அன்பு, பற்று இரண்டிற்கும் உள்ள இமாலய வித்தியாசம்?!

அன்பு வலி தராது. யார் மீதாவது நீங்கள் அன்பாக இருக்கிறீர்களென்றால், அவர்களுடன் இருக்கையில் அந்த உடனிருப்பை உணர்ந்து மகிழ்வீர்கள். அவர்கள் அருகே இல்லாதபோது அந்த இன்மையையும் உணர்ந்து மகிழ்வீர்கள்.
அன்பு, பற்று இரண்டிற்கும் உள்ள இமாலய வித்தியாசம்?!, Anbu patru irandirkum ulla imalaya vithiyasam?
 

சத்குரு:

அன்பு என்பதும் பற்று என்பதும் அடிப்படையில் வெவ்வேறானவை. இன்று பலரும் காதல் என்று சொல்வதெல்லாம், இன்னொருவருடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளவும் அடையாளப்படுத்திக் கொள்ளவும் தானே தவிர அது அன்பின் அடிப்படையில் உருவானதல்ல. அது பற்று மட்டுமே. பலரும் பற்றுதலை அன்பு என்று தவறாகக் கருதுகிறார்கள். ஆனால் பற்றுக்கும் அன்புக்கும் சம்பந்தமில்லை. சொல்லப்போனால், அன்புக்கும் வெறுப்புக்கும் சம்பந்தம் உண்டு.

அன்பு வலி தராது. யார் மீதாவது நீங்கள் அன்பாக இருக்கிறீர்களென்றால், அவர்களுடன் இருக்கையில் அந்த உடனிருப்பை உணர்ந்து மகிழ்வீர்கள். அவர்கள் அருகே இல்லாதபோது அந்த இன்மையையும் உணர்ந்து மகிழ்வீர்கள்.

வீதியில் நடந்து போகிற யாரோ ஒரு மூன்றாவது மனிதரை நீங்கள் வெறுக்கிறீர்களா என்ன? ஒருவரை அதிகமாகவே நேசித்திருப்பீர்கள். ஒரு நாணயத்தை சுண்டிவிட்டு பூவா தலையா பார்ப்பது போலத்தான் இதுவும். அதே நாணயம் இன்னொரு பக்கம் விழுந்தால் அன்பு, வெறுப்பாகிவிடும். பூ விழுந்தால் அன்பு தலை விழுந்தால் வெறுப்பு, அவ்வளவுதான்.

அன்புக்கும் வெறுப்புக்கும்கூட ஒன்றுக்கொன்று தொடர்புண்டு. ஆனால், அன்புக்கும் பற்றுக்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லை. ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் அன்பு என்பது மலர் மாதிரி. உங்கள் வாழ்வில் மலருக்கோர் இடம் அமைகிறதென்றால் ஏகப்பட்ட பிரச்சினைதான். ஏனெனில் அதைப் பார்த்துக் கொள்ள வேண்டும், பராமரிக்க வேண்டும், எப்போதும் கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும். கைகளில் ஒரு மலரை வைத்திருந்தால் நீங்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பீர்கள். உங்கள் கைகளை அசைப்பதில்கூட மிகவும் கவனம் செலுத்தத் தொடங்கிவிடுவீர்கள்.

உங்கள் வீடுகளில் மலர்த்தோட்டம் இருந்தால் அவற்றை ஒரு நாளில் பலமுறை பார்த்துக்கொள்ள வேண்டிவரும். இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தாலும் மலர்கள் உயிர்ப்புடன் இருப்பவை. பற்று என்பது பிளாஸ்டிக் பூவைப் போன்றது. உங்கள் வீட்டில் பிளாஸ்டிக் பூக்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். மாதக்கணக்கில் அவற்றை நீங்கள் கவனிக்கவில்லை என்றாலும் கவலையில்லை. பல வருடங்களுக்கு அவை அப்படியே இருக்கும் என்பதற்கு உத்திரவாதம் உண்டு.

