தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…

குறிப்பு: இரவு 8.30 மணியளவில் பதிவை எதிர்பார்க்கலாம்.



தன் திசையை சூரியன் திருப்பிக் கொண்டு செல்லுமொரு அற்புத நாள் இன்று. நம் வாழ்வின் ஓட்டத்தில் சூரியனின் ஓட்டத்தையும், எழில் நிலவின் குளிர்ச்சியையும் பெரும்பாலும் கவனிக்காமலேயே போய்விட்ட இக்காலகட்டத்தில் தட்சிணாயணத்திற்காக இன்றொரு சிறப்பு தரிசன நேரம்...

"பூபாள ராகம் நான் பாடும் நேரம் இது தட்சிணாயனம்..." என சவுன்ட்ஸ் ஆப் ஈஷா புது பாடல் ஒலிக்க, சிலிர்க்கச் செய்யும் தேனிசையாய் தன் உரையைத் தொடங்கினார் சத்குரு.

"நாத பிரம்மா விஷ்வ ஸ்வரூபா" என்று அவர் தன் நாத பிரம்ம அனுபவத்தை நம்மிடையே இசையாய் பரப்ப, தூங்கிக் கொண்டிருந்த இதயங்களும் நாத பிரம்மத்தை உச்சரித்து சத்குருவின் கதகதப்பில் சுகந்தது.

மெல்ல பேசத் துவங்கிய சத்குரு, "இதே நாள் 18 வருடத்திற்கு முன், இன்று மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் கேதார் மலைப்பிரதேசத்திற்கு பயணமானேன். அங்கே காந்தி சரோவரில் எனக்கு நாத பிரம்மா அனுபவம் ஏற்பட்டது. இன்று ஏதோ காரணத்தால் காந்தி சரோவர் பாதி மூழ்கிய நிலையிலும், கேதார் பாதிப்படைந்த நிலையிலும் உள்ளது. அடுத்த மூன்று வருடங்களுக்கு கேதார் யாத்திரை நடக்கப் போவதில்லை.

கடந்த 1000 வருடங்களில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இது தியானலிங்க பிரதிஷ்டை தினத்திற்கு மிக அருகாமையில் நடந்துள்ளது சற்று ஏமாற்றத்தைத்தான் உண்டு பண்ணி உள்ளது," என்று தன் இதயத்தின் வலியை உணர்த்தியவர், தனக்கு காந்தி சரோவரில் ஏற்பட்ட அனுபவங்களை சுவைப்பட கதையாய் சொன்னார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தான் ஆனந்த மார்கி பாபாவுடன் நேரம் செலவிட்டதையும், அவர் தனக்கு உதவியதையும் அனைவருடனும் பகிர்ந்திட்ட சத்குரு, உடலை உறைய வைத்த குளிரில் பலஹாரி பாபா தனக்கு கொடுத்துதவிய உணவையும் உறைவிடத்தையும் நன்றியுடன் பகிர்ந்தார்.

கேட்பதற்கு சுவையானதாய் தோன்றினாலும், நடுங்கும் குளிரில் தன் சாதனாவை அவர் தீவிரமாக தொடர்ந்த கதையைக் கேட்கும் போது சுகமாக நாம் செய்துக் கொண்டிருக்கும் பயிற்சி நமக்கு கிடைக்க நாம் என்ன செய்தோம் என்றே தோன்றுகிறது!

இன்று தட்சிணாயனம் உதிக்கும் நாள். சூரியனின் ஓட்டத்தில் மிக முக்கியமான ஒரு நாள். ஆன்மீக சாதகர்களுக்கு தன் ஆன்ம வளர்ச்சியில் மற்றுமொரு படிக்கல்லாய் விளங்கும் நாள். இத்தனையும் ஒன்று சேர இன்றைய தரிசன நேரம் சிறப்பு தரிசன நேரம் ஆயிற்று.

"இன்று தான் ஆதியோகி சப்தரிஷிகளுக்கு யோகம் சொல்லிக் கொடுக்க குருவாய் அமர்ந்த நாள். இந்நாளில் நம் உடல் இயற்கையில் ஏற்படும் மாற்றங்களுடன் ஒத்திசைந்து செல்லும்போது அது நமக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த ஒத்திசைவு உறுதிபெறும்போது உங்கள் வெற்றியும் பல மடங்குப் பெருகும்," என்றார் சத்குரு

இயற்கையுடன் ஒத்திசைவில் இருப்பதன் முக்கியத்துவத்தை பல உதாரணங்களுடன் எளிதாய் விளக்கிய சத்குரு, சூரிய நமஸ்காரம், கிரியா போன்ற எளிமையான பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலமே நமக்குள் மாற்றத்தை உணர முடியும் என்றார்.

