ஆட்டோ ரிக்ஷா துவங்கி விமானம் வரை, கண்டக்டர் முதல் காவல்துறை அதிகாரி வரையில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் சாதிக்கும் இந்தக் காலத்தில், 'அந்த 3 நாட்களுக்கு' அவளை வீட்டிலிருந்து விலக்கி வைப்பது பழமையான சிந்தனையாகவே கருதப்படுகிறது. இதைப் பற்றி சத்குரு என்ன சொல்கிறார்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

ஆரியக் கலாச்சாரங்களில் ஓரு பெண்ணிற்கு அவளுடைய மாதவிலக்கு காலங்களில் தனியிடம் கொடுக்கப்பட்டது. பின்னாட்களில் இது திராவிடக் கலாச்சாரத்திலும் வழக்கில் வந்தது. அவளுடைய உடல், மன நலனுக்காகவும் அவள் பெற்றெடுக்கும் குழந்தை நல்ல திறன்களுடன் பிறப்பதற்காகவும், அக்காலத்தில், அவளுக்கு பல பாதுகாப்புகள் உருவாக்கப்பட்டன.

மாதவிலக்கு நாட்களில் அவளுடைய முழு உடல் அமைப்புமே குறிப்பிட்ட ஒரு மாற்றத்திற்கு உட்படுவதாலும், அந்நாட்களில் ஒரு பெண் உடலளவில் சற்று பலவீனமாக இருப்பதாலும் அவளுக்கு எந்த வேலையும் தரப்பட்டதில்லை. அவளோடு யாரும் தொடர்பு கொண்டதும் இல்லை. பாதுகாப்பான சூழ்நிலையில் தனியாக இருக்குமாறு செய்யப்பட்டாள். அவள் ஏதோ கடவுள் பெயரை உச்சரித்துக் கொண்டு இருப்பாள். மேலும் குறிப்பிட்ட சில இடங்களுக்குப் போகவும் அனுமதிக்கப்பட்டதில்லை.

வெறுமனே கை கால்களோடு பிறந்து, உண்டு, உறங்கி பொதி மாடு போல் இறந்துபோவதை அவர்கள் விரும்பவில்லை. அனைத்து சாத்தியங்களுடன் பிறந்திருந்தால் மட்டுமே இயல்பான குழந்தையாக மதித்தனர்.

அந்த சில நாட்களுக்கு, அவள் தினமும் 3 முறை குளிப்பாள். ஏனெனில், ஒரு பெண்ணிற்கு மாதவிலக்கு நடைபெறுகின்றபோது, அந்த தன்மை அவளுடைய தலையைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்தில் (ஆராவில்) வெளிப்படுகிறது. அந்த ஆரா குளிப்பதற்கு முன் இருப்பதைப் போல் குளித்த பின் இருப்பதில்லை. முன்பெல்லாம் இரவு 12 மணியாக இருந்தாலும், மாதவிலக்கு தொடங்கிவிட்டால் அவள் குளிக்க வேண்டும். மேலும் உடலில் சில பகுதிகளில் திருநீறு பூசிக் கொள்வார்கள். இவையெல்லாம் அப்பெண் தீயசக்திகளின் பிடிக்குள் சிக்கிக் கொள்வதை தவிர்ப்பதற்காக செய்யப்படும் முயற்சிகளே. இது மிக மிக அற்புதமான ஒரு அமைப்பு.

ஒரு பெண்ணிற்கு மாதவிலக்கு ஏற்படுவதே அவள் குழந்தைப் பெற தயாராய் இருக்கிறாள் அல்லது தயாராகிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்த்துவதற்காகத்தான். அவள் கருப்பையில் தேங்கிப் போன பழையவைகளை வெளித்தள்ளிவிட்டு புதிய வாய்ப்பை உடல் மறுபடியும் உருவாக்குகிறது. இந்தப் புதிய வாய்ப்பை, உயர்ந்த பரிமாணம் உடைய ஓர் உயிரை உருவாக்கும் நோக்குடன் பயன்படுத்திக் கொள்ள பெண்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர். குறிப்பாக பிராமணக் குடும்பங்களிலும் அரச குடும்பங்களிலும் இதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

ஒரு பெண் கருத்தரித்திருக்கும் போதோ அல்லது பாலூட்டும் போதோ மாதவிலக்கு ஏற்படுவதில்லை. இந்த காலம் முடிவடைந்தவுடன் மறுபடியும் அவள் கருத்தரிக்க தயாராகையில் அதிலிருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு தன் கணவருடன் தொடர்பில்லாமல் செய்யப்பட்டாள். இந்த சில மாதங்கள் அவளுக்கு தேவையான சாதனா (பயிற்சி) கொடுக்கப்பட்டது. இதனால் முதல் 2 மாதங்களை விட 3வது மாதத்தில் உருவாகும் கருமுட்டை அதிக தரம் வாய்ந்ததாக இருக்கும். அதிலிருந்து பிறக்கும் குழந்தை ஓரளவாவது உறுதியானதாக இருக்கும். இவ்வாறாக, ஒரு குழந்தை உண்டாவதை விஞ்ஞானப்பூர்வமாக அணுகினர்.

அந்தக் காலத்தில் ஒரு குழந்தை பிறந்தால் உடனே ஊரிலுள்ள ஒரு பெரியவர் வந்து, அந்தக் குழந்தைக்கு ஆன்மீகப் பரிமாணங்கள் சாத்தியமாக இருக்கிறதா என்று சோதனையிடுவார். அந்தக் குழந்தை அந்தப் பரிமாணங்களை பயன்படுத்திக் கொள்கிறதா என்பது வேறு. ஆனால் அனைத்துப் பரிமாணங்களும் அந்தக் குழந்தைக்கு திறந்த நிலையில் இருக்க வேண்டும். ஏனெனில், வெறுமனே கை கால்களோடு பிறந்து, உண்டு, உறங்கி பொதி மாடு போல் இறந்துபோவதை அவர்கள் விரும்பவில்லை. அனைத்து சாத்தியங்களுடன் பிறந்திருந்தால் மட்டுமே இயல்பான குழந்தையாக மதித்தனர். அன்றைய காலத்தில், முழு வீச்சில் செயல்படக் கூடிய மனித குலத்தை உருவாக்கும் விழிப்புணர்வு மக்களிடையே இருந்தது. அதனால்தான் ஒரு குழந்தை எல்லாவிதத்திலும் தகுதியாக பிறப்பதற்கு வசதியாக பெண்களை தேவையான முறையில் பராமரித்தனர்.