IYO-Blog-Mid-Banner  

கேள்வி: சத்குரு, இன்றைய காலகட்டத்தில் பலரும் வாக்கு சொல்கிறார்கள். கால ஞானம் எனும் புத்தகத்தில் ஆந்திராவை சேர்ந்த புட்லீரி வீர் பிரம்மம் என்கிற முனிவர் கொரோனா பற்றி எழுதியிருப்பதாக பலரும் கூறுகிறார்கள். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வைத்தியர், விண்ணியலாளர் மற்றும் தீர்க்கதரிசியான மிஷல் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு பற்றியும் பேசுகிறார்கள். இப்படி வாக்குகள் பலிதமாவது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

சத்குரு: இந்த கணிப்புகள் எல்லாமே அற்புதமானவை. ஆனால் இப்படி கணிப்புகள் இருப்பதே சம்பவம் நடந்து முடிந்தபின்தான் நமக்குத் தெரிய வருகிறது. இவற்றை முன்கூட்டியே மக்கள் அறிந்திருந்தால், ஏன் அவர்களால் இதை தடுக்க முடியவில்லை? முன்கூட்டியே உங்களுக்கு இது தெரிந்திருந்தும் உலகம் முழுவதும் பரவுகிற ஒரு நோயை நீங்கள் தடுக்கவில்லை என்றால் அது மிகப்பெரிய குற்றம். மனிதர்களிடம் ஒரு ஆசை இருக்கிறது, வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அவர்கள் பார்க்க விரும்புகிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியாமல் இருப்பது அற்புதமான விஷயம்தானே, எல்லாம் தெரிந்துவிட்டால் நீங்கள் வாழமுடியுமா?

பலபேர் இப்படி இருக்கிறார்கள், எல்லா திசைகளிலும் ஜோதிடர்கள் என்னை தாக்குகிறார்கள். ஏனென்றால், அவர்களின் தொழிலுக்கு நாம் செய்வது சரியானதாக இல்லை.

பரிணாம வளர்ச்சியில் மனித நிலை

ஒரு மனிதர் இந்த பூமியில் பரிணாம வளர்ச்சியின் உச்சியில் இருக்கிறார். அடிமட்டத்தில் இருக்கிற உயிரினங்களிலிருந்து மேலே வளர வளர, அவரை சுற்றி இருக்கும் விஷயங்கள் அவரை பாதிப்பதில்லை என்பதை உணர்வீர்கள். உதாரணத்திற்கு ஒரு மண்புழுவை எடுத்துக்கொள்வோம், இங்கே பூமியில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டால் அது இங்கேயே இறந்துவிடும். அது இங்கிருந்து ஆப்பிரிக்காவிற்கு நீந்தி போய் வாழ முடியாது.

நீங்கள் இடம் பெயர்ந்து பயணம் செய்யும் செயலை இன்னும் விழிப்புணர்வாக நடத்திக்கொள்ள வேண்டும். நம்முடைய பயணம் செய்யும் ஆற்றல்தான் இந்த வைரசுக்கு இவ்வளவு சக்தியை கொடுக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஏனென்றால் மண்புழுவின் ஆற்றல் என்பது அவ்வளவுதான். அது இருக்கும் இடத்தை விட்டு 10 மைல் தூரம் கூட போய் வாழ முடியாது. அதனுடைய நிலப்பரப்பில் அல்லது வசிப்பிடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் அது எதுவும் செய்ய முடியாது. இதனால்தான் நாம் மண்ணுக்கு புத்துணர்வு ஊட்டுவதைப் பற்றி பேசுகிறோம். நமது பிழைப்புக்கு அத்தியாவசியமான இந்த நுண்ணுயிர்களும் புழுக்களும் வேறு இடத்துக்கு இடம் பெயர முடியாதவை.

கொரோனாவிற்கு நாம் வழங்கும் போக்குவரத்து வசதி

கொரோனாவிற்கு இருக்கும் ஆற்றல் இந்த நுண்ணுயிர்களிடம் இல்லை. கொரோனாவிடமும் அந்த ஆற்றல் இல்லை. நாம்தான் அவைகளுக்கு இலவச போக்குவரத்து வசதியை வழங்குகிறோம்.

