இன்றைய நவீன உலகம் பொருளாதாரத்தையும் வியாபாரத்தையும் அடிப்படையாக கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில், அற்புதம் நோக்கி நாம் பயணிக்க வேண்டுமென்றால் நாம் சில அடிப்படை விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டுமல்லவா? இல்லையென்றால், அற்பம் மட்டுமே நம்மிடம் மிஞ்சும்! அற்பத்திலிருந்து அற்புதம் நோக்கி செல்ல சத்குரு சொல்லும் சில கருவிகள் இங்கே!

சத்குரு:

மலர்கள் தேனை உருவாக்குகின்றன. கூடவே நறுமணத்தையும் நிறங்களையும் உருவாக்குகின்றன. தேனீக்கள் அழகான கூட்டை உருவாக்கி அதில் இனிமையை நிரப்புகின்றன. கொட்டிக் கிடக்கும் இனிமையைக் காக்கும் பொருட்டு தேனீக்களுக்கு விஷக்கொடுக்கும் இருக்கிறது. பறவைகள் பாட்டிசைக்கின்றன. மனிதர்களும் இவற்றை செய்ய முற்படுகிறார்கள். ஒன்று அவர்கள் இவற்றை உருவாக்கலாம். அல்லது, மற்ற உயிரினங்கள் இவற்றை மிக நன்றாக செய்வதை உணர்ந்து இதையெல்லாம் கடந்து போவது பற்றி சிந்திக்கலாம்.

படைப்பின் அற்புதத்தைப் புரிந்துகொள்ள பெரிதுபடுத்தப்பட்ட பிரபஞ்சத்தைப் பார்ப்பதற்கு பதிலாக அதன் சிறு வடிவத்தைப் பார்த்தாலே போதுமென்று தங்களுக்குள்ளேயே பார்க்கத் தொடங்கினார்கள். இந்தப் பிரபஞ்சம் எந்த பஞ்சபூதங்களால் உருவானதோ, மனித உடலும் அதே பஞ்சபூதங்களால் உருவானதுதான்.

மனிதர்கள் உருவாக்கும் இனிமை, வண்ணங்கள், நறுமணம் ஆகியவற்றுக்கு நான் எதிரியல்ல. ஆனால் இவற்றை மனிதர்கள் செய்யாவிட்டாலும், இயற்கை இவற்றை மனிதர்களை விட நன்றாக, மிக அழகாக செய்து கொண்டேயிருக்கும். இசைக் கலைஞர்கள் இசைப்பதை நிறுத்திவிட்டால் உலகம் எதையும் இழக்கப் போவதில்லை. நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் ஒவ்வோர் இலையும், மரமும், தென்றலும் தங்கள் தாள கதியில் இசைத்துக் கொண்டேயிருக்கின்றன. ஓவியக்கலைஞர்கள் வண்ணங்கள் தீட்டுவதை நிறுத்திக் கொண்டாலும் ஒன்றும் நின்றுவிடாது. ஒன்றினைப் பார்த்து செய்யப்படும் இன்னொன்றை ரசிப்பதை விட்டுவிட்டு இயற்கையின் சுயமான படைப்புகளை நாம் உணரலாம்.

வாழ்வின் பரிணாம வளர்ச்சியில் மனிதன் மற்ற உயிரினங்களின் வெளிப்பாடுகளைத் தானும் செய்யும் தகுதியும் அறிவும் பெற்றுள்ளான். ஆனால், பலருக்கும் தேனீக்கள் உருவாக்கும் இனிமையைத் தருகிற தகுதியில்லை. ஆனால் தேனீக்கு இருப்பதை விட மோசமான விஷக் கொடுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதில் மிகவும் முக்கியமானது எது தெரியுமா? ஐந்து பூதங்களின் விளையாட்டைத் தாண்டி மேலெழும் சக்தி மனிதனுக்கு இருக்கிறது. எல்லாமே ஐந்து முனை விளையாட்டுதான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

படைப்பு என்று நீங்கள் எதைப் பார்த்தாலும் அவை ஐந்து பூதங்களின் சேர்க்கைதான். ஆனால் மிகவும் பிரம்மாண்டமானதாக இந்தப் பிரபஞ்சம் தோன்றுகிறது. பிரம்மாண்டத்துக்குள் புகுந்து பார்க்கையில், எல்லாமே ஐந்து அம்சங்களுக்குள் அடக்கம் என்பது புரிகிற போது, எல்லாமே ஒரு விளையாட்டாய், நகைச்சுவையாய் தோன்றுகிறது. பிரபஞ்சத்தின் தந்திரத்தைப் புரிந்து கொண்டவர்கள், அதையொரு விளையாட்டு என்றுதான் பார்க்கிறார்கள்.

