ஆட்டிஸம் உள்ள குழந்தைகளை எப்படி வளர்ப்பது?

ஆட்டிஸம் போன்ற குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளைப் பற்றி உங்களுடய கருத்து என்ன?
 

Question:ஆட்டிஸம் போன்ற குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளைப் பற்றி உங்களுடய கருத்து என்ன?

சத்குரு:

ஆட்டிஸம் குறைபாடுள்ள குழந்தைகள் என்று யாரும் இல்லை. அவர்கள் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள், அவ்வளவுதான். இங்கு பல்வேறு விதமான உடல், மனம் கொண்டவர்கள் இருக்கின்றனர். அவர்களை முத்திரை குத்தத் தேவையில்லை. வெவ்வேறு விதமான குழந்தைகள் வெவ்வேறு விதங்களில் வருகின்றனர். இயற்கையின் படைப்புகள் எப்போதும் நீங்கள் நினைப்பது போல வெளி வருவதில்லை. படைப்புத் தொழில், அதிர்ஷ்டவசமாக, தானியங்கியாக இல்லை.

ஒரு சர்வதேச விளையாட்டு வீரருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நீங்கள் நடப்பதும், ஓடுவதும் குறைபாடாகத்தான் தெரியும்.

குறிப்பிட்ட அளவு புத்திசாலியான ஒரு மனிதனுடன் ஒப்பிட்டால், தங்களை நல்ல மன நலத்துடன் இருப்பதாக எண்ணிக் கொள்பவர்களும், மருத்துவ ரீதியாக இயல்பான மன நலம் உள்ளவர்கள் என்று சான்றளிக்கப்படுபவர்களும் கூட சற்று குறைபாடு உள்ளவர்களாகத்தான் தெரிவார்கள். அதே போல, ஒரு சர்வதேச விளையாட்டு வீரருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நீங்கள் நடப்பதும், ஓடுவதும் குறைபாடாகத்தான் தெரியும். ஒரு மனித உடலால் எப்படியெல்லாமோ செய்ய முடிந்து, உங்களால் இப்படி மட்டும்தான் செய்ய முடியும் என்றால், உங்களுக்கு குறிப்பிட்ட அளவு குறைபாடு இருப்பதாகத்தானே அர்த்தம். ஆனால் உங்களைச் சுற்றி இதே அளவு குறைபாடுகள் உள்ள மனிதர்கள் நிறைந்திருப்பதால், இதை சாதாரணம் என்று கூறுகிறீர்கள்.

ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒன்றைச் செய்யும் அளவு திறமைசாலியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நிர்ணயித்து, அதை ஒருவரால் செய்ய முடியாமல் போனால், நீங்கள் அவர்களுக்கு முத்திரை குத்தினால், குறைபாடு அந்தக் குழந்தைக்கு இல்லை, இந்த சமுதாயத்திற்குத்தான். அந்தக் குழந்தைகளுக்கு முத்திரை குத்தத் தேவையில்லை. அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான கவனமும், அக்கறையும் கொடுப்பது உங்கள் குறிக்கோளாக இருக்கலாம், ஆனால் அந்த முத்திரை, அந்த குழந்தைக்கு உதவுவதை விட இன்னும் அதிகமான சேதத்தை விளைவிக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் விதவிதமான வாய்ப்புகளுடன் பிறந்திருக்கிறான். அவனால் என்ன சாதிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியாது. நமது தொழிற்சாலைகளின் உற்பத்தியை பெருக்க, இயந்திரங்கள் மட்டும்தான் உபயோகப்படும் என்று முடிவு செய்து எப்படி சில மனிதர்களை நாம் தகுதியில்லாதவர்கள் என்று நிராகரிக்கிறோமோ, அப்படி குழந்தைகளை முத்திரை குத்துவது கொடூரமான குற்றம். இதுவே இந்தக் குழந்தைகள் பழங்குடி இனத்தில் பிறந்திருந்தால், அந்த இனத்தின் மூத்தவர்கள், "இந்தக் குழந்தையால் இதை மட்டும்தான் செய்ய முடியும்" என்று புத்திசாலித்தனமாக யோசித்திருப்பார்கள். அந்தக் குழந்தையை அந்த மாதிரியான வேலையில் ஈடுபடுத்தியிருப்பார்கள். அவர்களை வேறு விதமான வேலைகளில் ஈடுபடுத்தி கொடுமைபடுத்தியிருக்க மாட்டார்கள். அவர்களை முத்திரை குத்தாமல் இருந்திருந்தால், இது மிகவும் சுலபமாக இருந்திருக்கும். ஆனால் நீங்கள் எல்லோருக்கும் ஒரே விதமான முறைகளைக் கையாள்வதால், ஒரே விதமான வழியில்தான் எல்லோரையும் போகச் சொல்வீர்கள். எல்லோரும் ஒரே அளவான வடிவத்தில்தான் வெளிவர வேண்டும், ஒரே பட்டம், ஒரே முட்டாள்தனம். இதில் பல மனிதர்கள் பொருந்தவே மாட்டார்கள்.

