தியானலிங்க பிரதிஷ்டை தினமான இன்று, தியானலிங்கம் கொண்டுள்ள சில நுட்பமான அம்சங்கள் குறித்து ஆராயும் விதமாக இந்த பதிவு அமைகிறது. தியனலிங்கம் மனித உருவில் உருவாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் பற்றியும், சத்குரு தியானலிங்கத்திலிருந்து எங்கே வித்தியாசப்படுகிறார் என்பதையும் விளக்குகிறது இந்த கட்டுரை!

Question: சத்குரு தியானலிங்கத்துக்கும் உங்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குமென்றால், அது என்ன?

சத்குரு:

எந்த வித்தியாசமும் இல்லை. என்னவென்றால் நானும் உங்களைப் போல சாப்பிட வேண்டும். தூங்க வேண்டும். இல்லையென்றால், பெரிய வித்தியாசம் இல்லை. இன்னொன்று என்னால் நடக்க முடியும். தியானலிங்கத்தால் நடக்க முடியாது. மிக உயர்ந்த சூட்சும நிலையில் என்ன சாத்தியமோ, அது ஏழு சக்கரங்களும் முழுமையாகத் தூண்டப்பட்டு உச்ச நிலையில் தியானலிங்கம் இருக்கிறது. ஒருவித வியூகத்தை உருவாக்கி, அதிலிருந்து பெரும் சக்தியை ஈர்த்து அது பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இன்னொரு வித்தியாசம், இதைச் செய்வதற்கு எனக்கு மூன்று பிறவிகள் பிடித்தன. அதற்கு மூன்று ஆண்டுகள் போதுமானதாக இருந்தது. இது ஒரு பெரிய வித்தியாசம். சூட்சும உடலின் பெருமளவு சக்தியைப் பயன்படுத்தி தியான லிங்கம் உருவாக்கப்பட்டது. இதற்கு மேல் அதைத் தீவிரப்படுத்தியிருந்தால், அது அந்த வடிவத்துக்குள் நின்று இருக்காது. அதுதான் அந்தத் தீவிரத்தினுடைய நிலை. ஒரு எல்லைக்குள் எவ்வளவு தீவிரமான சக்தியை நிலைநிறுத்த முடியுமோ, நிலைநிறுத்தி இருக்கிறோம். தியான லிங்கம் நிரந்தரமாக, உறுதியாக அங்கே அமர்ந்திருக்கிற மிக உயர்ந்த நிலை. அந்தத் தியான லிங்கத்துக்கு மன உடல், கர்ம உடல், ஸ்தூல உடல் என்ற தொல்லைகள் இல்லை. எப்போதும் அது ஒரு சூட்சும உடலாக அங்கே நிலைபெற்று நின்றிருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
இந்த சூட்சும உடலை உருவாக்குவதற்கே பெரும் பணிகள் செய்யப்பட்டன. இதில் ஸ்தூல அளவில் ஒரு வடிவத்தை உருவாக்க வேண்டுமேயானால், ஓர் அற்புதமான மனிதனை உருவாக்க முடியும். தாயின் கருவறையில் தோன்றாத ஒரு உடலை நம்மால் உருவாக்க முடியும். ஏனென்றால் சூட்சும உடல் மிகச் சரியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அது சிவனையே உரு வடிவில் கொண்டுவருவது போல் இருக்கும்.

