சத்குருவுடன் சேகர் கபூர் - பகுதி 12

தன்னை உணர்வது தற்போதுள்ள சூழலில் ஏன் கடினமாகிப் போனது என சென்ற வார உரையாடலைத் தொடரும் சத்குரு, அன்பு குறித்தும் பக்தி குறித்தும் சேகர் கபூரின் கேள்விக்கு விடையளிக்கிறார் இந்த வாரப் பதிவில்.


சத்குரு: இந்தக் கலாச்சாரத்தில் முன்பெல்லாம் ஆன்மீக செயல்முறைதான் மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதனால் எங்கு பார்த்தாலும் ஞானிகளும் முனிவர்களும் பரவலாக இருந்தனர். கிருஷ்ணர் மட்டுமே ஆன்மீக வளர்ச்சிக்காக 1400 ஆசிரமங்களை இந்தியாவின் வட பகுதிகளில் உருவாக்கியிருந்தார் என்று சொல்கிறார்கள்.

இளம் வயதிலிருந்தே அதற்கான பாதையில் நீங்கள் இல்லாதபடியால், இப்போது அது மிகவும் கடினமாகத் தெரிகிறது.

சிறிது காலத்திற்கு முன் கிராமத்திற்கு ஒருவர்தான் படிக்கத் தெரிந்தவராக இருப்பார். நான் கர்நாடகாவில் இருக்கும்போது ஒரு பண்ணை வைத்திருந்தேன். அந்த கிராமத்தில் ஒருவருக்கு மட்டுமே படிக்கத் தெரியும். எனவே கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் தங்களுக்கு வரும் கடிதங்களை, ஒரு மனைவி தனது கணவனுக்கு எழுதிய கடிதம் உட்பட, அந்த குறிப்பிட்ட மனிதரிடம் சென்றுதான் படிக்கச் சொல்லிக் கேட்பர். கல்வியறிவு என்பது அவ்வளவு அரிய விஷயமாக அப்போது இருந்தது. கல்வியறிவு பெறுவதற்கான ஸ்தாபனம் போதுமானதாக இல்லை. எனவே யாரோ ஒருவர் ஒரு கடிதத்தை படித்து சொல்லும்போது மற்றவர்கள் அதை ஏதோ ஒரு அற்புதமாக பார்த்தார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இப்போது நீங்கள் பேசுவதும் அப்படித்தான் இருக்கிறது. 'ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது' என்று கேட்கிறீர்கள். உண்மையில் அது கடினமில்லை. உள்நிலையில் பயணிப்பதற்கான வழிமுறையை, தற்போதைய சமூகம் பராமரிக்கத் தவறிவிட்டது. இளம் வயதிலிருந்தே அதற்கான பாதையில் நீங்கள் இல்லாதபடியால், இப்போது அது மிகவும் கடினமாகத் தெரிகிறது.

இக்கால சமுதாயங்கள் எதுவுமே ஆன்மீக வளர்ச்சிக்கான வழிமுறைகளை உருவாக்கப் போதுமான முயற்சிகள் மேற்கொள்ள வில்லை. பள்ளி, மருத்துவமனை என்று அனைத்தும் உருவாக்குகிறோம். ஆனால் நமது உண்மையான நலனான உள்நலனுக்குத் தேவையான வழிமுறைகளை உருவாக்க மட்டும் இந்த சமூகம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நாம் இப்போது அதைத்தான் செய்ய முயற்சிக்கிறோம். ஆன்மீக வளர்ச்சிக்கான ஒரு வழிமுறையை உருவாக்க முயற்சிக்கிறோம்.

சேகர்: சத்குரு, அன்பு பற்றி ஒரு கேள்வி. நான் உங்களுடன் தியானலிங்கத்திற்கு வந்தபோதும் சரி, உங்களுடைய யோக வகுப்பில் கலந்து கொண்டபோதும் சரி, மக்கள் உங்களைப் பார்த்தவுடன், தூரத்திலிருந்து பார்த்தாலும் கூட, திடீரென்று அவர்களிடமிருந்து அன்பு பெருக்கெடுக்கிறது. அப்போது அங்கு என்ன நடக்கிறது? மனஅழுத்தத்தில் இருந்தும், பல உணர்ச்சிகளிலிருந்தும் விடுதலை அடைகிறார்களா? அல்லது நீங்கள் ஏதாவது அவர்களுக்கு சக்தியைப் பரிமாற்றம் செய்கிறீர்களா?

சத்குரு: வாழ்க்கை ஒருவிதமான சக்தியாக இருக்கிறது. நீங்கள் ஒருவிதமான சக்தியாக இருக்கிறீர்கள். உங்கள் சக்தி - எண்ணமாக, உடலின் செயல்களாக, உணர்ச்சிகளாக, மேலும் சக்தியின் செயல்களாக பல்வேறு வகைகளில் வெளிப்படுகிறது.

ஒரு அறிவாளி ஒரு பக்தரை முட்டாளாகத்தான் பார்க்கிறார். ஆனால் வாழ்க்கை அனுபவத்திலும், வாழ்க்கையை உணரும் விதத்திலும் ஒரு பக்தர் அறிவதை எல்லாம், ஒரு அறிவாளியால் எப்போதும் உணரவே முடியாது.

