ஆசையை துறப்பது ஏன் சாத்தியமில்லை?
 
 

ஆசையை துறந்தால்தான் ஆனந்தம் கிடைக்கும் என்று சிலர் சொல்லிக்கொண்டிருக்க, சத்குருவோ ‘அத்தனைக்கும் ஆசைப்படு!’ என்று சொல்கிறாரே?! எனில் எது சரியானது என்ற குழப்பம் உங்களுக்கு வந்திருக்கலாம். உண்மையில் ‘ஆசை’ என்றால் என்ன என்பதை விளக்கி, ஆசை, பேராசை, ஆசையை துறப்பது போன்றவற்றில் உள்ள உளவியல் பின்னணிகளை நகைச்சுவையுடன் எடுத்துரைக்கிறார் சத்குரு!

சத்குரு:

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்காத மனிதர் உண்டா? வெற்றி என்பது என்ன? ஆசைப்படுவதை அடைவதுதானே?

ஆசைப்பட்டதை அடைவதற்கான அடிப்படை என்ன?

ஆனந்தமாயிருப்பதுதான். வேதனையோடு இருப்பவர்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பு ஏது? ஆனந்தமாயிருக்கையில்தான் உங்கள் சக்தி முழுமையாக இயங்குகிறது.

என் மனைவி இப்படி இருக்க வேண்டும், என் குழந்தை அப்படி இருக்க வேண்டும், பக்கத்து வீட்டில் இப்படி இருக்க வேண்டும், உலகமே இன்னொருவிதமாக இருக்க வேண்டும் என்று பல நூறு நிபந்தனைகள் விதித்தால், உங்கள் ஆனந்தம் வேறொருவரின் கட்டுப்பாட்டுக்குள் அல்லவா போய்விடுகிறது?

நீங்கள் ஆனந்தமாயிருக்க வேண்டுமானால், அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? உங்கள் தந்தையா? தாயா? கணவனா? மனைவியா? குழந்தையா? நண்பனா? பக்கத்து வீட்டுக்காரனா? அடுத்த தேசத்தைச் சேர்ந்தவரா? நீங்கள் ஆசைப்பட்டதையெல்லாம் ஆனந்தமாக அடைவதற்கான வழிகள் என்ன?

ஒவ்வொன்றாய்க் காண்போம்.

மாலை வேளை. மலையின் முகட்டில் மேகங்கள் முட்டிக்கொண்டு நிற்க, பின்னணியில் சூரியன் மஞ்சளாக அமிழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த ரம்மியமான காட்சியைக் காண்கிறீர்கள். அது எங்கே இருக்கிறது? அந்த மலையிலா? வானிலா? கவனமாக யோசித்துப் பாருங்கள்.

அந்தக் காட்சியின் அனுபவம் எங்கே நேர்கிறது? உங்கள் விழித் திரையில் தலைகீழாக பிம்பம் விழுந்து மூளைக்கு சேதி அனுப்புகிறது. உங்கள் அனுபவத்தில் அப்போது மலை எங்கே இருக்கிறது? உங்களுக்கு உள்ளேதானே?

கேட்கும் இசையும், நுகரும் வாசமும், ரசிக்கும் ஸ்பரிசமும் எல்லாமே உங்களுக்குள்தானே நேர்கின்றன? வெளிச்சம், இருட்டு, ஓசை, நிசப்தம், வேதனை, ஆனந்தம் எல்லாமே உங்களுக்கு உள்ளேதான் நடக்கிறது.

ஓர் இளம்பெண் கனவு கண்டுகொண்டிருந்தாள். கனவில் முரட்டுத்தனமான மீசை எல்லாம் வைத்துக்கொண்டு, ஒரு பயங்கரமான ஆள் எதிரில் வந்தான். அவன் கண்களில் தெரிந்த காமமும், வெறியும் இந்தப் பெண்ணின் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தியது. அவன் மெள்ள மெள்ள நெருங்கி வந்தான். இவள் ஒரு கட்டத்தில் பின்வாங்க இயலாமல், சுவரில் இடித்து நின்றுவிட்டாள். அவன் மிக நெருங்கிவிட்டான். அவனுடைய மூச்சுக்காற்றுகூட அவள்மீது சூடாக இறங்கியது.

