வாழ்க்கையில் அனைத்துமே நன்றாக நடக்கும்போது பெரும்பான்மையானோர் ஆன்மீகத்தை பற்றியோ வாழ்வின் அர்த்தம் பற்றியோ யோசிப்பதில்லை! பலர் தங்கள் வாழ்வில் ஏதாவது பிரச்சனை இருந்துகொண்டே இருந்தால்தான் தீர்வைத் தேடி செல்லமுடியும் என நினைக்கிறார்கள்! இங்கே, மக்களின் இந்த அறியாமையை சுட்டிக்காட்டி, ஆன்மீகத் தேடல் உண்மையில் எப்போது வரவேண்டும் என எடுத்துரைக்கிறார் சத்குரு!

Question: சத்குரு, நிறைவேறாத ஆசைகள் தானே நம்மைச் செலுத்தும் சக்தியாகி, நம்மை சாதிக்க ஊக்குவிக்கிறது?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதாவது துயரம் மட்டுமே உங்களை செலுத்தும் சக்தியாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள்...

Question: இல்லை... அப்படி சொல்லவில்லை. என் வாழ்வில் நான் துயரத்தில் உழன்றபோது, அதைப் பற்றி நான் ஏதோ செய்யமுடியும் என்ற நினைப்பே, அந்தச் சூழ்நிலை தாண்டி என்னை வரச் செய்தது.

சத்குரு:

அப்படியென்றால், தொடர்ந்து பிரச்சினைகள் உருவாக்கிக் கொண்டு, அதற்கான தீர்வைத் தேட வேண்டும் என்கிறீர்கள்!

ஒரு சாலையோரம் இரு நபர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் குழி வெட்ட, பின்னால் வந்த மற்றொருவன் அக்குழியை மூடிக் கொண்டே வந்தான். இதை கவனித்த ஒருவர் அவர்களிடம் வந்து, “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் இருவரும்? அவன் குழி வெட்டிக் கொண்டே செல்கிறான், பின்னால் நீ மூடிக் கொண்டே வருகிறாய்... இதில் ஒரு பயனும் இல்லையே, எதற்காக இதை செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு முதல் மனிதன் சொன்னார், “இல்லையில்லை. நாங்கள் மொத்தம் 3 பேர். நான் முதல் ஆள், இவன் மூன்றாவது ஆள், நடுவில் இருப்பவர் இன்று விடுமுறையில் இருக்கிறார். அவரது வேலை மரச்செடி நடுவது” என்று. நடுவில் இருப்பவர் வரவில்லை என்றாலும், எங்கள் வேலையை நாங்கள் விடாது தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம் என்பது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது.

நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போது, உங்கள் வாழ்வில் எல்லாம் சரியாக நடக்கும்போது... அதுதான் ‘வாழ்வென்றால் என்ன?’ என்று நீங்கள் அறிந்து கொள்வதற்குச் சரியான நேரம்.

பிரச்சினையை உருவாக்குவது, தீர்வு காண்பது... பிரச்சினையை உருவாக்குவது, தீர்வு காண்பது... என்று இப்படியே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்வதற்கு போதுமான செயல்களை உருவாக்கி, ‘வாழ்கிறேன்’ என்று பெயர் கொள்கிறீர்கள். ஆனால் உருப்படியாக ஒன்றும் நடப்பதில்லை. காரணம், ஒரு பிரச்சினையை தீர்த்தால், உடனேயே அடுத்ததை நீங்கள் உருவாக்கிக் கொள்கிறீர்கள். வேண்டுமானால் இது நேரத்தை செலவழிக்க உங்களுக்கு உதவலாம். ஆனால் இது தீர்வல்ல.

ஆனந்தமாய் இருந்தால் தேங்கிப் போய்விடுவோம் என்று எங்கோ நீங்கள் நம்புகிறீர்கள். பலரும் தாங்கமுடியாத பிரச்சினையில் சிக்கிய பிறகே, ஆன்மீகம் நாடி வருகிறார்கள். தங்கள் வாழ்வில் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கும்போதே, வாழ்வென்றால் என்னவென்று ஆழமாய் பார்க்க பலருக்கு புத்திசாலித்தனம் இருப்பதில்லை. அவர்கள் வாழ்வில் ஏதோ ஒன்று பிரச்சினையாக வேண்டும், அப்போது தான் அவர்களில் தேடல் துவங்குகிறது. ஆனால் வாழ்வில் ஏதோ ஒன்று தவறாகும் போது, அந்த மனநிலையில் எதை செய்வதும் சரிவராது.

நீங்கள் சந்தோஷமாக இருக்கும்போது, உங்கள் வாழ்வில் எல்லாம் சரியாக நடக்கும்போது... அதுதான் ‘வாழ்வென்றால் என்ன?’ என்று நீங்கள் அறிந்து கொள்வதற்குச் சரியான நேரம். வாழ்வில் எல்லாம் தவறாகும் போது வாழ்வை அறிய முற்படுவது சரிவராது. ஒருவேளை, என்றுமே அறிய முயற்சி செய்யாமல் இருப்பதற்கு இது பரவாயில்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக, பலரும் எல்லாம் தவறாகும் போது தான் வாழ்வை அறிய நினைக்கிறார்கள். ஏன்? எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கும்போது வாழ்வை ஏன் அறிய நினைக்கக் கூடாது?

