முகம் காண ஏங்கிய அனைவருக்கும் கிடைத்தது குருவின் தரிசனம், இன்றைய தரிசன நேரத்தின் தொகுப்பு தொலைவில் ஏங்கும் உங்களுக்கும் இப்போது...

இன்றும் கிடைத்தது குரு தரிசனம்!

ஆம்... நேற்றைய தரிசனத்தில் பெற்ற அதிர்வுகளே இன்னும் உள்ளத்தில் நிலைத்திருக்க, இன்றும் காணக் கிடைத்தது சத்குருவின் அருள் முகம்.

பனி விழும் பொழுதிலும் புல்வெளி வாழ் உயிரினங்களெல்லாம் தாக்குதல் நடத்தும் வேளையிலும் அசராமல் அமர்ந்திருந்தது அன்பர் கூட்டம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"நின்னு விடுசி யுண்டலேனய்யா
கைலாச வாசா..."

தெலுங்கு மொழியில் அமைந்திருந்த அந்த அழகிய கீர்த்தனம் நம்மை ஏதோ செய்தது. பக்தி உணர்வை பொங்கச் செய்த அந்தப் பாடல் ஆரவாரமாயிருந்த பலரது மனதையும் அடங்கச் செய்தது என்றே சொல்ல வேண்டும்.

சத்குருவின் உரையும் அந்தப் பாடலிலிருந்தே துவங்கியது.

"20 வருடங்களுக்கு முன்னர் முதன் முதலில் நடந்த ஹோல்னெஸ் (WHOLENESS) நிகழ்ச்சியின்போது இந்தப் பாடல் தான் திரும்பத் திரும்பப் பாடப்படும். நாங்கள் இந்தப் பாடலில் பலமுறை நனைந்திருக்கிறோம்." என ஈஷாவின் ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்த சத்குரு தொடர்ந்து பேசினார்.

சுழற்சியை தாமதப்படுத்துவோம்!

"உணர்ச்சி என்பது மிகவும் பிரமாதமான கருவி. அது உங்களை உயர்ந்த சாத்தியத்தை நோக்கி இட்டுச் செல்லும். ஆனால் நீங்கள் அதனோடு அடையாளப்பட்டு விடுவதுதான் தடையாக உள்ளது. நீங்கள் உணர்ச்சி மற்றும் மனதின் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறீர்கள்." என்று நீண்ட தன் உரையில் தெளிவுபடுத்திய சத்குரு, நாம் கொண்டிருக்கும் இந்த சுழற்சியின் கால அளவைத் தாமதப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

"நீங்கள் அடையாளத்தை விட்டுவிடுவதே சிறந்தது. ஆனால், நீங்கள் இப்போது அதற்குத் தயாரக இல்லை. எனவே நீங்கள் உங்கள் அடையாளங்களைப் பெரிதாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த உலகத்திலுள்ள அனைவரும் ஏதோ ஒரு நாட்டைச் சார்ந்து, அதன் அடையாளத்தோடு இருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் சமூக ரீதியாக அவர் இருக்க வாய்ப்பில்லை."

இப்படி மன மற்றும் உணர்ச்சிகளின் சுழற்சியில் சிக்கிக்கொள்வது பற்றி பேசிய சத்குரு, தொடர்ந்து இன்றைய கால மக்கள் நல்ல வாழ்க்கை என்று எதைக் கருதுகிறார்கள் என்பதைப் பற்றி பேசினார்.

"நீங்கள் உங்கள் அருகில் வாழும் யாரோ ஒருவரை விட சிறந்து வாழ விரும்புகிறீர்கள். அவரை விட அதிக வசதியுடன் வாழ்ந்தால் அதுவே வெற்றி என்று கருதுகிறீர்கள். இது மிகவும் மோசமான பார்வை." இப்படி இன்றைய நவீன யுக மக்களை சாடிய சத்குரு தன் இளமைக் காலத்தில் தனது பார்வை இருந்த விதத்தைப் பகிர்ந்துகொண்டார்.

"நான் என் இளமைப் பருவத்தில் யாரிடமும் எந்த வேலைக்கும் செல்வதில்லை என்று முடிவெடுத்து விட்டேன். என் அப்பா என்னைப் பற்றி மிகவும் கவலைப் பட்டார். 'இந்த பையன் எப்படித்தான் பிழைக்கப் போகிறானோ' என்று. நான் சொன்னேன், நான் முதலில் இந்த உலகம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்கிறேன், பிறகு மற்றதைப் பார்க்கலாம். அப்படியே எனக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் நான் காட்டுக்குள் சென்று காய்கனிகளை உண்டு வாழ்வேன். எனவே என்னைப்பற்றி எனக்கு கவலையில்லை"

கார், பெரிய வீடு மற்றும் ஆடம்பர பொருட்கள் இவையனைத்தும் இருந்தால் மட்டுமே நல்வாழ்வு என நினைத்துக் கொள்ளும் இன்றைய தலைமுறை மக்களுக்கு, தனது இந்த இளமைக் காலத்தை சுட்டிக் காட்டிப் பேசிய சத்குருவின் உரை வெகு சுவாரஸ்யமாய அமைந்தது.

"தோடுடைய செவியன்
விடையேறி யோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி
என் உள்ளங் கவர்கள்வன்"

சிவனைப் போற்றி திருஞானசம்பந்தர் இயற்றிய அந்தப் பாடலை சமஸ்கிருதி மாணவர்கள் அற்புதமாய் இசைக்க அருள் தந்து விடை பெற்றார் சத்குரு.

விரைவில் இன்னொரு தரிசனத்தில் இணைவோம்!