அன்பு, நேர்மை போன்றவற்றை பின்பற்ற முடியவில்லையே?!
போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் அன்பு, நேர்மை போன்றவற்றை பின்பற்றுவது மிகக் கடுமையாக இருக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யலாம்?
 
 

Question:போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் அன்பு, நேர்மை போன்றவற்றை பின்பற்றுவது மிகக் கடுமையாக இருக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யலாம்?

சத்குரு:

அன்பை இழந்துவிட்டால் பிறகு என்ன இருக்கிறது? நீங்கள் ஒரு விலங்காகத்தான் இருக்க முடியும். சமூகம் இப்போது அந்த நிலையில்தான் உள்ளது. இன்றைய உலகின் சவால்களை நீங்கள் கணக்கிட்டுப் பார்த்தால் அது மிகவும் அச்சமூட்டுவதாக உள்ளது. போட்டி இருக்கிறது என்று போட்டி போட விரும்புபவர்கள் போட்டி போடட்டும். உங்களுக்கு அது தேவையில்லையென்றால் நீங்கள் வெளியே வந்துவிட வேண்டியதுதான். அல்லது உங்கள் வேகத்தையாவது குறைத்துக் கொள்ளலாம். இல்லையா? உங்களுக்குப் போட்டிபோட ஆசை. எல்லோரையும் முந்திக்கொள்ள, குறிப்பாக உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை முந்திக்கொள்ள உங்களுக்கு ஆசை. ஆனால் போட்டிகளால் வருகிற சிரமங்களை எதிர்கொள்ள உங்களுக்கு மனமில்லை. இதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு செயலைச் செய்தபிறகு அதன் விளைவை சந்திக்கும்போது புலம்புவது, அழுவதெல்லாம் கூடாது.

உங்கள் வாழ்வில் எதை நீங்கள் செய்தாலும், அதற்கென்று விளைவு ஒன்று உண்டு. இப்படி செயல் செய்யலாம். அப்படி செயல் செய்யக்கூடாது என்று எதுவும் இல்லை. எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அவற்றின் விளைவுகளை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை உங்களுக்கு வேண்டும். ஒரு செயலைச் செய்தபிறகு அதன் விளைவை சந்திக்கும்போது புலம்புவது, அழுவதெல்லாம் கூடாது. வாழ்வில் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் நாளை அதன் விளைவுகளை சந்திக்கிறபோது, அது பற்றிப் புகார் செய்வதோ, அழுவதோ கூடாது. இதை ஆனந்தமாக ஏற்க முடியுமானால், நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். விளைவுகளை ஏற்றுக் கொள்கிற சக்தி உங்களுக்கு இல்லையென்றால் அந்தச் செயலையே செய்யாதீர்கள். அது தேவையில்லை. யாரோ ஏதோ செய்கிறார்கள் என்று நீங்களும் அதைச் செய்ய முயலவோ, செய்யவோ அவசியமில்லை. அவர்களுடைய சக்தியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. இல்லையா? எனவே சமுதாயம் போட்டி மனப்பான்மையுடன் இல்லை.

இந்த போட்டி மனப்பான்மையில் நீங்கள் மாட்டிக் கொண்டு விட்டீர்கள். நீங்கள் எந்த அளவுக்கு விரும்புகிறீர்களோ அந்த அளவுக்குப் போட்டி போடலாம். ஆனால் போட்டிக்கான தேவையில்லை என்று எண்ணிவிட்டால், வாருங்கள், உங்களுக்கு தியானம் சொல்லித் தருகிறோம். உங்களை தியானப் பாதையில் வழி நடத்துகிறோம். தியானப்பாதை என்பது, நீங்கள் வேறெதற்கும் பயன்பட மாட்டீர்கள் என்பதால் அல்ல. போட்டிபோட வேண்டிய தேவை உங்களுக்கு இல்லை என்பதால்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1