காரை விபத்துக்கு உள்ளாக்கிய பிறகு தான், அதை சரியாக ஓட்டக் கற்றுக்கொள்வீர்களா? நீங்கள் செய்வது இதுபோல்தான் இருக்கிறது. அந்த விபத்தில் இருந்து நீங்கள் மீளாமல் போவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது, பல பேர் விபத்திலிருந்து மீள்வதேயில்லை. ஆம், அவர்கள் வாழ்வில் முதல் இடர் வரும்போதே, சுக்குநூறாய் உடைந்து போகிறார்கள். அதன்பிறகு வாழ்க்கை பற்றிய கவனம் ஏது? சாத்தியத்தை பயன்படுத்தும் தவிப்பு ஏது? அப்படியே மறைந்தும் விடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் இவ்வுலகில் இலட்சக்கணக்கான மனிதர்கள் இதுபோல் மாண்டு போகின்றனர்.

கவுதமர் உண்மையிலே மிகக் கூரிய நுண்ணுணர்வும், அதீத புத்திசாலித்தனமும் கொண்டிருந்திருக்க வேண்டும். வெறும் ஒரு வயதானவர், ஒரு நோயாளி, ஒரு சடலத்தைத் தான் பார்த்தார், உடனேயே வாழ்வென்றால் என்னவென்று அறிய முற்பட்டார்.

சிறிதளவு புத்திசாலித்தனம் இருந்தாலும், உங்கள் வாழ்வில் எல்லாம் நன்றாக நடக்கும்போதே, நீங்கள் வாழ்வை அதன் ஆழத்தில் அறிய முற்படவேண்டும். கவுதம புத்தரின் கதையை கேட்டிருக்கிறீர்களா? அவர் ஒரு இளவரசன். அவர் வாழ்வில் எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள், அவர் ஒரு முதியவரை, ஒரு நோயாளியை, ஒரு சடலத்தைப் பார்க்க நேர்ந்தது. உடனே அவருக்குப் புரிந்தது, ‘இதுதான் என் வாழ்விலும் நடக்கப் போகிறது. இன்றோ, நாளையோ, இது நடக்கப் போவது உறுதி. அப்படியெனில் இந்த வாழ்விற்கு அர்த்தம் தான் என்ன?’ அவர் தேட ஆரம்பித்தார். அவர் மிகக் கூர்மையான உணர்வுடன், அதீத புத்திசாலியாகவும் இருந்திருக்க வேண்டும். ஆம், தன்னைச் சுற்றி எத்தனை ஆயிரம் மனிதர்கள் இறந்தாலும், எதையும் கவனிக்காது, பலரும் தங்கள் வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சுற்றி நடப்பதை விடுங்கள், அது உங்களுக்கே நடந்தாலும் அப்போதும் வாழ்வென்றால் என்னவென்று அறிய நீங்கள் முற்படமாட்டீர்கள். ஆனால் கவுதமர் உண்மையிலே மிகக் கூரிய நுண்ணுணர்வும், அதீத புத்திசாலித்தனமும் கொண்டிருந்திருக்க வேண்டும். வெறும் ஒரு வயதானவர், ஒரு நோயாளி, ஒரு சடலத்தைத் தான் பார்த்தார், உடனேயே வாழ்வென்றால் என்னவென்று அறிய முற்பட்டார்.

‘வாழ்க்கை இப்படித்தான் முடிவுறப் போகிறதா, இதெல்லாம் ஏன்? இதற்கென்ன அர்த்தம்?’ இதை இப்போதே நீங்கள் தெரிந்துகொள்ள விழைவது நல்லது. இல்லையெனில் வாழ்க்கை ஒருநாள் உங்களை முறித்துப் போடும். ஒருவேளை வாழ்க்கை அப்படி செய்யவில்லை எனில், நிச்சயம் மரணம் அதைச் செய்துவிடும். அதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். அதனால் இதைப் புரிந்து, இதை எதிர்கொள்ளத் தயார் செய்து, நம் வாழ்வையும், மரணத்தையும் அழகாகக் கையாள வேண்டும். நன்றாய் வாழ்ந்து, நன்றாய் இறந்துபோவது நமக்கு முக்கியம் இல்லையா? நன்றாக வாழவேண்டும் என்றால், அதற்கு மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதுதான் நன்றாக வாழ்வதன் அர்த்தம். நன்றாக இறப்பது என்றால்... அதைப் பிறகு பார்க்கலாம். முதலில் இங்கு நன்றாய் வாழுங்கள். நன்றாக வாழ்வதே நடக்கவில்லை என்றால், நன்றாக இறப்பது என்னும் கேள்விக்கே இடமில்லை.