சத்குரு: மனிதர்களைத் தவிர, வேறு எந்த உயிரினமும் தன் இனத்தை சேர்ந்தவர்களின் வசிப்பிடத்தை அழிக்க விரும்புவது இல்லை. மனிதர்களுக்குள் மட்டும்தான் இப்படி நடக்கிறது. அவர்களும் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அப்படி செய்வதில்லை, விழிப்புணர்வு இல்லாமல் செய்கிறார்கள். அதேபோலவே, வைரஸ்சும் விழிப்புணர்வு இல்லாமல் செய்கிறது. அது உங்களுக்குள் உயிர் வாழ விரும்புகிறது. ஆனால் தன் வேலையை மிக அதிகமாக செய்துவிடுகிறது. அதனால் நீங்களும், நானும் இறந்துவிடலாம். நான் இதை உங்களுக்கு சொல்ல வேண்டும். பதினேழு வயதாகும் முன்பே எனக்கு சின்னம்மை வந்திருந்தது. அதற்கான சாட்சி இதோ என் மூக்கின் மீதே இருக்கிறது, பார்த்துக்கொள்ளுங்கள். அதற்கு முன்பாகவே தட்டம்மை, இரண்டாவது முறையாக டைபாய்டு என எல்லாவிதமான தொற்றுகளும் வந்து போயிருந்தது.

சத்குருவை பாதித்த தொற்று நோய்கள்…

சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் பொதுவாக வரக்கூடிய எல்லாவிதமான நோய்களும் எனக்கும் வந்திருந்தது. ஆனால், எதுவுமே ஒருபோதும் என்னை கீழே அழுத்தவில்லை. இரண்டாவது முறை டைபாய்டு வந்தபோது கூட, அதிக காய்ச்சல் இருந்தபோதும் நான் விளையாடிக்கொண்டே இருந்தேன், வழக்கமான எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தேன். கூடுதலான ஒரு சாதகமான விஷயம், பள்ளிக்கூடம் போகத் தேவையில்லை என்பதுதான். அதனால் இது எல்லாமே எனக்கு பிடித்திருந்தது.

இந்த நோய் எனக்கு வந்திருக்கிறது என நான் உணர்ந்த இரண்டு மணி நேரத்திற்குள் அப்படியே என்னை படுத்த படுக்கையாக்கியது. கிட்டத்தட்ட சுயநினைவை இழக்கும் நிலையில் இருந்தேன்.

அவர்கள் அவைகளை என்ன பெயரிட்டு அழைத்தாலும் எனக்கு உண்மையிலேயே பிடித்திருந்தது. ஏனென்றால், பள்ளிக்கூடம் போகத் தேவையில்லையே! அதிகாரப்பூர்வமாக நீங்கள் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருக்கலாம். ஆனால், எனக்கு 17 வயதானபோது காலரா வந்தது. இந்த நோய் எனக்கு வந்திருக்கிறது என நான் உணர்ந்த இரண்டு மணி நேரத்திற்குள் அப்படியே என்னை படுத்த படுக்கையாக்கியது. கிட்டத்தட்ட சுயநினைவை இழக்கும் நிலையில் இருந்தேன். என்னுடைய அம்மா, பாட்டி எல்லோரும், "நம் பையனை நாம் தொலைத்துவிட்டோம், தொலைத்துவிட்டோம்" என அழுவது எனக்கு கேட்கிறது.

உயிரை உலுக்கிய காலரா…

பாட்டி என் மூக்கை தொட்டு பார்த்து, "அடக் கடவுளே மூக்கு குளிர்ந்து போச்சு, பையன் போய்விட்டான்" என புலம்புகிறார். எல்லாரும் அழுகிறார்கள். என் அப்பா, அவர் ஒரு மருத்துவர், அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யப் பார்க்கிறார். அவரது நண்பர்களான இன்னும் இரண்டு மருத்துவர்களும் வந்தார்கள். நான் முற்றிலுமாக சுயநினைவை இழக்கும் நிலையில் இருந்தேன், வெறும் இரண்டே மணி நேரத்திற்குள். ஆனால், அடுத்த நாள் சாயங்காலத்திற்குள் நான் எழுந்து உக்கார்ந்து விட்டேன்.

