‘அத்தனைக்கும் ஆசைப்படு!’ என்ற சத்குருவின் வார்த்தைகள் பலதரப்பு மக்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதை பார்க்கிறோம்! இதனை தவறாக புரிந்துகொள்ளும் பலரும் ‘அத்தனையும்’ என்றால் அத்தனை பொருளும் பணமும் சொத்துகளும் என்று நினைத்துக்கொள்கிறார்கள்! சத்குருவின் இந்த விளக்கம் இதுகுறித்த தெளிவைத் தருகிறது!

Question: ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி என சொத்து சேர்த்திருக்கும் பணக்காரர்கள் யாரும் நேர்மையாக சேர்த்ததாக வரலாறு இல்லை. "அத்தனைக்கும் ஆசைப்படு, அதையும் நேர்மையாகச் செய்யநினை" என்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத தத்துவங்களாகத் தோன்றுகிறதே?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

மற்றவர்கள் பற்றி விட்டுவிடுங்கள். ஆசை, உயிருக்கே அடிப்படையான தன்மை. ஆனால் மக்கள் ஆசையை விட்டுவிட மிகத்தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் வாழ்வின் ஒரே துன்பம், வாழ்க்கை நீங்கள் நினைத்த விதமாக நடக்கவில்லை என்பதுதான். நிறைவேறாத ஆசையால்தான் மனிதனுக்கு துன்பம் நேர்கிறது. 100 விஷயங்கள் ஆசைப்பட்ட விதமாக நடந்து, ஒரு விஷயம் உங்கள் ஆசைப்படி நடக்காமல் போனாலும் அது துன்பமாய் இருக்கிறது. எனவே, ஆசையை விட்டுவிட வேண்டுமென்று உங்களுக்கு போதித்து விட்டார்கள். கவனித்துப் பார்த்தால், உங்கள் உயிருக்கு அடிப்படையே ஆசைதான். ஆனால் ஆசையை விட்டுவிட வேண்டுமென்று உங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆசையைவிட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே?

நிறைவேறாத ஆசையால்தான் மனிதனுக்கு துன்பம் நேர்கிறது. 100 விஷயங்கள் ஆசைப்பட்ட விதமாக நடந்து, ஒரு விஷயம் உங்கள் ஆசைப்படி நடக்காமல் போனாலும் அது துன்பமாய் இருக்கிறது. எனவே, ஆசையை விட்டுவிட வேண்டுமென்று உங்களுக்கு போதித்து விட்டார்கள்.

நிறைவேறாத ஆசை உருவாக்கிய பாதிப்பின் காரணமாக, மக்கள் ஆசையை விட்டுவிட வேண்டுமென்ற ஒரு ஆசையை உருவாக்கியிருக்கிறார்கள். ஆசையை விட்டுவிட்டால் நீங்கள் சாப்பிடவும் முடியாது. வாழவும் முடியாது. எதுவும் செய்ய முடியாது. உங்கள் ஆசை பெரிதாக இருந்தாலும், மிகச்சிறிதாக இருந்தாலும் அது நிறைவேறாமல் போகும்போது நேர்கிற பாதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.

ஆசையென்பது அடிப்படையான சக்தி. ஆசையின் அடிப்படை, விரிவடைய வேண்டும் என்பதுதான். தற்போது நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி, அதற்கும் மேல் இன்னும் சிறிது வளர வேண்டுமென்ற ஆசை எப்போதுமே இருக்கிறது. அந்த ஆசை நிறைவேறியவுடன் இன்னும் சிறிது வளரவேண்டும் என்கிற ஆசை வருகிறது. உங்களுக்குத் தெரிந்தவிதத்தில் மேலும் மேலும் வளர்ச்சியடைய வேண்டும், விரிவடைய வேண்டும் என்ற ஆர்வம் எப்போதுமே இருக்கிறது. சிலருக்கு தங்களிடம் உள்ள பணத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை. சிலருக்கு இன்பங்களை அதிகரித்துக் கொள்ள ஆசை, சிலருக்கு அன்பு, சிலருக்கு அறிவு, இப்படி உங்களுக்கு எது தெரியுமோ அதில் விரிவடைய வேண்டும் என்ற ஆசை எப்போதுமே இருக்கிறது.

இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று இந்த விரிவடைதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது முழுமை பெறுவதாகத் தெரியவில்லை. அப்படியானால், இந்த ஆசையின் அடிப்படைத் தன்மை எல்லையில்லாமல் போக வேண்டும் என்பதுதான். எல்லையில்லாத தன்மை இந்த உடலோடு அடையாளம் எடுத்தவுடன் ஆசை என்பது பிறந்துவிட்டது.

எல்லையில்லாமல் வளர வேண்டும், எல்லையில்லாமல் விரிவடைய வேண்டும் என்கிற ஆசை, விழிப்புணர்வில்லாமல் இப்போது பொருள்தன்மையை நோக்கிப் போய்விட்டது. பொருள்தன்மையில் எல்லையில்லாமல் போக நிச்சயம் வாய்ப்பில்லை. பொருள்தன்மை என்பதே எல்லையோடு இருப்பதுதான். மனிதன் விரும்பாததும் இந்த எல்லையைத்தான். எல்லையை எவ்வளவு அதிகரித்தாலும், இன்னும் விரிவடைய வேண்டும், அந்த எல்லையை உடைத்துச் செல்ல வேண்டுமென்ற ஆர்வம் எப்போதும் இருக்கிறது. இந்த எல்லை, பொருளாதார நிலையில் இருக்கலாம், மனநிலையில் இருக்கலாம், உடல்நிலையில் இருக்கலாம், உணர்வுநிலையில் இருக்கலாம். எப்படியென்றாலும் எல்லையை உடைத்து எல்லையற்ற நிலைக்குச் செல்லவேண்டுமென்ற ஆசை எப்போதும் இருக்கிறது. பொருள்தன்மையில் எல்லையற்ற நிலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேற வாய்ப்பில்லை. பொருள்தன்மையில் உள்ளவற்றோடு ஆசைப்பட்டால் அது நடைமுறையில் சாத்தியமற்றதுதான். பொருள்தன்மையைத் தாண்டி எப்போது நாம் வாழ்க்கையை உணரத் துவங்குகிறோமோ, அப்போதுதான் அந்த ஆசை நிறைவேற வாய்ப்பு இருக்கிறது.