தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…

தினம் தினம் காலையில் கண் விழிப்பதுபோல், தினமும் உணவு உண்பதைப்போல், தினம் தினம் சுவாசிப்பதைப் போல் சத்குரு தரிசனமும் தினசரி நிகழும் ஒன்றாகி விட்டால், அதன் பின் ஒரு குருபக்தருக்கு கேட்க வேறேதும் இருக்குமா என்ன?

ஆனால், தினசரி குருவின் முகம் காணக்கிடைப்பது சாத்தியமா என யோசிப்பதை விட்டு விட்டு, இன்று காணக்கிடைத்த சத்குரு தரிசனத்தை உங்களுடன் பகிர்கிறோம் இங்கே!

சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் ஹிந்தி மெல்லிசையை இசைக்க அதனைத் தொடர்ந்து, சத்குரு ‘யோகரத்தோவா போகரத்தோவா…’ என்ற சமஸ்கிருத உச்சாடனையைச் செய்தார். சத்குருவின் குரலின் பின்னால் பங்கேற்பாளர்களும் உச்சாடனை செய்ய, வெளி முழுவதும் சக்திமிக்க அதிர்வுகளால் நிறைந்ததை உணர முடிந்தது.

பின்னர், சத்குருவிடம் பங்கேற்பாளர்கள் கேள்விகள் கேட்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சமீபத்தில் பிரபஞ்சம் உருவானது குறித்து நடந்த ஆராய்ச்சியின்போது, நம் நாட்டின் சார்பில் ஒரு நடராஜர் சிலை அந்த ஆராய்ச்சி கூடத்தில் வைக்கப்பட்டதாக ஃபேஸ்புக்கில் தான் கண்ட செய்தியைப் பற்றி சத்குருவிடம் ஒருவர் கேட்டபோது,சத்குரு ஒரு ஜோக் கூறினார்.

2050ல், அனைத்தையும் சாதித்து விட்டதாக நினைக்கும் விஞ்ஞானிகள் குழுவாக கடவுளிடம் அப்பாய்ன்மன்ட் கேட்டு அவரைப் பார்க்கிறார்கள். அங்கே அவர்கள் கடவுளிடம், ‘நாங்கள் எல்லா திறனும் பெற்றுவிட்டோம். இனி நீங்கள் ஓய்வு பெற்றுக்கொள்ளுங்கள்; நீங்கள் படைத்தல் செயல் செய்தது போதும். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.’ என்று கூறுகின்றனர்.

அதற்குக் கடவுள், ‘அப்படியா! உங்களால் என்ன செய்ய முடியும்’ என்று கேட்டபோது,

‘எங்களால் ஒரு உயிரையே உருவாக்கிவிட முடியும்’ என்றனர்.

‘எங்கே, உருவாக்கிக் காட்டுங்கள்!’ என்றார் கடவுள். அங்கிருந்த மண்ணை எடுத்து, ஒரு குழந்தைபோல் செய்து விஞ்ஞானத்தால் உயிர்பெறச் செய்துவிட்டனர்.

அதைப் பார்த்த கடவுள், ‘அதெல்லாம் சரி! முதலில், உங்கள் விஞ்ஞானத்தின் மூலம் மண்ணை உருவாக்கிக் காட்டுங்கள்! என்றார்.

இந்த ஜோக்கை கூறிய சத்குரு விஞ்ஞானத்தின் மூலம் இந்த பிரபஞ்ச ரகசியங்களை எல்லாம் பிரித்துப் பார்த்து தெரிந்துகொள்ள முடியாது என்பதை உணர்த்தினார். மேலும், இன்று அவர்கள் செய்துள்ள பிரபஞ்சம் உருவானதைக் கண்டறியும் இந்த ஆராய்ச்சியை, நம் நாட்டில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்மூடி பார்த்து கண்டறிந்துள்ளனர் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

பிரபஞ்ச ரகசியத்தின் குறியீடாக நடராஜர் பார்க்கப்படுவதால்தான், நம் நாட்டிலிருந்து அந்த ஆராய்ச்சி கூடத்திற்கு நடராஜர் சிலை ஒரு குறியீடாக வழங்கப்பட்டு, அந்தக் கூடத்தில் வைக்கப்பட்டது என்பதையும் விளக்கினார்.

21 நாள் ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ளும் ஒருவர், “எங்களுக்கு ஈஷாங்கா ஆசிரியர் என்று பெயரிட்டதன் காரணம் என்ன?” என்று கேட்டபோது,

“’ஈஷா’ என்றால் ஒன்றுமில்லாதது; அதுவே எல்லாவற்றுக்கும் அடிப்படையானது; ‘அங்கா’ என்றால் அதன் ஒரு பகுதி என்று பொருள். நீங்கள் எப்போதும் எல்லாவற்றுக்கும் அடிப்படையான ஈஷாவின் அங்கமாகத்தான் இருக்குறீர்கள். ஆனால் அது உங்கள் விழிப்புணர்வில் இல்லை. நீங்கள் ஒன்றுமில்லாததன் ஒரு அங்கம் என்ற உண்மையை புரிந்துகொள்வது அவசியம். நீங்கள் எப்போது ஈஷாங்கா ஆசிரியராக ஆகிவிட்டீர்களோ, அப்போது நீங்கள் எனது இன்னொரு கரமாக மாறிவிடுகிறீர்கள். நீங்கள் ஈஷா ஆசிரியராக நிற்கும்போது மக்கள் உங்களை சத்குருவின் வெளிப்பாடாகவே பார்ப்பார்கள். எனவே, மற்றவர்களை பார்க்கும்போது அவர்களை உயர்ந்தவர்; தாழ்ந்தவர்; ஏழை; பணக்காரர் என்ற உங்கள் மனக் கணக்குகளை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, அவர்களை ஒரே விதமாகப் பார்க்க வேண்டும். நீங்கள் அந்தத் தன்மையில் அங்கு நின்றால், மற்றவற்றையெல்லாம் நான் பார்த்துக்கொள்வேன்.”

என்று கூறிய சத்குரு ஈஷாங்கா ஆசிரியர்களின் பொறுப்புகளை சுட்டிக்காட்டினார்.

குழந்தைக்கு சமஸ்கிருதத்தில் பேர் வைப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,

சமஸ்கிருத மொழியின் தனித்தன்மைகள் பற்றி எடுத்துரைத்தார் சத்குரு.

“ஒவ்வொரு குறிப்பிட்ட சப்தத்திற்கும் ஒரு குறிப்பிட்ட உருவம் உண்டு; சரியான சப்தங்களை உச்சரிப்பதே மந்திரம்; மந்திரங்களைக் கொண்டு எந்திரம் எனப்படும் உருவங்கள் உருவாக்கப்படுகின்றன” இப்படி நாம் உச்சரிக்கும் சப்தங்கள் எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார் சத்குரு.

நம் கலாச்சாரத்தில், நம் வாழ்வின் முக்கியக் குறிக்கோளாக முக்தியே இருந்ததால், அதனை அடைவதற்கு நாம் உச்சரிக்கும் பெயர் கூட கவனமாகப் பார்த்து வைக்கப்பட்டதை உணர்த்தினார் சத்குரு.

கேள்விகளுக்கு விளக்கங்களை வழங்கிய சத்குரு, அருளையும் வாரி வழங்கிச் சென்றார்.

மீண்டும் விரைவில் தரிசனத்தில் இணைவோம்!