கோட்பாடுகளின்படி பார்த்தால், தியான லிங்கத்திலிருந்து ஒரு மனித வடிவத்தை நீங்கள் உருவாக்கலாம். மனித வடிவம் அதிலிருந்து புறப்பட்டு வெளியே வரும். அப்படிச் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் செய்யலாம். கோட்பாட்டில் அது சாத்தியம்தான். ஆனால் அதற்கான அடிப்படைப் பொருட்களை எல்லாம் ஒன்று சேர்த்து சக்திகளை ஒருங்கிணைப்பது ஒரு பெரிய வேலை. அப்படி ஸ்தூல உடலை உருவாக்கி, ஸ்தூல நிலையில் இருக்கவைக்க வேண்டுமென்றால் அதற்குப் பல விஷயங்களைச் செய்ய வேண்டும். அதே நேரம் ஸ்தூல உடல் என்று ஒன்றைக் கொடுத்துவிட்டால், உடல் கடந்த நிலையில் சிலவற்றை உணர்வதற்கு மக்களுக்கான வாய்ப்புகள் குறையும். ஒரு மனிதரைப் பார்த்த மாத்திரத்தில், நீங்கள் மதிப்பிடத் தொடங்குவீர்கள். அவரிடம் எது சரியாக இருக்கிறது, எது தவறாக இருக்கிறது, எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது, எது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றெல்லாம் ஆரம்பிப்பீர்கள். இந்த மதிப்பீடுகள், அந்த உயிரை உணர்வதற்கான வாய்ப்புகளை உங்களிடமிருந்து எடுத்துப்போகும். இது மிகப் பெரிய வித்தியாசம். இந்த சூட்சும உடலை உருவாக்குவதற்கே பெரும் பணிகள் செய்யப்பட்டன. இதில் ஸ்தூல அளவில் ஒரு வடிவத்தை உருவாக்க வேண்டுமேயானால், ஓர் அற்புதமான மனிதனை உருவாக்க முடியும். தாயின் கருவறையில் தோன்றாத ஒரு உடலை நம்மால் உருவாக்க முடியும். ஏனென்றால் சூட்சும உடல் மிகச் சரியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. அது சிவனையே உரு வடிவில் கொண்டுவருவது போல் இருக்கும். சிவனே இங்கு நடமாடிக்கொண்டு இருப்பதாக இருக்கும். ஆனால் அதனால் எந்தப் பயனும் இருக்காது. அதிகமான மக்கள் அதில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்கள். எனவே தர்க்கரீதியாக இதை என்ன என்று சொல்வதெல்லாம் சிரமமாக இருக்கும்.

எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. விவேகானந்தர் தீவிரமான இளைஞராக இருந்தபோது எல்லாவற்றையும் சந்தேகப்படுவார். அவரிடம் ஏகமான கேள்விகள் எழும்பிக்கொண்டே இருக்கும். அவர் எதையுமே பரிசோதிக்க விரும்புவார். அவர் பலவித மேடைகளில் பரிசுகளை வென்றவர். அதனால் யாரைப் பார்த்தாலும் வாதிடத் தோன்றும். இராமகிருஷ்ணரைப் பார்த்தபோது கேட்டார், “நீங்கள் கடவுளைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். கடவுள் உள்ளார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?” என்று. அவர் ஒரு பெரிய விளக்கத்தை எதிர்பார்த்தார். அந்த விளக்கத்தை உடைக்கக்கூடிய தர்க்கம் இருக்கிறது. அவரைத் தோற்கடிக்கலாம் என்று நினைத்தார். இராமகிருஷ்ணர் சொன்னார், “அதற்கு நான்தான் ஆதாரம்“ என்று. விவேகானந்தர் அந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. அவர் படைப்பு, அதைப் படைத்தவர் போன்ற விளக்கங்களை எதிர்பார்த்திருந்தார். எனவே, “நான்தான் ஆதாரம்“ என்று இராமகிருஷ்ணர் சொன்னபோது அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. வெறுமனே வாயை மூடி அமர்ந்துவிட்டார். எனவே, இராமகிருஷ்ணர் நினைத்தார், இந்த மனிதனுடைய தர்க்க அறிவு இவரை முட்டாளாக்கிக்கொண்டு இருக்கிறது என்று. விவேகானந்தரிடம் மகத்தான தீவிரம் இருந்தது. ஆனால், முக்கியமான ஒன்றை அவர் தவற விட்டுஇருந்தார். எனவே, இராமகிருஷ்ணர் வெறுமனே தன்னுடைய திருவடிகளை விவேகானந்தரின் இதயத்தில் பதித்தார். அவர் அத்தனை தர்க்கங்களையும் இழந்தார். கண்களிலிருந்து கண்ணீர் பெருகத் தொடங்கியது. விவேகானந்தர் கண்ணீர் வடிப்பது என்பது அசாத்தியமான விஷயம். தர்க்கரீதியான மனிதர்கள், அவர்கள் தன்மையின் உள்நிலையைத் தொடுகிற வரைக்கும் கண்ணீர் வடிக்க மாட்டார்கள். விவேகானந்தருக்குக் கண்ணீர் பெருக்கெடுக்கத் தொடங்கியது. பிறகு அவர் சொன்னார், “இப்படி ஒரு கேள்வி கேட்டதற்கு நான் வருந்துகிறேன்” என்று.

