமயத்தின் மடியில் பாதங்களைப் பதிக்கும் ஒவ்வொரு முறையும் தாய்வீட்டுக்கு வந்துவிட்டதாகவே உணர்ந்திருக்கிறேன்.

இமயத்துடன் ஒன்றியிருக்கும் சக்தியும், ஞானமும், மனித குலம் வேறெங்கும் காண முடியாதவை. தேடல் மிக்கவர்கள் தவறாமல் தரிசிக்க வேண்டிய தலம், இமயமலை. மூப்பு ஏறி, நீங்கள் மிகவும் பலவீனமாகும் முன் அவசியம் சந்திக்க வேண்டிய சக்தி மிகுந்த மலை இமயமலை.

நான் சொல்வது எதையும் நீங்கள் நம்பத் தேவையில்லை. திறந்த மனதுடன் இமயத்துக்குப் பயணம் செய்து பாருங்கள். இமயத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று ஞானிகளும், துறவிகளும் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

வாழ்க்கையை ஒரு கலாச்சாரமாகவோ, மதமாகவோ, கொள்கைகளாகவோ, மரபுகளாகவோ, ஒழுக்க நியதிகளாகவோ காணாமல், வாழ்க்கையை வாழ்க்கையாகவே உணரும் வாய்ப்பு வழஙகப்படும் இடம், இமயம்!

நீங்கள் தரிசிக்க வேண்டிய ஒரு ரகசியம் இமயம்!