தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…

இன்றைய தரிசனத்தில் சத்குருவின் உரை, இந்தியக் குடியரசு தினத்தைக் குறித்தும் இந்தியா குறித்தும் அமைந்ததோடு, ஈஷா யோகா மையம் துவங்கி 20வது ஆண்டு துவங்கியதை நினைவுகூறும் வகையிலும் அமைந்தது.

சத்குரு உரையிலிருந்து சில வார்த்தைகள்

எல்லா நாட்டு மக்களும் இந்தியாவை நோக்கி...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"மனிதன் நிறம், ஜாதி, இனம், மதம் என்ற மனப்பான்மை கொண்டிருப்பதைக் காட்டிலும் தேசிய அளவிலான மனப்பான்மை கொண்டிருப்பது சிறந்ததுதான். உண்மையில் நாட்டின் எல்லைகள் என்பது எங்கும் வரையப்படவில்லை. அது ஒரு கற்பனை எல்லைதான். அது மனித மனத்தில் மட்டுமே உள்ளது. தற்போது ஆகாய எல்லை என்று கூட சொல்கிறார்கள். ஆனால் பூமி சுற்றுகிறது. இன்று இந்தியாவின் ஆகாய வெளியாக இருப்பது, பூமி சுற்றுவதால் சிறிது நேரத்தில் பாகிஸ்தானின் மேல் இருக்கும் (சிரிப்பலை).

தற்போது உள்ள சூழ்நிலையில், ஒரு மனிதன் ஏதாவது ஒரு நாட்டுடன் அடையாளம் கொண்டே ஆகவேண்டும். நமக்கு பாஸ்போர்ட், அடையாள அட்டை இவையெல்லாம் தேவைப்படுகிறது; ஒரு நாட்டைச் சார்ந்து இருந்தால்தான் இதையெல்லாம் பெறமுடியும். ஒரு நாட்டைச் சாராமல் மனிதன் வாழ்வதற்கு வாய்ப்பில்லை.

இப்போதெல்லாம் வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு, இறப்பதற்கு மட்டும் இந்தியாவிற்கு வருகிறார்கள். ஏனென்றால் அத்தகைய புனிதமான இடங்கள் இந்தியாவில்தான் உள்ளது.

டெக்ஸாஸ் நகரிலிருந்து கொடுமையான மனைவியுடன் வாழும் ஒரு கணவன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு ஜெருசலத்திற்கு சுற்றுலா சென்றார். ஜெருசலத்தில் வைத்து மனைவி மாரடைப்பால் இறந்துவிட்டாள். அங்கு கல்லறை பணியாளன் கூறினான், இங்கேயே புதைப்பதென்றால் 100 டாலர்கள் ஆகும். நீங்கள் மீண்டும் டெக்ஸாஸிற்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால் 10,000 டாலர்கள் ஆகும் என்றார். அதற்கு அந்த கணவன் நான் டெக்ஸாஸிற்கே கொண்டு செல்கிறேன். உங்கள் நாட்டில் புதைத்தால், ஒருவேளை 3ஆம் நாள் மீண்டும் வந்தாலும் வந்துவிடுவாள்" என்றார்.

இந்த ஜோக்கை கூறிய சத்குரு, முக்திக்கு பாரதம்தான் சிறந்த இடம் என்பதை எடுத்துரைத்தார்.

"பாரதம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் முன்பிலிருந்தே ஆன்மீக ஞானத்தில் சிறந்தது. பல ஞானிகளும் யோகிகளும் விட்டுச் சென்ற இந்த ஆன்மீகக் கலாச்சாரத்தை நாம் வளப்படுத்தினோம் என்றால், மற்ற எல்லா நாட்டு மக்களும் எதிர்காலத்தில் தங்கள் உள்நிலை வளர்ச்சிக்காக இந்தியாவை நோக்கி வருவார்கள்."

இப்படி, இந்தியாவின் பெருமை பற்றி இன்னும் விரிவாக உரையாற்றினார் சத்குரு.

ஈஷா அறக்கட்டளை ஏன்?

துவக்க நாட்களில் ஒன்பது-பத்து வருடங்களாக தனியாளாக யோக வகுப்பு எடுத்ததையும், அதன் பின்னர், தன் பின்னே உண்மையைத் தேடிய கூட்டம் நிறைய சேர்ந்து விட்டதால் ஒரு அமைப்பை உருவாக்கத் தேவை உருவானதையும் பகிர்ந்து கொண்ட சத்குரு, சமூக அளவில் பங்காற்ற வேண்டுமென்றால் அதற்கு ஒரு அமைப்பு அவசியமானது என்றார்.

சத்குருவிடம் கேள்விகள்!

மெண்டெலீவ்'வின் தனிம வரிசை அட்டவணையில் 7 ஆவர்த்தணங்கள் உள்ளன. அதற்கும் குண்டலினிக்கும் (7 சக்கரங்கள்) சம்பந்தம் உள்ளதா?

சத்குரு: 7 என்பதற்கும் குண்டலினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; 7 எல்லா இடங்களிலும் உள்ளது. எனவே அதனோடெல்லாம் குண்டலினியை தொடர்புபடுத்தக் கூடாது. 7 சக்கரங்கள் என்பது குண்டலினியில் இல்லை. உடலில்தான் உள்ளது. உதாரணமாக குண்டலினி என்பது ஒரு கிளி என்றால், உடல் என்பது கூண்டு போன்றது. நம் உடலில் குண்டலினி இருப்பது, கூண்டில் கிளி இருப்பதுபோலத்தான். கிளி எப்போதும் வெளிவரவே நினைக்கிறது. கூண்டில் 7 அடுக்குகள் இருந்தால் அது ஏழு அடுக்கையும் கடக்க முயற்சிக்கும். 9 அடுக்குகள் இருந்தால் அது 9 அடுக்குகளைக் கடக்கும்.

நான் உண்மையில் எதற்காக ஏங்குகிறேன்? என்ற கேள்விக்கு,

"நீங்கள் எதையாவது இங்கிருந்து பெற்றுச் செல்ல வேண்டும் என்ற நிலையில் இல்லாமல், இந்த பூமிபோல, மரத்தைப் போல, சும்மா இங்கே இருந்தால் உங்களுக்கு தேவையானது கிடைத்துவிடும்" என்று கூறி, உண்மையை அடையும் வழியை விரிவாக தனது உரையில் விளக்கினார்.

வந்தே மாதரம்! என்ற தேசபக்திப் பாடல் மெல்லிசையாய் தவழ்ந்து வர, ஆசி வழங்கி விடைபெற்றார் சத்குரு.

விரைவில் இன்னொரு தரிசனத்தில் சந்திப்போம்!