நீங்கள் தர்க்கரீதியில் யோசிப்பீர்களேயானால், தியான லிங்கத்துக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. தியான லிங்கத்தை ஏதாவது ஒரு வழியில் ஒரு வினாடி உணர்ந்திருந்தால்கூட நான் ஏதோ ஒரு பெரிய அகங்காரத்தில் சொல்கிறேன் என்று நீங்கள் கருதுவீர்கள். ஆனால் உண்மையில் எந்த வித்தியாசமும் இல்லை. நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

யாருக்காகவும், எந்த முகமூடியும் அணிய நான் விரும்ப மாட்டேன். போதிய அளவு நல்லிணக்கத்தையும் புரிதலையும் மக்கள் மனத்தில் ஏற்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்துவிட்டோம். எனவே வாழ்க்கை முழுவதும் இதைத் தொடர வேண்டும் என்று அவசியம் இல்லை. அதீதமான தர்க்க அறிவுள்ளவர்கள் மிகவும் அடிப்படை நிலையிலேயே வாழ்வை வாழ்கிறவர்கள் அகன்று போய்விடுவார்கள். அவர்கள் விழுந்துவிடுவார்கள் என்று நான் கருதவில்லை. ஆனால் அப்படி நிகழக்கூடும்.

நீங்கள் தியான லிங்கத்துக்கு முன்பாகப் போய் அமர்கிறபோது வெறுமனே அமருங்கள். நீங்கள் எதையும் நம்பவோ, நம்பாமல் இருக்கவோ அவசியம் இல்லை. அது உங்கள் முன்பு நல்ல விருந்து பரிமாறப்படுவது போல. நீங்கள் கடும் பசியிலும் இல்லை, அந்த உணவை வெறுக்கவும் இல்லை. வெறுமனே அமருங்கள். அதை அள்ளி உண்ண முயலாதீர்கள். திறந்த மனதுடன் இருங்கள். உங்கள் முன்பு வைக்கப்பட்ட உணவு குறித்து எந்த மதிப்பீட்டையும் செய்யாதீர்கள். தியான லிங்கத்தின் முன்பு அப்படித்தான் அமர வேண்டும். எதையும் செய்யாமல் அந்த உணவை காலால் மிதித்துவிடாமல் இருக்க வேண்டும். ஒரு விருப்பத்தோடு திறந்த தன்மையோடு நீங்கள் அங்கே அமருவீர்களேயானால், இத வெறும் குறியீடு மட்டுமல்ல என்று உணருவீர்கள். உங்களுக்கு தியான லிங்கம் என்பது வெறும் கல்லாக மட்டும் இருக்காது. எல்லாவிதங்களிலும் அது உயிருள்ள ஒரு தன்மை என்பதை உணர்வீர்கள்.

ஸ்தூல உடலோ, மன உடலோ, கர்மவினை உடலோ இல்லாமல் வெறும் சூட்சும உடல் மட்டும் கொண்ட ஒருவர் உங்களை அந்த நிலையில்தான் தொடமுடியும். உங்களுக்கு நாங்கள் ஹடயோகம் சொல்லிக்கொடுத்து, கிரியை சொல்லிக் கொடுத்து, இந்த பயிற்சிகளின் வழியாக உங்கள் மனநிலையை மாற்றுகிறோம். அந்தப் பயிற்சிகளை கொஞ்சகாலம் செய்த பிறகு, விட்டுவிட்டீர்களேயானால் மீண்டும் தொடக்க நிலைக்கே போய்விடுவதைப் பார்ப்பீர்கள். ஆனால் உங்கள் சூட்சும நிலை ஒருமுறை தொடப்பட்டுவிட்டால் உங்களால் அதிலிருந்து தப்ப முடியாது. நீங்கள் வாழ்ந்தாலும், இறந்தாலும் அது உங்களுடனே இருக்கும். இதற்குத்தான் ‘தீட்சை’ என்று பெயர். அது வெறும் அறிவுரைகள் மட்டும் அல்ல. உங்கள் சூட்சும உடலைத் தொடுவதனுடைய நோக்கமே, நீங்கள் வாழ்க்கையில் இனி எப்படி வாழ்ந்தாலும் எத்தனை அறியாமையில் வாழ்ந்தாலும் உங்களிடமிருந்து அந்த தன்மை அகற்றப்படாது. அந்த விதை இறந்துவிடாது. அது அப்படித்தான் உங்களுக்கு விதைக்கப்பட்டிருக்கிறது. அதற்குத்தான் தீட்சை என்று பொருள்.

