எங்கிருந்தாலும் தரிசனம்
இன்றைய தரிசனத்திலிருந்து நேரடிப் பதிவு இங்கே உங்களுக்காக...
 
 

தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லங்களில் இன்று தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

இன்று மாலை 6.20 ற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே சுடச்சுட உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம், தொடர்பில் இருங்கள்.


"சத்குருவ நான் இன்னிக்கு பார்த்தேனே, அங்க மாட்டு வண்டில போயிட்டு இருந்தாரு," "நான் கூட மாட்டு மனைல பார்த்தேன்," என்று அவர் ஆசிரமத்தில் இருக்கும் நேரங்களில் அவரைத் தேடும் கண்கள், "அவர் தரிசன நேரத்திற்கு வருவாரா?" என்று ஏங்கித்தான் கிடக்கும்.

இன்று முத்தாய்ப்பாக காலையிலேயே வந்தது அறிவிப்பு, "மாலை தர்ஷன்" என்று.

 

Darshan

மாலை 3 மணியிலிருந்தே தீர்த்தகுண்டத்தின் முன்னே மக்கள் கூடத் துவங்கிவிட்டனர். 5 மணியிலிருந்தே ஒரு சிலர் தங்கள் மாலை பயிற்சிகளை புல்வெளியில் அமர்ந்து செய்து கொண்டிருந்தது காண்பதற்கு சற்று சிலிர்ப்பூட்டுவதாய் இருந்தது.

புரிதலைப் பற்றி பேசத் துவங்கிய சத்குரு, பிரம்மா, பிரம்மை என்று இரு வேறு பரிமாணங்களைப் பற்றி விரிவாகப் பேசினார். பிரம்மம் என்றால் உட்சபட்ச உண்மை என்றும், அதைப் புரிந்துகொள்ளாமல் நாம் நம் புரிதலில் இருந்து சற்றே சரிந்தால், பேரூண்மையான பிரம்மம்கூட பிரம்மையாகிவிடும் என்பதைத் தன் பாணியில் விவரித்தார்.

ஒரு சரிவு, ஒரு வழுக்கல், ஒரு கால் தவறல், ஒரு தடுமாற்றம் எப்படி நம்மை மாயைக்கு இட்டுச் செல்லும் என்பது சற்றும் சருக்காமல் தெள்ளத் தெளிவாக பிடிபட்டது நமக்கு.

Darshan

_20130129_KLK_0066-e

"உங்கள் முட்டாள்தனத்திற்கு கடவுளின் பெயரில் அங்கீகாரம் பெற்றிருந்தால், அதற்கு மருந்தில்லை, கடவுளில்லாமல் உங்கள் மண்டை முழுவதும் நீங்கள் நிரம்பி இருந்தால் அதற்கு மருந்திருக்கிறது," என்று ஒரு மனிதன் வளர்வதற்கு உண்டான தடைகளைப் பற்றியும் பேசினார்.

"சம்ஸ்கிருதி என்பதே இதுதான். இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை உண்மை மீது பேரார்வத்துடன் வாழ்வது, அனைத்து உயிர்கள் மீதும் கருணையுடன் வாழ்வது. ஆனால் தன் மீது பற்றில்லாமல் இருப்பது. எனவே சம்ஸ்கிருதி இங்குள்ள சிறு பிள்ளைகளுக்கு மட்டுமல்ல உங்கள் ஒவ்வொருவருக்கும் தான்," என்றவர், "இப்பிள்ளைகள் செய்த பாக்கியம் அவர்கள் சிறு வயதிலேயே இந்த வாழ்க்கை சூழ்நிலையில் இருப்பது," என்றார்.

சிவாங்கி சாதனா முடித்து ஆசிரமத்தில் தங்கியிருக்கும் தியான அன்பர் ஒருவர், இந்த சாதனாவை தொடர்ந்து செய்வது குறித்து கேட்க...

