தெய்வச் சிலைகள் அழகுக்காக மட்டுமா? அல்லது யந்திரம் போல செயல்படுகிறதா?
 
தெய்வச் சிலைகள் அழகுக்காக மட்டுமா? அல்லது யந்திரம் போல செயல்படுகிறதா?, Deiva silaigal azhagukkaga mattuma
 

Question:சத்குரு, பாரம்பரிய கோவில்களில் உள்ள சிற்பங்கள் அழகிற்காக உருவாக்கப்பட்டதா அல்லது அவை ஏதாவது ஒரு யந்திரம் போல செயல்படுகிறதா?

சத்குரு:

ஆலயங்களில் உள்ள சிற்பங்களைப் பார்த்தால், அவை அழகிற்காக உருவாக்கப்பட்டவை போல் தெரியவில்லை. அழகான பெண் என்பவள் லிங்கபைரவி தேவி போல் இருக்கமாட்டாள் என்பது என் கருத்து. லிங்கபைரவி, பெண்தன்மையின் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தை குறிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

சிலை அமைப்பினைப் பொருத்த வரையில், அதில் எந்த தத்துவமும் இல்லை.

தெய்வீக பெண்தன்மைக்கு இரண்டு பரிமாணங்கள் உண்டு. அவர்களை காளி என்றும் கௌரி என்றும் இருவிதமாக அழைக்கிறோம். காளி - கருப்பு, கௌரி - சிவப்பு. இது வெறுமனே அவர்களது தோல் நிறத்தைப் பற்றியது அல்ல. இந்திய மொழிகளில் ராகா என்றால் வண்ணம் என்று பொருள்படும். ஆனால், அந்த வார்த்தை ஏதோ ஒன்றின் குணத்தைப் பற்றியும் சொல்லும். இந்திய சாஸ்திரிய சங்கீதத்தில் இசையின் ஒரு குறிப்பிட்ட சுவையை ராகம் என்று அழைக்கிறார்கள். ஒருவிதமான சுவையை நீங்கள் உருவாக்கினால், அது ஒரு குறிப்பிட்ட அமைப்பையும், வர்ணத்தையும் உங்கள் மனதில் உருவாக்கும். இதனாலேயே, ஒரு சப்தத்தையும், அதன் அதிர்வையும், அந்தச் செயலையும், சூழ்நிலையையும் குறிப்பிட நாம் ராகா எனும் வார்த்தையை பயன்படுத்துகிறோம். ஏனெனில், நம் விழிப்புநிலை மூலம் இவை நமக்குள் வெவ்வேறு வர்ணங்களை உருவாக்குகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது.

கோவில்களில் நாம் பார்க்கும் தேவிகள், ஒன்று கௌரியாகவோ அல்லது காளியாகவோ இருக்கிறார்கள். அதாவது சிவப்பு வர்ணம் அல்லது கருப்பு வர்ணம். ஒருவர் கருப்பு கிரானைட்டிலும் இன்னொருவர் வெள்ளை மார்பிலிலும் உருவாக்கப்படுகிறார் என்று அர்த்தம் அல்ல. இருவருமே கருப்பு கிரானைட்டில்தான் உருவாக்கப்படுகிறார்கள். இந்த கறுமையும் வெண்மையும் அவர்களது தோல் நிறத்தைச் சார்ந்தது அல்ல, நல்லது தீயதை சுட்டுவதும் அல்ல. கறுமையும் வெண்மையும் படைப்பின் இருவேறு பரிமாணங்களை குறிக்கிறது. இரண்டுமே இவ்வுலகம் நிகழ அவசியமாகிறது. கறுமை நிறமுடைய காளி, மூர்க்கமானவள். வெண்மையான கௌரி சாந்தமானவள். பொதுவாக, மென்மையான குணமுள்ளவர்கள் கோவிலின் மூலவருக்கான துணையாக வழிபடப்படுகிறார்கள்.

எங்கு சிவன் இருக்கிறாரோ அங்கு அவருக்கு கௌரியும் இருக்கிறாள். சிவன்தான் அங்கு முக்கிய சக்தி, அவள் அங்கு மற்றொரு அம்சமாய் இருக்கிறாள். ஏனெனில், அவள் சாந்தமாக, நாகரீகமானவளாக, பழக்கப்படுத்தப்பட்ட பெண்ணாக - அதாவது மூர்க்கத்தனம் குறைந்தவளாக இருக்கிறாள். காளி - எப்போதும் தனித்திருப்பாள். அவளருகே ஆண் உருவம் இருக்காது. தன்னிச்சையாகவே அவள் முழுமையான சக்தியாக செயல்படுவாள். வடிவியலைப் பொருத்த வரையில், லிங்கபைரவி மூன்றரை சக்கரங்களை உடையவள். அவள் காளி என்பதால் கீழேயுள்ள 3 சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதத்தின் ஒரு பாதியை மட்டுமே உடையவளாய் இருக்கிறாள். அவளுக்கு அரை இதயமே இருக்கிறது, அதனால் அவள் உங்களை அன்பு செய்வாள் என எதிர்பார்க்க வேண்டாம். அவள் அன்பிற்கு தகுதியானவள் அல்ல, ஆனால் அளப்பரிய கருணைக்கும் சக்திக்கும் பாத்திரமானவள்.