குழந்தைகளை முத்திரை குத்துவதற்குப் பதிலாக, வாழ்க்கையில் அவர்கள் எங்கே சுலபமாகப் பொருந்துவார்கள் என்பதைப் பார்த்து, அதை ஆனந்தமாகச் செய்ய அவர்களை ஊக்கப்படுத்தினால், அவர்கள் நன்றாக இருப்பார்கள்.

இதிலிருந்து பல குழந்தைகள் வெற்றிகரமாக வெளியே வந்துவிட்டாலும், இந்த கல்வி கற்கும் முறை அவர்களில் பலருக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்துள்ளது. பெரும்பாலான குழந்தைகளுக்கு பள்ளிக்குச் செல்வதே பெரும் துயரமாக இருக்கிறது. வெறும் 30-35 சதவிகித குழந்தைகள்தான் இன்றைய கல்வி முறையில் மிகவும் நசுக்கப்படாமல் பொருந்த முடியும் என்று நான் சொல்வேன். இன்னொரு 15-20 சதவிகித குழந்தைகள் இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு பொருந்திக் கொள்வார்கள். ஆனால் மற்றவர்கள் கண்டிப்பாக கஷ்டப்படுவார்கள். எல்லோரும் ஒரே வடிவத்தில் வெளிவர வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள், அதுதான் காரணம். இது மனித குலத்துக்கு எதிரான மிகக் கொடூரமான குற்றம்.

இந்த உலகிலேயே, அதிகமாக நசுக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான். தாங்கள்தான் நசுக்கப்படுவதாகப் பெண்கள் கூறுவார்கள், ஆனால் அது உண்மையில்லை. ஆண்கள், பெண்கள் இருவராலுமே குழந்தைகள் நசுக்கப்படுகின்றன. நசுக்கப்படுகின்றன என்று நான் சொல்வது, அவர்கள் மேல் உங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள், தத்துவங்கள், நம்பிக்கைகள், மதங்கள் போன்ற எல்லா முட்டாள்தனங்களையும் திணிப்பதைத்தான் கூறுகிறேன். இதுதான் மிகப் பெருங்குற்றம். வேறு வழியில்லாமல், நீங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு, உங்களை எதிர்பார்த்து இருப்பதனால், உங்களது பெற்றோர் உங்களுக்குக் கொடுத்த, உருப்படியில்லாத எல்லா முட்டாள்தனங்களையும் அவர்கள் மேல் நீங்கள் திணித்து விடுகிறீர்கள்.

குழந்தைகளை முத்திரை குத்துவதற்குப் பதிலாக, வாழ்க்கையில் அவர்கள் எங்கே சுலபமாகப் பொருந்துவார்கள் என்பதைப் பார்த்து, அதை ஆனந்தமாகச் செய்ய அவர்களை ஊக்கப்படுத்தினால், அவர்கள் நன்றாக இருப்பார்கள். அந்தக் குழந்தையால் ஒரு நிறுவனத்தை நடத்த முடியாமல் போகலாம். ஆனால் அவனால் ஒரு இசைக்கருவியை வாசிக்க முடியும். ஒவ்வொரு குழந்தைக்கும் அவனுக்குத் தேவையான நேரத்தை நாம் ஒதுக்க வேண்டும். ஒருவருக்கு நேரம், பொறுமை, அன்பு, புத்திசாலித்தனம் இவையெல்லாம் இருந்தால், அவர்கள், குழந்தைக்கு என்ன தேவைப்படுகிறதோ, அதைச் செய்ய வேண்டும். ஒரு ரோஜாச் செடியை, தென்னை மரத்தைப் போல வளர்க்கக் கூடாது. அக்கறையுடன், கருணையுடன் அவர்களைப் பார்த்துக் கொள்வதுதான் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அது அவர்களுக்கான சிகிச்சை இல்லை. அது நமது சமுதாயத்தை சீரமைக்கும் ஒரு வழி. நமது வாழ்க்கையை இந்த விதத்தில் சீர்படுத்தி, ஒவ்வொரு மனிதனும் இந்த சமுதாயத்திற்குள் பொருந்தி, அவருடைய பாத்திரத்தை முழுமையாக வாழ்வதற்கு நாம் வழி செய்ய வேண்டும்.

 
 
 
 
Login / to join the conversation1
 
 
6 வருடங்கள் க்கு முன்னர்

இந்த நேரிடையான கேள்வி வந்ததன் நோக்கம், சமுதாயத்தில் இருக்கும் பிரச்சனையால்தான். ஆனால், பதில் நேரிடையாகவும் இல்லை, பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதாகம் தெரியவில்லை. எனக்கு இருக்கும் பிரச்சனைகளின் நடுவில், நான் ஒரு சமுதாயத்திடம் சென்று நீங்கள் முத்திரை குத்தாதீர்கள், திருந்தி விடுங்கள் என்று சொல்ல முடியாது. மற்றும், குரு மற்ற இடங்களில் சொல்வது போல், அவர்களை மாற்ற நான் யார்?
என் தோட்டத்தில் இருப்பது ரோஜாவா, தென்னையா, மல்லியா - தெரியாமல்தானே இந்த கேள்வி.