மனிதன் தன்னை உணர்ந்து கொள்வதற்கான வழிகளாக கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் ஆகிய மூன்றும் உள்ளன.

ஆழ்நிலையில் இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றாலும், இவற்றிற்கென்று தனி இயல்புகள் உண்டு. செயல்களின் வழியாக, மனிதன் தன்னை உணரும் நிலைக்கு கர்ம யோகம் என்று பெயர். இயல்பிலேயே மனிதன் செயல்பட்டுக்கொண்டே இருப்பான். செய்வதற்கென்று நிறையப் பணிகள் இருக்குமேயானால், தான் நன்றாக இருப்பதாக அவன் நினைத்துக் கொள்கிறான்.

வழிபாட்டின் போதோ அல்லது ஒருசில நேரங்களில் மட்டுமோ, அன்பு நிலையை உணர்ந்தால் அதன் பெயர் பக்தி அல்ல.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

செயல்களை போதிய விழிப்புணர்வோடு செய்யும்போது அது, பயன் கருதி நிகழ்வதில்லை. அப்போதுதான் கர்ம யோகம் என்று சொல்லக்கூடிய நிலையை உங்கள் செயல் எட்டும். அன்பு நிலையில் இருப்பதன் பெயரே பக்தி. அந்தச் சொல்லுக்குப் பொருள், காண்பவை, காணாதவை அனைத்தின் மீதும் அன்பு கொண்டிருப்பதுதான். வழிபாட்டின் போதோ அல்லது ஒருசில நேரங்களில் மட்டுமோ, அன்பு நிலையை உணர்ந்தால் அதன் பெயர் பக்தி அல்ல. அது இடையறாமல் நிகழ வேண்டியது. விருப்பு, வெறுப்பற்ற தன்மையில்தான் இந்த மனநிலை ஏற்படும். ஒன்றின்மீது விருப்பம் என்றாலே இயல்பாக இன்னொன்று வெறுக்கப்படும். உலகம் முழுவதும் அழகானதாக தென்படும்போது, அன்பு நிலையில் இருப்பதாக அர்த்தம். சில தனிமனிதர்கள் மீது மட்டும் ஏற்படுகிற பற்றுதல் அன்பு ஆகிவிட்டது.

எல்லாவிதமான, உணர்வுகளிலேயும் அடுத்தவர்கள் மேல் காட்டுகிற பரிவுதான் தலைசிறந்த உணர்வு. அன்பு என்பது மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்ல. அது ஆழமான, ஆனால்  அழகான வலி. மிக இயல்பாக கண்களிலிருந்து கண்ணீரை அன்பு வரவைக்கும். மேற்கத்திய நாடுகளில் கண்ணீர் வடிப்பதை பெரிய அளவில் அங்கீகரிப்பதில்லை. ஆனால், இந்தியாவில் தொன்மையான வாழ்க்கைமுறை கண்ணீரை ஒரு மனிதன் நுட்பமான உள்தன்மையின் அடையாளமாகவே உணர்த்துகிறது.

ஒரு மனிதர் அன்பாகவும், ஆனந்தமாகவும் இருப்பதென்பது வாழ்வில் எப்போதோ ஏற்படும் அனுபவமல்ல. அதற்கான வாய்ப்பு விநாடிக்கு விநாடி இருக்கிறது.

இன்று பலர் மனதிலும் அன்பு என்பது, ஒரு பாதுகாப்பு உணர்வாக மட்டுமே பதிவாகியிருக்கிறது. ஆதாயம் பெறுவதற்காகவே பலரும் அன்பை பயன்படுத்துகிறார்கள். பொறுப்புணர்வின் வெளிப்பாடுதான் அன்பு.

பொதுவாகவே ஒரு மனிதன் எது குறித்து அதிகம் சிந்திக்கிறானோ அதைச் சார்ந்தே அவன் அதிகம் பெறுகிறான். எனவே ஆத்ம சாதனைகளால் அன்புநிலை சார்ந்து ஒரு மனிதனுடைய உணர்வுகள் தீவிரமடையும்போது, தன்னுடைய ஆற்றலை உணர முடிகிறது. அன்பு செய்தல் என்று எதுவுமேயில்லை. அன்பு நிகழ அனுமதிக்க முடியுமே தவிர, அன்பு செய்வது இயலாது. ஏனெனில் அன்பு என்பது ஒரு தன்மை. தியானம் எப்படியொரு தன்மையோ, ஆன்மீகம் எப்படியொரு தன்மையோ, அதுபோலத்தான் அன்பும். ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்வில் ஏதாவது ஒரு விநாடியில் அன்பின் தன்மையை உணர்ந்திருப்பார். அது எல்லோருக்கும் ஒரு விநாடியாவது ஏற்பட்டிருக்கும். அந்த ஒரு விநாடியில் அவர் உணர்ந்த அன்பின் தன்மையை தக்க வைத்துக்கொள்ள அவருக்குத் தெரியவில்லை.

ஒரு மனிதர் அன்பாகவும், ஆனந்தமாகவும் இருப்பதென்பது வாழ்வில் எப்போதோ ஏற்படும் அனுபவமல்ல. அதற்கான வாய்ப்பு விநாடிக்கு விநாடி இருக்கிறது. அதனை விழிப்புணர்வோடு அறிந்து கொள்கிற வாய்ப்பை தியானம் ஏற்படுத்துகிறது.

இத்தகைய தன்மையை மனிதருக்குள் ஏற்படுத்துவது கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் மூன்றிலுமே சாத்தியம். உள்நிலை பற்றிய விழிப்புணர்வின் மூலம், தன்னிடம் அன்பு, எப்போதோ ஏற்படும் உணர்வாக இருக்கிறதா அல்லது நிலையான தன்மையாய் இருக்கிறதா என்பதை உணர முடியும்.

பற்றுதல்களையும், பலவீனங்களையும் அன்பு என்று தவறாகப் புரிந்து கொண்டு அவற்றின் பாதிப்பில் இருக்கும்வரை மனிதன் தன்னுடைய ஆற்றலை எவ்விதத்திலும் உணர முடியாது. ஒவ்வோர் உயிரும் அன்பைத்தான் தேடுகிறது. அது பாதுகாப்பு ஏற்பாடாகவோ, பரஸ்பரம் நன்மைதரும் திட்டங்கள் போலவோ, ஆகிவிடாமல் உயிரின் இயல்பான தன்மை அன்பு என்பதை உணர்கிறபோது மனிதன் எண்ணிப்பாராத அளவு பயன் பெறுகிறான்.