தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…


தென்மேற்குப் பருவக் காற்று முகிலினங்களைக் கொண்டு வந்து மலை முகடுகளில் சேர்த்து வைக்க; சேர்ந்துவிட்ட மேகக் கூட்டமோ இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஈஷா மையத்தை மையமிட; சூழ்நிலையும் தட்ப வெப்பமும் ரம்மியமாகத்தான் இருக்கிறது இங்கே! இடைஞ்சல் என்னவோ தரிசன நேரத்திற்குத்தான்...

தரிசனம் அறிவிக்கப்பட்டிருந்த போதும், மேக ஊர்வலங்கள் கொஞ்சம் பீதியையே கொடுத்தன. 6 மணியளவில் வெறித்து விட்டது வானம். மகிழ்ச்சி கொண்ட முகங்கள் காத்திருந்தன சந்திரகுண்டம் முன்பு.

அருள் ஏந்திய முகத்தோடு சத்குரு வந்தமர, காற்றில் தூவப்பட்டது அந்த இந்தி மெல்லிசைப் பாடல்.

"குருபினகேசே குனுகாவே..." என சத்குருவும் தன் குருவை நினைத்து இந்தியில் பாட தியானத்தில் ஆழ்ந்தது அன்பர் கூட்டம்.

இன்றைக்கு எதைப் பற்றிப் பேசுவார், நேற்று வழங்கப்பட்ட பிரம்மச்சரிய தீட்சை பற்றி பேசுவாரோ அல்லது மௌனத்தில் ஆழ்ந்திடுவாரோ என பல கற்பனைகள் அலையடிக்க, கேள்விகள் கேட்கும்படி கையசைத்தார் சத்குரு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மக்கள் - நாடு - ஊழல்...

மக்கள் தொகை பெருக்கம், நலிந்துவிட்ட விவசாயம், பெருகிவிட்ட ஊழல் என நாடு எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு...

"நாடு போகவில்லை நாம் தான் கொண்டுபோகிறோம்," எனக் கூறிய சத்குரு, தொடர்ந்து விரிவாக பதில் தந்தார்.

"ஒரு ஏக்கர் நிலத்தில் 24 தென்னைகள் வைத்தால் அது 250 காய்கள் தருகின்றன. அதே நிலத்தில் நாம் 300 தென்னைகள் வைத்தால் அது 20 காய்கள் மட்டுமே கொடுக்கும், மரமும் முழு வளர்ச்சியடையாது. இப்போது நாம் இருக்கும் நிலை அப்படித்தான் உள்ளது," என்று கூறி மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு நாமே காரணம் என்று பதிலளித்தார்.

ஊழல் குறித்து பேசிக் கொண்டிருக்கையில் மழை கொட்டத் துவங்கியது. சத்குரு மண்டபத்திற்குள் வருமாறு தன் முன் இருந்தவர்களை அழைக்க, குருவை மிக அருகில் கண்ட மகிழ்ச்சியில், ஓரிரு நிமிடத்திற்கு இசை வாத்தியத்தோடு கைதட்டி ஆர்ப்பரித்தது அன்பர் கூட்டம்.

"ஊழல் என்பது இன்று நேற்றல்ல மகாபாரதக் காலம் தொட்டே இருந்து வந்துள்ளது. திருதிராஷ்டன், தன் மகன் மோசமான குணம் படைத்தவனாக இருந்தாலும் கூட, அவனே அரசாள வேண்டும் என நினைத்தான்.

ஊழல் பற்றி சிந்திக்கும் நாம், வருகிற தேர்தலில் உறுதியாக செயல்படக் கூடிய தலைவராக யார் தெரிகிறாரோ, அவருக்கு நம் வாக்கை அளிக்க வேண்டும். யார் நல்லவன் என்பதைவிட யார் வல்லவன் என்பதே முக்கியம். நாம் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார்.

தன்னிகரில்லா ஆண்மகனில் பாதி பெண்ணாக...

ஆண்தன்மை பெண்தன்மை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஆண்தன்மையை வளர்த்துக் கொண்டால்தான் உலகில் வெற்றி பெற முடியும் என்ற துரதிர்ஷ்டவசமான சூழல் நிலவுகிறது. ஆனால் ஆண்தன்மையும் பெண்தன்மையும் சரிசமமாக இருப்பதே உன்னதமானது," எனக் கூறிய சத்குரு, தன்னிகரில்லா ஆண்மகனாக விளங்கும் ஷிவா தன்னில் ஒரு பாதியை பெண்தன்மையாகக் கொண்டுள்ளார் என எடுத்துரைத்தார்.

மனம் ஒரு அற்புதக் கருவி

"உங்களிடம் உள்ள மடிக் கணினியை (லேப்-டாப்) நீங்கள் ஒரு சுத்தியலாகப் பயன்படுத்தி சில காரியங்கள் செய்ய முடியும். ஆனால் அந்த லேப்-டாப் மிகச் சிறந்த பல வேலைகளைச் செய்ய வல்லது. நீங்கள் உங்கள் மனதை சுத்தியல்போல் பயன்படுத்துகிறீர்கள். நான் என் மனதை அசாதாரணமாகக் கையாள்கிறேன். தற்போதுள்ள நிலையில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் உங்கள் மனதை நிலையான ஒரு தளமாக அமைப்பதே!" என நிலையில்லா மனதைப் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தந்தார் சத்குரு.

இறுதியாக துள்ளலாட்டமிடச் செய்த இந்தி மெல்லிசைப் பாடலுக்கு சத்குரு கைதட்டி நடனமிட, அன்பர் கூட்டமும் உற்சாக வெள்ளத்தில் கூச்சலிட்டது.

அவ்வப்போது வானம் மக்களை ஈரமாக்கினாலும், தரிசன நேரத்தில் முழுக்க நனைத்தது என்னவோ சத்குருவின் அருள் மழைதான்!

விரைவில் மற்றொரு தரிசனப் பகிர்வில் இணைவோம்!