அந்தப் பெண் உதறும் குரலில் கேட்டாள்: “ஐயோ, என்னை என்ன செய்யப் போகிறாய்?”

அவன் திகைத்தான். “என்னை ஏன் கேட்கிறாய்? நீயல்லவா தீர்மானம் செய்ய வேண்டும்? என்ன இருந்தாலும், இது உன் கனவு அல்லவா?” என்றான்.

வாழ்க்கையும் அப்படித்தான். எப்படி வேண்டுமோ, அப்படி அமைத்துக்கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது.

எல்லாமே உங்களுக்குள்ளேயே நடந்தாலும், நீங்கள் ஆசைப்பட்டது மட்டும் ஏன் நிகழ மறுக்கிறது?

நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்றால், நூறு நிபந்தனைகள் போடுகிறீர்கள்.

என் மனைவி இப்படி இருக்க வேண்டும், என் குழந்தை அப்படி இருக்க வேண்டும், பக்கத்து வீட்டில் இப்படி இருக்க வேண்டும், உலகமே இன்னொருவிதமாக இருக்க வேண்டும் என்று பல நூறு நிபந்தனைகள் விதித்தால், உங்கள் ஆனந்தம் வேறொருவரின் கட்டுப்பாட்டுக்குள் அல்லவா போய்விடுகிறது?

நீங்கள் ஆனந்தமாக அன்பாக இருந்தால், சுற்றியுள்ளவர்களையும் ஆனந்தமாக வைத்துக்கொள்வீர்கள். வேதனையில் இருந்தால், சுற்றியுள்ளவர்களின் சுகத்தையும் கெடுத்துவிடுவீர்கள்.

‘ஆனந்தமாக இருக்க நான் என்ன பண்ணவேண்டும்? எதை விட்டுவிட வேண்டும்? மனைவியையா? குழந்தைகளையா? குடும்பத்தையா?’ என்று தவிக்கிறீர்கள்.

உங்கள் சமூகத்தில் ஒரு சாமியார் வருவார்.

‘ஆசைப்படுவதுதான் துன்பங்களுக்கு எல்லாம் காரணம்’ என்பார். இன்னொருவர் வருவார். ‘இன்பத்துக்கு ஆசைப்படுவதை விட்டுவிட்டு சொர்க்கத்துக்கு ஆசைப்படு. அதிகாரத்துக்கு ஆசைப்படுவதை விட்டுவிட்டு அமைதிக்கு ஆசைப்படு’ என்று ஆயிரம் விதமாய் அறிவுரைகள் சொல்லி உங்கள் மனதில் குற்ற உணர்வை அதிகப்படுத்துவார்.

‘நீ பணத்தின் மீது ஆசை வைத்தாய். அதுதான் உன் துன்பத்திற்கெல்லாம் காரணம். கடவுளின் மீது ஆசை வை’ என்று வேறொருவர் சொல்வார்.

உங்களிடம் பத்து கோடி ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். கடவுளை நம்பி உங்கள் பணத்தையெல்லாம் தேசத்தில் இருக்கும் பத்து கோடி ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டால் நிம்மதி வந்துவிடுமா?

நாளையிலிருந்து தேசத்தில் உங்களையும் சேர்த்து ஏழைகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிப்போகும், அவ்வளவுதான்.

பணம் கையில் இருந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்காவது உங்களுக்கு நேரடியான அனுபவம் இருக்கிறது. கடவுளால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று உங்களுக்கு எந்த அனுபவமும் கிடையாது.

சங்கரன்பிள்ளைக்கு ஒருமுறை மோசமான முதுகு வலி வந்து தொந்தரவு செய்தது.

டாக்டர் முதுகுத் தண்டின் எக்ஸ்ரேயை வெளிச்சத்தில் பார்த்தார். “இந்தப் பிரச்னைக்கு ஆப்பரேஷன்தான் செய்ய வேண்டும். என் கட்டணம் இருபத்தைந்தாயிரம். ஆஸ்பத்திரியில் ஆறு வாரம் தங்கி ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும்“

சங்கரன் பிள்ளை திகைத்தார். அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது?

