ஆன்மீகப் பாதையில் உணவு, தூக்கம், உடலுறவு தவிர்க்கப்பட வேண்டியதா?
அதைவிட சிறந்த ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரியாத போது, அந்த பொம்மைதான் எல்லாம் என்று இருந்தீர்கள். ஆனால் அதைவிட பெரிய பரிமாணம் ஒன்றை உணரும் போது, அந்த பொம்மை போன்ற அற்பமான ஆசைகள் எல்லாம் தானாய் உதிர்ந்து போகிறது.
 
ஆன்மீகப் பாதையில் உணவு, தூக்கம், உடலுறவு தவிர்க்கப்பட வேண்டியதா?, Anmeega pathaiyil unavu thookkam udaluravu thavirkkappada vendiyatha?
 

Question:சத்குரு, நான் ஆன்மீகப் பாதையில் இருக்கிறேன். இப்பாதையில் இருந்துகொண்டே, உணவு, தூக்கம், உடலுறவு போன்ற என் உடற்தேவைகளை, ஆசைகளை நான் நிறைவேற்றிக் கொள்ளலாமா?

சத்குரு:

உடலின் அடிப்படைத் தேவைகள் வேறு, நாம் ஒதுக்கி வைக்கக் கூடிய ஆசைகள் வேறு. இவ்விரண்டையும் நீங்கள் குழப்பிக் கொள்கிறீர்கள். உணவும், தூக்கமும் உடலின் அடிப்படைத் தேவைகள். அவை உங்கள் ஆசைகள் அல்ல. நீங்கள் சோர்வாக இருக்கும்போது உறங்குகிறீர்கள். பசியோடு இருக்கும்போது உண்கிறீர்கள். நீங்கள் உயிர் வாழ்வதற்கு இவ்விரண்டுமே தேவை. அதனால் இவற்றை தற்சமயம் ஒதுக்கிவைத்து விட்டு, நீங்கள் குறிப்பிட்ட மற்றொரு ஆசை, அதாவது உடலுறவைப் பற்றிப் பார்க்கலாம்.

அதைவிட சிறந்த ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரியாத போது, அந்த பொம்மைதான் எல்லாம் என்று இருந்தீர்கள். ஆனால் அதைவிட பெரிய பரிமாணம் ஒன்றை உணரும் போது, அந்த பொம்மை போன்ற அற்பமான ஆசைகள் எல்லாம் தானாய் உதிர்ந்து போகிறது.

உடலுறவு என்பதை உண்மை நிலையில் இருந்து அலசிப் பார்ப்போம். உங்கள் ஆசை உடலுறவு கொள்வது பற்றியதல்ல. இதில் முதல் விஷயம், உங்கள் ஹார்மோன்கள் உங்கள் புத்திசாலித்தனத்தை அடக்கியாள்வது. இரண்டாவது விஷயம், உடலுறவில் இருக்கும் இன்பம். மூன்றாவது விஷயம், உடலுறவின் மூலம், யாரோ ஒருவரோடு, ஒன்றிவிடும் உங்கள் முயற்சி. ஆனால் நீங்கள் எப்படி முயன்றாலும் உடலுறவு இவ்வகையில் வேலை செய்வதில்லை. உடலுறவில் இணைவதின் மூலமே இருவர் ‘ஒருவ’ராக ஆக முடியாது. ஒருவருடன் ஒருவர் ஒன்றிவிட முடியாது. இதை நீங்கள் இறக்கும் தருணத்தில் உணரலாம், அல்லது, இப்போதே அதை உணர்ந்து, வேலை செய்யக்கூடிய பிற வழிகளைத் தேடலாம்.

