எங்கிருந்தாலும் தரிசனம்
தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.
 
 

தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…


மழைப் பொத்துக் கொண்டிருந்த வானத்தின் கீழ் இனிமையான இசையுடன் சந்திரகுண்டத்தின் முன் இன்றைய தரிசன நேரம் துவங்கியது.

ஈஷாவுடன் தியான யாத்திரை சென்று வந்திருப்போருக்கு அவ்விடத்தின் பிரம்மாண்டமும் அழகும் சற்று மூர்ச்சையடைய வைக்கும் என்பது தெரிந்திருக்கும். பிரம்மாண்டமான அந்த மலைகளில் தலைவிரித்து பாய்ந்தோடி வந்த மந்தாகினி நதிக்கு தன் பூமித்தலம் முழுவதையும் கொடுத்து, பல மக்களையும் தாரை வார்த்திருக்கிறது இமயமலைப் பகுதி.

அது குறித்து தன் உரையைத் தொடங்கிய சத்குரு, "கேதாரில் உள்ளது சுயம்பு லிங்கம். அதாவது தானாகவே உதித்த லிங்கம். சில சக்தி வாய்ந்த ஸ்தலங்கள் சரியான முறைப்படி பராமரிக்காமல் போகப்படும் பட்சத்தில் அவை மக்களால் சில காலங்களுக்கு மண்ணிற்குள் புதைக்கப்பட்ட வரலாறு நம் நாட்டில் உண்டு. ஏதோ காரணத்தினால் இன்று இயற்கை அதை கேதார்நாத் கோவிலுக்கு செய்திருக்கிறது.

இயற்கை அன்னை தன் இடையை அசைக்க முடியாத அளவிற்கு நம் மக்கள் தொகையை இன்று நாம் பெருக்கி உள்ளோம். அவள் தன் இடையை அசைத்தால் அது பேரழிவாகி விடுகிறது. இன்று கேதாரில் நடந்துள்ளது இயற்கைப் பேரழிவல்ல அது மனிதப் பேரழிவு.

சுனாமி போன்ற சீற்றங்கள் கடற்கரை ஓரங்களில் நடைபெறும்போது அதனை ஒருவிதமாக நாம் கையாள முடியும். ஆனால் அதுவே இதுபோன்ற மலைப் பிரதேசங்களில் நடைபெறும் போது அவ்விடத்தை அணுகுவதே சற்று சிரமம்தான். அந்த மலைப் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் முற்றிலும் அழிந்துவிட்டன. மேலே அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கூட 6 மாதக் காலங்கள் பிடிக்கும். இது பேரிழப்பு.

இந்த சமயத்தில் நாம் நம் சீன நண்பர்களின் துணையுடன் மற்றொரு பக்கத்தில் உள்ள மலைப்பகுதி மூலம் உதவ முடியும்," என்றார் சத்குரு.

ஏழு நாள் மௌன நிகழ்ச்சியான சம்யமாவிற்கு பிறகு, இன்றைய தரிசன நேரத்தில் சத்குருவிடம் பல கேள்விகளை கேட்டனர் தியான அன்பர்கள்.

தியானலிங்கத்திற்கு மஹாவில்வம் அர்ப்பணிக்கப்படுவது, மனித உடலில் சித்த மருத்துவத்தின் தாக்கம், ஈமக் கடன் செய்வதன் தாத்பரியம், நான் நடிகை பல பயிற்சிகளை செய்கிறேன் - உள்நிலையிலான பயிற்சி வெளிநிலை பயிற்சிக்கு மாற்றா?என்பன போன்ற பல சுவையான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பல கோடான கோடி மரங்கள் இப்பிரஞ்சத்தில் இருக்க அதில் சில மரங்கள், சிலப் பூக்கள், சிலப் பொருட்கள் மட்டும் ஏன் தனித்துவம் கொண்டதாய் மக்களால் அழைக்கப்பட்டிருக்கிறது? இப்பொருட்கள் தன்னகத்தே கொண்டுள்ள குணங்களே காரணம் என்று அதன் மகத்துவத்தை விளக்கமாக விளக்கினார் சத்குரு.

சித்த மருத்துவத்தை இதைப்போலும் சிறப்பாக விளக்க முடியுமா என்று நமக்கு வியப்பு ஏற்படும் வகையில் பல வியக்கத்தக்க தகவல்களையும் வழங்கினார் அவர்.

இந்த தேசத்தில் மக்கள் எதையுமே காரணம் இல்லாமல் உருவாக்கவில்லை என்று ஈமக் கடன் செய்யும் விஞ்ஞானத்தையும் விளக்கிய சத்குரு, வெளிநிலையில் செய்யும் சாதனாவிற்கும், உள்நிலையில் செய்யும் சாதனா நம் மேல் ஏற்படுத்தும் தாகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அழகாய் எடுத்துரைத்தார்.

இவை அனைத்தைப் பற்றியும் வேறொரு நேரத்தில் உங்களுடன் ஆழமாய் பகிர்ந்து கொள்வோம்.

பேசிய விஷயங்களின் பொருள் ஆழமாய் இருக்கையில் வெகு சொர்ப்ப வார்த்தைகளில் அதை உணர்த்த முயல்வது சற்று சிரமம்தான்.

இன்று கேதாருக்கு நடைபெற்றதை சத்குரு சொன்னதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது... கீழ்கண்ட வார்த்தைகளை தவிர்க்க இயலவில்லை!

உயிர் கொண்ட வடிவம்
உருவான அருவம்
தொழில்நுட்பம் மறந்தார்
சிலை என்று சொன்னார்
விலை கொடுத்துவிட்டார்
இல்லை இது இயற்கை என்றார்
சிவன் சுமக்கும் பூமி
சினம் கொண்டதேனோ
மனம் உணர வேண்டும்
மதி பிறக்க வேண்டும்

மற்றொரு இனிமையான தரிசன நேரத்தில் உங்களுடன் இணைவோம். வணக்கம்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1