தியானலிங்கம் பிரதிஷ்டை தினம் வருகிற ஜூன் 24ஆம் தேதி வரவிருக்கும் நிலையில், தியானலிங்கம் குறித்து சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் தியானலிங்கத்தின் சிறப்பினை எடுத்துரைக்கின்றன! எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் தியானலிங்கத்தால் நலமடைவது குறித்து தொடர்ந்து படித்து அறிந்துகொள்ளுங்கள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: தியானலிங்கம் கூட பரிணாம வளர்ச்சியின் ஒரு அம்சம்தானா?

சத்குரு:

தியானலிங்கம் ஒரு அற்புத நூலகம். நீங்கள் சரியான விழிப்புணர்வுடன் உணர முடிந்தால், படைப்பு பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் அதில் தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் உருவான விதமும் தியானலிங்கம் உருவான விதமும் ஒன்றுதான். நீங்கள் எப்படி ஒன்றுமில்லாத் தன்மையில் இருந்து பூச்சி, புழு, நாய், பசு என்று கடைசியாக இப்படி ஆகியிருக்கிறீர்களோ அதே போல்தான் தியானலிங்கமும் ஒன்றுமில்லாத் தன்மையில் இருந்துதான் உருவாகியுள்ளது. நீங்கள் புழு, பூச்சியிலிருந்து இப்போது நீங்கள் இப்படி இருக்கும்வரை எல்லாமே உங்கள் உடல் அமைப்பில் எழுதப்பட்டுள்ளது. உங்களுக்கு உணரும் சக்தி தீவிரமாக இருந்தால் அதை நன்கு உணர முடியும். அதேபோல் தியானலிங்கம் உருவான விதமும் கூட தியானலிங்கத்தில் எழுதப்பட்டுள்ளதை உணர முடியும்.

Question: சத்குரு, ஒரு மனிதர் மாந்திரீகத்தின் எதிர்மறையான விளைவுகளால் பாதிக்கப்பட்டால் அவருக்கு தியானலிங்கம் உதவி செய்யுமா?

சத்குரு:

உங்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ சக்திநிலையை எதிராகப் பயன்படுத்துவது, பில்லி சூனியம், போன்றவை எல்லாம் இருக்கின்றன. எதிர்மறைத் தாக்குதல் என்று சொல்கிறபோது வேறு யாரோ உங்களுக்கு செய்கின்ற தீய விஷயங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நீங்களே கூட இந்த தீய தன்மைகளை எங்கிருந்தாவது உள்வாங்கியிருக்கலாம். ஆனால் ஒரு மனிதர் இந்தக் கோவிலுக்குள் உள்ளே நுழைகிறபோதே, அந்த தீயசக்திகளின் தாக்கத்திலிருந்து விடுபட்டு விடுகிறார். அங்கு இதற்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அப்படி ஆயிரக்கணக்கானோர் அத்தகைய தாக்கங்களிலிருந்து விடுபட்டு இருக்கிறார்கள். அதனால்தான் இந்த கோயிலுக்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் வாழ்க்கை திடீரென மாறிவிட்டதாக உணர்கிறார்கள்.