எங்கிருந்தாலும் தரிசனம்
"தினம் தினம் உன் முகம் காண வேண்டும்; வேறென்ன நான் கேட்பேன் பெரிதாய் ஒரு வரம்?!" இப்படி, குருவைக் காண ஏங்கும் மனதிற்கு, அவர் முகம் கண்டபின் வேறென்ன வேண்டும். இன்றைய தரிசன நேர நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே!
 
 

தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…கேள்விகளில்லா வேள்வி!

பொத்துக் கொண்ட வானமும் நீர் தேங்கிய பூமியுமாய் இருந்ததால் நேற்றைய தரிசனம் ஆதியோகி ஆலயத்தில் நடைபெற்றது நாம் அறிந்ததே! இன்றும் மேகக் கூட்டங்களுக்குக் குறைச்சல் ஏதும் இல்லாதபோதிலும், 'இன்று பெரிதாய் ஒன்றும் மழை பெய்துவிடாது' என்ற நம்பிக்கையில் சந்திரகுண்டத்தின் முன்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நம்பிக்கை வீண்போகவில்லை; பன்னீர் தெளித்ததுபோல இடையே விழுந்த ஓரிரு துளிகளைத் தவிர நம்மை முழுக்க நனைத்தது சத்குருவின் அருள் மழை மட்டுமே!

நேற்றைய தரிசனத்தில் பொதுவான உரை ஏதும் நிகழ்த்தாமல், 'உங்களுக்குள் தீயாய் எரிந்துகொண்டிருக்கும் கேள்விகளை மட்டும் கேளுங்கள்' என்று கூறி கேள்விகளுக்குப் பதிலளித்தார் சத்குரு. நேற்று கேள்வி கேட்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் சிலர் இன்றைய தரிசனத்தில் கேட்பதற்காகத் தங்கள் கேள்விகளை நன்கு தயார் செய்தும் வந்திருந்தனர்.

நேற்று, நெருப்பாய் எரியும் கேள்விகளைக் கேட்கச் சொன்னவர், இன்று தானே நீரில் எரியும் நெருப்பாய் வந்தமர்ந்தார். சத்குருவுடன் சேர்ந்து அன்பர்கள் செய்த மந்திர உச்சாடனையின் அதிர்வுகளை, அங்கிருந்த மனிதர்கள் மட்டுமல்லாமல் புல்லும் மரமும் கூட உணர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பின் நிசப்தமும் மௌனமும் மாறி மாறி நிறைத்தன வெளியை. குருவின் அருகாமைத் தாங்க முடியாமல் கதறி அழுத அன்பர்கள், சிறிது நேரத்தில் தாங்களாகவே இயல்பு நிலைக்குத் திரும்ப, "கற்பூர கௌரம் கருணாவதாரம்..." என சத்குரு பாடி திருநீற்றுப் பிரசாதத்தைத் தொட்டு வணங்கிச் சென்றார்.

ஆம்! இன்று கேள்விகளைத் தயார் செய்து வந்திருந்தவர்களுக்கு மௌனமே பதிலாய் அமைந்தது. மணிக்கணக்கில் பேசிப் புரிய வைக்கமுடியாததை, அந்த அருட்பார்வையும் மௌனமுமே உணர்த்திச் செல்ல, கேள்விகளில்லா வேள்வியாய் அமைந்தது இன்றைய தரிசனம்.

மீண்டும் ஒரு தரிசனம் வாய்க்கும் வரை, காத்திருப்போம் அதே தீரா ஏக்கத்துடன்!

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1