பைரவியால் உங்கள் வாழ்க்கையை செழுமையுடையதாய், வல்லமையுடையதாய் மாற்ற முடியும். யாரோ ஒருவர் உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தினால், அது அன்பினையும்விட சாலச் சிறந்தது என்றே சொல்ல வேண்டும். தினசரி, “ஐ லவ் யூ” எனச் சொல்லிக்கொண்டே இருப்பதைவிட இது மிகச் சிறந்தது. தேவி உங்களை இனிமைப்படுத்தமாட்டாள், ஆனால், உங்களுடன் தொடர்பு ஏற்பட்ட சில நாட்களிலேயே அவளது சக்தியால், உங்களது சக்தி தற்சமயம் இருப்பதைக் காட்டிலும் மேலெழும்புவதை பார்க்க முடியும். உங்களுக்குள் மட்டுமல்ல; நீங்கள் இந்த உலகுடன் வைத்திருக்கும் உறவு நிலையிலும் அதைச் செய்வாள் தேவி. உங்கள் வாழ்க்கைத்தரம் மேம்படும், உங்கள் ஆற்றல் வளரும். இவை யாவும் உங்கள் மனம் மற்றும் உடலளவில் நிகழும். அதுமட்டுமல்ல, நீங்கள் இந்த உலகுடன் கொண்டுள்ள உறவுநிலையிலும் நல்வாழ்வு நிகழும். உங்களை எல்லா நிலையிலும் அவள் மேம்படுத்துவாள், ஆனால் “ஐ லவ் யூ” சொல்லும் ரகம் அவளல்ல. அவள் கௌரி அல்ல, அவள் காளி.

ஒரு பக்தருக்கு அறிவியல் பற்றியோ தொழில்நுட்பம் பற்றியோ கவலை இல்லை, அவரது பலம் - உணர்ச்சி.

இந்தச் சிலைகள் அழகு சார்ந்தவையா, கலாச்சாரம் சார்ந்தவையா அல்லது இவைகள் தத்துவங்கள் சார்ந்த அம்சங்களா? சிலை அமைப்பினைப் பொருத்த வரையில், அதில் எந்த தத்துவமும் இல்லை. அவற்றை வடிவியல் கலை எனலாம். துரதிருஷ்டவசமாக, மக்கள் வார்த்தைகளை மட்டுமே பிடித்துக் கொள்கிறார்கள். அதற்கு வேறு சிலர் தத்துவம் சார்ந்த விளக்கங்களை வழங்குகிறார்கள். ஆனால், கிழக்கத்திய கலைகளுக்கு தத்துவம் சார்ந்த பின்னணி கிடையாது. நீங்கள் செய்யும் செயல்களுக்கு துணையாய் இருப்பதற்காக தத்துவங்கள் ஜோடிக்கப்படுகிறது. கிழக்கத்திய கலைகளோ, இந்தப் பிரபஞ்சத்தின் வடிவியலுடன் ஒத்த கூறுகளை ஆக்கும் நிகழ்வாக சிற்பங்களை உருவாக்குகிறது.

இங்கு ஒரு கலைஞர், படைப்பின் ஒரு குறிப்பிட்ட அம்சத்துடன், அவர் உருவாக்கிய கலை ஒத்திசைவில் இருந்தால் மட்டுமே வெற்றி பெற்றவர் எனக் கருதப்படுகிறார். இதனாலேயே, கிழக்கத்திய நாகரீகத்தில் தோன்றிய கலைஞர் தன் பெயரினை தன் வேலையில் பதிவு செய்வதில்லை. எப்படியிருந்தாலும், அவர் செய்தது எதையோ ஒன்றினைப் பார்த்துத்தானே! இந்தப் பிரபஞ்சத்தில் பிரம்மாண்டமாய் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஏதோவொன்றின் சிறிய பிம்பத்தை அவர் நகல் எடுக்கிறார். அந்த பிரம்மாண்டத்தின் செயல்பாடுகளைப் போலவே இவர் உருவாக்கிய சிற்றுருவமும் செயல்படுகிறது. அதைத்தானே அவர் நினைத்து பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

இந்தியக் கலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் அடிப்படை வடிவியலைப் பார்த்தால் இயற்கையை பிரதிபலிப்பதாய் அமைந்திருக்கின்றன. இன்னொரு விதத்தில் சொன்னால், ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தின் சக்தியமைப்பை ஒரு உடல்சார்ந்த ரூபத்திற்குள் கொண்டு வருகிறார்கள். இதன்மூலம், மக்களால் அந்தவொரு பிரம்மாண்ட பரிமாணத்தை இந்த ரூபத்தின் மூலம் சுவைக்க முடிகிறது. இந்த மூர்த்திகள் உருவாக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால், ஒருவர் இந்தச் சிற்பிகளை நையாண்டி செய்ய முடியும். “கைகள் என்ன இரண்டு வெள்ளரிக்காய்கள் போல நீட்டிக் கொண்டு நிற்கின்றனவே, இது எல்லாம் ஒரு கலை வடிவமா?” எனக் கேட்க முடியும்.

