அதிசய குரு
'தியானலிங்கம்' இன்று இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே பலர் ஒருவித தெய்வீக உணர்விற்கு செல்வதைப் பார்க்கிறோம்; வீடுகளில், கடைகளில், காலண்டர் படமாகவும் ஃபளக்ஸ் போர்டாகவும் வைத்துக் கொண்டாடப்படுவதைக் காணமுடிகிறது. பல லட்சம் பேர்களின் உயிர்களைத் தொட்டு தீட்சை வழங்கி வரும் 'தியானலிங்கம்' எனும் உயிரோட்டமான ஒரு குரு எப்படி உருவாக்கப்பட்டார். ஆயிரமாயிரம் யோகிகளின் நெடுநாள் கனவான தியானலிங்கத்தை, பிராணப் பிரதிஷ்டை செய்வதற்கு, சத்குரு எதிர்கொண்ட உயிர்சிலிர்க்கச் செய்யும் நிகழ்வுகள் என்னென்ன என்பதையெல்லாம் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் தனக்கே உரிய இயல்பான மொழிநடையில் இத்தொடரில் விவரிக்கிறார். தொடர்ந்து படியுங்கள்!
 
 

தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 1

'தியானலிங்கம்' இன்று இந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே பலர் ஒருவித தெய்வீக உணர்விற்கு செல்வதைப் பார்க்கிறோம்; வீடுகளில், கடைகளில், காலண்டர் படமாகவும் ஃபளக்ஸ் போர்டாகவும் வைத்துக் கொண்டாடப்படுவதைக் காணமுடிகிறது. பல லட்சம் பேர்களின் உயிர்களைத் தொட்டு தீட்சை வழங்கி வரும் 'தியானலிங்கம்' எனும் உயிரோட்டமான ஒரு குரு எப்படி உருவாக்கப்பட்டார். ஆயிரமாயிரம் யோகிகளின் நெடுநாள் கனவான தியானலிங்கத்தை, பிராணப் பிரதிஷ்டை செய்வதற்கு, சத்குரு எதிர்கொண்ட உயிர்சிலிர்க்கச் செய்யும் நிகழ்வுகள் என்னென்ன என்பதையெல்லாம் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் தனக்கே உரிய இயல்பான மொழிநடையில் இத்தொடரில் விவரிக்கிறார். தொடர்ந்து படியுங்கள்!

பட்டுக்கோட்டை பிரபாகர்:

அன்புமிக்க வாசகர்களுக்கு.. இப்போது நீங்கள் படிக்கும் வரிகளை கணிணியில் அடித்தவரோ, இந்தப் புத்தகத்தை இயந்திரத்தில் அச்சிட்டுத் தந்தவரோ எப்படி இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்துக்களுக்கு உரிமை கொண்டாட இயலாதோ.. அப்படித்தான் இந்தக் கட்டுரைத் தொடரில் உள்ள விஷயங்களுக்கும் நான் சொந்தக்காரன் இல்லை. சத்குரு அவர்களின் எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் மட்டுமே தருகிறேன். சத்குரு தம் அனுபவங்களில் சேகரித்த பொக்கிஷக் கருத்துக்களை உங்கள் மனங்களில் செதுக்குவதற்கு வார்த்தை உளி எடுத்துக் கொடுக்கிறேன். அவ்வளவே!

இந்தக் கல், இந்த மரம், இந்தப் பூ, இந்த பனித்துளி, இந்தக் குழந்தை, இந்தக் கிழவன், இந்த மீன், இந்த மான் என்று எல்லாமே என் ஒரு அங்கம் என்று உணர்தலே தன்னை அறியும் ஞானம்!

பேசத் துவங்கும் குழந்தை உடனே கேள்வி கேட்கவும் துவங்குகிறது.

முதல்முறையாக மழையைப் பார்க்கிற குழந்தை, “அம்மா, இது என்ன?” என்கிறது.

அம்மா சொல்கிறாள், “இதுதான் மழை”

“அப்படின்னா?”

“தண்ணி, சுத்தமான தண்ணி”

“இது எங்கேர்ந்து வருது”.

“வானத்துலேர்ந்து வருது”.

“தண்ணி இங்க கீழதானே இருக்கு. இது எப்படி வானத்துக்குப் போச்சு?”

