Question: சத்குரு, நிறைவேறாத ஆசைகள் நம்மை சோகத்தில் ஆழ்த்துகின்றன. இதை எப்படி சமாளிப்பது?

சத்குரு:

ஒன்றை சமாளிப்பது, அல்லது அடக்கி ஆள்வது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அதன்மீது நீங்கள் ஏறி அமர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். ஒரு பிரச்சினையின் மேல் நீங்கள் அமர்ந்து கொள்வதால், உங்கள் வாழ்க்கை எவ்வழியிலாவது மேன்மையடையும் என்று நினைக்கிறீர்களா? இல்லை. அதையெல்லாம் ஏற்கெனவே முயற்சி செய்து பார்த்து விட்டீர்கள் தானே? அது வேலை செய்வதில்லை. துயரத்தை எப்படி தவிர்ப்பது என்று என்னைக் கேட்காதீர்கள், ஆனந்தமாய் வாழ்வது எப்படி என்று கேளுங்கள்.

“அவன் கெட்டவன். ஆனால் அவனிடம் செல்வம் சேர்கிறது. எனக்கு மட்டும் ஏன் நடக்கமாட்டேன் என்கிறது” என்று பலர் அலுத்துக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். நீங்கள் நல்லவர் தான், ஆனால் முட்டாளாய் இருக்கிறீர்கள், என்ன செய்வது? சரியான விஷயங்களை செய்யாதவரை, உங்களுக்கு வேண்டியவை நடக்காது.

துயரங்கள் நீங்களே உருவாக்கிக் கொள்வது. அது உங்களுக்கு இயல்பாக ஏற்படுவதில்லை. உங்கள் மனதோடு குளறுபடிகள் செய்யாமல், இங்கு சும்மா அமர்ந்திருந்தால், நீங்கள் நன்றாகவே இருப்பீர்கள். ஆனால் இப்போது மனதுடன் மிகவும் சிக்கிப் போய் விட்டீர்கள், தொடர்ந்து மனதைக் கிளறிக்கொண்டே இருக்கிறீர்கள். ஒரு நொடி கூட அதைவிட்டு விலகி வர முடியவில்லை. அது தான் பிரச்சினை.

‘துயரத்தில் உழலாமல் இருப்பது எப்படி?’ என்பதே பொருத்தமற்ற கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் அதை உருவாக்குவதே உங்கள் மனம் தான். மனதைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான ‘ஸ்விட்ச்’ தெரியாமல், இருட்டில் துழாவிக் கொண்டிருக்கிறீர்கள். சிலநேரம் தற்செயலாக ஏதோ ஒன்றைத் தொட்டுவிட, எல்லாம் நன்றாக இருக்கிறது. சிலநேரம் வேறேதோ ஒன்றைத் தொட, அது துயரத்தை வரவழைக்கிறது. இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இது நீங்கள் ஒரு ‘காரை’ வைத்திருந்து, ஆனால் அதை ஓட்டும் வழி தெரியாமல் இருப்பது போல. மனம் போனபடி கீழிருக்கும் அந்த மூன்று மிதிக்கட்டைகளை (க்ளட்ச், பிரேக், ஆக்ஸெலரேட்டர்)யும் மாற்றி மாற்றி மிதித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் எந்தளவு மோசமான ஓட்டுனராக இருப்பீர்கள் என்பதை அறிவீர்களா? பயணம் மிகவும் குலுங்கிக் குலுங்கித்தானே நடக்கும்? இப்போது உங்கள் உடலையும், மனதையும் அப்படித்தான் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவை எப்படி செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி எடுக்காமல், தற்செயலாக அவற்றைச் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒரு காரை ஓட்டவேண்டும் என்றால் அதைப் பற்றி உங்களுக்கு நிறையத் தெரிந்திருக்க வேண்டும். அந்த எந்திரம் எப்படி வேலை செய்கிறது, அதை இயக்கும் விதிகள் என்ன என்பதெல்லாம் தெரிந்திருந்தால் அதை சுலபமாக இயக்கலாம். இது உங்கள் உடலிற்கும், மனதிற்கும், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருந்தும்.

