அதிகம் சம்பாதித்தால் பெரிய மனிதரா?
ஊரிலும் வீட்டிலும் அதிகமாக சம்பாதிக்கிறவர்களுக்குத்தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. மதிப்பு நாம் வாங்கும் சம்பளத்திற்குத் தானா? அதிகம் சம்பாதித்தால் பெரிய மனிதரா? நிச்சயமாக இல்லை! அப்படியானால் உண்மையான மதிப்பு எதில் உள்ளது? தொடர்ந்து படியுங்கள்
 
 

ஊரிலும் வீட்டிலும் அதிகமாக சம்பாதிக்கிறவர்களுக்குத்தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. மதிப்பு நாம் வாங்கும் சம்பளத்திற்குத் தானா? அதிகம் சம்பாதித்தால் பெரிய மனிதரா? நிச்சயமாக இல்லை! அப்படியானால் உண்மையான மதிப்பு எதில் உள்ளது? தொடர்ந்து படியுங்கள்

சத்குரு:

எது மதிப்பு?

நீங்கள் பெறும் சம்பளத்தை வைத்து நீங்கள் உங்கள் மதிப்பை நிர்ணயிக்காதீர்கள். நீங்கள் எவ்வளவு மதிப்பானவர் என்பதனை உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை வைத்துதான் நீங்கள் நிர்ணயிக்க வேண்டும். உங்களுடைய பெருமை நீங்கள் எவ்வளவு ஊதியம் பெறுகிறீர்கள் என்பதில் இல்லை, உங்களை நம்பி எவ்வளவு பொறுப்புகள் ஒப்படைக்கப்படுகிறது என்பதில்தான் இருக்கிறது. பணம் என்பது உங்கள் பிழைப்பு நடப்பதற்கான ஒரு கருவி. அதனுடைய மதிப்பு, அவ்வளவுதான்.

நீங்கள் எது செய்தாலும் மக்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஆனால் உங்களிடம் எந்தமாதிரி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, உங்களுக்கும் உங்களைச் சுற்றிலுமுள்ள மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு எந்த அளவிற்கு உங்களிடம் வழங்கப்பட்டுள்ளது போன்றவையே முக்கியமான கேள்விகளாய் உள்ளன. நீங்கள் செய்யும் எந்தவொரு செயலும் மக்களின் வாழ்வின்மீது ஆழமான தாக்கம் ஏற்படுத்த முடியும் என்றால்தான், உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.

ஒரு உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு சினிமா இயக்குகிறீர்கள் என்றால் ஒருவரும் அதை பார்க்க விரும்பாதபடியா எடுப்பீர்கள்? அல்லது யாருமே படிக்க விரும்பாதபடியா ஒரு புத்தகம் எழுதுவீர்கள்? அல்லது யாரும் குடியிருக்க விரும்பாத வீட்டைத்தான் கட்டுவீர்களா? யாரும் பயன்படுத்த விரும்பாத ஒன்றைத் தயாரிக்க நீங்கள் விரும்பமாட்டீர்கள். எனவே ஒருவிதத்தில் பார்த்தால் நீங்கள் மக்களின் வாழ்வைத் தொடுவதற்கு ஏங்குகிறீர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதனை இன்னும் சற்று கூர்மையாக நோக்கினால், நீங்கள் செய்யும் செயல் மூலம் பிறரைத் தொட வேண்டும் என்பது உங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

குடும்பமா? வேலையா?

பலர் தங்கள் வாழ்க்கையை வேலை மற்றும் குடும்பம் எனப் பிரிக்கின்றனர். பணம் சம்பாதிக்க மட்டுமே வேலை என்பது போலவும் சிலரின் வாழ்க்கையைத் தொட குடும்பம் என்பது போலவும் பார்க்கின்றனர். ஆனால் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், உங்கள் கணவனோ மனைவியோ அல்லது குழந்தைகளோ நீங்கள் செய்பவற்றால் தொடப்படவில்லை என்றால், திடீரென உங்கள் குடும்பமே உங்களுக்கு அர்த்தமற்றதாக தோன்றும். உங்கள் வாழ்வில் ஏதோ ஒரு மூலையில் நீங்கள் செய்யும் செயல்கள் மற்றவர் மனதைத் தொட வேண்டும் என்பது உங்களுக்குள் இருக்கிறது. இந்த ஒரு பரிமாணத்தை உங்கள் குடும்பத்தின் வரையறைக்குள்ளேயே நிறுத்திவிட வேண்டாம். இதனை வாழ்வின் எல்லா பரிமாணங்களுக்கும் விஸ்தரியுங்கள். நீங்கள் எது செய்தாலும் மக்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அதுவே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

உங்கள் மதிப்பை, எப்போதுமே மற்றவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் பொறுப்பின் அளவுகளிலிருந்து தீர்மானியுங்கள்.

