‘அம்’ என்ற ஒலி... மதம் சார்ந்ததா? உயிர் சார்ந்ததா?
உங்கள் தலைக்குள் ஓடும் எண்ணங்கள் மனரீதியான செயல்கள்தானே தவிர உண்மையானவையல்ல. நீங்கள் விரும்புகின்ற எதை வேண்டுமானாலும் நீங்கள் நினைத்துக்கொள்ள முடியும். ஆனால் அது உங்களுடைய பின்னணியல்ல.
 
‘அம்’ என்ற ஒலி... மதம் சார்ந்ததா? உயிர் சார்ந்ததா?, Aum endra oli matham sarnthatha uyir sarnthatha?
 

Question:சத்குரு, நான் கிறித்துவப் பின்னணியிலிருந்து வருகிறேன். என்னுடைய குடும்பத்தினர், ‘அம்’ ஒலியினை (AUM) வேறு ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தது என்று ஆட்சேபிக்கின்றனர். தயவு செய்து இது குறித்து எனக்கு அறிவுரை கூறுங்கள்.

சத்குரு:

இங்கிருக்கும் எவருமே, கிறித்துவ பின்னணியிலிருந்தோ அல்லது முகமதிய பின்னணியிலிருந்தோ அல்லது இந்து என்கிற பின்னணியிலிருந்தோ வரவில்லை. நீங்கள் கிறித்துவராக இருந்தால் யோகா உங்களுக்கு வேலை செய்யாது. நீங்கள் முகம்மதியராக இருந்தால் நிச்சயம் வேலை செய்யாது. நீங்கள் இந்துவாக இருந்தாலோ சிறிதும் வாய்ப்பு இல்லை. இது ஒரு உயிராக இருப்பவர்க்கு மட்டுமே வேலை செய்யும். ஒரு கிறித்துவர் என்பதோ, முகமதியர் என்பதோ அல்லது இந்து என்பதோ ஒருவருக்கு பின்னணியாக இருப்பது கிடையாது. உயிர்த்தன்மை என்பது மட்டும்தான் பின்புலமாக இருக்கிறது. முகமதியர், கிறித்துவர் மற்றும் இந்து என்பதெல்லாம் அலங்காரத்திற்கான வார்த்தைகளே. அலங்கரிப்பு என்பதே மற்றவர்களுக்காகத்தானே அன்றி, உங்களுக்காக அல்ல. உங்களுடைய பின்புலம் இந்து என்றோ அல்லது கிறித்துவர் என்றோ நினைத்தால், அந்தக் கணத்திலேயே நீங்கள் வாழ்க்கையை நிச்சயம் தவறவிடுவீர்கள்.

உங்கள் தலைக்குள் ஓடும் எண்ணங்கள் மனரீதியான செயல்கள்தானே தவிர உண்மையானவையல்ல. நீங்கள் விரும்புகின்ற எதை வேண்டுமானாலும் நீங்கள் நினைத்துக்கொள்ள முடியும். ஆனால் அது உங்களுடைய பின்னணியல்ல.

ஆனால், ‘அம்’ என்னும் ஒலி உங்களுடைய குடும்பத்திற்கு ஒவ்வாமையாக இருக்கிறது. அந்த ஒலியினை அவர்கள் உச்சரிக்காமல், காதால் வெறுமனே கேட்பது கூட பல நன்மைகளைத் தரும். ஆனால், அது அவர்களுடைய அலங்காரத்திற்கு உகந்த விஷயமாக இல்லாததால், அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. ‘அம்’ ஒலி உயிரின் மையத்தை அடைவதற்கு முயற்சிக்கிறது. அது இந்து மத அடையாளமல்ல. அது ஒலியாகவும், உயிர்த்தன்மையாகவும் மட்டுமே உள்ளது. யாராவது ஆட்சேபிக்கும்பட்சத்தில் ‘ஆமென்’ உச்சரிப்பதாகக் கூறமுடியும். ஒவ்வொரு விஷயத்திலும் மக்கள் பிரச்சனையை உருவாக்கவே முயன்று வருகிறார்கள். ஆனால் நீங்கள் முயன்றால் ஒவ்வொன்றிற்கும் தீர்வு காணலாம்.

எந்த ஒன்றையும் நீங்கள் உங்களுடைய பின்னணியாகக் கொள்ளாதீர்கள். உயிர்த்தன்மைதான் உங்களுடைய பின்புலம். உயிர்த்தன்மைதான் உங்களுடைய இருப்பு. நீங்கள் அதற்குரிய மதிப்பளிக்கவில்லை என்றால், அதை நீங்கள் போற்றவில்லை என்றால், அதை நீங்கள் உயர்த்திக் கொள்ளவில்லை என்றால், அந்த உயிர்த்தன்மையின் முழுமையான ஆழத்தையும், பரிமாணத்தையும் உணரக்கூடிய வகையில் உங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால், தேவையற்ற இந்த சமூக அடையாளங்களை மட்டுமே நீங்கள் சுமந்து கொண்டிருக்க நேரும்.

உயிர்த்தன்மை பற்றியோ, வாழ்க்கை பற்றியோ அல்லது உயிரின் மூலம் என்ன என்பதையோ நீங்கள் அறிய முடியாது. நீங்கள் படைப்பையோ அல்லது படைத்தவனையோ அறிந்துகொள்ள முடியாது. எதையெதையோ பிதற்றிக் கொண்டு இருப்பீர்கள். நீங்கள் விரும்பும் கடவுள்களை உங்கள் தலைக்குள் நீங்கள் கற்பனை செய்துகொள்ள முடியுமேயன்றி வேறு ஒன்றும் நடக்காது. உங்கள் தலைக்குள் ஓடும் எண்ணங்கள் மனரீதியான செயல்கள்தானே தவிர உண்மையானவையல்ல. நீங்கள் விரும்புகின்ற எதை வேண்டுமானாலும் நீங்கள் நினைத்துக்கொள்ள முடியும். ஆனால் அது உங்களுடைய பின்னணியல்ல. அது உங்களுடைய உருவாக்கம் மட்டுமே. உங்களுடைய உருவாக்கம் முக்கியமா அல்லது படைத்தவனின் உருவாக்கம் முக்கியமா என்பதை முடிவு செய்யுங்கள்.

படைத்தவன் உருவாக்கியது முக்கியமென்றால் நீங்கள் எப்படி ஒரு இந்துவாகவோ, கிறித்துவராகவோ அல்லது முகமதியராகவோ இருக்க முடியும்? நீங்கள் உயிர்த்தன்மை உடையவராக மட்டும்தானே இருக்க முடியும்? அந்த விதமாகத்தான் நீங்கள் உருவாக்கப் பட்டிருக்கிறீர்கள். மற்றவை அனைத்தும் உங்களுடைய உருவாக்கம்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1