உண்மையான மலர்களை விடவும் கூட பிளாஸ்டிக் பூக்களை அழகு மிகுந்தவையாக நீங்கள் வடிவமைக்கலாம். அவற்றில் நறுமணத் திரவியங்களைத் தெளித்து வைக்கலாம், பலவிதங்களிலும் பயன்படுத்தலாம். பல வருடங்களுக்கு அவை அப்படியே இருக்கும். பற்று என்பதும் அப்படித்தான். ஆனால் அன்பு அப்படியல்ல. நாளை காலை அது பனிபோல் மறையலாம். அன்பால் எவ்விதப் பயன்பாடும் இல்லை. அது வசதியாகக்கூட இல்லை, தொல்லைதான் தருகிறது. இங்கு தான் ஒருவர் தேர்வு செய்ய வேண்டும். வாழ்க்கை வேண்டுமா, வாழ்க்கை போல் தோன்றுகிற ஒன்று வேண்டுமா?

இப்போதெல்லாம் பலரும் வாழ்க்கைபோல் தோன்றுவதைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் பெரும்பாலான நேரங்களில் வாழ்க்கையை வாழ்வது குறித்து எண்ணிக் கொண்டிருக்கிறார்களே தவிர, வாழ்வதில்லை. வாழ்க்கை என்பது யோசிக்கிற விஷயமில்லை. அது உணரக்கூடியது, அனுபவிக்கக் கூடியது. முழுக்க முழுக்க உங்களைச் சார்ந்தது.

பற்று என்கிற பிளாஸ்டிக் பூ பல வகைகளில் வசதியானதுதான். ஆனால் எப்போது உங்கள் வாழ்வில் பற்று வருகிறதோ, கூடவே பதட்டமும் வருகிறது. பதட்டம் வந்தால் கூடவே அச்சம் தொடர்கிறது. அதுவே பைத்தியக்காரத்தனமாகப் பெருகுகிறது. உதாரணமாக, பள்ளிக்குச் சென்று ஐந்து மணிக்குத் திரும்ப வேண்டிய குழந்தை ஆறு மணிவரை வரவில்லையென்றால் பதட்டம் வருகிறது. அதே குழந்தை, ஏழு மணிவரை வரவில்லையென்றால் அச்சம் தொற்றிக் கொள்கிறது. எட்டு மணி ஆகியும் வராவிட்டால் பைத்தியம் பிடித்ததுபோல் ஆகிவிடுகிறது. எடுத்தவுடன் உங்களுக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை என்றாலும் இந்தப் படிநிலைகளில் உங்களுக்குப் பைத்தியம் பிடித்ததுபோல் ஆகிவிடுகிறது. படிப்படியாய் எட்டுகிற இந்தப் பைத்திய நிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அன்பு வலி தராது. யார் மீதாவது நீங்கள் அன்பாக இருக்கிறீர்களென்றால், அவர்களுடன் இருக்கையில் அந்த உடனிருப்பை உணர்ந்து மகிழ்வீர்கள். அவர்கள் அருகே இல்லாதபோது அந்த இன்மையையும் உணர்ந்து மகிழ்வீர்கள். அன்பு என்ற பெயரால் நீங்கள் முயல்வதெல்லாம் யாரோ ஒருவருடன் இரண்டறக் கலப்பதற்குத்தான். இது யாரோ ஒருவருடன் கலப்பதற்கான ஏக்கமல்ல. பிரபஞ்சத்துடன் கலப்பதற்கான ஏக்கம். எல்லையற்றுப் போக வேண்டும் என்பதற்கான ஏக்கம்.

உடலளவில் யாருடனாவது நீங்கள் ஒன்றிவிட முடியுமா? ஒரு விநாடி ஒன்றியதுபோல் தோன்றுகிறது. மறு விநாடியே பிரிந்து விடுகிறீர்கள். எனவே எதனுடனாவது ஒன்றிப்போக நீங்கள் விரும்பினால், அது உடல் கடந்ததாக இருக்க வேண்டும்.

தியானம் என்பதே இதற்குத்தான். உடலின் பிணைப்பையும் எல்லைகளையும் நீங்கள் தாண்டிச் செல்கையில் உடல் அதிரும். கண்ணீர் பெருகும். ஒருவர் அறிந்த எதனை விடவும், இந்த ஒருமையின் பரவசம் முழு நிறைவு தரக்கூடியது. அடுத்த பரிமாணத்தில் கொண்டு சேர்க்கக் கூடியது.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1