அப்படியெனில் உடலுறவை நான் துறக்க வேண்டுமா? இதில் துறப்பதற்கு எதுவும் இல்லை. உதாரணத்திற்கு, சிறு வயதில், உங்களுக்கு மிகப் பிடித்த பொம்மை ஒன்றை நீங்கள் எங்கு சென்றாலும் கூடவே வைத்திருப்பீர்கள். ஏன், அந்த சமயத்தில், உங்கள் அம்மா, அப்பா, கடவுள் இன்னும் மற்ற எல்லாரையும் விட, அந்த பொம்மை தான் உங்களுக்கு மிக முக்கியமானதாக இருந்தது. அப்போது நான் உங்களிடம், ‘இதோ பார்! இந்த பொம்மையில் வெறும் பஞ்சு தான் அடைத்திருக்கிறது. இது என்ன பெரிய விஷயம்? வா, இதைத் தூக்கி எறிந்து விடலாம்’ என்று கூறியிருந்தால், என் பேச்சை நீங்கள் கேட்டிருப்பீர்களா? நிச்சயமாகக் கேட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் நீங்கள் வளர வளர, அப்பொம்மையை விட அதிகமாக வேறு சில விஷயங்கள் உங்கள் கவனத்தை ஈர்த்தன. எந்த அளவிற்கு என்றால், இப்போது அந்த பொம்மை எங்கிருக்கிறதென்றே உங்களுக்குத் தெரியாது! உங்கள் வாழ்வில் ஒரு காலத்தில் மிகமிக முக்கியமான விஷயமாய் இருந்தது, இப்போது எங்கிருக்கிறது என்றும் கூட உங்களுக்குத் தெரியாது. அதைத் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பவும் இல்லை. அது இல்லாமற் போனது உங்களுக்கு ஒரு குறையாக இல்லை.

ஆசைகளின் தலையெழுத்து இவ்வளவுதான். அதைவிட சிறந்த ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரியாத போது, அந்த பொம்மைதான் எல்லாம் என்று இருந்தீர்கள். ஆனால் அதைவிட பெரிய பரிமாணம் ஒன்றை உணரும் போது, அந்த பொம்மை போன்ற அற்பமான ஆசைகள் எல்லாம் தானாய் உதிர்ந்து போகிறது. இதில் நல்ல விஷயம் என்னவெனில், நீங்கள் எதையும் துறக்கவில்லை. அவை தானாகவே உதிர்ந்து விடுகின்றன. ஆன்மீகப் பாதையில் சும்மா அமர்ந்து மூச்சுவிடுவதே வேறு எதைச் செய்வதைக் காட்டிலும் ஆயிரமாயிரம் மடங்கு அற்புதமானதாக, நம்மை முழுமையாய் ஆட்கொள்ளும் ஒன்றாய் இருக்கும். இங்கே சும்மா அமர்ந்து, மூச்சு விடுவதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! உயரிய விஷயங்களில் இருக்கும் இன்பத்தை நீங்கள் உணர்ந்துவிட்டால், பின் சிற்சிறு துரும்புகளுக்கு ஆசைப்படுவீர்களா, என்ன?

உங்கள் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் சண்டைபோட்டு ஜெயிக்க முயற்சிக்காதீர்கள். உணர்ச்சிகளும், ஆசைகளும் உந்துதல்களாக அனைவருக்குமே இருக்கிறது. உங்களின் முந்தைய கர்மாக்களின் தாக்கம் உங்கள் மேல் இருக்கிறது. அவை உங்களை இப்பக்கமும், அப்பக்கமும் இழுத்துச் செல்லும். ஆனால் அவற்றோடு சண்டைபோடுவது இராட்சதன் இரக்தபீஜனுடன் சண்டைபோடுவது போல். கேள்விப் பட்டிருக்கிறீர்கள் தானே? அவனின் ஒரு துளி இரத்தம் மண்ணில் சிந்தினாலும், அதிலிருந்து ஆயிரம் இரக்தபீஜர்கள் உருவாகி வருவார்கள். அதேபோல் தான் உங்கள் உணர்ச்சிகளும், ஆசைகளும். அவற்றோடு சண்டையிட்டு, அவற்றை வெட்டிவீழ்த்த நினைத்தால், அவை இன்னும் நூறாக, ஆயிரமாக முளைக்கும். அதனால் அவற்றோடு சண்டையிடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. உங்கள் உணர்ச்சிகளையும் ஆசைகளையும் சரியான வழியில் செல்வதற்கு நெறிப்படுத்துங்கள், அவ்வளவுதான்!