மிகவும் எளிமையான விளையாட்டு, தன்னை மிகச் சிக்கலானது போல் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. படைப்பு என்பதை பல லட்சம் மடங்கு பெரிதுபடுத்தினால் அப்போது தோன்றுவதே பிரபஞ்சம். இதை நன்குணர்ந்தவர்கள் படைப்பின் அற்புதத்தைப் புரிந்துகொள்ள பெரிதுபடுத்தப்பட்ட பிரபஞ்சத்தைப் பார்ப்பதற்கு பதிலாக அதன் சிறு வடிவத்தைப் பார்த்தாலே போதுமென்று தங்களுக்குள்ளேயே பார்க்கத் தொடங்கினார்கள். இந்தப் பிரபஞ்சம் எந்த பஞ்சபூதங்களால் உருவானதோ, மனித உடலும் அதே பஞ்சபூதங்களால் உருவானதுதான்.

எனவே, யோகமரபில் எப்போதும், மயானத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. சிவபெருமான் ஆசிரமத்தில் வசிப்பவரில்லை. அவர் மயானத்திலேயே வசிப்பவர். கீழை நாடுகளின் மிக முக்கியமான புனித நகரமாக காசி கருதப்படுகிறது. அந்த முழு நகரமே தன்னை உணர்வதற்கான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நகரையே ஏழு அம்சங்கள் கொண்டதாக உருவாக்கினார்கள். ஒருவர் அந்த ஏழு அம்சங்களுக்குள் ஊடுருவினால், ஐந்து பூதங்களின் விளையாட்டை அவரால் கடந்துவிட முடியும்.

காசி எப்போது உருவாக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. அநாதி காலத்திலிருந்தே இந்நகரம் இருக்கிறது. காசியின் மையப்பகுதியாகத் திகழ்வது, மணிகர்ணிகை. அங்கு ஒவ்வொரு நாளும் ஒரு சடலமாவது எரிந்து கொண்டிருக்கும். இந்த சிதை நெருப்பு அணையா நெருப்பு. அந்த நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்ளும் கடமை இந்த தேசத்தில் எல்லோருக்குமே உண்டு. காசிக்கு மஹா மயானம் என்றொரு பெயரும் உண்டு. பஞ்சபூதங்களின் விளையாட்டையும் அவை விரிக்கும் வலைகளையும் கடப்பதற்கான கருவிகளாக பிறப்பையும் இறப்பையும் பார்த்தவர்கள் இவ்விதமாக உருவாக்கினார்கள்.

மணிகர்ணிகையில் எப்போதும் சில பிணங்கள் எரிந்து கொண்டேயிருக்கும். அங்கே யோகிகள் சிலரை அழைத்துக் கொண்டு சில அனுபவங்கள் பெறுவதற்கு வழி செய்வார்கள். தியானலிங்கம் பிராண பிரதிஷ்டைக்கு முன்னர் அங்கே சிறிது காலம் இருந்தோம். உயிர் போனபிறகு உடல் வெறும் கட்டைதான். எனவே உடலை எரிப்பது பெரிய விஷயமில்லை. காசியில் இறப்பவர்களுக்கும் எரிக்கப்படுபவர்களுக்கும் உதவிகரமான சூழல் காசியில் இருக்கிறது.

முன்பெல்லாம் யாராவது இறந்தால் அவசரம் அவசரமாய் அவர்கள் உடலை காசிக்குக் கொண்டு செல்வார்கள். இன்னும் சிலரோ வயதாகத் தொடங்கும் போது, தங்கள் இறுதிக் காலத்தை காசியில் கழிக்கச் செல்வார்கள். இப்போது இதுவும் ஒரு சடங்காக மாறிவிட்டது. ஆனால் அந்த நகரமே, ஞானமடைவதற்கான கருவியாய் மாறிவிட்டது. அந்த ஏழு அம்சங்களைக் கடந்து சென்றால், மணிகர்ணிகையை அடையும் முன்னால் ஞானமடைந்தவராக மனிதர்கள் ஆகியிருப்பார்கள். உடலை விடும் முன்பே பஞ்ச பூதங்களின் ஆளுமையைக் கடந்தநிலையினை அந்த உயிர் எட்டியிருக்கும்.

மயான நெருப்பு ஏற்படுத்திய வெளிச்சம், ஒளிவட்டமாக உணரப்பட்டது. அந்த ஒளிவட்டம், ஸ்தூல உடலைவிட்டு, பஞ்சபூதங்களின் எல்லை கடந்து, உயிர் பயணப்படுவதை உணர்த்துவது. ஞானமடைவதற்கான கருவிகளை உருவாக்குவதும், வெறும் போதனைகளாக மட்டுமின்றி செயல்முறை கருவிகளை உருவாக்குவதும் எண்ணற்ற யோகிகளின் மகத்தான கனவாக இருந்து வந்துள்ளது. அத்தகைய கனவு கொண்ட ஒருவரே, இந்தப் பணிக்காக என்னை நியமித்துள்ளார்.