நடமாடும் ஆற்றல் என்பது இந்த பூமியிலேயே மனிதர்களிடம்தான் அதிகமாக இருக்கிறது. மனிதர்கள்தான் கொரோனாவுக்கு போக்குவரத்து வசதி வழங்குகிறார்கள். நம்முடைய நடமாடும் ஆற்றலை விழிப்புணர்வாக கையாள ஆரம்பிக்கவில்லை என்றால், இயற்கை நம்மை கட்டுப்படுத்தும். இதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. நம்மால் எங்கேயும் செல்ல முடியவில்லை.

நீங்கள் இடம் பெயர்ந்து பயணம் செய்யும் செயலை இன்னும் விழிப்புணர்வாக நடத்திக்கொள்ள வேண்டும். நம்முடைய பயணம் செய்யும் ஆற்றல்தான் இந்த வைரசுக்கு இவ்வளவு சக்தியை கொடுக்கிறது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தால், அப்போது விமான பயணம், கடல் பயணம் இவை எதுவுமில்லை. அதனால் வுஹானோ அல்லது அது எங்கு தோன்றியதோ அங்கு மட்டும்தான் இருந்திருக்கும். ஏதோ ஓரளவிற்கு அதை சுற்றியுள்ள கிராமங்களில் பரவியதோடு அது நின்றிருக்கும். மனிதர்கள் அதிகம் பயணம் செய்வதால் இது அதிகமாக பரவுகிறது. இன்று சீனாவில் இருப்பார்கள், நாளை காலை இத்தாலியில் இருப்பார்கள், அடுத்த நாள் காலை அமெரிக்காவில் இருப்பார்கள், இல்லை வேறு எங்காவது இருப்பார்கள்.

எதிர்காலத்தை கணிப்பதில் உள்ள சௌகரியம்

இப்படி கட்டற்ற பயணங்களால் கொரோனா திடீரென்று பூதாகாரமாக மாறிவிட்டது. அது இப்போது அனைவருக்கும் பெரிய பிரச்சனையாக மாறியிருக்கிறது. ஏனென்றால் அதற்கு நீங்கள் அவசியமாக இருக்கிறீர்கள். அதனால் இந்த ஒரு ஏக்கம், ஏதோ ஒன்றை கணிக்க வேண்டும் என்கிற ஆர்வம்... தமிழ்நாட்டில் இப்படி ஒருவர் இருந்தார், இப்பொழுது இல்லை. அவர் 500 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் பெரிய வெள்ளம் ஏற்படும் என்று சொன்னார். மிகவும் அற்புதம் என்று நாம் சொன்னோம். மக்கள் வந்து என்னிடம், "சத்குரு, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 500 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய வெள்ளம் ஏற்படுமா?" என்று கேட்டார்கள். அதற்கு நாம் இப்படி சொன்னோம், "அதனால்தான் மலை அடிவாரத்தில் நாம் இருக்கிறோம், வெள்ளம் வந்தால் மலைமேல் ஏறிவிடுவோம். நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள், பாதிக்கப்படுவீர்கள்" என்றோம்.

தயவு செய்து அடுத்த ஐந்து நாட்களில் என்ன நடக்கும் என்று சொல்லுங்கள். ஐந்து மாதங்கள் கூட இல்லை, அடுத்த ஐந்து நாட்களில் என்ன நடக்கப்போகிறது என்று சொல்லுங்கள்.

"அப்படியா?" என்று கேட்டார்கள். ஆமாம், நானும் இப்படிப்பட்ட கணிப்புகள் செய்யமுடியும். 700 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மலை எரிமலையாக மாறி வெடிக்கும் என்று சொல்ல முடியும் என்றேன். இது நிஜமா என்றார்கள். நான் சொன்னேன், 700 ஆண்டுகளுக்கு நானும் இருக்கமாட்டேன், நீங்களும் இருக்க மாட்டீர்கள். அதனால் நாம் என்ன கணிப்பு வேண்டுமானாலும் செய்யலாம். தயவு செய்து அடுத்த ஐந்து நாட்களில் என்ன நடக்கும் என்று சொல்லுங்கள். ஐந்து மாதங்கள் கூட இல்லை, அடுத்த ஐந்து நாட்களில் என்ன நடக்கப்போகிறது என்று சொல்லுங்கள்.

