மனம் என்றால் கேள்விதான். அதுவும் நிறைய படித்திருந்தோம் என்றால் கேள்விக்கு குறையே இல்லை. அப்படி சத்குருவிடம் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கு பதில் இங்கே...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: எனது ஆயுட்காலத்தை நான் தெரிந்து கொள்ளமுடியுமா?

சத்குரு:

உங்கள் ஆயுள், காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதில்லை, பிராரப்த கர்மாவை கொண்டு கணக்கிடப்படுகிறது. உங்கள் மொத்தக் கர்மவினையில் இந்தப் பிறவியில் நீங்கள் கழிப்பதற்காக அளிக்கப்படும் ஒரு பகுதிதான் பிராரப்தா. பிராரப்தாவைக் கழிப்பதற்கு நீங்கள் எவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது உங்கள் கையில் இருக்கிறது. அந்த பிராரப்தத்தை நீங்கள் 25 வருடங்களிலும் கழிக்கலாம், அல்லது ஒரே நாளிலும் கழிக்கலாம். பிராரப்தத்தைக் கழிப்பதற்கு முன்னாலேயே, ஏதாவது விபத்து போன்ற காரணங்களால் ஒருவர் இறந்துவிட நேர்ந்தால், பிராரப்த கர்மா முழுமையாக கழியாத காரணத்தால், அவர் பேயாகவோ, பிசாசாகவோ திரிகிறார். அதனால், உங்கள் ஆயுள் உங்கள் கையில்!

Question: ஆன்மீகம் பற்றி நிறைய பேசுகிறீர்கள், எங்களுக்கு புரியும்படி வாழும் உதாரணம் ஒன்றைச் சொல்ல முடியுமா?

சத்குரு:

எனக்கு தெரிந்த ஈஷா தியான அன்பர் ஒருவர் என்னுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். நடுநிசியில் அவருக்கு ஒரு அழைப்பு வருகிறது “உங்கள் இரு குழந்தைகளும் விபத்தில் சிக்கி மரணமடைந்துவிட்டனர்.” காலை ஐந்தரை மணிக்குத்தான் எங்களால் அவர் இல்லத்திற்கு போய் சேர முடிந்தது. அதுவரை என் கைகளைப் பற்றிக் கொண்டு, எதற்காக அழுகிறோம் என்று தெரியாமல் அழுதுகொண்டிருந்தார் அவர். அன்று மாலை, அவர் ஏற்பாடு செய்திருந்த சத்சங்கம் அவரது இல்லத்தில் நடைபெறுவதாக இருந்தது. அனைவருக்கும் அழைப்பு சென்று சேர்ந்தாகிவிட்டது, ஐநூற்றிற்கும் மேற்பட்டோர் அதில் கலந்துகொள்வதாய் இருந்தது. 8 மணிக்கு சத்சங்கம், மாலை 6.30 மணிக்கு இறுதிச் சடங்கினை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். சத்சங்கம் வேண்டாம், வேறு இடத்தில் வைத்துக் கொள்வோம் என்று பிறரிடம் சொல்லி இருந்தேன். அதுகுறித்து கேள்விப்பட்ட இந்த நபர், “இல்லை, சத்சங்கம் வேறு இடத்திற்கு மாற்றப்படக் கூடாது, எங்கள் வீட்டிலேயே நடக்கட்டும்,” என்று கூறி அவரும் சத்சங்கத்தில் அமைதியாக வந்து அமர்ந்து கொண்டார். சத்சங்கமும் நடந்தது, வந்தவர்கள் யாருக்கும் அன்று அந்த இல்லத்தில் அரங்கேறிய துக்கம் தெரியாது. அவரை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன், அவர் மலர் போல் அமர்ந்திருந்தார். முந்தைய நாள் நள்ளிரவில் அவருடைய இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர், இங்கு அந்தத் தாய் அழகிய புன்னகையுடன் சத்சங்கத்தில் அமர்ந்திருக்கிறார்.

இது ஆன்மீகம் அல்லவா? உங்களுக்கு ஆன்மீகம் வைக்கும் பரிட்சைதானே இது? அவருக்கு அவரது குழந்தைகள் மேல் அத்தனை பற்று இருந்தது. தன் குழந்தைகளை நல்ல நிலைக்கு உயர்த்துவதற்கு எத்தனையோ தியாகங்களைச் செய்தவர் அவர். வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்த அந்தப் பிள்ளைகள் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தனர். பெரும் செல்வமுடையவர்கள், பெரிய வீடு, ஏராளமான பொருள் என எல்லா வசதியும் அவர்களிடம் உண்டு. வெளியிலிருந்து பார்ப்பவர்கள் அவர் வைத்துள்ள ஆடை ஆபரணங்களையும் அவரிடம் உள்ள வைரங்களையுமே பார்ப்பார்கள். யார் அவரது இந்தப் பரிமாணத்தை பார்ப்பது? ஆன்மீகம் அவருக்கு வழங்கிய சொத்தல்லவா இது?