மக்களின் வாழ்வை நீங்கள் எத்தனை ஆழமாக தொடுகிறீர்கள் என்பது, நீங்கள் செய்யும் செயல்களில் நீங்கள் காட்டும் ஈடுபாட்டைப் பொறுத்தே இருக்கிறது. உங்களுக்கு ஈடுபாடு இருந்தால், நீங்கள் செயலாற்றும் விதம் இயல்பாகவே மிக வித்தியாசமானதாக இருக்கும். அப்போது உங்கள் திறமைக்கேற்ப உங்களுக்கு ஊதியம் கிடைக்கும். சில சமயங்களில் உங்கள் முதலாளியோ அல்லது உயரதிகாரியோ சம்பள உயர்வு என்று ஒன்று இருப்பதையே மறந்துவிட்டால், கொஞ்சம் பேரம்பேசி, சம்பளத்தை சிறிது உயர்த்திக் கேட்கலாம். ஆனால் பொதுவாக, ஒரு நிறுவனத்துக்கோ அல்லது வியாபாரத்துக்கோ நீங்கள் எத்தனை முக்கியமானவர் என்பதை மற்றவர்கள் உணர்ந்தால், அதற்கேற்றார்போல உங்களுக்கு ஊதியம் கிடைக்கும்.

திறமையிருந்தால் பிரமோஷன் வரும்

நீங்கள் செய்யும் செயலில் நீங்கள் முன்னேற்றம் காட்டிக் கொண்டே இருந்தால், தேவைப்படும்போது ஒரு நாள், இருக்கும் நிலையிலிருந்து அதற்கடுத்த நிலைக்கு மாறிவிடலாம். அப்போது உங்கள் ஊதியம் இரட்டிப்பாகும் வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு நிறுவனத்தின் தலைவராக இருக்கிறீர்கள். உங்களுக்கு சரியான ஊதியம் கிடைக்காவிட்டாலும், அதைப் பற்றி எண்ணாமல், நிறுவனம் வளர்ச்சியடையும்படியாக உங்களுடைய முழு திறனையும் அதில் செலுத்துகிறீர்கள். நீங்கள் நன்றாக பணிபுரிவதை உலகம் பார்த்துக் கொண்டிருந்தால், நாளை வேறு யாராவது ஒருவர், எத்தனை அதிகமான ஊதியம் வேண்டுமானாலும் கொடுத்து உங்களை இழுத்துக்கொள்ளத் தயாராக இருப்பார். எனவே உங்கள் திறமையை எப்போதுமே பணத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

பெரிய நிறுவனங்கள் எதற்காக?

நாம் தனிப்பட்ட முறையில் எதை செய்ய முடியாதோ அதை மற்றவர்களுடன் இணைந்து செய்வதற்குத்தான் பெரிய நிறுவனங்களை உருவாக்கியுள்ளோம். முற்காலத்தில் ஒவ்வொருவரும் தனிநபர் நிறுவனமாகத்தான் தங்கள் நிறுவனத்தை நடத்தினார்கள். அவரே உற்பத்தியாளர், அவரே வியாபாரி. அதையே நாம் தொடர்ந்திருக்கலாம். எதற்காக பெரிய நிறுவனங்களை உருவாக்கினோம்? ஏனெனில் ஆயிரக்கணக்கானவர்களை ஒரே நோக்கத்திற்காக ஒருமுகப்படுத்தும்போது பலன் அதிகமாக இருக்கிறது. அப்படித்தான் நிறுவனங்கள் சாதனை படைக்க முயற்சிக்கின்றன.

உங்கள் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான பேர் ஒரே நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள்? உங்கள் நிறுவனம் உங்கள்மேல் நம்பிக்கை வைத்து உங்களுக்கு எந்த மாதிரியான பொறுப்பைக் கொடுத்திருக்கிறது? என்பதுதான் உங்கள் உண்மையான மதிப்பு. நிறுவனத்திலிருந்து நீங்கள் எவ்வளவு ஊதியம் பெறுகிறீர்கள் என்பது மட்டும் முக்கியமில்லை. அதுவும் முக்கியம்தான், ஆனால் அது மட்டுமே முக்கியமில்லை. உங்கள் மதிப்பை, எப்போதுமே மற்றவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் பொறுப்பின் அளவுகளிலிருந்து தீர்மானியுங்கள். நீங்கள் உருவாக்குவது உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உண்மையிலேயே மதிப்பானதாக இருக்கிறதா என்றும் எடை போடுங்கள்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1