அடுத்த ஐந்து நாட்களில் என்ன நடக்கும் என்பதை ஒரு வானிலை அறிக்கை போல சொன்னீர்கள் என்றால், அது எல்லோருக்குமே பயனுள்ளதாக இருக்குமே. 500 ஆண்டுகளுக்கு பிறகு எது வேண்டுமானாலும் நடக்கலாம். மக்களுக்கு இதில் ஆர்வம் இருப்பதால் இந்த நேரத்தையும் கணிப்பையும் அவர்கள் எப்படி அர்த்தம் செய்து கொள்வார்கள் என்றால், இந்த பூமியில் நடக்கும் எல்லாவற்றையும் ஏற்கனவே நாஸ்டர்டாமஸ் கணித்து விட்டதைப்போல மாற்றிவிடுவார்கள்.

உணர வேண்டிய நிதர்சனம்

இது இப்படித்தான் போகும். மக்கள் கடந்த காலத்திய கணிப்புகளை இப்படிதான் அர்த்தம் கொள்வார்கள். நம் மக்கள்தொகை எப்படி வளர்கிறது என்ற கணக்கீடுகளை நீங்கள் பார்த்தீர்களானால், என்ன மாதிரி சுற்றுச்சூழல் சீர்கேடு நடந்து கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் வைத்து, சில கணக்குகளையும், சில கணிப்புகளையும் செய்ய முடியும். ஆனால் 500 ஆண்டுகளுக்கு இப்படியே இது நீடித்தால் அது வேறுமாதிரி நடக்கும். என்னென்ன சக்திகள் இதை பாதிக்கும் என்று நமக்குத் தெரியாது.

எவ்வளவு பேர் இறப்பார்கள் என்று கணிப்புகள் செய்யாதீர்கள், அது முட்டாள்தனமானது. எவ்வளவு பேரை நாம் இறக்கவிடாமல் பாதுகாப்போம் என்று பாருங்கள், இதுதான் இப்போது முக்கியமானது.

பொதுவாகப் பார்த்தால், உலகப் போர் முடிந்த பிறகு, இது நடக்கும் என்று எங்களுக்கு தெரியும், எங்கோ இப்படி எழுதியிருக்கிறது என்று சொல்வார்கள். அணுகுண்டுகள் வெடித்த பிறகுதான் இதைப் பற்றி எங்களுக்கு முன்பே தெரியும் என்று சொல்வார்கள். உலகில் இரண்டு அசிங்கமான சம்பவங்கள் நடக்கும் என்று முன்கூட்டியே கணிக்கப்பட்டிருக்கிறது என்பார்கள். அப்படியென்றால் அதற்கான சோதனை வெடிப்புகள் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லையா? அதையெல்லாம் விட்டுவிட்டீர்கள். அணுகுண்டு தயார் செய்ய எவ்வளவு நூதனமான சோதனைகள் நடந்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியாது. இதனால் மனிதர்கள் வேண்டுமானால் இறக்காமல் இருக்கலாம், ஆனால் நிச்சயமாக பல உயிரினங்கள் இறந்திருக்கும். அதனால் இது வீணான ஒரு விஷயம். நீங்கள் தற்பொழுது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதற்கு பதிலாக, எங்களுக்கு ஏற்கனவே எப்படி தெரிந்திருக்கிறது என்று பேசிக்கொண்டே போகிறீர்கள்.

இப்பொழுது கொரோனா வைரஸால் இரண்டு பிரச்சனைகள் இருக்கிறது. யாரோ ஒருவர் சொல்வதுபோல், ஒன்று அடர்த்தியான மக்கள்தொகை, இன்னொன்று புத்தி வேலை செய்யாமல் அடைந்து இருப்பது. ஏற்கனவே நம் மக்கள்தொகை மிகவும் அடர்ந்து இருக்கிறது. உங்கள் புத்தியையும் வேலை செய்யாமல் அடைத்து வைக்காதீர்கள். நம்மால் செய்ய முடிந்ததை சிறப்பாக செய்யலாம். எவ்வளவு பேர் இறப்பார்கள் என்று கணிப்புகள் செய்யாதீர்கள், அது முட்டாள்தனமானது. எவ்வளவு பேரை நாம் இறக்கவிடாமல் பாதுகாப்போம் என்று பாருங்கள், இதுதான் இப்போது முக்கியமானது.