உங்கள் வாழ்வில் மிக உயரியதாக எதை நினைக்கிறீர்களோ, அதற்கு ஆசைப்படுங்கள். உங்களுக்குக் கோபமே வந்தாலும், அதையும் மிக உயரியதை நோக்கியே செலுத்துங்கள். இப்போது உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு துளி சக்தியையும், ஆசை, பயம், கோபம், அல்லது வேறு ஏதோ ஒரு உணர்ச்சி என்று பல வகைகளில் செலவு செய்கிறீர்கள். ஆசை, பயம், கோபம் போன்ற இத்தகயை உணர்ச்சிகள் தற்போது உங்கள் கட்டுக்குள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவற்றை ஒரே திசையில் செலுத்துவது உங்கள் கையில் தான் இருக்கிறது. நீங்கள் கோபமாக இருக்கும் போது, உங்களால் அன்பு செலுத்த முடியாமற் போகலாம், ஆனால் அந்தக் கோபத்தையும் நீங்கள் அதே திசையில் செலுத்தலாம். கோபம் என்பது அசாதாரணமான சக்தி. உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு துளி சக்தியையும், உணர்வையும், எண்ணத்தையும் ஒரே திசையில் செலுத்தினால், அதன் பலன் அதிவிரைவில் கிட்டும். ஏதோ ஒன்றை, ‘இது உயர்ந்தது’ என்றுணர்ந்து, அதை அடையவேண்டும் என்று நினைத்து விட்டால், பின் அதைப்பற்றி எவ்வித கேள்விகளும் உங்களுக்கு இருக்கக் கூடாது.

ஆன்மீகப் பாதையில் இருக்கும் பலருக்கு ஆன்மீகமும், ஞானோதயமும் இந்த நொடி மிக அருகில் இருப்பது போல் இருக்கும், ஆனால் அடுத்த நொடியே கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருப்பது போல் இருக்கும். அதனால் நாளடைவில் ஒரு சோம்பல் உருவாகிவிடும். ஏற்கனவே உங்களுக்கு பல நேரங்களில் சொல்லியிருக்கிறார்கள்: ‘புதரில் இருக்கும் இரு புறாக்களை விட கையில் இருக்கும் ஒரு புறா மேலானது’ என்று, இல்லையா? எங்கோ இருப்பதை எதிர்பார்த்து, கையில் இருப்பதை கோட்டை விட்டுவிட வேண்டாம் என்றார்கள். ஆனால் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், ஆன்மீகமும், ஞானோதயமும் வேறெங்கோ இல்லை. அதெல்லாம் இங்கே, இக்கணத்தில் தான் இருக்கிறது. அது ஒன்றும் கடினமானது அல்ல, மிகமிக சாதாரணமானது. நீங்கள் இப்போது இருக்கும் நிலையில் இருந்து எல்லையற்றதிற்கு நகர்வது மிகமிக சாதாரணமானது. ஏனெனில், அது இங்கேயே தான் இருக்கிறது. ‘சாதாரணமான’தாக இருப்பதெல்லாம் எளிதாகவும் இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. அது மிக நுட்பமானது, மென்மையானது. உங்கள் உயிர்சக்தி முழுவதையும் அதில் செலுத்தாவிட்டால், அது திறந்து கொள்ளாது.

அரைமனதான முயற்சியால் என்றுமே ஞானோதயம் அடைய முடியாது. உங்கள் முழு முயற்சியும் அதுதான் என்று இருக்க வேண்டும். அப்போதுதான், அது ஒரே நொடியில் நிகழும். இது நடப்பதற்கு 12 ஆண்டுகள் தேவையில்லை. ஒருவேளை முட்டாள்களுக்கு அத்தனை ஆண்டுகள் பிடிக்கலாம். தங்களை அந்த அளவிற்குத் தீவிரமாக்கிக் கொள்ள அவர்களுக்கு அத்தனை காலம் தேவைப்படலாம். அது வேறு. ஆனால் தேவையான அளவிற்கு தீவிரமாக உங்களை மாற்றிக் கொண்டால், அதற்குத் தேவையானது எல்லாம், ஒரேயொரு நொடிதான். அதன்பின், வாழ்வே ஆனந்தமயம் தான். அதன்பின், வெறுமனே உங்களுக்கு விருப்பமான வழியில், நீங்கள் தேர்வு செய்யும் வழியில் உங்கள் வாழ்வை நீங்கள் வாழ்ந்து செல்லலாம். ஆனால் அந்த ஒரு நொடியை உருவாக்கிக் கொள்ளாமல், இதுபோன்ற முட்டாள்தனங்களை எல்லாம் தொடர்ந்து செய்வதில் என்ன பயன் இருக்கிறது?

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1