வெளித்தோற்றத்தைப் பொருத்த வரையில் கைகளும் கால்களும் அழகம்சம் உடையதாய் உள்ளதா என நாம் பெரிதாய் கவனம் செலுத்துவதில்லை. ஒவ்வொரு கையும், காலும், நரம்பு புடைக்க நேர்த்தியாய் உருவாக்கப்பட்டுள்ளதா என நாம் பார்ப்பதில்லை. ஏனெனில், இந்தியாவில் கலை வடிவங்கள் நம் கண்களுக்கு விருந்தாய் அல்லாமல், வடிவியலுடன் ஒத்திருக்கிறதா என்றே பார்க்கிறோம். அந்த வடிவத்திற்கு வடிவியல் உருபடிவம் இருக்கிறதா, அதன்படி செம்மைப்படுத்தப் பட்டுள்ளதா என்றே பார்க்கிறோம். அந்த ரூபம் உங்கள் மேல் ஏற்படுத்தும் தாக்கமே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாய் அமைகிறது.

வடிவியல் சார்ந்த செம்மையை ஒரு கல்லில் கொண்டு வருவது மிகச் சிரமம். தங்களால் தனக்கு வேண்டிய செம்மையை அடைய முடியவில்லை என்பதை அவர்கள் பார்த்ததும், சிறிய உலோக யந்திரத்தினை உருவாக்கி அதனை மூர்த்தியின் நெஞ்சிலோ, தொண்டைக் குழியிலோ, நெற்றியிலோ பதித்தனர். பொதுவாக, தங்கத்தினையோ, செம்பினையோ இதற்காக பயன்படுத்தினர். கல் வடிவத்தில் ஏற்படும் குறைபாடுகளை சீர்செய்ய, உலோக ரூபங்கள் உருவாக்கப்பட்டன. இப்படித்தான் தெய்வ மூர்த்திகள் உருவாக்கப்படுகின்றன - இவை எல்லாமே யந்திரம்தான்.

கோவில்களின் பிரம்மாண்ட வெளிப்புற அமைப்புகளும் ஒரு குறிப்பிட்ட சக்தியை வெளிப்படுத்தும் விதமாகவே அமைக்கப்படுகின்றன. சில கோவில்கள், பல கோவில்களை விடவும் அறிவியல் நேர்த்தியில் பிரம்மாண்டமானதாய் அமைகின்றன. ஆயினும், கடந்த 700, 800 வருடங்களில், இந்தியாவில் பக்தி இயக்கம் துவங்கியபின், ஜன்னல் வழியே ஊடுறுவி, இந்த தொழில்நுட்பம் மாயமாய் மறைந்துவிட்டது. மக்களின் உணர்வே பிரதானமாய் ஆனது.

ஒரு பக்தருக்கு அறிவியல் பற்றியோ தொழில்நுட்பம் பற்றியோ கவலை இல்லை, அவரது பலம் - உணர்ச்சி. தனிமனிதருக்கு இதுபோன்ற விஷயங்கள் பொருந்திப் போகலாம். ஏனெனில், அவர் தன் பக்தியினை ஆடியும் பாடியும் வேறு சில செய்கைகளை செய்தும் வெளிப்படுத்திக்கொள்வார். பக்தர்கள் கோவில்களை எழுப்பக்கூடாது, அவற்றை யோகிகள் செய்ய வேண்டும். பக்தர்கள் கோவில்களை எழுப்பத் துவங்கியதால், மிகச் சக்திவாய்ந்த, வடிவியல் சார்ந்த அமைப்புகளாய் உருவாக்கப்பட்ட ஆலயங்கள், அப்படி இல்லாமல் போயின.

ஏனெனில், ஏதோவொரு பிரம்மாண்டத்தை ஒத்த வடிவியல் அமைப்புகளை சார்ந்து ஆலயங்கள் அமைப்பது வெற்றியாய் கருதப்பட்டது. பெரும்பாலான மக்களுக்கு பிரம்மாண்டமான அந்த ஆலிர்பவத்தை அடைய வழியில்லை. அதன் பிரதி பிம்பத்தை சிறிய அளவில் ஒரு கட்டிடத்திலோ, நம்மால் புரிந்துகொள்ளக் கூடிய பொருளிலோ நாம் கொண்டு வரும்போது மக்களால் அதனை உணர முடிகிறது.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1