இன்று பரவலாய் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. நாம் விரும்பும் ஒன்று நடக்கவேண்டுமெனில், அதற்கு என்ன தேவையோ அதை செய்வதற்குப் பதிலாக, மற்றதை எல்லாம் செய்துவிட்டு, நாம் விரும்புவது நடந்துவிட வேண்டும் என்று வேண்டிக் காத்திருப்பதுதான். வாழ்க்கை எப்போதும் இப்படி நடக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது. குழந்தைகள் போல் இல்லாமல், இனியேனும் கொஞ்சம் முதிர்ச்சியோடு செயல்படுங்கள். ‘இன்று நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டுவிட்டேன், அதனால் இன்றைக்கு எதுவும் தவறாக நடக்காது’ இப்படிக் கூட நினைக்கிறீர்கள், இல்லையா? ஆனால் கடவுளை வேண்டிக் கொள்பவர்களும் தினமும் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் தானே? பிரார்த்தனை போன்ற விஷயங்கள் எல்லாம் வேறொரு காரணத்திற்காக செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், காலப்போக்கில், இப்போது, எதற்கு எது என்பதே புரியாது ஏதேதோ செய்து கொண்டிருக்கிறீர்கள். ஓட்டுவது சரியாக நடக்கவில்லை, வேண்டிக் கொள்வதும் சரியாக நடக்கவில்லை, தியானமும் சரியாக நடக்கமாட்டேன் என்கிறது. ஏனெனில் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யாமல், வேறெதையோ நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.
ஒரு சிறு கடையில் 300 ரூபாய் வியாபாரத்தை தினமும் சமாளிப்பவருக்கு இரத்தக்கொதிப்பு ஏற்பட்டு, அது தாங்கமுடியாத பாரமாய் இருப்பதும், உலகெங்கும் 300 தொழில் ஸ்தாபனங்கள் நிறுவி, அவற்றை நேரில் சென்று பார்வையிடாமலேயே அவருக்கு எல்லாம் அற்புதமாய் நிகழ்வதையும் பார்த்திருக்கிறீர்கள் தானே?

உங்களுக்குச் செடி வளர்க்க வேண்டுமென்றால், எல்லா பிரார்த்தனைகளும் செய்துவிட்டு, பிறகு விதையை மண்ணில் விதைக்காமல், அதைக் கூரையில் ஒட்டிவைக்கிறீர்கள். அது எப்போதாவது வளருமா? மண்ணில் தேவையான உரங்களைக் கலந்து, அதைச் சரியான பதத்தில் தயார் செய்து, அதில் வளரக்கூடிய விதையை விதைத்தால், அது வளரும். சரியான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்பவருக்குத் தான் வாழ்வின் புதையல்கள் கிட்டும். நீங்கள் நல்லவராகவோ, கெட்டவராகவோ இருப்பதால் செடியில் பூக்கள் மலராது. “அவன் கெட்டவன். ஆனால் அவனிடம் செல்வம் சேர்கிறது. எனக்கு மட்டும் ஏன் நடக்கமாட்டேன் என்கிறது” என்று பலர் அலுத்துக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். நீங்கள் நல்லவர் தான், ஆனால் முட்டாளாய் இருக்கிறீர்கள், என்ன செய்வது? சரியான விஷயங்களை செய்யாதவரை, உங்களுக்கு வேண்டியவை நடக்காது.

ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், அதற்கு, உங்களுக்குள் என்ன செய்யவேண்டுமோ அதை நீங்கள் செய்யவேண்டும். வேண்டிக் கொள்வதாலோ, அல்லது அது ‘வேண்டும், வேண்டும்’ என்று ஆசை கொள்வதாலோ, அது உங்களுக்குக் கிடைத்துவிடாது. உங்களுக்குள் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிக் கொண்டால், ஆனந்தம் உங்களுக்குள் ஊற்றெடுக்கும். ஒரு மலரை உங்களால் மலரச் செய்யமுடியாது. ஆனால் அது மலர்வதற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கினால், ஒன்றல்ல ஓராயிரம் பூக்கள் மலரும். வாழ்வில் இதைத்தான் நீங்கள் செய்யமுடியும். அதைச் செய்தாலே போதும். வாழ்வில் ஏதோ ஒன்று உங்களுக்கு நடப்பதற்கு நீங்கள் வேறு எதையும் செய்யத் தேவையில்லை. உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதற்கு சரியான சூழ்நிலைகளை நீங்கள் அமைத்தால் போதும், தேவையானது நடந்துவிடும்.

உங்களுக்கு சாதம் சமைக்க வேண்டும் என்றால், கொஞ்சம் அரிசி, நீர், வெப்பம் இவற்றை எப்படி வைக்கவேண்டுமோ அப்படி வைத்தால், சாதம் தயார் ஆகிவிடும். அதை நீங்கள் போய் சமைக்கவேண்டாம். சரியான சூழ்நிலைகளை உருவாக்க நீங்கள் கற்றுக்கொண்டால் போதும், சமைப்பது தானாக நடந்துவிடும். முதல்முறை செய்தபோது சரியான சூழ்நிலைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். அவ்வப்போது கையை உள்ளே விட்டு, அன்று சாதத்திற்கு பதிலாக கஞ்சியை உருவாக்கினீர்கள். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, சரியான சூழ்நிலையை உருவாக்க நீங்கள் கற்றுக்கொண்ட பிறகு, அங்கே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டும் என்றுகூட அவசியம் இல்லை. சரியான சூழ்நிலையை உருவாக்கிவிட்டு, நீங்கள் அக்கம்பக்கத்தில் பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்தாலும், சாதம் தயாராகி விடும். இது அவ்வளவு சுலபம். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் கூட இதேபோன்று தான். எங்கெல்லாம் சரியான சூழ்நிலைகளை நீங்கள் அமைத்தீர்களோ, அங்கெல்லாம் நடக்கவேண்டியவை நன்றாகவே நடக்கிறது. எங்கெல்லாம் சரியான சூழ்நிலையை உங்களுக்கு அமைக்கத் தெரியவில்லையோ, அங்கெல்லாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், நீங்கள் தலைகீழாகவே நின்றாலும், அது நடப்பதில்லை.