“இதோ வந்துவிடுகிறேன் டாக்டர்” என்று எக்ஸ்ரேயை வாங்கிக்கொண்டார்.

நேரே எக்ஸ்ரே எடுத்தவரிடம் விரைந்தார்.

“டாக்டருக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து, ஒரு மணி நேரத்தில் சிகிச்சை முடிகிற மாதிரி இந்த எக்ஸ்ரேயைத் திருத்தித் தர முடியுமா?” என்று கேட்டார்.

அப்படி எக்ஸ்ரேயைத் திருத்தித் தரும் சாமியார்கள்தான் ஆசைகளை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிக்கொள்ளச் சொல்பவர்கள்.

சரி, ஆசையை விட்டுவிட வேண்டுமா? வைத்துக்கொள்ளலாமா?

உங்களைச் சுற்றியுள்ள இயக்கத்தை கவனியுங்கள்.

தங்கள் வாழ்காலம் சில மணிநேரங்கள் என்றபோதிலும், பூமியில் பூக்கும் பூக்கள் அழகாயிருக்க ஆசைப்பட்டு வண்ணம் வண்ணமாகப் பூக்கின்றன. உங்கள் மீது இருக்கும் ஆசையால்தான் பூமி தன் புவியீர்ப்பு விசையைச் செலுத்தி உங்களைத் தன்னோடு வைத்துக்கொண்டிருக்கிறது.

காற்றுப் புக முடியாதபடி உங்கள் வாயையும், மூக்கையும் சில நிமிடங்கள் பொத்திக்கொண்டு வேடிக்கை பாருங்கள். ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் வேண்டுமானால் உடம்பு பொறுத்துக்கொள்ளும். அப்புறம், உயிர் வாழ வேண்டும் என்று உங்கள் உடம்புக்குள் பீறிட்டு எழும் ஆசை உங்கள் கையைப் பிடுங்கிப் போடும்.

சூரியனிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் தனக்கான பாதையை அமைத்துக்கொண்டு இந்தப் பூமி வலம் வருகிறது. அந்தப் பாதையிலிருந்து அது விலகிப் போய்விடாமல் மையத்தில் இருக்கும் சூரியன் ஆசையோடு இழுத்துப் பிடித்திருக்கிறது.

என்றைக்காவது சூரியனுக்குத் தன் கோளங்கள் மீது ஆசை போய்விட்டால் என்ன ஆகும் யோசித்துப் பாருங்கள், புரிகிறதா?

ஆசை இல்லாமல் இந்தப் பிரபஞ்சம் இல்லை. ஆசை இல்லாமல் அலை அடிக்காது, காற்று வீசாது, சூரியன் உதிக்காது, அணு அசையாது, அடிப்படையான இயக்கம் இருக்காது. இந்த உடல் இருக்காது. உயிர் இருக்காது. ஏன், அடுத்த மூச்சே நடக்காது.

ஆசைப்படக் கூடாது என்று இந்தப் பிரபஞ்சம் ஒரு நாளும் உங்களுக்கு சொல்லித் தரவில்லை. ஆசையைத் துறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதைப் போன்ற முட்டாள்தனமான தத்துவம் எதுவுமில்லை.

மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும். ஆசையை விட்டொழிக்க வேண்டுமா வேண்டாமா என்று உங்களிடமே கேட்டுப் பாருங்கள்.

உங்கள் மனதிடம் கேட்டால், ஆமாம், ஆசையைத் துறப்பது என்று தீர்மானித்துவிட்டேன் என்று போலித்தனமாக ஞானம் பேசும்.

மனம் தந்திரசாலி. எதையோ சொல்லி உங்களை நம்ப வைத்து ஏமாற்றும் சூட்சுமம் அதற்குத் தெரியும். ஆனால் உங்கள் உடம்பு - அது பொய் சொல்லாது. உங்களுக்கு ஆசை இருக்கிறதா, இல்லையா என்று உங்கள் உடம்பிடம் விசாரித்துப் பாருங்கள்.

