துரோகம் செய்யும் உறவுகளை என்ன செய்வது?
மிகவும் நெருக்கமானவன் என்று நினைத்த நண்பன் ஒருவன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்திருப்பது, அண்மையில்தான் தெரியவந்தது. இந்த விவரம் எனக்குத் தெரியும் என்பது அவனுக்கு இதுவரை தெரியாது. முகத்திலடித்தாற்போல் கேட்டுவிடவா?
 
துரோகம் செய்யும் உறவுகளை என்ன செய்வது? , Drogam seyyum uravugalai enna seivathu?
 

Question:மிகவும் நெருக்கமானவன் என்று நினைத்த நண்பன் ஒருவன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்திருப்பது, அண்மையில்தான் தெரியவந்தது. இந்த விவரம் எனக்குத் தெரியும் என்பது அவனுக்கு இதுவரை தெரியாது. முகத்திலடித்தாற்போல் கேட்டுவிடவா?

சத்குரு:

'ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையில் அடுத்தவரைத் தலை குனிய வைப்பதைவிட, நீ தலை குனிந்து போவது தவறே இல்லை' என்றார், மகாத்மா காந்தி. உள்ளொன்று வைத்து, வெளியில் வேறுவிதமாகக் காட்டிக்கொள்பவர்கள் இன்று எல்லாத் தரப்பிலும் இருக்கிறார்கள். தங்களைத் தற்காத்துக் கொள்வதாக நினைத்து, பலர் பொய்யாகவே வாழ்கிறார்கள்.

நண்பர்களுக்கு இடையில் மட்டும் என்றில்லை. பெற்றோர், குழந்தை, கணவன், மனைவி என்று ஒவ்வொரு உறவிலும் பொய்கள் மிகுந்துவிட்டன.

பெரும்பாலான நேரங்களில், கடைப்பிடிக்க முடியாத பக்குவமற்ற சில சட்டதிட்டங்கள் மனிதனை திசை மாற்றும். ஒழுக்கம் பற்றிய அர்த்தமற்ற விதிமுறைகள் சவாலாக இருக்கும். தான் சுதந்திரமாக இயங்குவதற்குப் போதிய வசதி இல்லை என்று அவன் கருதும் நேரத்தில், ஏமாற்றும் எண்ணம் தலை தூக்குகிறது. அதற்காக, வேறு யார் மீதோ பழிபோட்டு துரோகம் செய்யலாம் என்று நான் சொல்லவில்லை.

தொடர்ந்து உங்கள் இயல்பை மறைத்து வேறுவிதமாகக் காட்டிக்கொள்ள, எவ்வளவு சக்தி விரயமாகிறது? யார், யாரிடம் என்னென்ன சொன்னோம் என்று நினைவு வைத்துக்கொள்ள, ஒவ்வொரு நிமிடமும் உள்ளே யோசித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இதில், வாழ்க்கையின் அற்புதமான தருணங்கள் எத்தனையெத்தனை வீணாகின்றன?

உண்மையாக இருந்துவிட்டால், எது பற்றியும் கவலையின்றி அமைதியாக, நிம்மதியாக இருக்கலாம்.

தனது துரோகம் தானாகத் தெரிய வந்தால், உங்கள் நண்பர் எவ்வளவு சிறுத்துப் போவார் என்று யோசியுங்கள். உங்களால், அவருக்கு அதைவிட மிகப்பெரிய தண்டனை என்ன கொடுக்க முடியும்?

என் வாழ்வில், இந்த மாதிரியான பல நூறு மனிதர்களுடன் இயங்கியிருக்கிறேன். என்னை மிகத் தந்திரமாக ஏமாற்றுவதாக நினைத்துக் கொள்பவர்களிடம் கூட, எதையும் கவனித்ததாகக் காட்டிக்கொள்ள மாட்டேன்.

Question:நானும் அப்படிப் பெருந்தன்மையாக நடக்க வேண்டும் என்கிறீர்களா?

சத்குரு:

பெருந்தன்மை என்று எங்கே சொன்னேன்?

எனக்கு மனிதர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. நம்மை ஏமாற்றுபவர்களின் மனிதத்தன்மையை முழுமையாகக் கிளர்ந்தெழச்செய்தால் அவர்கள் இதைப்போன்ற அற்பங்களிலிருந்து விடுபட்டு வளர்ச்சி அடைவார்கள் என்பது என் கருத்து.

அதுவரை, என்னிடம் உண்மையாக நடந்துகொள்ளும் அளவு அவர்களுக்கு நான் உந்துசக்தியாக இல்லையென்று, அதை என் தோல்வியாகவே நினைப்பேன்.