Darshan

"சிவாங்கி சாதனா உங்கள் உணர்வு சார்ந்த புத்திசாலித்தனத்தை பயன்படுத்துவது. IQ என்றால் "I Queque", அதாவது நான் க்யூவில் இருக்கிறேன் என்று அர்த்தம். இந்த வரிசையில் எப்போதுமே நீங்கள் யாரோ ஒருவரின் பின்னால்தான் நிற்கப் போகிறீர்கள். அடிப்படையாக IQ என்பது இன்னொருவரைப் பார்த்து அவரைப்போலவே, ஆனால் அவரைவிட சற்று சிறப்பாகச் செயல்படுவது.

உணர்வு நிலையிலான புத்திசாலித்தனத்தில் இந்த பிணக்கு இல்லை. நீங்கள் எல்லாவற்றுடனும் முழுமையாக ஈடுபட்டால் அவை தன் தன்மைகளை முழுமையாக உணர்த்தும். IQ எனும் காரண அறிவு எல்லாவற்றையும் பிரித்துப் பார்த்து, கிழித்துப் பார்த்து பொருள் தேடும். உணர்வு எல்லாவற்றையும் அரவணைத்துக் கொள்ளும், தழுவிக் கொள்ளும்.

தெய்வீகத்தை கூறு போட்டு பார்க்கலாமா? அதை தழுவிக் கொள்ளலாம். அதனை ஆர அணைத்துக் கொள்ளலாம். உணர்வு நிலையிலான புத்திசாலித்தனம் தெய்வீகத்துடன் நாட்டியம் செய்வதைப் போன்றது," என்றார்.

"இதனால் இந்த ஷிவாங்கி சாதனாவை தொடர்ந்து செய்யலாமா, எப்படி வேலை செய்யும் என்று கூறு போட்டு பார்ப்பதை விட அதில் வெறுமனே ஈடுபடுங்கள். அனைத்தையும் அரவணைத்துக் கொள்ளுங்கள். இந்த சாதனா உங்களுக்கு அற்புதங்களை நிகழ்த்தும்," என்றார்.

"உங்கள் உணர்வு நிலையிலான புத்திசாலித்தனத்தின் படி செயல்பட்டால், ஒரு பறவையின் ஒலியும் உங்களுக்கு கவிதை பாடும், ஒரு புல்லின் நுனியும் கவிதையாகும்," என்றவரின் உதாரணத்தில் தான் எத்தனை ஆழம்? எத்தனை உண்மை?

Darshan

உங்களுடன் எப்படி இருப்பது என்று ஒருவர் கேட்க... "என்னுடன் சும்மா இருங்கள், நான் உங்கள் கவனத்தை முழுமையாக திசைத் திருப்பவே முயற்சி செய்வேன். ஆனால், 'நீங்கள் என்னுடன் முழுமையாக இருங்கள்'," என்று சொல்லி முடித்தார்.

இன்றைய குருவாசகம், "என்னுடன் முழுமையாக இருங்கள்," என்பது எல்லோர் மனதிலும் உரக்க ஒலிக்க, "ஸ்ரீ மஹாதேவோ நமஹ" என்னும் இனிய பாடலுடன் நிறைவு பெற்றது இன்றைய தரிசன நேரம்.

மாலை வேளையும், மனதை மயக்கும் இசையும், தியானலிங்கத்தின் சக்தி சூழ்நிலையும் இவ்விடத்திற்கு மேலும் மெருகு கூட்டின. மற்றொரு மாலைப் பொழுதில், மற்றொரு தரிசன நேரத்தில் உங்களுடன் மீண்டும் இணைவோம்.

வணக்கம்!

 

 
 
 
 
Login / to join the conversation1
 
 
5 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

waiting.....

5 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

Thanks to share with us who's missed out Dharsan...
Sadhguru....Shamboooo...

5 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

தெய்வீகத்தை கூறு போட்டு பார்க்கலாமா?

5 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

engirundhaalum darisanam kuzhuvuku manamaarndha nanri!! nanri!!! nanri!!!