இரண்டாவது நாள் நான் எழுந்து கொஞ்சம் நடமாட ஆரம்பித்தேன். ஆனால் அவர்கள் என்னை நடமாடக்கூடாது என ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்கள். "என்னை வீட்டின் மொட்டை மாடியிலாவது இருக்க விடுங்கள், நான் கொஞ்சமாவது நடமாடவேண்டும்" என கேட்ட பிறகு, என்னை மொட்டை மாடியில் இருக்க விட்டார்கள். இது என்னை மிகவும் யோசிக்க வைத்தது. இதுவரை பல நோய்களை பார்த்திருக்கிறோம், அது எல்லாவற்றையும் நான் ரசித்திருந்தேன். ஏனென்றால், அது என்னை பள்ளிக்கூடம் போகவிடாமல் வீட்டிலிருக்கச் செய்தது. ஆனால், இப்போது இந்த காலராவோ கிட்டத்தட்ட உயிரே போகுமளவு என்னை படுத்த படுக்கையாக்கி இருந்தது. அதனால் இதைப்பற்றி நான் தெரிந்துகொள்ள விரும்பினேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அது இணையமோ, கூகுளோ இல்லாத காலம். சும்மா கேட்டதும் பதில் கிடைத்து விடாது. அதனால் பள்ளி நூலகத்திற்கு சென்று விசாரித்தேன். அவர்கள் நோய் கிருமிகள் பற்றிய ஒரு புத்தகத்தை கொடுத்தார்கள். அதுவரையிலும் நான் அந்த வார்த்தையே கேள்விப்பட்டதில்லை. ஏனெனில், உயிரியல் வகுப்புக்கு நான் மிக அரிதாகவே சென்றிருந்தேன். அந்தப் புத்தகத்தை வாசித்தபோது அதில் பலவிதமான விஷயங்கள் இருந்தது. இந்த நோய் கிருமிகள் மனிதனை என்ன செய்கிறது என எல்லாமே விளக்கமாக இருந்தது.

சத்குருவிடம் எழுந்த கேள்வி…

இது எனக்குள் கேள்வியாகவே இருந்தது. எப்படி ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணுயிர் என்னை இந்த பாடுபடுத்த முடியும்? "எனக்கு இது பிடிக்கவே இல்லை, கிட்டத்தட்ட என் உயிரையே எடுத்துவிட்டதே, என்ன இது?" என அப்பாவிடம் கேட்டேன். பிரசித்தி பெற்ற மருத்துவரான அவர் பல விஷயங்களை எனக்கு விளக்கினார். அது என்னை விட்டு போகவே இல்லை. அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், அந்த புத்தகத்தில் நான் வாசித்ததும் கூட இன்னும் என் நினைவில் இருக்கிறது.

ஏனென்றால், இது எனக்கு ஒரு அனுபவபூர்வமான சவாலாக இருந்தது. என் வாழ்க்கையையே அச்சுறுத்தும் ஒரு விஷயமாக எனக்கு இது நடந்திருந்தது. இதைக் கண்டு நான் பயப்படவில்லை. ஆனால், இது ஒரு ஹாக்கி போட்டியிலோ, கிரிக்கெட் போட்டியிலோ தோற்கடிக்கப்பட்டது போன்ற ஒரு உணர்வை எனக்குள் ஏற்படுத்தி இருந்தது. அதனால் நோய் கிருமிகள் என்றால் என்ன என்பதை அறியும் ஆர்வம் இயல்பாகவே தீவிரமானது. பேக்டீரியாவாக இருந்தாலும், வைரஸாக இருந்தாலும், அதிலேயே பல வகைகளாக இருக்கிறது. ஒரு விஷயம் என்னவென்றால், உதாரணத்திற்கு கொரோனா வைரஸ் எடுத்துக்கொண்டால், இது விலங்குகளில் வாழ்ந்தபோது, எந்த விலங்கையும் கொல்லாமல் நன்றாகவே அதனுடன் வாழ்ந்திருந்தது.

மனிதர்களிடம் வாழ விரும்பும் கொரோனா

இப்போதுதான் மனிதர்களுக்கு அது தாவியிருக்கிறது. இன்னும் மற்ற விலங்குகளுக்குள் என்ன செய்து கொண்டிருந்ததோ அதையேதான் மனிதர்களிடமும் செய்துகொண்டு இருக்கிறது. ஆனால், நம்மால் தாக்குப்பிடிக்க முடியாமல் சரிந்து விழுகிறோம். இதுவும் இப்போது தெளிவாக நிலை நாட்டப்பட்டிருக்கிறது. தங்களது நோய் எதிர்ப்பு சக்தி நல்ல நிலையில் இருக்கும் பெரும்பாலான மனிதர்கள் இதிலிருந்து குணமாகி வருகிறார்கள். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும் மனிதர்கள் துரதிருஷ்டவசமாக இதற்கு பலியாகிறார்கள்.

அவர்கள் மற்ற விலங்குகளுடன் சுகமாக சேர்ந்து வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். மற்ற விலங்குகளும் அந்த வைரஸ்சுடன் சுகமாக சேர்ந்து உயிர் வாழ்ந்தார்கள். இதுதான் வாழ்க்கையுடைய இயல்பு.