மிக வளமானதொரு நிலத்தை, தன் இரு மகன்களிடம் ஒப்படைத்தான், ஒரு குடியானவன். கால ஓட்டத்தில் மூத்தவனுக்குத் திருமணமானது. ஐந்து குழந்தைகள் பிறந்தன. இளையவனோ கடைசிவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. தந்தையின் விருப்பப்படி, நிலத்தில் விளைவதை இருவரும் சமமாகப் பிரித்துக் கொண்டனர்.

ஒரு கட்டத்தில் மூத்தவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது... 'எனக்கு முதுமை வந்தால், கவனித்துக்கொள்ள ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர். இளைவனுக்கு யாருமே இல்லையே.... அவனுக்குக் கூடுதலான சேமிப்பு தேவையல்லவா?

இந்த எண்ணம் வந்ததிலிருந்து, அவன் ஒவ்வொரு மாதமும் தன் பங்கிலிருந்து ஒரு மூட்டை தானியத்தை எடுத்துச் சென்று, தம்பியின் கிடங்கில் ரகசியமாக வைக்க ஆரம்பித்தான்.

இளையவன் வேறுவிதமாகச் சிந்தித்தான்... 'நானோ ஒற்றை ஆள். அண்ணனின் குடும்பத்துக்கல்லவா அதிகப் பங்கு தேவை?' அவனும் தன் பங்கிலிருந்து ஒரு மூட்டை தானியத்தை எடுத்துச் சென்று அண்ணனின் கிடங்கில் வைக்க ஆரம்பித்தான்.

பல வருடங்கள் கழித்து ஒருநாள் அண்ணன், தம்பி இருவரும் தானிய மூட்டைகளுடன் எதிரெதிரே சந்தித்துக்கொள்ளும்படி நேர்ந்தது. இருவருமே தர்மசங்கடமாக உணர்ந்து, பின்பு சுதாரித்து, ஒரு வார்த்தைக்கூட பேசாமல், வழக்கப்படி தானிய மூட்டைகளை அடுத்தவர் கிடங்கில் இறக்கிவிட்டுத் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினர். பிற்காலத்தில், அந்த ஊரில் கோயில் எழுப்பத் தகுந்த இடம் தேடியபோது, அந்தச் சகோதரர்கள் சந்தித்துக் கொண்ட அந்தக் குறிப்பிட்ட இடமே புனித இடமாக அமைந்தது.

நீங்களும், உங்கள் நண்பரும் இப்படியல்லவா இருந்திருக்க வேண்டும்?

அவர் உங்களிடம் பொய்யாக நடந்து கொள்கிறார் என்றால், அவர் உங்களை முழுமையாகத் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக நினைக்கவில்லை என்று அர்த்தம். அது உங்கள் தோல்வி அல்லவா?

நண்பரால் நீங்கள் எரிச்சல் அடையப்போகிறீர்களா... அல்லது அவரை இன்னும் சிறந்த மனிதராக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடப்போகிறீர்களா? என்பதுதான் கேள்வி.

Question:அவர் போக்கை நான் மாற்றுவதற்குள், அவன் என்னை ஒன்றும் இல்லாதவராக ஆக்கிவிட்டால்?

சத்குரு:

எல்லாச் சந்தர்ப்பங்களிலும், நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டு இருக்க முடியாது. சருமம் உங்களை ஏமாற்றினால், அதற்குக் களிம்பு தடவினால் போதுமானதாக இருக்கும். உங்கள் சிறுநீரகம் ஏமாற்றத் துவங்கினால், அதைச் சரிசெய்ய அறுவை சிகிச்சை தேவைப்படலாம். அவசியமானால், அதைத் தூக்கிப் போட்டுவிட்டு வேறொன்று பொருத்திக்கொள்ளக்கூட வேண்டியிருக்கும்.

எப்போது ஒருவருடைய ஏமாற்றுவேலை அவரைச் சுற்றியுள்ள பலரையும் சேர்த்து பாதிக்கிறதோ, அப்போது நம் இதயம் வலித்தாலும், உறுதியான முடிவுதான் எடுக்க வேண்டி வரும்.

ஆனால், அந்த முடிவுகூட அவரை அழிப்பதற்காக இல்லாமல், திருத்துவதற்காக அமைய வேண்டும். அவர் அருந்துவது அமுதல்ல, விஷம் என்று அவருக்கு உணர்த்துவதாக அமைய வேண்டும்!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1