“அது - கடல் இருக்குல்ல, அங்க இருக்குற தண்ணி, சூரியனோட வெப்பத்தால ஆவியாகி மேல போய் மேகமாகுது. மேகம் குளிர்ச்சியாகறப்போ அது மழையாப் பெய்யுது”.

“இது இந்த மாதிரி மேல போயி இந்த மாதிரி கீழ வரணும்னு யாரு செஞ்சு வெச்சிருக்காங்க?”

“இது இயற்கை.. இது விஞ்ஞானம்”.

“இந்த இயற்கையைச் செஞ்சது யாரு?”

இது வரை சரளமாகப் பதில் சொன்ன அம்மா அடுத்து பதில் சொல்லத் திணறுகிறாள். இயற்கைன்னா அதான் சாமி. வீட்ல பூஜை ரூம்ல இருக்கே, அந்தச் சாமிதான் என்கிறாள் ஒரு அம்மா. சாமின்னா? என்று அந்தக் குழந்தை மேலும் கேட்டால், சொல்வதற்கு கைவசம் ஏராளமான கதைகள், புராணங்கள் வைத்திருக்கிறாள்.

உண்மையில் பார்த்தால் குழந்தைக்கு மட்டும்தான் இந்த மாதிரிக் கேள்விகள் இருக்கிறதா? நமக்கும் உண்டுதானே?

ருசியைப்போல, ஓசையைப்போல, காட்சியைப் போல, காதலைப் போல, கடவுளைப் போல, உணர்ந்து பார்க்க வேண்டியது - ஞானம்!

விதவிதமான பூக்களைப பார்க்கும்போது, மலைகளை, சிகரங்களைப் பார்க்கும்போது அருவிகளை, மரங்களை, அபூர்வமான உயிரினங்களைப் பார்க்கும்போது, கர்ப்பத்தில் உதிக்கும் ஒரு குழந்தையின் கருவில், சிரிக்கும்போது கன்னத்தில் விழப்போகிற குழியும், பற்களின் வரிசையும், கையசைத்து பேசும் உடல் மொழியும், நிறமும், தலைமுடியும், 40க்கு மேல வரப்போகிற சர்க்கரை வியாதியும் இன்னும் ஒரு வம்சத்தின் ஆயிரமாயிரம் தகவல்களும் பொதிந்திருப்பதை யோசிக்கும்போது, விஞ்ஞானத்தைத் தாண்டி காரணம் தேடுகிறது மனசு. அந்தக் கருவுக்கு இத்தனை நாட்களில் விரல்கள், இத்தனை நாட்களில் இமைகள், இத்தனை நாட்களில் எல்லாம் முழுமையாகி உலகுக்குள் குதிக்கத் தயாராவது என்கிற இதையெல்லாம் கட்டமைத்தது யார்? இந்த மனிதப் பிறப்பின் அர்த்தம்தான் என்ன?

நம் புராணங்களில் கடவுளுக்கு நிறைய உருவங்கள், வடிவங்கள், உடலமைப்புகள் தரப்பட்டிருக்கின்றன. நிஜத்தில் கடவுள் அப்படித்தான் நான்கு தலைகள், பத்து கைகள் என்று விஸ்வரூபமாக வானத்தில் ஓரிடத்தில் குடியிருக்கிறார் என்று யாரும் வானத்தில் தேடுவதில்லை. தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் கடவுளின் சர்வ சக்தித் தத்துவத்தின்படி எல்லா படைப்புகளும் கடவுளின் பாகம் என்பது நமக்குத் தகவலாக மட்டுமே தெரிகிறது. அது ஓர் அறிவாக இருக்கிறது. அனுபவமாக உணர்வதில்லை. இந்த உண்மையைப் புரிந்துகொள்வது என்பது வேறு. உணர்வது என்பது வேறு. இந்த உண்மையை உணர தன்னை உணர்தல் வேண்டும்.

தன்னை உணர்வதே ஞானம்!

தன்னை உணர்வது என்றால் என்ன?

இந்தக் கல், இந்த மரம், இந்தப் பூ, இந்த பனித்துளி, இந்தக் குழந்தை, இந்தக் கிழவன், இந்த மீன், இந்த மான் என்று எல்லாமே என் ஒரு அங்கம் என்று உணர்தலே தன்னை அறியும் ஞானம்!