இது என்ன சொல்கிறது? இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது, அந்த வைரஸ்சும் வாழ விரும்புகிறது, ஆனால் அது மிக ஆக்ரோஷமாக வாழ்வதால் நாம் இறந்துவிடலாம். பல விஞ்ஞானிகளும் இதைப்பற்றி பேசுகிறார்கள். ஆனால் அந்த சமயத்தில், நான் அவற்றை பற்றி வாசித்த போதுகூட அப்போது எனக்கு 17 வயது தான். நீங்கள் இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதே இதை விளக்கியிருந்தார்கள். இதை எழுதியவர் யார் என்பது எனக்கு நினைவில்லை. இருந்திருந்தால் அவர் பெயரை நாம் மேற்கோள் காட்டியிருப்போம். அப்போதே அவர்கள் இதை தெளிவாக விளக்கியிருந்தார்கள். வைரஸ், பாக்டீரியா போன்றவைகள் இப்போதும் நமக்குள் இருக்கிறார்கள், அவர்கள் பலவிதங்களிலும் நாம் உயிர் வாழும் செயல்முறைக்கு உதவியாக இருக்கிறார்கள், நமக்கு கேடு விளைவிக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு காலத்தில் மிகவும் கேடு விளைவித்திருக்கலாம். ஆனால், அவர்கள் தொடர்ந்து அப்படியே வாழ்ந்தால் தங்களின் வசிப்பிடத்தை தாங்களே அழித்துவிடுவோம் என்பதை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் காலப்போக்கில் இன்னும் மென்மையான வடிவங்களுக்கு தங்கள் மரபணுவை அவர்கள் மாற்றம் செய்துகொள்வார்கள். அதன்பிறகு நம்முடன் வாழ கற்றுக்கொள்வார்கள்.

அவர்கள் மற்ற விலங்குகளுடன் சுகமாக சேர்ந்து வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். மற்ற விலங்குகளும் அந்த வைரஸ்சுடன் சுகமாக சேர்ந்து உயிர் வாழ்ந்தார்கள். இதுதான் வாழ்க்கையுடைய இயல்பு. ஒன்றுக்குள் ஒன்று, அதற்குள் இன்னொன்று என பலவிதமான உயிர் வடிவங்கள், கோடானகோடி உயிர்கள் ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்து ஒரு வலைப்பின்னலாக சேர்ந்து வாழ்கிறார்கள். நாமும் அப்படித்தான். இப்போதும் இந்த உடலுக்குள் கோடானு கோடி வைரஸ்களும், பேக்டீரியாக்களும் உயிர் வாழ்கிறது.

மேன்டோஸ் பரிசோதனை

இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், இப்போது, இந்த கடந்த 3, 4 வாரங்களாக வெளிநாட்டவர் யார், இந்தியர் யார் என்பதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இது இனப் பாகுபாடுகளால் அல்ல. அவர்கள் எங்கே இருந்து வந்தார்கள் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். அவர்கள் இத்தாலியில் இருந்து வந்தார்களா? சீனாவில் இருந்து வந்தார்களா? எங்கே இருந்து வந்தார்கள்? இப்போது இத்தாலி, சீனாவைத் தாண்டி முன்னே சென்றுவிட்டது. இது மிக துரதிருஷ்டவசமான சூழ்நிலை. ஆனால் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியர்களுக்கு நீங்கள் மேன்டோஸ் பரிசோதனை செய்து பார்த்தால், கிட்டத்தட்ட நாம் அனைவருமே இந்த மேன்டோஸ் பரிசோதனையில் தேற மாட்டோம்.

மேன்டோஸ் பரிசோதனை என்பது காசநோய் பேக்டீரியா இருக்கிறதா என்பதை பரிசோதிக்கும் ஒரு சோதனை. கிட்டத்தட்ட எல்லா இந்தியர்களும் இந்த சோதனையில் பெயில் ஆவார்கள். ஏனென்றால், நம் எல்லோரிடமும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவு காசநோய் பேக்டீரியா இருக்கிறது. ஆனால் அது ஒரு நோயாக, நம்மிடம் காசநோயாக வெளிப்படவில்லை. அதனால் அவர்கள் வேறு ஒரு பெயர் கொடுத்தார்கள். ப்ரைமரி காம்ப்ளக்ஸ் - என அழைக்கிறார்கள். குழந்தைகளுக்கு இப்படி வேறு பெயர் கொடுக்கிறார்கள். ஆனால், அது சில நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

நம் எல்லோரிடமும் இந்த பேக்டீரியா இருக்கிறது. நாம் மேன்டோஸ் டெஸ்டில் பெயிலாகி விடுவோம். ஆனால் நம்மிடம் காச நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லை. ஏனென்றால், நாம் அவர்களோடு வாழ கற்றுக் கொண்டிருக்கிறோம், அவர்களும் நம்மோடு வாழ கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இது அவர்களுக்கும் தெரியும். அவர்கள் மிக ஆக்ரோஷமாக, நாம் இந்த பூமியில் வாழ்வதைப்போல வாழ்ந்தால், இப்போதைய வசிப்பிடத்தை இழந்துவிட நேரிடும் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் அவர்கள் தங்களின் மரபணுக்களை மாற்றம் செய்துகொண்டு மென்மையான நுண்ணுயிர்களாக மாறிவிடுவார்கள்.