வாழ்கின்ற குருவின் முன்னிலையில் நீங்கள் அமர்கிறபோது உங்களுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கலாம். மதிப்பீடுகள் இருக்கலாம். விருப்புவெறுப்புகள் இருக்கலாம். ஏனென்றால், நீங்கள் அவரை ஒரு மனிதராகத்தான் பார்க்கிறீர்கள். சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பலர் குருவைவிட்டு விலகிப் போய் இருக்கிறார்கள். தன்னை உணர்ந்த ஒரு அற்புத மனிதரான கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வில் இது நடந்தது. அவருக்கு நெருக்கமான ஒரு பெண்மணி இருந்தார். அவருடைய பணிகளில் ஆழமாகப் பங்கெடுத்தார். அவரோடு நீண்ட காலம் இருந்து பல இடங்களுக்கு உடன் வந்து இருக்கிறார். ஒருமுறை அவர் ஹாலந்தில் இருந்தபோது, அவர் கடைக்குச் சென்று தனக்கென்று ஒரு டை வாங்கிக்கொள்ள விரும்பினார். அந்த டையை தேர்ந்தெடுப்பதில் அவர் மிகுந்த கவனம் காட்டினார். ஏனென்றால் எதைச் செய்தாலும் அது குறித்து முழு விழிப்பு உணர்வோடு செய்வார். எனவே, ஒரு கடைக்குச் சென்று ஏறக்குறைய நான்கு மணி நேரம் செலவழித்து ஒரு டை வாங்கினார். இதை அந்தப் பெண் பார்த்துக் கொண்டேயிருந்தார். நேரம் போகப்போக அவர் மனதில் அவரிடையேயான பிணைப்பு மிக பலவீனமானது. இந்த மனிதர், தான் அணிகிற டையில் இவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்றால் இவர் ஞானம் அடைந்தவராக இருக்க முடியாது என்று கருதி அவரைவிட்டு விலகிப் போனார். உங்கள் மதிப்பீடுகள் காரணமாக இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கின்றீர்கள்.

மனிதர்கள் தங்கள் குருவைவிட்டு இன்றும் சின்னச் சின்ன விஷயங்களுக்காக விட்டு விலகுகிறார்கள். ஏனென்றால், உங்கள் அன்றாட வாழ்க்கையில் உடல் மற்றும் மனம் போன்றவற்றில் சிக்குண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு நிகழ்ந்தவை ஆழ்ந்த பரிமாணங்களில் நிகழவில்லை. வினாடிக்கு வினாடி விழிப்பு உணர்வின் காரணமாக நிகழ்வது இல்லை. சில வினாடிகளில் உங்கள் வாழ்விலேயே இதுதான் மிக ஆழமான விஷயம் என்று உங்களுக்குத் தெரியும். மற்ற நேரங்களில் உங்கள் மனம் பலவாறாக வாதமிட்டு, அப்படி இல்லை என்று உங்களுக்கு நிரூபிக்கும்.

தியான லிங்கத்தைப் பொறுத்தவரையில் உங்களுக்கு இதுபோன்ற சிக்கல்கள் இல்லை. ஏனென்றால், அதற்கு ஸ்தூல உடலோ, மன உடலோ இல்லை. நீங்கள் தியான லிங்கத்தை ஒருமுறை அனுபவித்துவிட்டால், நீங்கள் அதன் முன் உட்காருகிற ஒவ்வொரு தருணத்திலும் அதன் புனிதத்தன்மையை உணர்ந்து அதைப் பார்ப்பீர்கள்!

ஜூன் 24, தியானலிங்கப் பிரதிஷ்டை நாள் கொண்டாட்டங்கள்

நேரடி ஒளிபரப்பில் இணைந்திடுங்கள்