காற்றுப் புக முடியாதபடி உங்கள் வாயையும், மூக்கையும் சில நிமிடங்கள் பொத்திக்கொண்டு வேடிக்கை பாருங்கள். ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் வேண்டுமானால் உடம்பு பொறுத்துக்கொள்ளும். அப்புறம், உயிர் வாழ வேண்டும் என்று உங்கள் உடம்புக்குள் பீறிட்டு எழும் ஆசை உங்கள் கையைப் பிடுங்கிப் போடும். விட்டுப்போனதற்கும் சேர்த்து அள்ளி அள்ளி ஆக்ஸிஜனைக் குடிக்கும்.

உங்கள் மனம் சொன்ன தத்துவங்கள் எல்லாம் உடம்பிடம் எடுபடாது. ஏனென்றால், அதற்குப் பொய் சொல்லி ஏமாற்றத் தெரியாது.

உடம்பில் இருக்கும் ஒவ்வொரு செல்லும் ஆசையில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. வேண்டாத விருந்தாளியாக உள்ளே ஒரு நோய்க் கிருமி நுழையப் பார்க்கட்டுமே. பிழைத்திருக்கட்டுமா, போராடாமல் போய்ச் சேரட்டுமா என்று எந்த செல்லும் உங்களிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு செல்லும் ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு கடுமையான போருக்குப் போய்விடுகிறதே, ஏன்?

பிரபஞ்சம் அதற்கு வாழும் ஆசையைக் கொடுத்திருக்கிறது.

உங்களுக்கு ஆசையில்லை என்றால் இந்த வரியை நீங்கள் படித்துக்கொண்டிருக்க முடியாது. அடுத்த வரிக்குப் பார்வையை எடுத்துப் போக முடியாது, நிற்க முடியாது, நடக்க முடியாது, தூங்க முடியாது, சாப்பிட முடியாது.

நான் பசிக்காகத்தான் சாப்பிடுகிறேன், ஆசைக்காகச் சாப்பிடவில்லை என்று நீங்கள் சொல்லலாம்.

நல்ல பசியான நேரத்தில் உங்கள் உறவினர் வீட்டிற்குப் போயிருக்கிறீர்கள். இலை போட்டு, ருசிமிக்க சாப்பாட்டைப் பரிமாறுகிறார்கள். நீங்கள் முதல் கவளத்தை வாயருகில் கொண்டுபோகும்போது, உங்களை அசிங்கமாக என்னென்னவோ ஏசுகிறார்கள். அடுத்த கவளம் இறங்குமா?

நன்றாகக் கவனியுங்கள்.

பசி தீரவில்லை, ஆனால் சாப்பிட முடியவில்லை, ஏன்?

சாப்பிடும் ஆசை போய்விட்டது.

உங்களை இயக்கிக்கொண்டிருக்கும் ஒரு சக்தியை நீங்கள் உயிர் என்று சொல்கிறீர்கள். இன்னொரு சக்தியை நீங்கள் ஆசை என்று நினைக்கிறீர்கள். அடிப்படையில் இரண்டுக்கும் வேறுபாடு எதுவும் கிடையாது.

இன்னும் ஆழமாகப் பார்த்தால், ஆசைகளைத் துறக்க வேண்டும் என்று விரும்பினால், அடிப்படையில் அதுவும்கூட ஓர் ஆசைதானே?

சரி, எந்த அளவுக்கு ஆசையை வளர்த்துக் கொள்ளலாம்?

ஆசைப்படும்போது எதற்குக் கஞ்சத்தனம்? மிகப் பெரிதாக ஆசைப்படுங்கள். அந்த தைரியம்கூட இல்லாமல், அற்பமாக ஆசையைச் சுருக்கிக்கொண்டீர்களேயானால், வேறு எதைப் பெரிதாக நீங்கள் சாதித்துவிடப் போகிறீர்கள்?

‘விரும்பினால், எனக்கு இன்னும் கிடைக்கும். ஆனால் எனக்கு இது போதும்‘ என்று வைராக்கியத்துடன் ஆசையைக் குறைத்துக்கொண்டீர்களேயானால், அதை ரசிக்கலாம். அது உங்களுக்கு நிறைவைத் தரும், சந்தோஷத்தைத் தரும்.