ஒரு சிறு கடையில் 300 ரூபாய் வியாபாரத்தை தினமும் சமாளிப்பவருக்கு இரத்தக்கொதிப்பு ஏற்பட்டு, அது தாங்கமுடியாத பாரமாய் இருப்பதும், உலகெங்கும் 300 தொழில் ஸ்தாபனங்கள் நிறுவி, அவற்றை நேரில் சென்று பார்வையிடாமலேயே அவருக்கு எல்லாம் அற்புதமாய் நிகழ்வதையும் பார்த்திருக்கிறீர்கள் தானே? ஏன் இப்படி? இது ஏனெனில், தொழில்கள் வெற்றிகரமாக நடப்பதற்கு ஏதுவான சூழ்நிலையை எப்படி உருவாக்குவது என்பதை அவர் கற்றுக் கொண்டுவிட்டார். அந்த சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு, அவை செயல்படுவதற்கு அனுமதித்தால், எல்லாம் நன்றாகவே நடக்கிறது. சரியான சூழ்நிலையை உருவாக்காமல், அதை சரியாக நானே நடத்துகிறேன் என்று முயற்சித்தால், உங்களுக்கு பித்துப் பிடித்துப் போகும். வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் இதுதான் உண்மை. உங்களுக்கு எது வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது நடப்பதற்குத் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். இல்லையெனில் அது நடக்காது.

ஒரு கூழாங்கல், ஒரு தங்க ஆபரணம், ஒரு ஆண், ஒரு பெண், அது எதுவாய் இருந்தாலும், நீங்கள் எதன் மீது ஆசைப்படுகிறீர்களோ, அது கிடைக்காதது உங்கள் துயரத்திற்குக் காரணமல்ல. எப்படியேனும் விரிவடைந்திட நீங்கள் கொண்ட ஏக்கம் நிறைவேறாது போனது தான் உங்கள் துயரத்தின் காரணம்.

இப்போது ஆனந்தமாய் வாழவேண்டும், துயரத்தில் உழலக்கூடாது என்ற ஆசை உங்களுக்கு வந்திருக்கிறது. இதை உருவாக்கிக் கொள்ள எந்த மாதிரியான சூழ்நிலைகளை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, அப்படி அமைத்துக் கொள்ளவேண்டும். அப்போது அது நடக்கும். அவ்வாறு இல்லாமல், ஏதோ ஒன்றைக் கைவிட வேண்டும் அல்லது ஒதுக்கிவிட வேண்டும் என்று முயன்றால், இப்போது இருப்பதை விட இன்னும் ஆழமான துயரத்தில் நீங்கள் உழல்வீர்கள். ‘எப்படியேனும் நான் என்னை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும்’ என்று தன்னை கட்டாயப்படுத்தி முயல்பவர்கள், ஆனால் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் சாதாரணமாய் வாழ்பவர்களை விட, அதிகமாக அவதியுறுவதைப் பார்த்திருக்கிறீர்களா? இப்படி இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும் என்று தங்களுக்குத்தானே விதிகளை வகுத்துக் கொண்டு வாழ்பவர்கள், மற்றவர்களை விட மிக அதிகமாக துன்பத்தில் உழல்கிறார்கள். அதற்குக் காரணம், திட்டவட்டமாய் வகுக்கமுடியாதவற்றை வகுக்க நினைப்பதால் தான். என்ன வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது நடப்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குங்கள். அது போதும், வேண்டியது நடக்கும்.

இப்போது ஆனந்தமாய் வாழவேண்டுமெனில், அதற்கு எவ்வகையான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்? இதில் ஒன்று, நாம் ஏற்கெனவே பார்த்தது போல், அடிப்படை ஆசை எப்போதும் எல்லையற்று விரியவே முயல்கிறது. அதனுடைய வழியில் நீங்கள் முட்டுக்கட்டை உருவாக்கினால், அது உங்களுக்குத் துயரத்தை உருவாக்கும். நிறைவேறாத ஆசை என்பது அப்படித்தான் நிகழ்கிறது. ஆசை என்றாலே அது ஒரு பெரிய மாளிகைக்கோ, தங்க அட்டிகைக்கோ உருவாவது என்பதல்ல. அது ஒரு சாதாரண கூழாங்கல்லிற்குக் கூட உருவாகலாம். அப்பொருளின் மதிப்பு துயரத்தை நிர்ணயிக்கவில்லை. ஆனால் விரிவடையவேண்டும் என்ற அந்த ஏக்கத்திற்கு தடை வந்துவிட்டது. அதுதான் அங்கே துயரத்தை விளைவிக்கிறது.

