வாழ்க்கையில் நிகழும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கும்போது, அனைத்திற்கும் 'நானே பொறுப்பு' என பொறுப்பேற்பது எப்படி சரியாகும்? இந்தக் கேள்வி இயல்பாக பலரிடமும் எழும் ஒன்று! உண்மையில் பொறுப்பேற்பது என்றால் என்ன எனபதையும், அனைத்திற்கும் பொறுப்பேற்பதில் உள்ள சாத்தியம் என்ன என்பதையும் சங்கரன்பிள்ளையின் நகைச்சுவையுடன் சத்குரு விளக்குகிறார்.

சத்குரு:

பெரும்பாலானவர்கள், பொறுப்பு என்றாலே பழி, காரணம், தவறு இவர்மேல் அல்லது அவர்மேல் என்பது போன்றே அர்த்தம் கொள்கிறார்கள். இது தவறான புரிதல். உங்கள் வாழ்வில் அப்படிப்பட்ட சூழ்நிலை நிகழ்ந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதன் உருவாக்கத்தில் பலர் பங்கேற்று இருக்கலாம்.

எந்த சூழ்நிலையிலும் “நான் பொறுப்பு” என்று உணரும்போது அந்த சூழ்நிலைக்கு பதில் கொடுக்கும் திறன் உங்களிடம் உள்ளது. “நான் பொறுப்பல்ல” என்று தட்டிக் கழித்தீர்கள் என்றால் அதற்கு பதில் கொடுக்கும் திறன் உங்களிடம் இல்லாமல் போகிறது.

ஆனால் என் கேள்வி “யார் பொறுப்பு” என்பதே தவிர “யார் அதற்கு காரணம், தவறு யாருடையது” என்பதல்ல.

சங்கரன்பிள்ளை, மது அருந்திவிட்டு சாலையில் தகராறு செய்தார். போலீஸ் வந்தது, கைது செய்தது. வழக்கம்போல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். சங்கரன்பிள்ளை தள்ளாடியபடியே உளறிக்கொண்டு நின்றார். நீதிபதிக்கு எரிச்சல் வந்தது.

“உன்னை சொல்லி குற்றமில்லை, நீ குடித்த விஸ்கிதான் உன்னை இப்படி ஆட்டிப் படைக்கிறது” என்று சொன்னார். உடனே சங்கரன்பிள்ளை கண்ணீர் ததும்ப, நன்றியோடு நீதிபதியைப் பார்த்தார். “எஜமான்! நீங்கள் புரிந்துகொண்ட அளவுக்கு என் மனைவி கூட என்னை புரிந்துகொள்ளவில்லை! அவள் எப்போதுமே என்னுடைய இந்த நிலைக்கு நான்தான் பொறுப்பு என்று கூறுகிறாள்” என்று அழுதார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இவரைப் போலவே பலரும், தங்கள் வாழ்க்கைக்கு பொறுப்பேற்காமல் தட்டிக் கழித்துவிட்டு கரைசேரவும் முடியாமல் தவிக்கிறார்கள்.

பொறுப்பு என்றால் ஆங்கிலத்தில் Responsibility என்று சொல்கிறார்கள். Responsibility = Response + ability. அதாவது பொறுப்பு என்றால் உங்களுடைய பதில் கொடுக்கும் திறன் என்று அர்த்தம்.

பதில் கொடுக்கும் திறன் என்றால் டீச்சர் கேட்கும் கேள்விக்கு வாய் திறந்து பதில் சொல்வது என்று அர்த்தம் கிடையாது.

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் நீங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் நிகழ்வுக்கு பதில் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள்தானே? இங்கு பதில் என்பது Response. நீங்கள் வசிக்கும் அறையில் குளிராக உள்ளது, போர்வை எடுத்து போர்த்திக் கொண்டீர்கள். இதுவே அந்தக் குளிர்ந்த காற்றுக்கு உங்கள் உடல் அளித்த பதில்.