ஆனால், ‘எனக்கெங்கே அதெல்லாம் கிடைக்கப் போகிறது? இதுவே போதும்‘ என்று உங்கள் ஆசைகளின் சிறகுகளைக் கத்தரித்துக் குறைத்தீர்களேயானால், அது கோழைத்தனம்.

நட்சத்திரங்களைக் குறி வைத்தால்தான் கூரை வரைக்குமாவது உங்கள் அம்பு போகும். ஐயோ, அவ்வளவு பெரிய ஆசையெல்லாம் கூடாது என்று வில்லைத் தழைத்துக்கொண்டே வந்தால், அம்பு உங்கள் பாதங்களின் விரல்களைத்தான் கிள்ளி எறியும்.

எனவே, உங்கள் கற்பனைக்கெட்டிய எல்லைகள் வரை உங்கள் ஆசை விரிந்து மிக மிகப் பெரிதாகவே இருக்கட்டும். அதை அடைவதற்கு முழு உத்வேகத்துடன் நூறு சதவீத முனைப்புடன் தேவையானதை எல்லாம் செய்யுங்கள்.

ஒருமுறை சங்கரன்பிள்ளை ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். ரயில் எந்த ஸ்டேஷனில் நின்றாலும், சங்கரன்பிள்ளை இறங்கிவிடுவார். இறங்கிய இடத்திலேயே நின்றிருப்பார். வண்டி புறப்படும் நேரம் ஏறிக்கொள்வார்.

சின்ன ஸ்டேஷன், பெரிய ஸ்டேஷன் என்று இல்லை. இரண்டு நிமிடம் நிற்கும் இடத்திலும் இறங்கி ஏறுவார். எதிரிலிருந்த பயணிக்கு சஸ்பென்ஸ் தாங்கவில்லை.

மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர் கார் வாங்க வேண்டுமென்று சொன்னால், அதை ஆசை என்பீர்கள். அதுவே பிளாட்பாரத்தில் படுத்திருப்பவர் சொன்னால் அது பேராசை என்பீர்கள். ஒப்பிட்டுப் பார்த்து பெருமூச்சுவிடும் குணம் உங்களிடம் இருக்கும்வரை இந்தக் குழப்பம் தீராது.

“உங்களைப் பார்த்தால் மிகக் களைப்பாகத் தெரிகிறீர்கள். உங்களோடு வந்தவர்கள் யாராவது காணாமல் போய்விட்டார்களா? புத்தகம், தண்ணீர் என்று ஏதாவது வாங்க வேண்டுமா? எதற்காக இப்படி இறங்கி, இறங்கி ஏறிக்கொண்டிருக்கிறீர்கள்?”

சங்கரன்பிள்ளை தலையை பலமாக ஆட்டினார்.

“அப்படியெல்லாம் இல்லை. சமீபத்தில் எனக்கு பைபாஸ் சர்ஜரி நடந்தது. நீண்ட தூரப் பயணங்கள் போகக் கூடாது என்று என் டாக்டர் சொல்லியிருக்கிறார். அதனால் இந்தப் பயணத்தைக் குட்டிக் குட்டிப் பயணங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

எல்லாவற்றுக்கும் ஆசைப்படு என்று சத்குருவே சொல்லிவிட்டார் என்று வார்த்தைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு நீங்கள் பேராசைப்பட ஆரம்பித்தால், சங்கரன் பிள்ளை டாக்டரைப் புரிந்துகொண்டது போல் ஆகிவிடும்.

அப்படியானால் எது ஆசை, எது பேராசை?

ஒருத்தருக்கு ஆசை என்று தோன்றுவது இன்னொருத்தருக்குப் பேராசையாய்த் தோன்றும்.

மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர் கார் வாங்க வேண்டுமென்று சொன்னால், அதை ஆசை என்பீர்கள். அதுவே பிளாட்பாரத்தில் படுத்திருப்பவர் சொன்னால் அது பேராசை என்பீர்கள்.

ஒப்பிட்டுப் பார்த்து பெருமூச்சுவிடும் குணம் உங்களிடம் இருக்கும்வரை இந்தக் குழப்பம் தீராது.

