தியானத்தில் சிலருக்கு கண்ணீர் வழிந்தோடுகிறது. சிலர் சத்குருவின் முன் இருக்கும்போது எதிலோ மூழ்கடிக்கப்படுவதாகவே உணர்கிறார்கள். இதெல்லாம் எதனால் நடக்கிறது? இப்படி நடப்பதற்கு காரணம் என்ன? இப்பதிவில் அறியுங்கள்!

Question: தியானம் செய்யும் போது ஏன் ஒருசிலர் அழுகிறார்கள்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தியானத்தில் இருக்கும் போது சிலருக்கு கண்ணீர் அவர்களின் கன்னங்களில் வழிவதைப் பார்த்திருப்பீர்கள். துரதிருஷ்டவசமாக சமூகத்தில் கண்ணீர் என்றாலே வேதனை, துன்பம் என்றே அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையில் கண்ணீருக்கும் துன்பத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்த ஒரு அனுபவமும் உங்களுக்குள் ஆழமாக ஆக்ரமிக்கும் போது கண்ணீர் வரும். நீங்கள் மிகமிக மகிழ்ச்சியாக இருந்தாலும் கண்ணீர் வரும். தீவிர அன்பாய் இருந்தாலும் கண்ணீர் வரும். உங்கள் அமைதி ஆழமாகும் போது கண்ணீர் வரும். அன்பினாலும் அமைதியாலும் மகிழ்ச்சியாலும் பெருக்கெடுக்கும் கண்ணீர் உங்கள் கன்னங்களைக் கழுவாவிட்டால் நீங்கள் இன்னும் வாழ்க்கையை ருசிக்கவில்லை என்றே சொல்வேன். யோகம், தியானம் இவையெல்லாம் உங்களை உள்நிலையில் ஆழமான அனுபவத்தை ஏற்படுத்தி உங்களிலிருந்து பரவசக் கண்ணீரை பெருக்கெடுக்கச் செய்யத்தான்.

Question: ஆனால் தங்களின் முன்னிலையில் இருக்கும் போது சிலருக்கு அப்படி நிகழ்கிறதே...

சத்குரு:

நான் என்ன வழங்குகிறேனோ அது என் வார்த்தைகளில் இல்லை. என்னிடம் உங்களுக்கு வழங்குவதற்கு எந்த போதனைகளும் இல்லை; எந்த செய்திகளும் இல்லை; என் இருப்பின் தன்மையில் உங்களை முழுவதுமாக மூழ்கச் செய்ய அனுமதித்தால் உங்களுக்கு உள்ளேயே இருக்கும் ஆனந்தத்தால் நீங்கள் ஆக்கிரமிக்கப்படுவீர்கள். அதைத்தான் நான் உங்களுக்கு வழங்குகிறேன்.

Question: நீண்ட நேரத்திற்கு அல்லது நீண்ட காலங்களுக்குச் செய்யப்படும் தியானம், ஆன்மீக வளர்ச்சிக்கு எந்தவிதத்தில் உதவிபுரிகிறது?

சத்குரு:

தியானத்தை நீங்கள் ஒரு தொழில் நுணுக்கமாகக் கற்றுக் கொண்டீர்களேயானால் அது முடிவில்லாத துன்பமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அது அப்படி வேலை செய்யாது. உங்கள் உடலையும், உங்கள் மனதையும் உங்கள் உணர்ச்சிகளையும், உங்கள் உயிர்சக்திகளையும் ஒரு குறிப்பிட்ட விதமான பக்குவத்தில் எடுத்து வந்தால் தியானம் என்ற மலர் இயல்பாகவே மலர்கிறது. அதன் நறுமணம் எங்கும் பரவுகிறது. எனவே தியானம் என்பது ஒரு தொழில் நுட்பம் அல்ல, அது ஒரு குறிப்பிட்ட விதமான தன்மை. குறிப்பிட்ட விதமான இருப்பு. எனவே அந்த நிலையை அடைவதற்கு பலவிதமான வழிமுறைகள் உள்ளன.

இப்போது ஒரு நிலத்தை உழுது பக்குவப்படுத்த வேண்டுமானால் அதற்கு பலவிதமான வழிமுறைகள் உள்ளன. நாம் ஒரு பயிரை விளைவிக்கிறோம். நாம் ஒரு ரோஜாச் செடியை வளர்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளலாம். அதற்கு தண்ணீர் விடுவது நம்முடைய இலக்கல்ல. உரம் இடுவதும் நமது இலக்கல்ல, அல்லது அந்தச் செடிக்கு களை எடுப்பதும் நமது இலக்கல்ல. நமது இலக்கு அந்தச் செடி முழுவதுமாக வளர்ந்து மலரவேண்டும் என்பதுதான். எனவே, ஒரு மனிதனும் முழுமையாக வளர்ந்து தியானத்தின் நறுமணம் அவனது வாழ்வின் ஒவ்வொரு கணமும் வீசவேண்டுமானால் வாழ்வின் நான்கு பரிமாணமான உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் உயிர்சக்திகள் ஒரு குறிப்பிட்ட விதமான பக்குவத்தை அடைந்திருக்கவேண்டும். அப்போது தியானம் என்பது நடந்தே தீரும். எனவே நாம் தியானம் என்பதை ஒரு தொழில் நுட்பமாக நாம் கற்றுத்தரவில்லை. தியானம் என்பதை வாழ்வாகவே ஆக்கிக்கொள்ளக்கூடிய நிலையை தங்களுக்குள் அவர்கள் உருவாக்கிக் கொள்வதற்கான உதவியைத்தான் நாம் மக்களுக்கு செய்கிறோம்.