உங்கள் குழந்தை அன்பாக உங்களை அரவணைத்து முத்தமிட்டது. உங்கள் கண்களில் வழியும் கண்ணீர், இதுவே உங்கள் உள்ளமும், உடலும் அளித்த பதில்.

நீங்கள் உள்ளே எடுக்கும் சுவாசம் அந்த மரம் வெளியிட்ட காற்றுதானே! இப்படி நீங்களும் அந்த மரமும் நிரந்தரமாக ஒருவருக்கொருவர் பதிலளித்துக் கொண்டுதானே ஜீவிக்கிறீர்கள்?

இந்தப் பிரபஞ்சத்தில் நிகழும் ஒவ்வொன்றுக்கும் உடலளவில், மனதளவில், உணர்ச்சி நிலையில், சக்தி நிலையில் நீங்கள் பதிலளித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.

உங்கள் வாழ்க்கை என்பது ஒரு தொடர்ச்சியான நிரந்தரமான பதில்தான்.

பொறுப்பு என்றால் உங்களுடைய பதில் அளிக்கும் திறன். எந்த சூழ்நிலையிலும் “நான் பொறுப்பு” என்று உணரும்போது அந்த சூழ்நிலைக்கு பதில் கொடுக்கும் திறன் உங்களிடம் உள்ளது. “நான் பொறுப்பல்ல” என்று தட்டிக் கழித்தீர்கள் என்றால் அதற்கு பதில் கொடுக்கும் திறன் உங்களிடம் இல்லாமல் போகிறது.

நான் கேட்பது என்னவென்றால், உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சூழ்நிலைகள், சௌகரியமானதாகவும் இருக்கலாம், அசௌகரியமாகவும் இருக்கலாம். எதிர்பார்த்ததாகவோ அல்லது முற்றிலும் எதிர்பாராததாகவோ இருக்கலாம். சாதகமாகவோ, எதிராகவோ அமையலாம். எந்தமாதிரி சூழ்நிலையை நீங்கள் சந்தித்தாலும் அந்த சூழ்நிலைக்கு பதில் கொடுக்கும் திறன் உங்கள் கையில் வைத்துக்கொள்ள விருப்பமா? இல்லை அந்த பதில் கொடுக்கும் திறனை இழந்துவிட விருப்பமா?

எந்தமாதிரி சூழலிலும் அதற்கு பதிலளிக்க வல்லவராகவே இருக்க விருப்பம் என்று சொன்னீர்கள் என்றால், அதற்கு “நானே முழு பொறுப்பு” என்ற உணர்வு உங்களுக்குள் இருந்தால்தானே அது சாத்தியமாகும்.

நான் பொறுப்பு என்று உணரும்போது நீங்கள் வல்லமை பெறுகிறீர்கள், தட்டிக் கழிக்கும் போது கையாலாகாதவராகி விடுகிறீர்கள்.

“நான் பொறுப்பு” என்றால் இப்போது உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். “இல்லை, இல்லை என் மாமியார்தான்....” என்று இழுத்தீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையை மாமியார் ஹைஜாக் செய்ய நீங்களே அனுமதித்தீர்கள் என்றுதானே அர்த்தம்.

இதுபோல் தினமும் எவ்வளவு பேர் உங்கள் சந்தோஷத்தை, அமைதியை, அன்பை ஹைஜாக் செய்து கொண்டுபோக அனுமதித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று யோசியுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தோஷம் இனிமை போன்றவற்றை உருவாக்கிக்கொள்ள விருப்பமா, இல்லை கோபம், எரிச்சல், பாதிப்பு போன்றவற்றை உருவாக்கிக்கொள்ள விருப்பமா?

“எதுவே நடந்தாலும், என் வாழ்வின் நிகழ்வுகளுக்கு நானே பொறுப்பு” என்று உணர்வுபூர்வமாக பார்த்தீர்கள் என்றால், நீங்கள் உங்கள் வாழ்வில் உருவாக்கப்போவது ஆனந்தமும், அன்பும் மட்டுமே. இதுவே உங்கள் உயர்வுக்கான ஆதாரம்.