நம் வாழ்வின் எல்லா அனுபவங்களும், ஐம்புலன்களைக்கொண்டே அமைகின்றன. ஐம்புலன்கள் ஒப்பிட்டுப் பார்த்து மட்டுமே அறிய முடிகிற தன்மைகொண்டவை. ஐம்புலன்களைக் கடந்து வாழ்வை உணரத் துவங்கினால்தான் பிறந்ததன் பயன் அல்லது ஒரு மரத்தைப் போல, ஒரு பறவையைப் போல தற்செயலான ஒரு வாழ்க்கையே வாழ முடியும்!

ஓர் உரையாடல் பார்க்கலாம்..

“புதிதாக ஒரு இனிப்பு சாப்பிட்டேன். மிகச் சுவையாக இருந்தது” என்று சொல்கிறான் ஒரு நண்பன்.

“எவ்வளவு சுவையானது?” என்று கேட்கிறான் இன்னொரு நண்பன்.

“ரொம்ப ரொம்பச் சுவையானது”

“ஜாங்கிரி போன்ற இனிப்பா?”

“இல்லை, இது வேறு சுவை”.

“பாதுஷா போன்ற சுவையா?”

“இல்லை, இது வேறு சுவை”

உலகத்தில் உள்ள அத்தனை இனிப்பு வகைகளைப் பற்றி இவர் சொன்னாலும் இவரால் அந்தச் சுவையைப் புரிந்துகொள்ள முடியாது. அவரால் புரியவைக்கவும் முடியாது.

அதைப்போலத்தான் ஐம்புலன்களைத் தாண்டி வாழ்வை உணர்வதென்றால் அது எப்படி இருக்கும் என்று அந்த அனுபவத்தை வார்த்தைகளால் உணரவைக்க முடியாது. இது படம் வரைந்து பாகம் குறித்து, பாடம் நடத்திப் புரியவைக்கிற விஷயம் இல்லை. மனதை பக்குவப் படுத்திக்கொண்டு, விருப்பத்துடன் தேடலில் இறங்கி உணர்ந்து பார்க்க வேண்டிய விஷயம். ருசியைப்போல, ஓசையைப்போல, காட்சியைப் போல, காதலைப் போல, கடவுளைப் போல, உணர்ந்து பார்க்க வேண்டியது - ஞானம்!

பசியால் துடிப்பவனுக்கு உடனடித் தேவை, உணவு. உள்ளத்தை விட அவனுக்கு வயிறுதான் பெரிய பிரச்சினை. வாழ்வின் அடிப்படைப் பிரச்சினைகளை வென்ற மனிதனால்தான் அடுத்த சிந்தனைக்கு வர முடியும்.

இன்று இந்த நிலை மாறி வருகிறது. நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சி அசுர வேகத்தில் நிகழ்கிறது. பட்டினிச் சாவுகள் குறைந்துவிட்டன. பஞ்சம் என்கிற வார்த்தையைக் காணவில்லை. வேலை வாய்ப்புகள் பெருகிவிட்டன. அதேசமயம் இந்தச் சமூகமும் தனி மனிதனும் முன்னெப்போதும்விட மிக அதிகமான பிரச்சினைகளைச் சந்திக்கிற சூழல் இது. யோகாவுக்கான தேவை மிக அதிகமுள்ள கால கட்டம். நீங்கள் யோகா என்கிற கருவியைப் பயன் படுத்தி தன்னை உணர விருப்பமா? இப்போது வருகிறார் பயிற்சியாளராகிய குரு.

மனித வடிவில் உள்ள ஆயிரம் குருக்களை இந்த சமுதாயம் பார்த்திருக்கிறது. உலகில் முதன்முறையாக தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கிறது. மனித உருவத்தில் இல்லாத ஒரு அதிசயமான குரு. அந்த குருவின் பெயர் தியானலிங்கம்!

தியானலிங்கம் எப்படி குருவாகும்! தியானலிங்கம் எப்படி யோகா கற்றுக்கொடுக்கும்?


அடுத்த வாரம்...

ஸ்ரீபழனி ஸ்வாமிகளிடம் தீட்சை பெறுவது, தியானலிங்கம் உருவாக்க தான் முற்பிறவிகளில் எதிர்கொண்ட எதிர்ப்புகள் என சத்குருவின் முற்பிறவி நிகழ்வுகள் கூறப்படுகிறது. அடுத்த வாரப்பதிவிற்குக் காத்திருங்கள்!

இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1