Question: சத்குரு, போன பிறவியில் நீங்கள் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தீர்கள். தமிழ்நாட்டில் நிறைய செயல்கள் செய்திருக்கிறீர்கள். இந்தப் பிறவியிலும் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்து, தமிழ்நாட்டிற்கு வந்து, கஷ்டப்பட்டு தமிழ் பேசி வகுப்புகள் எல்லாம் நடத்துகிறீர்கள். உங்கள் பிறவி நோக்கமான தியானலிங்கத்தையும் இங்குதான் உருவாக்கினீர்கள். நீங்கள் ஏன் தமிழ் பேசும் குடும்பத்திலேயே பிறந்திருக்கக் கூடாது?

சத்குரு:

தமிழ் மக்களின் தீவிரம்

எங்கு பிறந்தால் என்ன? தெலுங்கு தாய்மொழியாக இருந்தாலும் தமிழ் என் உயிர் ஆகிவிட்டதே? நான் பல தேசங்களுக்கு பயணம் செய்திருக்கிறேன்; பல இடங்களில் யோக வகுப்புகள் நடத்தியிருக்கிறேன்; அந்த வகுப்புகளெல்லாம் தீவிரத்துடனும் சிறப்புடனும் அமையத்தான் செய்கிறது. ஆனால், என் உணர்வில் தமிழ் மக்களின் தீவிரத்தைப் போல் வேறெங்கேயும் கண்டதில்லை. இந்தத் தீவிரத்தை வேறெங்கேயும் பார்த்ததில்லை. நான் எந்தத் தேசத்திற்குச் சென்றாலும், எங்கு வகுப்பெடுத்தாலும் அங்கு ஒரு 4 பேர் தமிழ் மக்கள் உள்ளே நுழைந்து விடுகின்றனர். அவர்களுக்கு அந்தச் சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும், வேலைகளை எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என தெரியாவிட்டாலும் அதைச் செய்வதற்கான ஆர்வம் அவர்களிடம் மிகுதியாக இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

திறமையா? தீவிரமா?

என் உணர்வில் தமிழ் மக்களின் தீவிரத்தைப் போல் வேறெங்கேயும் கண்டதில்லை.

திறமை அவசியமானதுதான். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் தீவிரம் மிக அவசியம். ஆன்மீகத்திற்கு உயிர் தீவிரம் அவசியம்; திறமையெல்லாம் இரண்டாவதுதான். தமிழ் மக்களிடம் உயிர் தீவிரம் அதீதமாய் உள்ளது. முன்பெல்லாம் சிவபக்தியில் தீவிரமாக இருந்தனர், அவர்களது உள்ளம் சிவனின் மீது அத்தனை ஈடுபாடு கொண்டிருந்தது. ஆனால், சமீப காலத்தில் இலவசங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டு, பல விஷயங்களும் பேசப்பட்டு, இங்கே வாழும் அடுத்த தலைமுறைக்கும் இந்த உணர்வு இல்லாமல் மழுங்கடிக்கப்பட்டு வருவதைப் பார்த்தால், இந்தப் பக்தியுணர்வு நீடிக்குமா என்கிற சந்தேகமே எழுகிறது. எங்கு பிறந்தால் என்ன, என்ன செய்தால் என்ன, நாம் என்ன செய்கிறோம், எப்படிச் செய்கிறோம் என்பது தானே முக்கியம்?!

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் நாம் அவர்களுக்கு சாதகமாக மிகுந்த பாகுபாட்டுடன் உள்ளோம். உலகம் முழுவதிலும் மக்கள் அருமையான பல செயல்களைச் செய்துள்ளார்கள். நாம் உலகம் முழுவதும் பல இடங்களில் யோக வகுப்பு எடுத்து வருகிறோம், ஆனால் தமிழ்நாட்டில் நடக்கும் ஈஷா யோக வகுப்பை நீங்கள் பார்க்க வேண்டும். மும்பை, தில்லி, பெங்களூரு என பல இடங்களில் ஈஷா யோக வகுப்புகள் மிக அற்புதமாய் நிகழ்ந்தாலும், சென்னையில் நடக்கும் ஈஷா யோக வகுப்பை வந்து பார்க்க வேண்டும்.

