பலர் சொல்லி கேட்டதுண்டு, ஆனால் ஆராய்ந்து பார்த்ததில்லை... இதன் பொருள் என்ன? எதற்காக இப்படி சொல்கிறார்கள்? உண்மையில் அங்கம் குளிர்ந்தால் லிங்கம் குளிருமா? தெரிந்துகொள்வோம்...

அங்கம் குளிர்ந்தால் லிங்கம் குளிரும்!

சத்குரு:

லிங்கம் என்று சொல்வதை இங்கே படைப்பின் மூலமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெளியில் உள்ள படைப்பின் மூலம்தான் உங்களுக்கு உள்ளேயும் இருக்கிறது. அதுதான் உள்ளே இருக்கும் உயிர்த்தன்மையை உசுப்பி விழிக்க வைத்திருக்கிறது. அதை இங்கே அங்கம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அங்கம் குளிர்ந்தால் என்பது உடலை ஈரமாக வைத்துக் கொள்வதைக் குறிப்பிட்டிருக்கலாம்.

உங்களுக்குள் உறங்கும் அந்த படைப்பின் மூலத்தைத் தட்டி எழுப்புவதே உங்கள் கவனமாயிருக்க வேண்டும். அதற்கு உங்களுடைய அங்கம் பற்றிய கவனம் வேண்டும். அதை உந்தி உசுப்பி விழித்தெழச் செய்வதற்குத்தான் வெளியில் உள்ள லிங்கம் பயன்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களுக்குள் இருக்கும் உயிரின் அடிப்படைத்தன்மை கவனிக்கப்பட்டால், வெளியில் எல்லாமே சரியாகிவிடும் என்பதையே அங்கம் குளிர்ந்தால், லிங்கம் குளிரும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது.

உலர்ந்திருக்கும்போது சுற்றியுள்ளதுடன் உள்ள தொடர்பை நீங்கள் உணர்வதில்லை. ஈரமாக இருக்கும்போதுதான் அதற்கான வாய்ப்பு கூடுகிறது. அதனால்தான், நம் பாரம்பரியத்தில் கோயில்களை ஒட்டி குளங்கள் அமைக்கப்பட்டன.

கோயில்களில் லிங்க அமைப்பில் சக்தி சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். குளத்தில் முங்கி எழுந்து ஈரத்துணியுடன் கோயிலுக்குள் இருக்கும்போது, அந்த மையம் கொண்டுள்ள தெய்வீக சக்தியை கிரகித்துக்கொள்வது எளிது.

அங்கம் குளிர்ந்தால் என்பது உடலை ஈரமாக வைத்துக் கொள்வதைக் குறிப்பிட்டிருக்கலாம்.

வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை.
புத்திசாலி மனிதர் எல்லாம் வெற்றி பெற்றதில்லை...!

சத்குரு:

வெற்றி பெற்றவர்களைப் பார்த்து முட்டாள்கள் பொறாமை காரணமாக இப்படிச் சொல்லக்கூடும்.

வெற்றி எப்போதும் அதிர்ஷ்டத்தினால் கிடைத்துவிடுவதில்லை. வெற்றி பெற்றவருக்கு ஏதோ ஒரு புத்திசாலித்தனம் இருந்திருக்கிறது. அது உங்கள் கண்ணோட்டத்தில் புத்திசாலித்தனமாக இல்லாமல் போகலாம், அவ்வளவுதான்.

வெற்றி என்பதற்கு எது அளவுகோல்?

பத்து ரூபாய் சம்பாதிப்பவன் நூறு ரூபாய் ஈட்டிவிட்டால், அது அவனைப் பொறுத்தவரை வெற்றி. ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருப்பவன் கண்ணோட்டத்தில் அது படு தோல்வி. நடைபாதையில் குடியிருப்பவனுக்கு ஒரு குடிசை சொந்தமானால், அது வெற்றி. பங்களாவில் வசித்தவனுக்குக் குடிசையில் வசிக்க நேர்ந்தால், அது தோல்வி.

சமூக அளவுகோல்களால் அளந்து பார்க்கப்படும் வெற்ற¤ தோல்விகளுக்கு உண்மையில் அர்த்தமில்லை. அப்படிப்பட்ட வெற்றிக்கும், மனிதனின் அடிப்படையான புத்திசாலித்தனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

வாழ்க்கையை அமைதியாகவும், ஆனந்தமாகவும் உயிர்ப்புடன் வைத்திருப்பதே உண்மையான வெற்றி. உங்களுடைய உள் சூழ்நிலையையும், வெளி சூழ்நிலையையும் நீங்கள் வெற்றிகரமாகக் கையாள்வதற்கு அடிப்படை புத்திசாலித்தனம் நிச்சயம் தேவை.

புத்திசாலித்தனம் என்று இங்கே நான் குறிப்பிடுவது, இன்றைய கல்வி மூலம் பெறப்படும் அறிவாற்றலை அல்ல. புத்தகங்கள், வியாக்கியானங்கள், அறிவுரைகள் மூலம் பல தரப்புகளிலிருந்து சேகரிக்கப்படும் விஷய ஞானத்தையும் அல்ல.

புத்திசாலித்தனம் என்பது வாழ்க்கையைத் தோலுரித்து அதன் அடிப்படை உண்மையை வேர் வரை அறிந்து கொள்ளும் திறன்.

பக்குவத்துடனும், தெளிவுடனும் வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த புத்திசாலித்தனம் மிக அத்தியாவசியம்.