இந்தத் துயரம் எப்படி உருவாகிறது, ஆனந்தம் எப்படி உருவாகிறது என்று அவற்றின் இயக்கமுறையைப் பாருங்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட பொருளை அடைந்துவிட்டால், அது எல்லையற்று விரிவதற்கு ஒரு படியென நினைத்தீர்கள். ஆனால் அது நிறைவேறவில்லை, துயரம் வந்துவிட்டது. இதைச் சற்று கவனியுங்கள். அந்த ஏதோ ஒன்று கிடைக்கவில்லை என்பதனால் துயரம் வரவில்லை. எல்லையற்று விரியும் அந்த ஆசை நிறைவேறவில்லை என்பதால் தான் துயரம் வந்தது.

எதன் மீது உங்களுக்கு ஆசை வருகிறது என்பது, எத்தகைய சூழ்நிலையில் உங்கள் வாழ்க்கையை அமைத்துள்ளீர்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது. ஒரு கூழாங்கல், ஒரு தங்க ஆபரணம், ஒரு ஆண், ஒரு பெண், அது எதுவாய் இருந்தாலும், நீங்கள் எதன் மீது ஆசைப்படுகிறீர்களோ, அது கிடைக்காதது உங்கள் துயரத்திற்குக் காரணமல்ல. எப்படியேனும் விரிவடைந்திட நீங்கள் கொண்ட ஏக்கம் நிறைவேறாது போனது தான் உங்கள் துயரத்தின் காரணம். பலநேரங்களில் நீங்கள் ஆசைப்படும் பொருளின் மீது கூட உங்கள் கவனம் நிலைத்திருப்பதில்லை. ஆனால் இக்கணமே அது கிடைக்காவிட்டால், அந்த ஒன்றே உங்கள் வாழ்க்கை என்பது போல், உங்கள் முழு கவனமும் அதில் படிந்துவிடும். நிஜத்தில் அந்தப் பொருள் உங்களுக்கு அவ்வளவு முக்கியமில்லை. அதைக் கொண்டு நீங்கள் சற்றே விரிவடைய நினைத்தீர்கள். அது தான் முக்கியம். ஆசை என்பது இந்த ‘விரிவடைதலுக்கு’ ஒரு வழி.

ஆனால் இந்த விரிவடையும் ஏக்கத்திற்கு பொருள்நிலையில் நீங்கள் வடிகால் தேடினால் அது நடக்காது. நொடிக்கு நொடி ஆசைகள் இதை, அதை என்று மாற்றி மாற்றிக் கேட்கும். அப்போது துயரம் தவிர்க்க முடியாததாக ஆகிறது. ஆம், உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் நீங்கள் அடைந்திட முடியாதே! உங்களிடம் என்னவெல்லாம் இருந்தாலும், உங்களிடம் இல்லாததும் இருக்கும் தானே! இவ்வழியில் நீங்கள் சென்றால், ஆனந்தமாய் வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆம், உங்களின் ஒரு ஆசை நிறைவேறும் போது, அந்த நிமிடம் சந்தோஷமாக இருந்தாலும், அடுத்த நொடியே வேறொன்றின் மீது ஆசை வருகிறது. ஆக ஆசைகள் ஒழுங்கற்ற முறையில் வெளிப்படுகிறது.

ஆசை என்பது சரியும் அல்ல தவறும் அல்ல. ஆசைக்கு பொருள் முக்கியமில்லை. அப்பொருளோடு உங்கள் ஆசையை இணைத்தது நீங்கள். இது வேண்டும், அது வேண்டும் என்ற பாகுபாடு எல்லாம் மனதில் தான் இருக்கிறது. இதன் மேல் ஆசை கொள்ளலாம், அதன்மேல் வேண்டாம் என்ற வரையறைகளை வகுத்தது யார்? கடவுளா? இல்லை. நீங்கள் தான். நீங்கள் ஏதோ ஒன்றைச் செய்கிறீர்கள் என்றால், அதற்கு பலன்கள் கிடைக்க வேண்டும் தானே. இந்த வரையறையை விதித்துக் கொண்டதால், உங்களுக்கு என்ன கிடைத்தது? ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால், பெறுவதற்கு பதிலாக இழந்திருக்கிறீர்கள், இம்முழு உலகத்தை, உங்கள் முழு வாழ்வை இழந்திருக்கிறீர்கள்.