உண்மையில், உங்கள் ஆசை எங்கே தன் வேர்களை ஊன்றியிருக்கிறது என்று கவனியுங்கள்.

கல்யாணமானால் சந்தோஷம் என்று ஆசைப்பட்டீர்கள். கல்யாணம் நடந்தது. குழந்தைகள் பிறந்தால்தான் வாழ்க்கை முழுமை பெறும், அதுதான் சந்தோஷம் என்று நினைத்தீர்கள். குழந்தைகள் பிறந்தன. ஆனால்?

‘இன்றைக்கு என் நிம்மதி போனதற்கே அவர்கள்தான் காரணம்‘ என்று உடைந்து அழுகிறீர்கள்.

கோடி ரூபாய் கிடைத்தால் சந்தோஷம் என்றீர்கள், கிடைத்துவிட்டது. ஆனால், உட்கார்ந்து சாப்பிடக்கூட நேரமில்லாமல், பிரெட் துண்டங்களைக் கடித்துக்கொண்டே, அடுத்த பிஸினஸ் வெற்றிக்காக காரில் டென்ஷனுடன் கம்ப்யூட்டரை நோண்டிக்கொண்டே பயணம் செய்கிறீர்கள்.

இப்படித்தான் சங்கரன் பிள்ளையும் ஒருமுறை மாட்டிக்கொண்டார்.

நிறைய சலுகைகள் கிடைக்கும் என்று சொன்னார்களே என்று சங்கரன்பிள்ளை ராணுவத்தில் சேர்ந்தார். தவறுதலாக இரண்டு நம்பர் சிறிய அளவு பூட்ஸ்கள் அவருக்குக் கொடுக்கப்பட்டுவிட்டன.

தினமும் அவற்றுக்குள் கால்களை நுழைப்பதற்குள் விரல்கள் எல்லாம் ஒன்றன் மீது ஒன்று ஏறிக்கொள்ளும். நாள் பூராவும் அந்தச் சிறிய பூட்ஸ்களைக் கழற்றாமல், அவர் பாதங்கள் வலியில் தவிக்கும். வேதனை தாங்காமல் சங்கரன்பிள்ளை ஊருக்கெல்லாம் சாபம் கொடுத்துக்கொண்டிருப்பார்.

‘விஷயத்தைச் சொன்னால், உடனே சரியான அளவு பூட்ஸ்களைக் கொடுப்பார்களே, நண்பா. ஏன் இப்படி அவஸ்தைப்படுகிறாய்?’ என்று சக சிப்பாய் கேட்டார்.

சங்கரன்பிள்ளையிடமிருந்து கடுப்பாக பதில் வந்தது:

‘பார்க்கிறாயே, தினம்தோறும் எவ்வளவு கடுமையான பயிற்சிகள். எலும்பெல்லாம் இற்றுப் போகும் அளவிற்கு அடுத்தடுத்து வேலைகள். எதிலாவது சந்தோஷம் கிடைக்கிறதா? ராத்திரி இந்த பூட்ஸ்களைக் கழற்றிப் போட்டதும் அப்பாடா என்று எப்பேர்ப்பட்ட சந்தோஷம் கிடைக்கிறது, தெரியுமா? ராணுவத்தில் சேர்ந்ததில் எனக்குக் கிடைக்கும் அந்த ஒரே சந்தோஷத்தையும் இழக்கச் சொல்கிறாயா?’

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். சங்கரன்பிள்ளை போல் சந்தோஷத்தையே பணயம் வைத்துவிட்டு, எப்போதடா பூட்ஸைக் கழற்றுவோம் என்று உங்களுக்கும் தவிப்பு வந்திருக்கிறதா இல்லையா?

சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதானே உங்களுடைய அத்தனை ஆசைகளுக்கும் அடியில் புதைந்திருக்கும் உண்மை?

நீங்கள் கேட்டது கிடைத்துவிட்டது. ஆனால் திருப்தியில்லாமல் அடுத்தது, அடுத்தது என்று ஆசை தாவிக்கொண்டே இருக்கிறது.

ஏன் இப்படி?

எங்கே தவறு நிகழ்ந்தது? இது உங்கள் குற்றமா அல்லது ஆசையின் குற்றமா?

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1