தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

06:34 pm

யோகரதோவா போகரதோவா என்னும் ஆதி சங்கரர் பாடலை அவர்பின் உச்சரிக்க, சம்சாரக் கடலை அவர் கைபிடித்து கடந்துவிட்ட உணர்வில் அனைவரும் திளைத்திருக்க,
மெல்லிய பாடல் இசையில் சூரியன் மட்டுமல்ல, இங்கிருக்கும் அனைவரின் கவலைகளும் மறைந்துகொண்டிருக்கும் அழகிய மாலைப் பொழுது...

6:57 pm

இன்று சங்கராந்தி, இந்த தினத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் இருக்கும் தொடர்பினால், ஒரு மனிதனுக்குள் இருக்கும் ஆண்தன்மையும் பெண்தன்மையும் (ஈடா, பிங்களா) சமதளத்தில் இருக்கிறது. இதை நம் கலாச்சாரத்தில், சிவன் அர்தநாரியாக அமர்ந்த தினமிது என்று சொல்வார்கள். ஒரு மனிதன் தன் உடல்நிலையில் இருக்கும் ஏக்கங்களையும் கட்டாயங்களையும் கடந்து செல்லும் வாய்ப்பை இந்நாள் வழங்குகிறது.

பூமியின் நிலையைப் பொருத்து, யோக முறையில் வருடத்தின் 365 நாட்களில் ஒவ்வொரு நாளும் அதற்கென ஒரு பயிற்சி செய்யும் வழிமுறை இருக்கிறது. ஆனால் நம் மனங்களில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களால் அந்த அளவு நுண்ணர்வு மனிதர்களுக்கு இல்லாமல் போகிறது. இந்த சங்கராந்தி உடல் மற்றும் எண்ணங்களுடன் இருக்கும் அடையாளங்களையும் அதனால் ஏற்படும் முன்முடிவுகளையும் கடந்து செல்ல ஓர் வாய்ப்பு...

இதைச் சொன்னவுடன், அனைவரும் அத்திசையில் ஒரு படி எடுத்துவைக்க ஒரு சக்திவாய்ந்த செயல்முறையையும் துவங்கியுள்ளார். அவர் குறிப்புகளைப் பின்பற்றி அனைவரும் தியானித்திருக்க, மத்தள ஒலி முழங்கும் சத்தம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

7:13 pm

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கண் திறந்தும் தியானத்தின் கிரக்கத்திலிருந்து வெளிவராதவர்கள் மத்தியில், "குழந்தையிலிருந்து நடக்கப்போவது முன்பாகவே எனக்கு தெரிந்துகொண்டிருக்கிறது. இது சரியா தவறா என்று நீங்கள் சொல்லவேண்டும்" என்று ஒருவர் கேட்க...

அப்போது என் பதிலும் தெரிந்திருக்க வேண்டுமே என்று சத்குரு பதிலளிக்க, கூட்டத்தில் சிரிப்பலை...

மனம் 100 திசைகளில் ஓடுகிறது, நாளை என்ன நடக்கும் என்று நினைத்து அதை ஓடவிட வேண்டாம். உயிர் இப்போது, இங்கு, நமக்குள் நடந்துகொண்டிருக்கிறது. இதை சரியாக நடத்தத் தெரியாவிட்டால், என்ன பிரயோஜனம்? நீங்கள் கொஞ்சம் தியானம் செய்யவேண்டும் என்று கூறி வழிகாட்டினார்.

7:16 pm

நான் உடலுமல்ல, மனமும் அல்ல என்றால், அந்த நான் என்பதென்ன? என்று குதர்க்கமாக ஒருவர் கேட்க...

ஒருவர் அமெரிக்கா செல்ல விமான நிலையத்திற்கு சென்றபோது, செக்-இன் செய்ய வரிசையில் நிற்காமல் நேரே உள்ளே சென்று டிக்கட்டை நீட்டினார். அங்கு அமர்ந்திருந்த பெண்மணி, வரிசையில் வரச்சொன்னார். அவர் ஆதங்கத்தில், "நான் யாரென்று தெரியுமா?" என்று கேட்டார். அந்த பெண்மணி மைக்கை எடுத்து, யாரென்று அறியாமல் ஒருவர் இங்கு இருக்கிறார், அவருக்கு யாராவது உதவுங்களேன் என்றார்.