ஒருவர் சூட்சுமமாக இருக்கும் பட்சத்தில் தட்சிணாயனம், உத்தராயணம் போன்ற மாற்றங்களுக்கு ஏற்ப தன் ஆன்மீகப் பயிற்சிகளையும் மாற்றிக் கொள்ளும் சூட்சுமம் அவருக்கு இருக்கும் என்றவர், ஒருவர் சூட்சும நிலையில் இருந்தால் அவருக்குள் பல விஷயங்களை சுலபமாக ஊற்றி விடலாம் என்றார்.

பிறக்கப் போகும் இந்த தட்சிணாயனம் விதை விதைத்து பராமரிப்பதற்கான காலம் என்றவர், பயிரிடும் காலத்தில் செய்ய வேண்டியவற்றை செய்யாமல் அறுவடைக் காலத்தில் மலர்களை எதிர்பார்ப்பது முறையல்ல என்றார்.

சூரியனுடைய திசை மாற்றத்தை பற்றி பல சூட்சுமங்களை கட்டவிழ்த்த சத்குரு, கடந்த 30 வருடங்களாக நான் வெறும் அடிப்படை யோகப் பயிற்சிகளை மட்டுமே சொல்லித் தந்து வந்திருக்கிறேன். எனக்கு இது போரடிக்கிறது. நான் ஒரு சிறிய எண்ணிக்கையில் உள்ள மனிதர்களுடன் யோகத்தின் உயர்ந்த பரிமாணத்தில் வேலை செய்வதற்கான தருணம் வந்துவிட்டது என்றார்.

நான் இதனை இப்போது செய்யாவிட்டால், யோகா என்பது உடல் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்குமான தொழில்நுட்பம் என்பதே மக்கள் மனதில் பதியும் என்று தன் ஆழ்ந்த விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

சப்தரிஷிகளுக்கு யோகம் சொல்லிக் கொடுக்க சிவனுக்கு பல்லாயிரம் ஆண்டுகள் பிடித்ததாக ஒரு வரலாறு சொல்கிறது. ஆனால் ஒருவர் திறந்த நிலையில் இருக்கும்போது அவருக்குள் யோகத்தை அப்படியே ஊற்றிவிடுவது வெகு சுலபம். அது ஒரே கணத்தில் கூட நிகழ்ந்துவிட முடியும்.

ஆனால் தர்க்க ரீதியான மனங்களுக்கு யோகம் சொல்லிக் கொடுக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறையை உருவாக்க வேண்டி வரும். அது பல காலம் பிடிக்கும். ஆனால் இவர்களுக்கு நாம் யோகத்தை சொல்லிக் கொடுக்கும் போதே அதைப் பல பேருக்கு கொண்டு சேர்க்கும் சாத்தியமும் கூடவே சேர்ந்து வரும் என்றார்.

சந்திரகுண்டத்தின் வாசலில் இத்தனை நாள் தரிசனம் நிகழ்ந்திருக்கிறது, ஆனால் சந்திரகுண்டத்தின் தூண்களை அழகாய் ஏந்தி நிற்கும் ஆமைகளின் கலைநயம் அனைவரையும் ஆட்டிப் படைக்க, அதன் பொருள் நயத்தையும் இன்று அதே அழகுடன் விளக்கினார் சத்குரு.

ஹேர் அன்டு டார்ட்டாய்ஸ் ரேஸ் (Hare & Tortoise) மூலம் மந்தமான ஆமையாய் மட்டுமே நம் மனதில் குடிபுகுந்திருக்கும் ஆமைகளுக்கும் காலத்திற்கும் இருக்கும் தொடர்பை வெகு அழகாய் விளக்கிய சத்குரு, மிக நுட்பமாக அது சந்திரகுண்டத்தின் வாயிலில் நின்று கொண்டிருக்கும் சூட்சுமத்தையும் புரிய வைத்தார்.

காலம் கடந்து செல்லும் சாத்தியம் மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்ட வரம். முக்தியோ, மோட்சமோ நாம் எதைச் செய்ய முயன்றாலும் நாம் செய்ய விழைவது காலச் சுழற்சியை உடைக்க நினைப்பது மட்டுமே. காலம் உங்கள் மேல் ஏற்படுத்தும் தாக்கத்தை நீங்கள் தளர்த்தினால் காலம் உங்களை ஆட்டிப் படைக்கப் போவதில்லை.

அதனால் இயற்கையுடன் ஒத்திசைந்து இருப்பது மிக முக்கியமான ஒரு அம்சம் என்று வாழ்வின் சூட்சுமங்களுக்கு ஞானியின் பதில் மந்திர திறவுகோலாய் அமைந்தது.

வாழ்வின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் சத்குருவின் மற்றுமொரு தரிசன நேரத்தில் மீண்டும் இணைவோம். வணக்கம்.