இவையெல்லாமே தீவிரத்தின் வெவ்வேறான நிலைகள். உடல்தன்மை ஒருவிதமான தீவிரத்தில் இருக்கிறது. புத்திக்கூர்மை ஒருவிதமான தீவிரத்தில் இருக்கிறது. உணர்ச்சி வேறொரு விதமான தீவிரத்தில் இருக்கிறது. பொதுவாக மக்கள் உணர்ச்சியை, புத்திக்கூர்மையை விட குறைத்தே மதிப்பிடுகிறார்கள். இது மிகவும் தவறானது. அறிவாற்றலை விட உணர்ச்சி பல வழிகளில் அதிக தீவிரத்துடன் இருக்கமுடியும். புத்திக்கூர்மைக்கு ஒருவித உணர்ச்சியற்ற, பிரித்தறியும் குணம் உண்டு. ஆனால் உணர்ச்சியோ எவ்வித வரம்பும் இன்றி அனைத்தையுமே அரவணைத்துக் கொள்ளும். புத்திக்கூர்மையால் வாழ்க்கையின் சில பகுதிகளைத் மட்டுமே புரிந்து கொள்ள முடியும், ஆனால் உணர்ச்சியால் வாழ்க்கையை அதன் முழுமையில் அறிந்து கொள்ள முடியும். இந்தக் காரணத்தினால்தான் ஆன்மீகக் கலாச்சாரம் எப்போதுமே பக்திக்கு முக்கியத்துவம் தருகிறது. ஒரு அறிவாளி ஒரு பக்தரை முட்டாளாகத்தான் பார்க்கிறார். ஆனால் வாழ்க்கை அனுபவத்திலும், வாழ்க்கையை உணரும் விதத்திலும் ஒரு பக்தர் அறிவதை எல்லாம், ஒரு அறிவாளியால் எப்போதும் உணரவே முடியாது. எனவே ஒரு பக்தர் பார்ப்பதற்கு ஒரு முட்டாள் போல் தெரிவார், ஆனால் உண்மையான முட்டாள் வேறெங்கோ இருக்கிறார் (சிரிக்கிறார்).

சேகர்: சரி....

சத்குரு: மக்கள் என்னை சுற்றி இருக்கும்போது அங்கு நிகழ்வது சக்தியின் அதிர்வு மட்டுமே. நான் ஒரு விதமான அதிர்வை ஏற்படுத்தினால், சிலர் தங்கள் கருவிழிகளை மேலே உயர்த்தி அப்படியே அமர்ந்திருப்பார்கள், சிலர் அழுவார்கள், சிலர் சிரிப்பார்கள், சிலர் அந்த இடத்தில் பல விஷயங்களை அறிந்துகொண்டதாக உணர்கிறார்கள். இவையெல்லாம் அவர்கள் வெளிப்படுத்தும் விதம். மின்சாரத்தின் உதவி கொண்டு சிலர் வெளிச்சத்தை ஏற்படுத்துகிறார்கள், சிலர் சப்தத்தை ஏற்படுத்துகிறார்கள், சிலர் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள், சிலர் உஷ்ணத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் மின்சாரம் ஒன்றுதான். எனவே என்னுடைய பணி சக்தியை வெளிப்படுத்துவது மட்டுமே. சிலர் அதைக் கொண்டு அன்பை வெளிப்படுத்துகிறார்கள், சிலர் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறார்கள், சிலர் தியானத் தன்மையை வெளிப்படுத்துகிறார்கள். இது அந்தந்த நபர்களின் வளர்ச்சி நிலையையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையையும் பொறுத்து அமைகிறது.

எனவே, நான் ஒரு அன்பான சக்தியை உருவாக்குகிறேனா? அன்பான சக்தி என்று எதுவும் இல்லை, அங்கு உயிர் சக்தி மட்டுமே உள்ளது. அன்பு என்பது அறிவு, உடல் செயல், விழிப்புணர்வு என்று லட்சக்கணக்கான வழிகளில் வெளிப்பட முடியும். ஆனால் மக்கள் ஒன்றைவிட மற்றொன்று சிறந்தது என்று புகழ்கிறார்கள். இது மிகவும் தவறாகும்.

மக்கள் இப்போது 'அன்பே இந்த பிரபஞ்சத்தின் நோக்கம்' என்று பேசுவது வழக்கமாகிவிட்டது. அன்பு என்பது மனிதனின் ஒரு உணர்ச்சி. அன்புக்கும் பிரபஞ்சத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அன்பு என்பது உங்கள் உணர்ச்சியின் இனிப்பான தன்மை, அவ்வளவுதான்.

உங்கள் உடல் இனிமையாக இருந்தால் அது ஆரோக்கியம். அதேபோல் உங்கள் மனம் இனிமையாக இருந்தால் அமைதி, மிகவும் இனிமையாக இருந்தால் மகிழ்ச்சி. உங்கள் உணர்ச்சி இனிமையாக இருந்தால் அன்பு, மிகவும் இனிமை அடைந்தால், கருணை அல்லது பக்தி. உங்கள் சக்திநிலை மிக இனிமையாக இருந்தால் ஆனந்தம். மிக மிக இனிமையாக இருந்தால் பேரானந்தம். என் அருகில் ஒரு சிலர் பேரானந்த நிலையை அடைகிறார்கள். ஒரு சிலர் அன்பான நிலையை அடைகிறார்கள். சிலர் விழிப்பான நிலையை அடைந்து தியானத் தன்மைக்கு செல்கிறார்கள். ஆனால் இது அவர்கள் செய்வது. அவர்களுடைய கருவி அப்படி செயல்படுகிறது. நான் செய்வதெல்லாம், உயிர் சக்தியை மிகத் தீவிரமாக வெளிப்படுத்துவதுதான்.


அடுத்த வாரம்...
அன்பு குறித்த விவாதம் மேலும் விரிகிறது. அந்த விவாதம் நமக்கு பல உண்மைகளைப் புரிய வைக்கிறது. அன்பு குறித்து பேசும் அடுத்த வாரப் பதிவிற்காக காத்திருங்கள்...