Question: ஆதியோகி ஆலயத்திற்கும் தியானலிங்கத்திற்கும் இருக்கின்ற, இந்த இரண்டு லிங்கங்களுக்குமான வேறுபாடு என்ன? சிவனின் எந்த தன்மை இதில் வெளிப்படுகிறது?

சத்குரு:

தியானலிங்கத்தை வேறு எதனோடும் ஒப்பிட இயலாது. ஆதியோகி போல் இன்னும் ஆயிரம் லிங்கங்களை பிரதிஷ்டை செய்யமுடியும். ஆனால் இன்னொரு தியானலிங்கத்தை என்னால்கூட உருவாக்க இயலாது. அதன் தன்மை முற்றிலும் வேறானது. வித்தியாசமானது. சிலருக்கு தர்க்கரீதியாக இந்த கேள்வி எழக்கூடும். தியானலிங்கத்திலும் 7 சக்கரங்கள், ஆதியோகி லிங்கத்திலும் 7 சக்கரங்கள் என்று எண்ணக்கூடும். மனிதர்களுக்குக்கூட 7 சக்கரங்கள்தான். எனவே அது ஒன்றே அளவுகோல் ஆகிவிடாது. ஆதியோகி ஒரு குறிப்பிட்ட பிரத்தியேகமான தன்மையை ஒரு செயலை செய்து தரக்கூடியவர். குறிப்பிட்ட நோக்கத்துக்காக நீங்கள் ஆதியோகியை பயன்படுத்தலாம். தியானலிங்கத்தை யாராலும் எதற்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியாது. அவர் அங்கே இருக்கிறார், ஒரு பிரபஞ்சம் போல் இருக்கிறார். எது வந்தாலும் இதனை எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம், எப்படி உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று நீங்கள் யோசித்தால் வாழ்வின் அர்த்தத்தை இழந்துவிடுவீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஆதியோகி போல் இன்னும் ஆயிரம் லிங்கங்களை பிரதிஷ்டை செய்யமுடியும். ஆனால் இன்னொரு தியானலிங்கத்தை என்னால்கூட உருவாக்க இயலாது.

மஹாபாரதத்தில் ஒரு சம்பவம், யுத்தம் வந்தது, கண்ணனிடத்திலே 10 ஆயிரம் வீரர்கள் கொண்ட ஒரு படை இருந்தது. உங்களுக்கு நான் வேண்டுமா? அல்லது என் படை வேண்டுமா என்கிற கேள்வியை கிருஷ்ணர் பொதுவிலே வைத்தார். பாண்டவர்கள் எங்களுக்கு படை வேண்டாம், நீதான் வேண்டும் என்றார்கள். கிருஷ்ணர் முன்பே சொல்லியிருந்தார், நான் எந்த பக்கம் சேர்ந்தாலும் அந்த பக்கத்திற்காக சண்டை போடமாட்டேன் என்று. பரவாயில்லை, நீதான் வேண்டும் என்று பாண்டவர்கள் கேட்டார்கள். அப்போது துரியோதனன் நினைத்துக்கொண்டார், இந்த பாண்டவர்கள் காலங்காலமாக முட்டாள்களாகவே இருப்பதில் ஒரு சரித்திரமே படைத்திருக்கிறார்கள். இப்போது கண்ணனை தேர்ந்தெடுத்திருப்பது அவர்கள் முட்டாள்தனத்திற்கு எல்லாம் மகுடம் வைத்தது போல. இவர்கள் யுத்தத்திற்கு போகிறார்கள். சண்டை போடக்கூடிய 10 ஆயிரம் வீரர்களை விட்டுவிட்டு சண்டையே போடாத ஒரே ஒரு மனிதரை தங்கள் பக்கம் சேர்த்திருக்கிறார்களே, இது முட்டாள்தனம் இல்லையா என்று துரியோதனன் நினைத்தார். ஆனால் அந்த ஒரு முடிவுதான் எல்லா வித்தியாசத்தையும் ஏற்படுத்தியது. மனித வாழ்க்கைகூட அப்படித்தான். எல்லாவற்றையுமே இதனால் என்ன பயன்? என்ன பயன்? என்று நீங்கள் கேட்பதால் வாழ்வின் அர்த்தத்தை இழந்துவிடுவீர்கள்.

இந்த உலகத்தில் புழுவிற்கு ஒரு நோக்கம் உண்டு. பறவைக்கு ஒரு நோக்கம் உண்டு. விலங்கு, பூச்சிகளுக்கெல்லாம் நோக்கம் உண்டு. ஆனால் பிரபஞ்சத்துக்கு என்று தனி நோக்கம் கிடையாது. பிரபஞ்சத்தை படைத்தவருக்கு என்றும் தனி நோக்கம் கிடையாது. தியானலிங்கம் பிரபஞ்சம் போன்றது. பிரபஞ்சத்தை படைத்தவன் போன்றது, அதை ஒரு நோக்கத்துக்குள்ளே நீங்கள் அடக்க முடியாது. தியானலிங்கம், ஒன்றை வேண்டுமானால் உறுதியாக சொல்லலாம். தியானலிங்கத்திற்கென்று எந்த போட்டியும் இல்லை, அதேநேரம் தியானலிங்கம் எந்த போட்டியிலும் பந்தயத்திலும் இல்லை. அது போட்டிக்கும், பந்தயத்திற்கும், போட்டியாளர்களுக்கும் அப்பாற்பட்டது.

இன்றைய சூழ்நிலைகளை நீங்கள் பார்த்தீர்களேயானால் இன்றைக்குக்கூட 10 ஆதியோகி லிங்கங்களை ஒரே நேரத்தில் நான் பிரதிஷ்டை செய்திருக்க முடியும். நீங்கள் 10 ஆயிரம் பேர் இருக்கிறீர்கள். ஆயிரம் பேருக்கு ஒரு லிங்கம் என்றுகூட பிரதிஷ்டை செய்திருக்க முடியும். ஆனால் இன்னொரு தியானலிங்கத்தை நான் நினைத்தாலும்கூட செய்யமுடியாது. நான் மட்டும் அல்ல, எனக்கு தெரிந்து இப்படி ஒரு தியானலிங்கத்தை உருவாக்கக்கூடியவர்கள் இன்றைக்கு இந்த உலகத்தில் வேறு யாரும் கிடையாது. எதிர்காலத்தில் வருவார்களா என்று தெரியாது. ஆனால் இப்போதைக்கு அப்படி யாரும் இல்லை.