இது எதோ புது ராக்கெட் விஞ்ஞானம் இல்லை. இது எப்போதுமே இப்படி இருந்திருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளாகவாவது இது இப்படி இருந்திருக்கிறது. ஏனென்றால், அந்த சமயத்தில் இதை நான் வாசித்தபோது, பல்கலைக் கழக படிப்புக்கு முந்தைய படிப்பில் இருந்தேன். இது எங்களது நூலகத்திலேயே இருந்தது. அதனால் இது எங்கள் புத்தகத்திலும் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் எங்களது புத்தகத்தை நான் வாசிக்கவில்லை.

நம்மை அச்சுறுத்தும் சூழ்நிலை

ஆனால் இது உடனே நடந்துவிடாது, அதற்கு தேவையான காலம் எடுத்துக்கொள்ளும். இப்போது, இந்த மாதிரியான ஒரு காலகட்டத்தில் ஒரு பேரிடர் நம் முன், நமக்கு எதிராக காத்துக்கொண்டு இருக்கும்போது, தேசத்துக்கும் சரி, உலகத்துக்கும் சரி, தேசங்கள் மக்களுக்கு எதிராகவே ராணுவ வீரர்களை இறக்குகிற அளவுக்கு சூழ்நிலை மோசமாக இருக்கும்போது, அது எவ்வளவு சீரியஸாக இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்காவுடைய படைவீரர்கள் எல்லோரும் தேசம் முழுக்க வேலை செய்கிறார்கள் என்றால், நிலைமை எவ்வளவு சீரியஸாக இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் தெருக்களில் வருவதை தடுக்க இந்திய காவல்துறை வெளியில் வீதியில் இறங்கி வேலை செய்கிறார்கள். மிக தீவிரமாக இதை செயல்படுத்துகிறார்கள். ஏனென்றால், இது எவ்வளவு சீரியஸ்ஸான பிரச்சனை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால், இந்தமாதிரி ஒரு சமயத்திலும்கூட ஒருவரால் எழுந்து நின்று தங்களை சுற்றிலும் இருக்கும் யாரோ ஒருவருக்கு எதோ ஒருவித உதவி செய்ய முடியவில்லை என்றால், அது மிக துரதிருஷ்டவசமானது. இப்போது ஒரு பேரழிவு நமக்கு முன் காத்துக்கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையை நாம் சரியாக கையாளவில்லை என்றால், நாம் மிகப் பெரிய அழிவை நோக்கிப் போவோம். கோடிக்கணக்கான மக்கள் அப்படியே காணாமல் போய்விடக் கூடும். இந்த மாதிரியான ஒரு சூழ்நிலை இருக்கும்போது நீங்கள் என்னவெல்லாம் செய்ய முடியும்? இது நாம் அனைவருமே எழுந்து நின்று நம் வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய, எந்த ஒரு சிறிய அளவிலான நேர்மறையான செயலாக இருந்தாலும், அதை செய்வதற்கான நேரம் இது. ஏனென்றால், இது சாதாரண காலம் இல்லை. ஒரு தலைமுறையை சேர்ந்தவர்களாக நாம் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை சந்தித்ததே இல்லை.

மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது…

மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். நாம் இப்படிப்பட்ட சூழ்நிலையை சந்தித்ததே இல்லை. உங்கள் தேசங்களில் நடந்திருக்கும் போர்களை விட மிக அவசரமான காலம் இது. நீங்கள் இதுவரையிலும் பார்த்திராத ஒரு அவசர காலம். பெரும் அழிவை ஏற்படுத்தாமல் இதை நாம் கடந்து போக முடியும். ஆனால், நாம் பொறுப்பாக நடந்து கொண்டு, தேவையான நேர்மறையான செயலை செய்தால் மட்டுமே அது சாத்தியம். இதுதான் நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது. நீங்கள் யாராக இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் சரி, உங்கள் நலனுக்காக, உங்கள் குடும்பத்தின் நலனுக்காக, இந்த தேசத்தின் நலனுக்காக, இந்த உலகின் நலனுக்காக இந்த நேரத்தில் உங்களது பங்களிப்பு மிக அவசியம்.