நீங்கள் யாரென்று என்னைக் கேட்டால்...? என்று சொல்லி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.

7:29 pm

பெரும்பாலான நோய்கள் மனோரீதியானவை என்று தாங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அதைப் பற்றி...

உங்கள் கைகளை வைத்து விளையாடத் தொடங்கி உங்கள் கண்களையே குத்திக்கொண்டது போல, உங்கள் மனதை எப்படி எப்படியோ செல்ல விட்டு உங்களை நீங்களே விஷமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். வெளிசூழ்நிலைகள் முழுமையாக உங்கள் கைகளில் இல்லாமல் இருக்கலாம். உள்சூழ்நிலையையாவது உங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு விரும்பியவிதமான இரசாயன மாற்றத்தை உங்களுக்குள் உருவாக்க வேண்டும் அல்லவா? என்றார்.

நான் மனதில் நினைத்திருப்பது எனக்கு கிடைக்குமா என்று நீங்கள் சொல்லியே ஆகவேண்டும் என்று ஒருவர் வற்புறுத்த,

நான் ஜோசியம் சொல்ல இங்கு அமரவில்லை. சொல்லிவிட்டால் அதனால் பிரயோஜனம் தான் என்ன? நீங்கள் மேம்படுவதற்கு வழிகாட்டவே நான் இங்கு இருக்கிறேன். முட்டாளாய் இருந்துகொண்டு நினைத்தது கிடைத்துவிட்டால் என்ன செய்யப்போகிறீர்கள், ஏழை முட்டாளாக இல்லாமல் பணக்கார முட்டாளாக இருப்பீர்கள், உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றார்.

7:38 pm

எனக்கு ஆன்மீக புத்தகங்களில் மிகுந்த நாட்டம், ஆனால் தியானம் செய்ய சற்று சோம்பேறித்தனம் என்று ஒருவர் சொல்ல...

வார்த்தைகளுள் அடங்காதது ஆயிரக்கணக்கானது இருக்கிறது. ஒரு இலையையோ படைப்பில் ஏதோ ஒரு சிறிய புள்ளியையோ கூர்ந்து கவனிக்கத் தெரிந்தால், வார்த்தைகள் அனைத்தும் உங்களுக்குள் காணாமல் போய்விடும். வார்த்தைகளை வைத்து துவங்கவேண்டும் என்றால் ஈஷா கிரியா தியானத்துடன் துவங்குங்கள் என்றார்.

7:48 pm

திருமணமென்னும் விஷப்பரிட்சைக்கு நான் தயாராக இல்லை. என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதர் எப்படி சந்நியாசியாக முடியும் என்று கேட்க...

திருமணத்தை விஷமென்று சொல்லவேண்டாம், நீங்களும் அதிலிருந்து தான் பிறந்தீர்கள். உங்களுக்கு அதில் நாட்டமில்லாமல் இருப்பது வேறு. உடல் என்பது ஒருவிதமான சுழற்சி, மனம் என்பது ஒருவிதமான சுழற்சி, இவ்விரண்டையும் கடந்து இருந்தால் நீங்கள் சும்மாவே சந்நியாசி தான். ஆனால் இயல்பாக நீங்கள் அப்படி இல்லையென்றால், அந்நிலையை அடைய வழிமுறைகள் இருக்கிறது, அப்பாதையில் இருப்பவரை சந்நியாசி என்கிறோம். அந்த வழிமுறைகளை கடைபிடிக்க, சுழற்சிகளைக் கடந்துசெல்ல நீங்கள் உண்மையில் தயாரா என்று பாருங்கள் என்றார்.

7:52 pm

தியானத்தில் உள்ளம் தெளிந்து, அவர் வார்த்தைகளில் மனமும் சற்று தெளிந்து, அனைவரும் அவர் அருள் மழையில் நனைந்திருக்க, தெளிந்த வானம் சற்று மோடமாகி மழைத் துளிகள் சிந்தத் தொடங்குகிறது...