அற்புதமான அம்சங்களை மனிதர்கள் வாழ்விலிருந்து விலக்கி, உண்ணவும் பருகவும் வேண்டியதைத் தந்து வசதிகளையும் தந்தால் உலகமே வெறும் பைத்தியங்களின் கூடாரமாகிவிடும். எல்லாம் நிறைவேறியும் மனிதன் தன் உள்நிலை நோக்கிப் போகாதநிலை மிகவும் ஆபத்தானது.

இன்று அத்தகைய பல கருவிகள் சிதைவுற்ற நிலையிலுள்ளன. நவீனப்படுத்துதல் என்ற பெயரில், பல மரபுகள் முட்டாள்தனமாக உடைக்கப்பட்டன. மரபும் நவீனமும் என்ற தலைப்பில், என்னைப் பேச சிலர் அழைத்தனர். அவர்களிடம் சொன்னேன், "மரபிலிருந்து நவீனம் நோக்கிய உங்கள் பயணம், அற்புதங்களில் இருந்து அற்பம் நோக்கியதாய் ஆகிவருகிறது" என்று.

அற்புதங்களை அனுமதிக்காத சூழல் உலகம் முழுவதும் உருவாகிவருகிறது. யோகா நுகர் பொருளாகி வருகிறது. உங்களுக்காக எல்லாவற்றையும் எல்லோரும் முடிவு செய்தால் பிறகு நீங்கள் எதற்காக வாழவேண்டும் என்கிற கேள்வி எழுந்துவிடும். வணிக நோக்கிலான குருமார்கள், நீங்கள் எதை யோசிக்க வேண்டுமென முடிவு செய்கிறார்கள். வணிக சக்திகள், நீங்கள் எவ்விதம் வாழவேண்டுமென்று முடிவு செய்கின்றன. இந்தச் சூழலில் ஏதேனும் ஒன்றின் மீது கவனம் செலுத்துகிற சக்தியை மனிதர்கள் இழந்து விடுவார்கள். இப்படியிருந்தால், அறிவியலிலும் ஆன்மீகத்திலும் பெரிய அற்புதங்கள் எதுவும் நிகழ்ந்து விடாது.

நீங்கள் நிலையில்லாதவர் என்பதை உணர்ந்தால்தான், நிலையற்ற அந்தத் தன்மையைக் கடந்து செல்ல நீங்கள் முயல முடியும். அந்த உண்மையைக் கடந்து செல்ல முயலும் போதுதான் ஆன்மீகம் அர்த்தமுள்ளதாகிறது. இல்லையென்றால் ஆன்மீகம் மோசமான பொழுதுபோக்காகிவிடும். சில முறைகளை உருவாக்குவதும் தியானலிங்கத்தை உருவாக்குவதும் அப்படித்தான். தியானலிங்கத்தில் சிறிது நேரம் இருக்கிறபோது, உங்கள் இருப்பின் தன்மையே இல்லாமல் போவதை உணர்வீர்கள். மரணம் என்பது, நீங்கள் இல்லாமல் போவது மட்டுமல்ல. நீங்கள் இல்லாத போதும் இந்த உலகம் இயங்கும் என்பதை உணர்வது.

அற்புதமான அம்சங்களை மனிதர்கள் வாழ்விலிருந்து விலக்கி, உண்ணவும் பருகவும் வேண்டியதைத் தந்து வசதிகளையும் தந்தால் உலகமே வெறும் பைத்தியங்களின் கூடாரமாகிவிடும். எல்லாம் நிறைவேறியும் மனிதன் தன் உள்நிலை நோக்கிப் போகாதநிலை மிகவும் ஆபத்தானது. உலகில் எல்லாத் தேவைகளும் நிறைவேறியவர்கள்தான் பைத்தியக்காரத்தனமான வேலைகளில் இறங்குகிறார்கள். எளிய மனிதர்கள் இருக்கிற பகுதிகள் இப்படி இருப்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் பார்த்து தன் உயிர்சக்தியை அற்புதங்களை உருவாக்குவதற்கென்று பயன்படுத்தலாம். இல்லையென்றால் தன்னைத் தானே பைத்தியமாக்கிக் கொள்ள பயன்படுத்தலாம்.

சிக்கல் வந்தபிறகே தீர்வை நோக்கிப் போவது என்கிற நிலைமாற வேண்டும். இன்று நம்மால் முடியும் என்பதற்காக ஒன்றைச் செய்துவிட்டு நாளை அதற்காக வருந்தும் நிலை ஏற்படுவதை மனிதர்கள் தவிர்க்க வேண்டும். அற்ப நிலைகளில் இருந்து அற்புதம் நோக்கி உங்கள் பயணம் நிகழ வேண்டும். அதற்கு, ஒன்று எல்லா அபத்தங்களையும் மறந்து என்னோடிருங்கள். அல்லது வாழ்வின் நிலையாமையை உணர்ந்து அந்த நிலையாமையைக் கடந்து போகும் ஏக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.