எனை வசீகரித்த தமிழர்கள்

நான் பிறப்பால் தமிழன் அல்ல, அதனால் ஏதோ மொழி பாகுபாட்டினால் சத்குரு இவ்வாறு பேசுகிறார் என்று நீங்கள் எண்ணமுடியாது. நான் உலகம் முழுவதும் பயணித்திருக்கிறேன், உலகம் முழுவதும் நமக்கு அற்புதமான பல தன்னார்வத் தொண்டர்கள் உள்ளனர், தேசத்தின் பல பகுதிகளில் அருமையான மக்கள் உள்ளனர், அதில் சந்தேகமே இல்லை. ஆனால், நான் எங்கு சென்றாலும் ஒரு கையளவு தமிழ் மக்கள் அங்கு கூடுவதை என்னால் பார்க்க முடிகிறது. அவர்களுடைய ஆர்வத்தையும், உயிர் தீவிரத்தையும் ஒப்பிட்டு பேசவே முடியாது. எந்தவொரு காரணமும் இல்லாமல் இவர்கள் அத்தனை தீவிரத்துடன் உள்ளனர். தங்கள் குணத்தால் இவர்கள் என்னை வசீகரித்து, அவர்களை விரும்பும்படி செய்துவிட்டனர்.

உணர்வு தீவிரத்திலும், செயல் தீவிரத்திலும் இந்த உலகில் தமிழ் மக்களைப் போல் வெகு சிலர் மட்டுமே உள்ளனர். ஈஷா அறக்கட்டளை தமிழர்களை அடித்தளமாகக் கொண்டு அவர்களின் மேல்தான் நின்று கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான வருடங்களாக இடையறாது நடைபெற்ற ஆன்மீகச் செயல்பாடுகளின் தாக்கம்தான். கடந்த 20, 25 ஆண்டுகளில் தென் தமிழகத்தில் இந்த ஆன்மீகச் செயல்பாடுகள் நடைபெற, தடங்கல் ஏற்பட்டுள்ளது.

வட இந்திய ஆன்மீகம்!

இந்தியாவின் வடக்குப் பகுதி அந்நியர்களின் படையெடுப்புகளுக்கு உள்ளாகி தொடர்ந்து ஏதோ ஒரு பாதிப்புக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இந்தியா தனது ஆன்மீக நோக்கத்தில் சற்றே ஆட்டம் கண்டிருக்கிறது எனலாம். உயர்ந்த ஆன்மீகம் இன்றும் நிலைத்திருந்தாலும், அதன் அடிப்படை பெரும்பாலான இடங்களில் சிதிலமடைந்து விட்டது. எழுந்து நின்ற ஆன்மீக அறிவு ஒடுக்கப்பட்டது, ஞானம் கொல்லப்பட்டது. இதனால், ஆன்மீகம் குரூரமான சித்திரவதைகளுக்கு உள்ளானது. அதையும் தாண்டி பக்தி மட்டும் நிலைத்து நின்றது. இதனால்தான் வட இந்தியாவில் உள்ள ஆன்மீகம் முழுவதும் துடைத்தெறியப்பட்டுவிட்டது. அங்கிருந்த ஆன்மீகம் இமாலயத்திற்கும் திபெத்திற்கும் குடிபெயர்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்திய ஆன்மீகம், மாளிகைகளில் குடியிருக்காமல் இல்லங்களில் வாழ்ந்து வருகிறது. நளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்த 30,000 துறவிகள் உயிரோடு எரிக்கப்பட்ட கதை உங்களுக்கு தெரிந்திருக்கும்.

ஆனால், தமிழகத்தில் தடையறாது ஆன்மீகம் நடந்தது. தமிழ் மக்கள் இன்றும் இதனால் பயனடைந்து வருகின்றனர். இன்றும் அவர்கள் தங்கள் கண்களை மூடினால் பித்தேறிய நிலைக்கு சென்று விடுகின்றனர். ஓராயிரம் மக்களில் ஆன்மீக பித்தேறியவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், அதில் பெருவாரியானவர்கள் தமிழர்களாகத்தான் இருப்பார்கள். உலகிலுள்ள பல்வேறு மக்களை தியானத்தில் இட்டால் அதில் பரவசநிலைக்குச் செல்லும் மக்களில் பெருவாரியானவர்கள் தமிழ்மக்களாகத்தான் இருப்பார்கள். இது என்னுடைய முன்முடிவல்ல, நான் அனுபவத்தில் பார்த்த உண்மை.

அனைவருக்கும் எனது தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.