குழந்தைகளை நல்ல குழந்தைகளாக வளர்க்கிறோம் என்ற பெயரில் பெற்றோர்களும் சுற்றத்தார்களும் தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் திணிப்பதுதான் பெரும்பான்மையான இல்லங்களில் நிகழ்கிறது. இதனால் ஏற்படும் தீமையைச் சுட்டிக்காட்டுகிறது இந்த பதிவு!

Question: என் குழந்தை எதிர்காலத்தில் நன்றாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?

சத்குரு:

குழந்தைகளுடைய எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்காதீர்கள். முதலில் உங்களுடைய எண்ணங்களை உங்கள் குழந்தை மேல் திணிக்காதீர்கள். அவர்களுக்கு உங்கள் அன்பை மட்டும் கொடுங்கள். உங்கள் எண்ணங்கள் இறந்தகாலத்தைச் சார்ந்தவை. உங்களுடைய முட்டாள்தனமான எண்ணங்களை குழந்தைகள் மேல் திணிக்காதீர்கள். குழந்தையே தன்னுடைய வாழ்க்கையை அதன் சொந்த வழியில், சொந்தப் புரிதலில், சொந்த அறிவுணர்ச்சியோடு உணர்ந்து, உள்வாங்கிக் கொள்ளட்டும். குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே நம்முடைய மதம், ஒழுக்க விதிகள், கோட்பாடுகள், தத்துவங்கள், சிந்தனைகள் என்று எல்லா முட்டாள்தனங்களையும் அதன் மீது சுமத்தி வருகிறோம், இல்லையா? குழந்தை மலர ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அதை அழித்துவிட விரும்புகிறீர்கள். இந்த உலகில் மிக அதிகமாக சுரண்டப்படுபவர்கள் தொழிலாளிகளோ அல்லது பெண்களோ அல்லது விலங்குகளோ அல்ல, குழந்தைகள்தான் மிகவும் சுரண்டப்படுபவர்கள். தன் வாழ்க்கையில் நீங்கள்தான் மிகவும் நம்பகமானவர் என்று நினைத்து குழந்தை உங்களிடமிருந்தே ஒவ்வொன்றையும் எதிர்பார்க்கிறது. ஆனால் நீங்களோ அதன் வாழ்க்கையை மிக மோசமாக சீர்குலைக்கிறீர்கள். உங்களைப் போலவே உங்கள் குழந்தையும் துன்பப்படுமாறு எப்படியும் பார்த்துக் கொள்கிறீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.