தியானம் செய்ய கற்பனை சக்தி தேவையா?

நான் தியானம் செய்யும்போது சில சமயம் என் கற்பனை சக்தியைப் பயன்படுத்துகிறேன். இது சரியா?
 

Question:நான் தியானம் செய்யும்போது சில சமயம் என் கற்பனை சக்தியைப் பயன்படுத்துகிறேன். இது சரியா?

சத்குரு:

வேண்டாம். தியானத்தின்போது கற்பனைகள் பயன்படுத்த வேண்டாம். கற்பனை என்பதே மனம் சார்ந்ததல்லவா?

Question:ஆனால் கற்பனையை பயன்படுத்தும் போது ஓரளவு சக்தி கிடைக்கிறது, அது என் தியானத்திற்கு உதவுகிறது.

சத்குரு:

எதை செய்வதற்கும் நமக்கு சக்தி தேவை. ஒரு எண்ணம் உருவாக்குவதற்குக் கூட நமக்கு சக்தி தேவைப்படுகிறது. சக்தி செலவிடாமல், மனத்தில் உந்து சக்தி உருவாக்கிக் கொள்ள முடியாது. எனவே உங்கள் கற்பனையைத் தூண்டிவிடவும் நீங்கள் சக்தி செலவிடுகிறீர்கள். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

சிவன் உங்களுடன் இருக்கிறார் என்று நம்பினால் உங்களுக்கு எக்காரியம் செய்யவும் புதிய நம்பிக்கை பிறக்கும். ஆனால் அந்த செயல் தானாக நடந்துவிடாது. இது நீங்கள் விரும்பும் முக்தியையும் வாங்கித் தராது.

தற்போது உங்களுடைய மூன்றாவது கண் திறக்கிறது என்று கற்பனை செய்து பார்த்தால், நிச்சயமாக ஒருவித சக்தி உண்டாவதைக் காணலாம். கற்பனை என்பது அந்த அளவிற்கு சக்தியை ஏற்படுத்தக்கூடும். ஆனால் உண்மையில் நீங்கள் எதையும் பார்க்க முடியாது. நீங்கள் பார்ப்பது எல்லாம் மனம் உருவாக்கிய அந்தக் கற்பனையை மட்டுமே. கற்பனையில் கண்டால், அது உங்களுக்கு எவ்வளவு உயரியதாக இருப்பினும் அது உண்மை அல்லவே! ஆக, கற்பனை என்பது மனம் சார்ந்து இருப்பதால், மனத்தை தாண்டி நீங்கள் வேறு எதையும் பார்க்க முடியாது.

கற்பனை சக்தியை சில சமயங்களில் உங்களுக்கு உறுதுணையாக நீங்கள் பயன்படுத்த முடியும். ஒருவேளை நீங்கள் இப்படி கற்பனை செய்து பார்க்கலாம். “சிவன் எப்போதுமே, ஒவ்வொரு கணமுமே என்னுடன் இருக்கிறார்.” இதனால் உங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறக்கும். எந்த விஷயத்தையும் தைரியமாக, எவ்வித தயக்கமும் இன்றி நீங்கள் செய்யமுடியும். கவனிக்க, இதே விஷயத்தை எந்த அறிவுள்ள மனிதனும் நிச்சயம் செய்ய முடியும், ஆனால் அவர்களுக்கு பயமும் தயக்கமும் தடையாக இருக்கக் கூடும். ஒரு புதிய சூழ்நிலை வரும்போது, நாம் வெளிக் காட்டுவது பய அதிர்வலைகள் தானே தவிர்த்து, புத்திசாலித்தனம் அல்ல. சிவன் உங்களுடன் இருக்கிறார் என்று நம்பினால் உங்களுக்கு எக்காரியம் செய்யவும் புதிய நம்பிக்கை பிறக்கும். ஆனால் அந்த செயல் தானாக நடந்துவிடாது. இது நீங்கள் விரும்பும் முக்தியையும் வாங்கித் தராது. உங்களுக்கு நம்பிக்கை வரும். ஆறுதலாய் இருக்கும். இதனால் மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நீங்கள் சற்றே அதிகத் திறன் படைத்தவராய் இருக்கக்கூடும்.

மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும் மக்களுக்கு கற்பனைசக்தி என்பது ஒரு சக்தி வாய்ந்த கருவி. ஆனால் நீங்கள் முக்தி பெற விரும்பினால், இது உங்களுக்கு எவ்வகையிலும் பயன்படாது. முக்தியை வேண்டுவோர் கற்பனையில் சிக்கிக் கொண்டால், பின் முக்தி என்பதும் கற்பனையாகவே மாறிவிடும். அதனால் முக்தி என்பது உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் முதலில் உங்கள் கற்பனையிலிருந்து விடுபடுங்கள், அதைவிடப் பெரிய வலைப்பொறி உங்களுக்கு இருக்கமுடியாது. உங்களுடைய ஞாபகசக்தி கற்பனைசக்தி இரண்டும், இரு வலைப்பொறிகள். ஒரு கால் ஞாபக சக்தியிலும் இன்னொரு கால் கற்பனையிலும் சிக்கிக் கொண்டு இருக்கிறது. இவற்றிலிருந்து உங்களை விடுவித்துக் கொண்டால், தியானம் இயற்கையாகவே நிகழும்.

அதனால் மனதின் திறனான கற்பனையில் மூழ்கிவிடாதீர்கள். மனதின் எந்த ஒரு திறனைப் பயன்படுத்தினாலும் அதன் ஆழ்நிலையை உங்களால் அடையமுடியாது. மனதின் ஆழ்நிலையை அடைய எவ்வித கருவிகளும் கிடையாது. நீங்கள் மனதிற்கு வெளியே இருந்தால் மட்டும்தான் அதை உள்ளது உள்ளவாறு பார்க்க முடியும். நீங்களே அதனுள் சிக்கி இருந்தால், பிறகு உங்களை நீங்களே பகுத்தறிந்து பார்க்கமுடியாது. அடுத்தவரை நீங்கள் ஆராய முடியும், ஆனால் உங்களை நீங்களே ஆராயமுடியாது. அப்படியே முயற்சி செய்தாலும் ஏதேனும் ஒரு பகுதியை ஆராயலாம், ஆனால் உங்களால் எல்லாவற்றையும் பார்க்க முடியாது.

கற்பனையாக கடவுளைப்பற்றி நினைப்பது, கற்பனையாக பேயைப்பற்றி நினைப்பதை விட நல்லது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. பேயைப் பற்றி கற்பனை செய்தாலாவது, விரைவில் அதை விடுக்க விரும்புவீர்கள் (சிரிக்கிறார்). ஆனால் கடவுளைப் பற்றிய கற்பனையில் சிக்கினால், அதிலிருந்து வெளிவர விரும்பமாட்டீர்கள். அப்படித்தானே?

ஒரு கால் ஞாபக சக்தியிலும் இன்னொரு கால் கற்பனையிலும் சிக்கிக் கொண்டு இருக்கிறது. இவற்றிலிருந்து உங்களை விடுவித்துக் கொண்டால், தியானம் இயற்கையாகவே நிகழும்.

'பல பக்தர்கள் கற்பனையில் வாழ்ந்து உயர்ந்தும் இருக்கிறார்களே. அவர்களுக்கு அது வேலை செய்த போது, எனக்கு வேலை செய்யாதா?' கற்பனைசக்தியைப் பற்றிய தவறான புரிதல்கள் இருக்கக் காரணம் - சில பக்தர்களின் செயலை, ஏன், என்ன என்று புரிந்து கொள்ளாமல் அதை அப்படியே மக்கள் பின்பற்றுவதுதான். உலகத்தில் ஒரு சிலர் மட்டுமே ஆழ்ந்த பக்திமான்களாக இருக்க முடியும். மற்றவர்கள் வரையறைக்கு உட்பட்டு, தங்களைத் தானே பக்தர்கள் என்று நினைத்துக் கொள்பவர்கள். பக்திக்கு உதாரணம் என்றால்,

பூசலார். அவர் ஒரு ஏழை. அவர் சிவபெருமானுக்கு பிரம்மாண்டமான கோவில் ஒன்றைக் கட்ட விரும்பினார். ஆனால் தேவையான செல்வம் இல்லாமற் போனதால், அவர் கட்ட விரும்பிய கோவிலை, ஒவ்வொரு கல்லாக, ஒவ்வொரு செங்கல்லாக தினந்தோறும் தன் மனதிலேயே கட்டத் துவங்கினார். அதற்கு பல ஆண்டுகள் பிடித்தன. உண்மையிலேயே கட்டுவதாக நினைத்து தன் மனதிற்குள்ளேயே அவர் மும்முரமாகக் கட்டினார். கட்டி முடித்தபிறகு அடுத்து வரும் ஒரு நாளில் திறப்பதற்குத் திட்டமிட்டிருந்தார். அந்த நாட்டு அரசனும் சிவபெருமானுக்கு ஒரு பெரிய கோவிலைக் கட்டினான். அதே நாளில் திறப்பதாகத் திட்டமிட்டிருந்தான். அரசனுக்கு அந்த கோவிலைக் கட்டிமுடிக்க 16 அல்லது 17 ஆண்டுகள் ஆயிற்று. அந்த குறிப்பிட்ட நாளில் திறப்பதற்கு ஆர்வமாக இருந்தான். அதற்கு முந்தைய நாள் இரவில் அந்த அரசன் ஒரு கனவு கண்டான். அவன் கனவில் சிவபெருமான் சொன்னார். “என்னை மன்னிக்க வேண்டும். நாளைய தினம் உன்னுடைய கோவிலுக்கு என்னால் வரமுடியாது, ஏனென்றால் அதே நாளில் பூசலாரின் கோவிலை நான் திறந்து வைக்கவேண்டும். அதற்கு நான் கட்டாயம் போகவேண்டும்” என்றார்.

அரசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'நான் கட்டிய கோவிலைவிட சிறந்த கோவில் எங்கே இருக்கிறது? சிவபெருமான் வேறு ஒரு கோவிலுக்குப் போகவேண்டும் என்கிறாரே! உடனே பூசலாரைத் தேடுங்கள்' என்றான். பூசலாரைத் தேடிக் கண்டுபிடித்தனர். பூசலார் மிகவும் ஏழ்மையான ஒரு பகுதியில் ஒரு குடிசையில் இருந்தார். அவரைப் பார்த்து அரசன் கேட்டான். "உங்களுடைய கோவில் எங்கே இருக்கிறது?" பூசலார் சொன்னார், “என் கோவிலா? நான் என்னுடைய இதயத்தில் அல்லவா கோவிலைக் கட்டினேன். வேறு எங்கும் எந்தக் கோவிலையும் நான் கட்டவில்லையே. என்னிடம் அதற்கான செல்வமும் கிடையாதே.” என்றார். இருப்பினும் அரசன் சொன்னான், “இல்லை, நேற்று நான் ஒரு கனவு கண்டேன். அதில் சிவபெருமான் உங்களுடைய கோவிலுக்கு வர வேண்டியிருப்பதால் என்னுடைய கோவிலுக்கு வர இயலாது என்று சொன்னார்.”

இவர்தான் பக்தர். அவர் கற்பனையில் தான் கோவில் கட்டினார் என்றாலும், அவர் முற்றிலும் வேறொரு நிலையில் இருந்தார். அவருடைய விழிப்புணர்வு மிகவும் கூர்மையாக இருந்தது. அவர் நினைப்பதை உருவாக்கி விடும் படைப்பின் சக்தியாகவே அவர் மாறியிருந்தார். எது உண்மை எது உண்மையல்ல என்பதற்கான வேறுபாடு அவரிடம் முற்றிலுமாய் அழிக்கப்பட்டு விட்டது. இத்தகைய ஒரு மனிதர் சிவபெருமானை அழைத்தால், அவர் நிச்சயம் போவார். சிவபெருமான் உண்மையிலேயே ஒரு உருவமெடுத்து அவர் முன்பு நடந்து போவார். அந்த பக்தரின் விழிப்புணர்வு அடைந்திருந்த நிலையில், அவரே கடவுள் போல ஆனார். அவர் ஒரு உருவத்தின் மீது நம்பிக்கை வைத்தால், அவ்வுருவமே அவர் முன் நடந்து வரும். இது கற்பனை அல்ல. இது படைப்பு.

ராமகிருஷ்ணரின் வாழ்விலும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் காளிக்கு உணவு ஊட்டுவதாக நினைத்தார். உண்மையிலேயே காளி உணவை உண்டார். ஆம், உண்மையில் அங்கு ராமகிருஷ்ணர் காளியை 'படைத்தார்'. அப்போது ராமகிருஷ்ணர் படைப்பின் மூலமாகவே ஆகியிருந்தார். அவர் இனியும் பக்தர் அல்ல, இருப்பினும் அவர் தன்னை ஒரு பக்தனாகவே நினைத்தார். அவ்வளவுதான். அவர் எல்லைகளை அழித்து விட்டார். இறைவனுடன் ஒன்றி விட்டார். இது ஒரு மாறுபட்ட நிலை. மற்ற பக்தர்களைப் பாருங்கள். இவரைப் போல ஆவதற்கு தங்கள் கற்பனையைப் பயன்படுத்துகிறார்கள். தர்க்க அடிப்படையில் இயங்கும் மனம் இருக்கும் வரையில் பக்தனாக முயற்சி செய்யாதீர்கள். அது நேரத்தை வீணாக்குவதாகும். தர்க்கம் என்பது செயல்பட்டுக்கொண்டு இருக்கும்போது, அது தொடர்ந்து பிரித்துக் கொண்டே இருக்கும். இணைவது என்பதற்கு இடமே இல்லை.

 
 
 
 
 
 
Login / to join the conversation1
 
 
5 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

excellent article